வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76


பாகம் 76

பிப்ரவரி 16, 1832ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டது. இந்த தரிசனத்தைப்பற்றிய பதிவின் முன்னுரையாக ஜோசப் ஸ்மித்தின் வரலாறு குறிப்பிடுகிறது, “ஆம்ஹெர்ஸ்ட் மாநாட்டிலிருந்து நான் திரும்பிவந்த பின்பு வேதங்களின் மொழிபெயர்ப்பை நான் மீண்டும் தொடர்ந்தேன். பெறப்பட்ட சிறு சிறு வெளிப்படுத்தல்களிலிருந்து மனுஷனின் இரட்சிப்பைக்குறித்த அநேக முக்கியமான குறிப்புகள் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டன அல்லது அது தொகுக்கப்படுவதற்கு முன்பு காணாமற்போயின என்பது தெளிவாகிறது. சரீர வடிவில் செய்யப்பட்ட கிரியைகளுக்குத்தக்கதாய் ஒவ்வொருவனுக்கும் தேவன் பலனளித்தால் பரிசுத்தவான்களுக்காக வைத்திருக்கிற நித்திய வீடான பரலோகம் என்ற பதம் ஒன்றைவிட அதிகமான ராஜ்யங்களை கொண்டிருக்கவேண்டும் என்பது இருக்கின்ற சத்தியங்களிலிருந்தே தெரிந்தது. அதன்படி பரிசுத்த யோவானின் சுவிசேஷத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போது நானும் மூப்பர் ரிக்டனும் பின்வரும் தரிசனத்தைக் கண்டோம்,” இந்த தரிசனம் கொடுக்கப்பட்ட நேரத்தில் யோவான் 5:29ஐ தீர்க்கதரிசி மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.

1–4, கர்த்தரே தேவன்; 5–10, ராஜ்யங்களின் இரகசியங்கள் விசுவாசமுள்ள சகலருக்கும் வெளிப்படுத்தப்படும்; 11–17, நீதிமான்கள் அல்லது நீதிமான்களல்லாதோரின் உயிர்த்தெழுதலில் சகலரும் உயிர்த்தெழுவர்; 18–24, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக அநேக உலகங்களின் குடிகளும் தேவன் ஜென்மித்த குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறார்கள்; 25–29, தேவனின் ஒரு தூதன் விழுந்து பிசாசானான்; 30–49, கேட்டின் குமாரர்கள் நித்திய ஆக்கினைக்குள்ளாவார்கள், மற்றவர்கள் அனைவரும் ஓரளவிற்கு இரட்சிப்பைப் பெறுவார்கள்; 50–70, சிலஸ்டியல் ராஜ்யத்தில் மேன்மையடைந்தவர்களின் மகிமையும் பலனும் விளக்கப்பட்டிருக்கிறது; 71–80, டிரஸ்டிரியல் ராஜ்யத்தை சுதந்தரிக்க இருப்பவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர் 81–113, டிலஸ்டியல், டிரஸ்டிரியல், மற்றும் சிலஸ்டியலில் இருப்பவர்களின் நிலைமை விளக்கப்பட்டிருக்கிறது; 114–119, பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனின் ராஜ்யத்தின் இரகசியங்களை விசுவாசிகள் பார்க்கலாம், புரிந்துகொள்ளலாம்.

1 வானங்களே கேளுங்கள், பூமியே செவிகொடு, குடிகளே களிகூருங்கள், ஏனெனில் தேவனே கர்த்தராயிருக்கிறார், அவரையன்றி இரட்சகர் ஒருவருமில்லை.

2 அவருடைய ஞானம் பெரிதாயிருக்கிறது, அவரது வழிகள் அற்புதமானவை, அவருடைய கிரியைகளின் அளவை ஒருவனும் கண்டுபிடிக்க முடியாது.

3 அவருடைய நோக்கங்கள் ஒழிந்துபோவதுமில்லை, அவருடைய கையைத் தடுக்கமுடிகிறவன் எவனுமுண்டோ.

4 நித்தியத்திலிருந்து நித்தியம் வரை அவர் மாறாதவராயிருக்கிறார், அவருடைய வருஷங்கள் ஒழிந்துபோகாது.

