வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82


பாகம் 82

ஏப்ரல் 26, 1832ல் மிசௌரியிலுள்ள இன்டிபென்டன்ஸ், ஜாக்சன் மாகாணத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பிரதான ஆசாரியர்கள் மற்றும் சபை மூப்பர்களின் ஆலோசனைக் கூட்டமாக அந்த தருணமிருந்தது. ஜனுவரி 25, 1832ல் ஒஹாயோவின் ஆம்ஹெர்ஸ்ட்டில் பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள் மற்றும் அங்கத்தினர்களின் மாநாட்டில் (பாகம் 75ன் தலைப்பைப் பார்க்கவும்) முன்பே அவர் நியமனம் செய்யப்பட்ட அலுவலுக்கு அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவராக ஜோசப் ஸ்மித் ஆதரிக்கப்பட்டார். சபையின் வர்த்தகத்தையும் வெளியீட்டு பணிகளையும் நிர்வகிக்க ஐக்கிய நிறுவனம் (ஜோசப் ஸ்மித்தின் வழிகாட்டுதலின் கீழ் “ஒழுங்கு முறை” என்ற பதம் “நிறுவனமாக” மாற்றப்பட்டது) என்றறியப்பட்ட ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்க கொடுக்கப்பட்ட ஒரு முந்தய வெளிப்படுத்தலை இந்த வெளிப்படுத்தல் எதிரொலிக்கிறது (பாகம் 78).

1–4, எங்கே அதிகங்கொடுக்கப்படுகிறதோ, அங்கே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது; 5–7, உலகத்தை இருள் ஆளுகிறது; 8–13, கர்த்தர் சொல்லுகிறதை நாம் செய்யும்போது அவர் கட்டப்பட்டிருக்கிறார்; 14–18, அழகிலும் பரிசுத்தத்திலும் சீயோன் அதிகரிக்கவேண்டும்; 19–24, தன்னுடைய அண்டை வீட்டானின் விருத்தியை ஒவ்வொரு மனுஷனும் நாடவேண்டும்.

1 என்னுடைய ஊழியக்காரர்களே, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் மீறுதல்களை நீங்கள் மன்னிக்கிற அளவில் கர்த்தராகிய நான் உங்களை மன்னிக்கிறேன்.

2 ஆயினும், அதிகமாய் பாவஞ்செய்கிறவர்கள் உங்களுக்கு மத்தியிலே இருக்கிறார்கள்; ஆம், நீங்கள் யாவரும் பாவஞ்செய்தீர்கள்; ஆனால் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கொடிய தண்டனைகள் உங்கள் தலைகள்மீது விழாதிருக்கும்படிக்கு இப்போதிலிருந்து எச்சரிக்கையாயிருங்கள், பாவத்திலிருந்து விலகியிருங்கள்.

3 எவனுக்கு அதிகங் கொடுக்கப்படுகிறதோ, அவனிடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது; மிகப்பெரிய ஒளிக்கு விரோதமாக எவன் பாவஞ் செய்கிறானோ அவன் மகா ஆக்கினையைப் பெறுவான்.

4 வெளிப்படுத்தல்களுக்காக என்னுடைய நாமத்தை அழையுங்கள், நான் அவைகளை உங்களுக்குக் கொடுக்கிறேன்; நான் உங்களுக்குக் கொடுக்கிற மற்றும் நான் சொல்லுகிறவற்றை நீங்கள் கைக்கொள்ளாதிருக்கிற அளவில் நீங்கள் அக்கிரமக்காரராவீர்கள்; நீதியும் நியாயத்தீர்ப்பும் என்னுடைய நியாயப்பிரமாணத்தின்படி குறிக்கப்பட்டிருக்கிற தண்டனையாகும்.

5 ஆகவே, நான் ஒருவனுக்குச் சொல்லுகிறது நான் சகலருக்கும் சொல்வதாகும்: விழித்திருங்கள், ஏனெனில் சத்துரு அவனுடைய ஆளுகையை விரிவாக்குகிறான், இருள் ஆளுமை செய்கிறது;

6 பூமியின் குடிகளுக்கு விரோதமாக தேவனின் கோபம் மூள்கிறது; எவனும் நன்மை செய்யவில்லை, ஏனெனில் யாவரும் வழி விலகிப்போனார்கள்.

7 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தராகிய நான் எந்த பாவத்தையும் உங்கள் பொறுப்பில் வைக்கமாட்டேன்; நீங்கள் உங்கள் வழிகளில் போய் இனி பாவஞ்செய்யாதிருங்கள்; ஆனால் பாவஞ்செய்கிற ஆத்துமாவுக்கு முன்னாள் பாவங்கள் திரும்பவருமென உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

8 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களைக் குறித்த என்னுடைய விருப்பத்தை புரிந்து கொள்ளும்படியாக நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்;

9 அல்லது, வேறு வார்த்தைகளில் எனில், உங்களுடைய இரட்சிப்புக்கேதுவாக உங்களைத் திருப்புகிறதற்கு நீங்கள் எனக்கு முன்பாக எவ்வாறு செயல்பட வேண்டுமென நான் உங்களுக்கு வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறேன்.

