வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9


பாகம் 9

ஏப்ரல் 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் ஆலிவர் கௌட்ரிக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பொறுமையாயிருக்க ஆலிவர் எச்சரிக்கப்பட்டு, மொழிபெயர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக தற்போதைக்கு மொழிபெயர்ப்பாளர் சொல்வதைக்கேட்டு எழுதுவதில் திருப்தியடைய வலியுறுத்தப்பட்டார்.

1–6, பூர்வகாலத்து பிற பதிவேடுகள் இனிமேல்தான் மொழிபெயர்க்கப்படவேண்டும்; 7–14, படிப்பாலும், ஆவிக்குரிய உறுதிப்பாட்டிலும் மார்மன் புஸ்தகம் மொழிபெயர்க்கப்பட்டது.

1 இதோ, எனது மகனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னிடமிருந்து நீ வாஞ்சித்தவைகளின்படி நீ மொழிபெயர்க்காமல் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவருக்காக மீண்டும் நீ எழுத ஆரம்பித்தாய், அவனிடம் நான் ஒப்படைத்த இந்த பதிவேட்டை நீ முடிக்கும்வரை நீ தொடரவேண்டுமென நான் விரும்புகிறேன்.

2 பின்னர், இதோ, என்னிடமுள்ள பிற பதிவேடுகளை மொழிபெயர்க்க நீ உதவும்படியாக நான் உனக்கு அதிகாரம் கொடுப்பேன்.

3 பொறுமையாயிரு என் மகனே, ஏனெனில் அதுவே எனது ஞானமாயிருக்கிறது, மேலும் தற்போது நீ மொழிபெயர்க்க வேண்டுமென்பது முடியாதது.

4 இதோ, நீ செய்யவேண்டுமென அழைக்கப்பட்ட பணி எனது ஊழியக்காரனாகிய ஜோசப்புக்காக எழுதுவதே.

5 மேலும், இதோ, நீ மொழிபெயர்க்க ஆரம்பித்தபோது, நீ ஆரம்பித்ததைப்போன்று தொடரவில்லையாதலால், இந்த சிலாக்கியத்தை உன்னிடமிருந்து எடுத்துப்போட்டேன்.

6 எனது மகனே, முறுமுறுக்காதே, இந்த வகையில் நான் உன்னை நடத்தியது எனது ஞானமாயிருக்கிறது.

7 இதோ, நீ புரிந்துகொள்ளவில்லை; என்னைக் கேட்பதைத் தவிர எதையும் சிந்திக்காதபோது, நான் உனக்குக் கொடுப்பேனென நீ நினைத்தாய்.

8 ஆனால், இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், இதை நீ மனதில் ஆராய வேண்டும், பின்னர் அது சரியானதாவென என்னிடம் கேள், அது சரியாயிருந்தால் உனக்குள்ளே உனது மார்பை அனலடையச் செய்வேன், ஆகவே அது சரியானதென நீ உணருவாய்.

9 அது சரியில்லையென்றால் அம்மாதிரி உணர்வுகள் உனக்கிருக்காது, ஆனால் தவறானவற்றை, மறக்கச்செய்கிற மந்தமான சிந்தனை பெறுவாய்; ஆகவே, என்னால் உனக்குக் கொடுக்கப்பட்டாலன்றி, பரிசுத்தமானவையான எதையும் உன்னால் எழுதமுடியாது.

10 இப்பொழுது, இதை நீ அறிந்திருந்தால் நீ மொழிபெயர்த்திருக்கலாம்; ஆயினும், தற்போது நீ மொழிபெயர்க்கவேண்டுமென்பது சரியாயிராது.

11 இதோ, நீ ஆரம்பித்தபோது அது சரியாயிருந்தது; ஆனால் நீ பயப்பட்டாய், காலம் கடந்துபோயிற்று, இப்போது அது சரியில்லை;

12 ஏனெனில், அது அப்படிச்செய்யப்பட்டு, எனது ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு போதுமான பெலத்தை நான் கொடுத்திருப்பதை நீ காணவில்லையா? உங்கள் ஒருவரையும் நான் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை.

13 நான் உனக்கு கட்டளையிட்ட இந்த காரியத்தைச் செய், நீ செழித்திருப்பாய். விசுவாசமாயிரு, சோதனைக்குட்படாதே.

14 நான் உன்னை அழைத்த பணியில் உறுதியாயிரு, உன் தலைமயிரில் ஒன்றாகிலும் தொலைந்துபோகாது, கடைசிநாளில் நீ உயர்த்தப்படுவாய். ஆமென்.