5 ஏனெனில் இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், எனக்குப் பயந்து, முடிவுபரியந்தம் நீதியிலும் சத்தியத்திலும் எனக்கு சேவை செய்கிறவர்களை கனம்பண்ண மகிழ்ச்சியாயிருக்கிறவர்கள்மேல் கர்த்தராகிய நான் இரக்கமும் கிருபையுமாயிருக்கிறேன்.

6 அவர்களுடைய பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய மகிமை நித்தியமாயிருக்கும்.

7 அவர்களுக்கு நான் சகல இரகசியங்களையும் வெளிப்படுத்துவேன், ஆம், பூர்வ நாட்களிலிருந்தும், வருங்காலங்களுக்கும் என்னுடைய ராஜ்யத்தின் சகல மறைவான இரகசியங்களையும், என்னுடைய ராஜ்யத்தைக் குறித்த சகல காரியங்களையும்பற்றிய என்னுடைய நல் மகிழ்ச்சியின் சித்தத்தை நான் அவர்களுக்கு அறியப்படுத்துவேன்.

8 ஆம், நித்தியத்தின் அற்புதங்களையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள், வரப்போகிற காரியங்களையும் அநேக தலைமுறைகளின் காரியங்களையும் நான் அவர்களுக்குக் காட்டுவேன்.

9 அவர்களின் ஞானம் பெரிதாயிருக்கும், அவர்களின் புரிந்துகொள்ளுதல் வானத்தை எட்டும், அவர்களுக்கு முன்பாக ஞானிகளின் ஞானம் கெட்டு, விவேகிகளின் விவேகம் அபத்தமாகும்.

10 ஏனெனில் என்னுடைய ஆவியினால் நான் அவர்களை தெளிவுபடுத்துவேன், என்னுடைய வல்லமையினால் என்னுடைய சித்தத்தின் இரகசியங்களை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன், ஆம், கண்கள் கண்டிராத, அல்லது காதுகள் கேட்டிராத, அல்லது மனுஷனின் இருதயத்தில் இன்னமும் பிரவேசித்திராத அந்த காரியங்களை,

11 ஜோசப் ஸ்மித், இளையவனும், சிட்னி ரிக்டனுமாகிய நாங்கள், பிப்ருவரி பதினாறாம் நாளில், கர்த்தரின் வருஷமான ஆயிரத்து எண்ணூற்று முப்பத்திரண்டாவது வருஷம் ஆவிக்குள்ளாகி,

12 ஆவியின் வல்லமையால், எங்களுடைய கண்கள் திறக்கப்பட்டன, கர்த்தரின் காரியங்களைக் காணவும் புரிந்துகொள்ளவும் எங்களுடைய அறிவு தெளிவாக்கப்பட்டது,

13 துவக்க முதல், பிதாவின் நெஞ்சிலிருந்த, அவருடைய ஒரேபேறான குமாரனின் மூலமாக பிதாவினால் நியமனம் செய்யப்பட்ட உலகம் உண்டாகிறதற்கு முன்னே துவக்கமுதல் இருந்த அந்தக் காரியங்களையும் குறித்து;

14 நாங்கள் சாட்சி கொடுக்கிறோம், நாங்கள் சாட்சி கொடுப்பது நாங்கள் கண்ட, பரலோக தரிசனத்தில் நாங்கள் பேசிய, குமாரனான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையாகும்.

15 ஏனெனில் கர்த்தர் எங்களுக்கு பணித்த மொழிபெயர்ப்பு வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கும்போது, பின்வருமாறு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட யோவானின் ஐந்தாவது அதிகாரம் இருபத்தொன்பதாவது வசனத்திற்கு நாங்கள் வந்தோம்,

16 மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைப்பற்றி, மனுஷகுமாரனின் சத்தத்தைக் கேட்பவனைக் குறித்துப் பேசும்போது:

17 நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் நன்மை செய்தவர்களும்; நீதிமான்களல்லாதோரின் உயிர்த்தெழுதலில் தீமை செய்தவர்களும் வெளியே வருவார்கள்.

18 இப்பொழுது இது எங்களை அதிசயிக்கச் செய்தது, ஏனெனில் அது எங்களுக்கு ஆவியால் கொடுக்கப்பட்டது.

19 இந்தக் காரியங்களைக் குறித்து நாங்கள் தியானித்தபோது, எங்கள் புரிந்துகொள்ளுதல்களின் கண்களை கர்த்தர் தொட்டார், அவைகள் திறந்தன, கர்த்தரின் மகிமை சுற்றிலும் பிரகாசித்தது.