10 நான் சொல்வதை நீங்கள் செய்யும்போது கர்த்தராகிய நான் கட்டப்பட்டிருக்கிறேன்; ஆனால் நான் சொல்வதை நீங்கள் செய்யாதபோது உங்களுக்கு வாக்குத்தத்தம் இல்லை.

11 ஆகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரர்களாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ், நீவல் கே. விட்னி, எ. சிட்னி கில்பர்ட், சிட்னி ரிக்டன், மற்றும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித்தும், ஜான் விட்மரும், ஆலிவர் கௌட்ரியும், டபுள்யு. டபுள்யு. பெல்ப்ஸூம், மார்ட்டின் ஹாரிஸூம், உங்களுடைய ஏராளமான உக்கிராணத்துவங்களில் நியாயத்தீர்ப்பு உடனடியாக தொடராதவரை மீறுதலால் உடைக்கப்பட முடியாத ஒரு நிபந்தனையினாலும் உடன்படிக்கையாலும் ஒன்றாக கட்டப்பட்டிருக்க வேண்டும், என்பது அவசியமாயிருக்கிறது.

12 தரித்திரர்களின் விவகாரங்களை நிர்வகிக்கவும், சீயோன் தேசத்திலும் கர்த்லாந்து தேசத்திலும் ஆயத்துவத்துக்கு சம்பந்தப்பட்ட சகல காரியங்களிலும்;

13 ஏனெனில், உன்னதத்தின் பரிசுத்தர்களின் பலனுக்காகவும், சீயோனுக்கு ஒரு பிணையத்திற்காகவும் என்னுடைய ஏற்ற காலத்தில் கர்த்லாந்து தேசத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன்.

14 ஏனெனில் சீயோன் அழகிலும் பரிசுத்தத்திலும் அதிகரிக்கவேண்டும்; அதன் எல்லைகள் விரிவாக்கப்படவேண்டும்; அதன் பிணையங்கள் பெலப்படுத்தப்படவேண்டும்; ஆம் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சீயோன் எழுந்து, அது அழகிய வஸ்திரங்களை தரித்துக்கொள்ள வேண்டும்.

15 ஆகவே, இந்த உடன்படிக்கையால் உங்களை நீங்களே கட்டும்படியாக நான் உங்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறேன், கர்த்தரின் நியாயப்பிரமாணங்களின்படி அது செய்யப்படும்.

16 இதோ, உங்களுடைய நன்மைக்காக ஞானம் இதிலே விளங்கும்.

17 நீங்கள் சரிசமமாயிருக்கவேண்டும், அல்லது வேறு வார்த்தைகளில் எனில், உங்களுடைய உக்கிராணத்துவங்களின் காரியங்களை பராமரிப்பதன் பலனுக்காக, ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுடைய தேவைகளும் அவசியமானவைகளும் நியாயமாயிருக்கிற வகையில் அவனுடைய தேவைகளின், அவசியங்களின்படி சொத்துக்களின் மேல் நீங்கள் சம உரிமை கோரவேண்டும்,

18 ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய தாலந்தை விருத்தி செய்து, ஒவ்வொரு மனுஷனும் பிற தாலந்துகளைப் பெற்று, ஆம், நூறு மடங்காக, கர்த்தரின் பண்டசாலையில் போடப்படுவதற்காக, முழுச் சபையின் பொது சொத்தாயிருக்க இவை யாவையும் ஜீவிக்கிற தேவனின் சபையின் பலனுக்காக,

19 ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அயலானுடைய விருத்தியை நாடி, தேவனின் மகிமைக்கென்ற ஒத்த நோக்கத்திற்காக சகல காரியங்களையும் செய்யவேண்டும்.

20 நீங்கள் பாவஞ் செய்யாதிருக்கிற அளவில் இந்த கட்டளையை ஒரு நித்திய கட்டளையாயிருக்க நான் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் ஏற்படுத்துகிறேன்.

21 இந்த உடன்படிக்கைக்கு விரோதமாக பாவஞ்செய்கிற ஆத்துமாவும், அதற்கு விரோதமாக தம்முடைய இருதயத்தை கடினப்படுத்துகிறவனும் என்னுடைய சபையின் சட்டங்களின்படி கையாளப்படுவான், மீட்பின் நாள்வரை சாத்தானின் தாக்குதலுக்கு ஒப்படைக்கப்படுவான்.

22 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதுவே ஞானம், உலகப்பிரகாரமான ஆஸ்தியுடன் உங்களுக்கு சிநேகிதரை சம்பாதியுங்கள், அவர்கள் உங்களை அழிக்க மாட்டார்கள்.

23 நியாயத்தீர்ப்பை என்னிடம் விட்டுவிடுங்கள், ஏனெனில் அது என்னுடையது, நானே பதில் செய்வேன். சமாதானம் உங்களோடிருப்பதாக; என்னுடைய ஆசீர்வாதங்கள் தொடர்ந்து உங்களோடிருக்கும்.

24 ஏனெனில், நீங்கள் உங்களுடைய திடமனதிலிருந்து விழாதிருந்தால் இன்னமும், எனறென்றைக்கும் ராஜ்யம் உங்களுடையதாயிருக்கிறது. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.