20 பிதாவின் வலது பாரிசத்தில் குமாரனின் மகிமையை நாங்கள் கண்டு அவரது பரிபூரணத்தை அறிந்தோம்;

21 பரிசுத்த தூதர்களையும், தேவனையும் ஆட்டுக்குட்டியானவரையும் என்றென்றைக்குமாய் தொழுதுகொண்டு அவரது சிங்காசனத்துக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்பட்டவர்களையும், கண்டோம்.

22 இப்பொழுது, அவரைப்பற்றி கொடுக்கப்பட்ட அநேக சாட்சிகளுக்குப் பின்னர், எல்லாவற்றிற்கும் கடைசியாக, அவரைப்பற்றி நாங்கள் கொடுக்கிற சாட்சி இதுவே: அவர் ஜீவிக்கிறார்!

23 ஏனெனில் தேவனின் வலது பாரிசத்தில் நாங்கள் அவரைக் கண்டோம்; பிதாவின் ஒரேபேறானவர் அவரே என்று சாட்சி கொடுத்த குரலை நாங்கள் கேட்டோம்,

24 அவரால், அவர் மூலமாக, அவரில் உலகங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன, சிருஷ்டிக்கப்பட்டன, அதிலுள்ள குடிகள் தேவனின் பேறான புத்திரரும் புத்திரிகளுமாக இருக்கிறார்கள்.

25 தேவனின் பிரசன்னத்தில் அதிகாரமுடையவனாயிருந்தவனும், பிதா பிரியமாயிருந்த, பிதாவின் நெஞ்சிலிருந்த, ஒரேபேறான குமாரனுக்கு விரோதமாக கலகம் செய்தவனுமான, தேவனின் ஒரு தூதன், தேவன் மற்றும், குமாரனின் பிரசன்னத்திலிருந்து கீழே தள்ளப்பட்டதை நாங்கள் கண்டோம், என சாட்சி கொடுக்கிறோம்,

26 அவன் கேடு என்றழைக்கப்பட்டான், ஏனெனில் வானங்கள் அவனுக்காக அழுதன, அவனே லூசிபர், விடியற்காலையின் மகன்.

27 நாங்கள் கண்டோம், இதோ, அவன் விழுந்தான்! விழுந்தான், விடியற்காலையின் மகன்!

28 நாங்கள் இன்னமும் ஆவியில் இருந்தபோது தரிசனத்தை நாங்கள் எழுதவேண்டுமென கர்த்தர் எங்களுக்கு கட்டளையிட்டார். ஏனெனில் பழைய சர்ப்பமானவனும், பிசாசானவனுமான, தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, நம்முடைய தேவனுடைய, மற்றும் அவருடைய கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தை எடுத்துக்கொள்ள நாடியவனுமான சாத்தானை நாங்கள் கண்டோம்,

29 ஆகவே, அவன் தேவனின் பரிசுத்தவான்களுடன் யுத்தம் செய்கிறான், மற்றும் அவர்களை சுற்றிலும் சூழ்ந்து கொள்கிறான்.

30 அவன் யுத்தம் செய்து மேற்கொண்டவர்களின் பாடுகளை ஒரு தரிசனமாக நாங்கள் கண்டோம், ஏனெனில் இப்படியாக கர்த்தரின் சத்தம் எங்களுக்கு வந்தது:

31 என்னுடைய வல்லமையை அறிந்தவர்களையும், அதில் பங்குள்ளவர்களாக ஆக்கப்பட்டவர்களையும், மேற்கொள்ளப்படவும் என்னுடைய சத்தியத்தை மறுதலிக்கவும், என்னுடைய வல்லமையை வெறுக்கவும், பிசாசானவனின் வல்லமையால் பாடுபட்டவர்கள், அனைவரையும் குறித்து இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்,

32 அவர்களே கேட்டின் புத்திரராயிருக்கிறார்கள், அவர்களுக்கு நான் சொல்லுகிறேன் அவர்கள் பிறவாதிருந்தால் அவர்களுக்கு நலமாயிருந்திருக்கும்;

33 ஏனெனில் அவர்கள் கோபாக்கினையின் பாத்திரங்களாயிருக்கிறார்கள், பிசாசானவனுடனும் அவனது தூதர்களுடனும் நித்தியத்தில் தேவனின் கோபாக்கினையில் துன்பப்பட தீர்க்கப்படுகிறார்கள்;

34 நான் சொன்னவர்களைக் குறித்த வரையில், இந்த உலகிலும், வரவிருக்கிற உலகிலும் மன்னிப்பில்லை

35 பரிசுத்த ஆவியைப் பெற்றபின்பு, அதை மறுதலித்து, பிதாவின் ஒரேபேறான குமாரனை மறுதலித்து அவர்களே அவரை சிலுவையிலறைந்து, அவரை ஒரு பகிரங்க அவமானத்திற்குள்ளாக்கினர்.

36 பிசாசானவனுடனும் அவனுடைய தூதர்களுடனும் அக்கினியும் கந்தகமுமான கடலினுள் செல்லவேண்டியவர்கள் இவர்களே,

37 அவர்களிடத்தில் மாத்திரமே இரண்டாவது மரணம் ஏதாவது அதிகாரம் பெற்றிருக்கும்.

38 ஆம், மெய்யாகவே, அவருடைய கோபாக்கினையின் பாடுகளுக்குப்பின், கர்த்தரின் ஏற்ற காலத்தில் மீட்கப்படாதவர்கள் அவர்கள் மாத்திரமே.

39 ஏனெனில், பலியிடப்பட்டவரான, உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்னே பிதாவின் நெஞ்சிலிருந்த, ஆட்டுக்குட்டியானவரின் ஜெயம் மற்றும் மகிமையின் மூலமாக மரித்தவர்களின் உயிர்த்தெழுதலில் மீதியானவர்கள் அனைவரும் கொண்டுவரப்படுவார்கள்.

40 வானங்களிலிருந்து எங்களுக்கு சாட்சியளித்த குரலான இதுவே சுவிசேஷம், நற்செய்தி,

41 உலகத்திற்காக சிலுவையிலறையப்படவும், உலகத்தின் பாவங்களை சுமக்கவும், உலகத்தை பரிசுத்தப்படுத்தவும், சகல அநீதிகளிலிருந்தும் அதை சுத்தப்படுத்தவும் இயேசுவான அவரே உலகத்தில் வந்தார்;

42 பிதா யாரிடம் அவருடைய வல்லமையைக் கொடுத்தாரோ, அவர் மூலமாய் எல்லோரும் இரட்சிக்கப்படும்படிக்கு;

43 பிதாவை மகிமைப்படுத்துகிற, அவரது கைகளின் சகல கிரியைகளையும் பாதுகாக்கிற, பிதா அவனை வெளியரங்கப்படுத்திய பின்பு குமாரனை மறுதலித்த கேட்டின் புத்திரர்களைத்தவிர, அவர் மூலமாகவே எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்.

44 ஆகவே, அவர்களைத்தவிர எல்லோரையும் அவர் இரட்சிக்கிறார். நித்தியத்தில் பிசாசானவனுடனும் அவனுடைய சேனைகளுடனும் அரசாள, முடிவற்ற தண்டனையான, நித்திய தண்டனையாயிருக்கிற நித்திய ஆக்கினைக்குள் போவார்கள், அங்கே அவர்களது புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும், அதுவே அவர்களுடைய வாதையாகும்.

45 அதன் முடிவையோ, இடத்தையோ, அவர்களுடைய வாதையையோ எவனும் அறியமாட்டான்;

46 அதில் பங்காளிகளாக்கப்பட்டவர்களைத் தவிர அது மனுஷனுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, வெளிப்படுத்தப்படுவதில்லை, வெளிப்படுத்தப்படப்போவதில்லை;

47 ஆயினும், கர்த்தராகிய நான் தரிசனம் மூலமாக அதை அநேகருக்குக் காட்டுவேன், ஆனால் மீண்டும் அதை உடனே அடைத்துவிடுவேன்.

48 ஆகவே, முடிவையும், அகலத்தையும், உயரத்தையும், ஆழத்தையும், அங்குள்ள வருத்தங்களையும், இந்த ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்களைத் தவிர ஒருவனும் புரிந்துகொள்ளமாட்டான்.

49 இப்படிச் சொல்லுகிற சத்தத்தை நாங்கள் கேட்டோம்: தரிசனத்தை எழுதுங்கள், ஏனெனில் இதோ, துன்மார்க்கரின் பாடுகளின் தரிசனத்தின் முடிவு இதுவே.

50 மீண்டும் நாங்கள் சாட்சி கொடுக்கிறோம், ஏனெனில் நாங்கள் கண்டோம், கேட்டோம், நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் எழும்புகிற அவர்களைக் குறித்த இதுவே கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சாட்சியாகும்,

51 இயேசுவின் சாட்சியைப் பெற்றவர்கள், அவரது நாமத்தை நம்பி, அவரது நாமத்தில் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு அவர் அடக்கம் பண்ணப்பட்ட விதமாக ஞானஸ்நானம் பெற்றார்கள், இது அவர் கொடுத்த கட்டளையின்படியாகும்,

52 கட்டளைகளைக் கைக்கொள்ளுவதினால் அவர்களுடைய சகல பாவங்களிலிருந்தும் அவர்கள் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள், இந்த அதிகாரத்திற்கு நியமனம் செய்யப்பட்டு முத்திரிக்கப்பட்டவர்களின் கைகள் வைக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள்;

53 விசுவாசத்தால் மேற்கொள்பவர்கள், நீதியாயும் உண்மையாயுமுள்ள யாவர்மேலும் பிதா பொழிந்த வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியால் முத்திரிக்கப்படுகிறார்கள்.

54 இவர்களே முதற்பேறானவரின் சபை.

55 சகல காரியங்களையும் பிதா அவர்களின் கைகளில் கொடுத்த அவர்கள் இவர்களே,

56 அவருடைய முழுமையையும் அவருடைய மகிமையையும் பெற்றுக்கொண்ட ஆசாரியர்களும் ராஜாக்களும் இவர்களே;

57 ஏனோக்கின் முறைமையின்படியும், ஒரேபேறான குமாரனின் முறைமையின்படியுமான மெல்கிசேதேக்கின் முறைமையின்படி உன்னதத்தின் ஆசாரியர்கள் இவர்களே.

58 ஆகவே, எழுதப்பட்டதைப்போல, அவர்கள் தேவர்களாகவும், தேவகுமாரர்களாகவும் இருக்கிறார்கள்,

59 ஆகவே, சகல காரியங்களும் அவர்களுடையதாயிருக்கின்றன, ஜீவியமோ மரணமோ, அல்லது தற்போதுள்ள காரியங்களோ, அல்லது வரப்போகிற காரியங்களோ சகல காரியங்களும் அவர்களுடையதாயிருக்கும், அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாய் இருக்கிறார்கள், கிறிஸ்து தேவனுடையவராயிருக்கிறார்.

60 அவர்கள் சகல காரியங்களையும் மேற்கொள்ளுவார்கள்.

61 ஆகவே, எந்த மனுஷனும் மனுஷனில் மகிமையடையாதிருப்பானாக, மாறாக சகல சத்துருக்களையும் தனது பாதங்களின் கீழடக்குகிற தேவனில் அவன் மகிமையடைவானாக.

62 தேவன், மற்றும் அவருடைய கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இவர்கள் என்றென்றைக்குமாக வாசம்பண்ணுவார்கள்.

63 பூமியில் அவருடைய ஜனங்களை ஆளுகை செய்ய வானங்களின் மேகங்களில் அவர் வரும்போது அவருடன் அவர் கூட்டிக்கொண்டு வருகிறவர்களே இவர்கள்.

64 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுபவர்கள் இவர்களே.

65 நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் வெளியே வருபவர்கள் இவர்களே.

66 சீயோன் மலைக்கும், மகா பரிசுத்த ஸ்தலமெனப்படும், பரலோக ஸ்தலமான ஜீவிக்கிற தேவனுடைய நகரத்திற்கும் வந்து சேருபவர்கள் இவர்களே.

67 எண்ணற்ற தேவதூதர்களிடத்திற்கும், ஏனோக்கின் மற்றும் முதற்பேறானவரின் சபையின்பொது சேர்க்கைக்கும் வந்து சேர்ந்தவர்கள் இவர்களே.

68 தேவனும் கிறிஸ்துவும் அனைவரின் நியாயாதிபதிகளாயிருக்கிற, பரலோகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிறவர்கள் இவர்களே.

69 அவருடைய சொந்த இரத்தத்தின் மூலமாக, இந்த பரிபூரண பாவநிவர்த்தி செய்த புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவின் மூலமாக பரிபூரணமாக்கப்பட்ட நியாயவான்கள் இவர்களே.

70 சிலஸ்டியல் சரீரங்களைக் கொண்டவர்கள், சூரியனின் மகிமையைக் கொண்டவர்கள், விசேஷித்ததாக எழுதப்பட்டுள்ள ஆகாயவிரிவிலுள்ள சூரியனின் மகிமையைக் கொண்டவரான சகலத்திற்கும் மேலான தேவனின் மகிமையைக் கொண்டவர்கள் இவர்களே.

71 மேலும், டிரஸ்டிரியல் உலகத்தை நாங்கள் கண்டோம், இதோ, ஆகாய விரிவில் சூரியனிடமிருந்து சந்திரன் வேறுபடுவதைப்போல, பிதாவின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொண்ட முதற்பேறானவரின் சபையிலிருந்து, வேறுபட்ட மகிமையைக் கொண்ட இவர்களே டிரஸ்டிரியலில் இருப்பவர்கள்.

72 இதோ, நியாயப்பிரமாணம் இல்லாமல் மரித்தவர்கள் இவர்களே;

73 மாம்சத்திலுள்ள மனுஷர்கள்போல அவர்கள் நியாயம் தீர்க்கப்படும்படியாக குமாரன் அவர்களை சந்தித்து சுவிசேஷம் பிரசங்கித்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மனுஷர்களின் ஆவிகளானவர்களும், இவர்களே;

74 இவர்கள் மாம்சத்தில் இயேசுவின் சாட்சியைப் பெறாதிருந்து பின்னர் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

75 பூமியில் மரியாதைக்குரிய மனுஷர்களும், மனுஷர்களின் சூதினால் குருடாக்கப்பட்டவர்களும் இவர்களே.

76 அவருடைய மகிமையைப் பெற்றும், அவருடைய பரிபூரண மகிமையைப் பெறாதவர்கள், இவர்களே.

77 குமாரனின் பிரசன்னத்தைப் பெற்றும், பிதாவின் பரிபூரண பிரசன்னத்தைப் பெறாதவர்கள் இவர்களே.

78 ஆகவே, அவர்கள் டிரஸ்டிரியல் சரீரங்கள், சிலஸ்டியல் சரீரங்களல்ல. சூரியனிலிருந்து சந்திரன் வேறுபட்டிருப்பதைப்போல மகிமையில் வேறுபட்டவர்கள்.

79 இவர்களே இயேசுவைக் குறித்த சாட்சியில் பராக்கிரமம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்; ஆகவே, நம்முடைய தேவனின் ராஜ்யத்தின் கிரீடத்தை அவர்கள் பெறுவதில்லை.

80 இப்பொழுது நாங்கள் இன்னமும் ஆவிக்குள்ளாகி இருந்தபோது எழுதும்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்ட, நாங்கள் கண்ட டிரஸ்டிரியல் தரிசனத்தின் முடிவு இதுவே.

81 மீண்டும், ஆகாயவிரிவில் நட்சத்திரத்தின் மகிமை சந்திரனின் மகிமையிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போல இளநிலை மகிமையான டிலஸ்டியல் மகிமையை நாங்கள் கண்டோம்.

82 கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், இயேசுவின் சாட்சியையும் பெறாதவர்கள் இவர்களே.

83 பரிசுத்த ஆவியை மறுக்காதவர்கள் இவர்களே.

84 கீழே பாதாளத்திற்கு தள்ளப்பட்டவர்கள் இவர்களே.

85 கடைசி உயிர்த்தெழுதல் வரை, கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமானவர் அவருடைய கிரியையை நிறைவேற்றும் வரை பிசாசானவனிடமிருந்து மீட்கப்படாமலிருக்கப் போகிறவர்கள் இவர்களே.

86 நித்திய உலகத்தில் அவருடைய பரிபூரணத்தைப் பெறாதவர்களாகி, ஆனால் டிரஸ்டிரியலின் பணிவிடையின் மூலமாக பரிசுத்த ஆவியைப் பெற்று;

87 சிலஸ்டியலின் பணிவிடையின் மூலமாக டிரஸ்டிரியலையும் பெறுகிறவர்கள் இவர்களே.

88 அவர்களுக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்ட அல்லது அவர்களுக்காக பணிவிடை செய்யும் ஆவிகளாக நியமிக்கப்பட்ட தூதர்களின் பணிவிடையையும் டிலஸ்டியலில் இருப்பவர்கள் பெறுவார்கள்; ஏனெனில் அவர்கள் இரட்சிப்பின் சுதந்தரவாளிகளாயிருப்பார்கள்.

89 எல்லாப் புரிந்துகொள்ளுதலுக்கும் மேலான டிலஸ்டியல் மகிமையை பரலோக தரிசனத்தில் இப்படியாக நாங்கள் கண்டோம்;

90 அதை தேவன் யாருக்கு வெளிப்படுத்தினாரோ அவனைத்தவிர அதை ஒருவனும் அறிந்துகொள்ளமாட்டான்.

91 மகிமையிலும், வல்லமையிலும், ஊக்கத்திலும், ஆளுகையிலும் சகல காரியங்களிலும் டிலஸ்டியலைவிட மேன்மையாயிருக்கிற டிரஸ்டிரியல் மகிமையை இப்படியாக நாங்கள் கண்டோம்.

92 சகல காரியங்களிலும் மேன்மையாயிருக்கிற, சிலஸ்டியல் மகிமையை இப்படியாக நாங்கள் கண்டோம்; அங்கே, பிதாவாகிய தேவன், என்றென்றைக்கும் அவருடைய சிம்மாசனத்தில் ஆளுகை செய்துகொண்டிருக்கிறார்.

93 அவருடைய சிம்மாசனத்திற்கு முன்பாக, தாழ்மையான பயபக்தியோடு சகலமும் தலைவணங்கி, என்றென்றைக்குமாய் அவரை மகிமைப்படுத்துகின்றன.

94 அவருடைய பிரசன்னத்தில் வாசம் செய்கிறவர்கள் முதற்பேறானவரின் சபையாயிருக்கிறார்கள்; அவருடைய பரிபூரணத்தையும் அவருடைய கிருபையையும் பெற்றுக்கொண்டதில், அவைகள் காணப்படுகிறதைப்போல காண்கிறார்கள், அவைகள் அறியப்படுவதைப் போல அறிகிறார்கள்;

95 அதிகாரத்திலும், பராக்கிரமத்திலும், ஆளுகையிலும் அவர்களை அவர் சமமாக்குகிறார்.

96 சூரியனின் மகிமை ஒன்றாயிருப்பதைப்போல சிலஸ்டியல் மகிமையும் ஒன்றே.

97 சந்திரனின் மகிமை ஒன்றாயிருப்பதைப்போல டிரஸ்டிரியல் மகிமையும் ஒன்றே.

98 நட்சத்திரங்களின் மகிமை ஒன்றாயிருப்பதைப்போல டிலஸ்டியல் மகிமையும் ஒன்றே; ஏனெனில், மகிமையில் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்றொரு நட்சத்திரம் வேறுபட்டிருப்பதைப்போன்று, டிலஸ்டியல் உலகத்தில் மகிமையில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருக்கிறது;

99 ஏனெனில் இவர்களே பவுல், அப்பொல்லோ மற்றும் கேபாஸினுடையவர்கள்.

100 அவர்களில் சிலர் ஒன்றைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் மற்றொன்றைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் கிறிஸ்துவை சேர்ந்தவர்களென்றும் சிலர் யோவானைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் மோசேயைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் எலியாஸைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் இசயாசைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் ஏசாயாவைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் ஏனோக்கைச் சேர்ந்தவர்களென்றும், சொல்லுகிறவர்கள் இவர்களே;

101 ஆனால் சுவிசேஷத்தையோ, இயேசுவின் சாட்சியையோ, தீர்க்கதரிசிகளையோ, நித்தியமான உடன்படிக்கையையோ பெறவில்லை.

102 கடைசியிலே, முதற்பேறானவரின் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு மேகத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட பரிசுத்தவான்களோடு கூட்டிச்சேர்க்கப்படாத யாவரும் இவர்களே.

103 பொய்யர்களும், சூனியக்காரர்களும், விபச்சாரக்காரர்களும், வேசித்தனம் செய்பவர்களும் பொய்யைச் சொல்ல விரும்புகிறவர்களும் இவர்களே.

104 பூமியில் தேவனின் கோபாக்கினையை அனுபவிப்பவர்கள் இவர்களே.

105 நித்திய அக்கினியின் ஆக்கினையை அனுபவிப்பவர்கள் இவர்களே.

106 கிறிஸ்து சகல சத்துருக்களையும் அவருடைய பாதங்களின் கீழ்ப்படுத்தி அவருடைய வேலையை நடந்தேறப்பண்ணும்போது, காலங்கள் நிறைவேறும்வரை கீழே பாதாளத்திற்கு தள்ளப்பட்டு, சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபாக்கினையை அனுபவிக்கிறவர்கள் இவர்களே;

107 ராஜ்யத்தை அவர் விடுவித்து அதை பிதாவிடம் மாசற்றதாக சமர்ப்பிக்கும்போது சொல்லுவார்: நான் மேற்கொண்டு, தனியாக திராட்சை ஆலையை மிதித்தேன், சர்வவல்லமையுள்ள தேவனின் கோபத்தின் உக்கிரத்தில் திராட்சை ஆலையை மிதித்தேன்,

108 பின்னர் என்றென்றைக்குமாய் அவருடைய வல்லமையுடன் சிங்காசனத்தில் அமர்ந்து ஆளுகை செய்ய அவரது மகிமையின் கிரீடத்துடன் அவர் கிரீடம் சூட்டப்படுவார்.

109 ஆனால் இதோ, அங்கே ஆகாயவிரிவில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப்போலவும், அல்லது கடற்கரை மணலைப்போன்றும் உள்ள டிலஸ்டியல் உலகத்தின் மகிமையையும் அதின் குடிகளையும் நாங்கள் கண்டோம்;

110 கர்த்தரின் சத்தம் சொன்னதைக் கேட்டோம்: இவர்கள் யாவரும் முழங்கால்படியிடுவர், என்றென்றைக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அவரிடம் ஒவ்வொரு நாவும் அறிக்கை பண்ணும்;

111 ஏனெனில் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள், ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய கிரியைக்குத்தக்கதாக, ஆயத்தப்படுத்தப்பட்ட வாசஸ்தலங்களில், தன்னுடைய சொந்த ஆளுகையைப் பெறுவான்;

112 அவர்கள் உன்னதத்தின் ஊழியக்காரர்களாயிருப்பார்கள்; ஆனால் தேவனும் கிறிஸ்துவும் வாசம் செய்கிற முடிவில்லாத உலகங்களுக்குள் அவர்களால் தரித்திருக்க முடியாது.

113 நாங்கள் கண்ட, இன்னமும் நாங்கள் ஆவியிலிருந்தபோது எழுதும்படி நாங்கள் கட்டளையிடப்பட்ட தரிசனத்தின் முடிவு இதுவே.

114 ஆனால் கர்த்தருடைய கிரியைகள் பெரிதும், ஆச்சரியமுமானவை, எங்களுக்கு அவர் காட்டிய அவருடைய ராஜ்யத்தின் இரகசியங்கள் மகிமையிலும், பராக்கிரமத்திலும், ஆளுகையிலும் எல்லா புரிந்துகொள்ளுதலுக்கும் மேலானவை;

115 இன்னமும் நாங்கள் ஆவியில் இருந்தபோது அதை நாங்கள் எழுதக்கூடாதென்றும், சொல்வதற்கு மனுஷனுக்கு நியாயமில்லை என்றும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டார்;

116 அவைகளை தெரியப்படுத்த மனுஷன் கூடாதவனாயிருக்கிறான், ஏனெனில், அவரை நேசித்து அவருக்கு முன்பாக தங்களை சுத்திகரித்தவர்களுக்கு தேவன் அருளுகிற, பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே அவைகள் காணப்பட்டு புரிந்துகொள்ளப்படும்;

117 அவர்களாகவே காண்பதற்கும் அறிந்துகொள்ளுவதற்கும் இந்த சிலாக்கியத்தை

118 அவர்கள் மாம்சத்திலிருக்கும்போது ஆவியின் வல்லமை மற்றும் வெளிப்படுத்தல் மூலமாக, மகிமையின் உலகத்தில் அவருடைய பிரசன்னத்தை அவர்களால் தாங்கமுடியும்.

119 தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமையும், கனமும், ஆளுகையும் என்றென்றைக்கும் இருப்பதாக. ஆமென்.