வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93


பாகம் 93

மே 6, 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–5, உண்மையுள்ளவர்கள் யாவரும் கர்த்தரைக் காண்பார்கள்; 6–18, பிதாவின் மகிமையின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளும்வரை கிருபையிலிருந்து கிருபைக்கு தேவகுமாரன் போனதாக யோவான் சாட்சி பகர்ந்தான்; 19–20, கிருபையிலிருந்து கிருபைக்கு போகிற உண்மையுள்ள மனுஷர்களும்கூட அவருடைய பரிபூரணத்தைப் பெறுவார்கள்; 21–22, கிறிஸ்துவின் மூலமாக பேறுபெற்றோர் முதற்பேறானவரின் சபையாவார்கள்; 23–28, சகல சத்தியத்தின் பரிபூரணத்தை கிறிஸ்து பெற்றார், கீழ்ப்படிதலால் மனுஷன் அதைப்போன்று செய்யமுடியும்; 29–32, ஆரம்பத்தில் மனுஷன் தேவனோடிருந்தான்; 33–35, பஞ்சபூதங்கள் நித்தியமானவை, உயிர்த்தெழுதலில் சந்தோஷத்தின் பரிபூரணத்தை மனுஷன் பெறுவான்; 36–37, தேவனின் மகிமை புத்திசாலித்தனம்; 38–40, கிறிஸ்துவின் மீட்பினால் சிறுபிள்ளைகள் தேவனுக்கு முன்பாக மாசற்றவர்களாயிருக்கிறார்கள்; 41–53, தங்களுடைய குடும்பங்களை ஒழுங்கில் அமைக்க வழிநடத்தும் சகோதரர்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்.

1 மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்: தன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு, என்னிடத்தில் வந்து, என்னுடைய நாமத்தில் அழைக்கிற ஒவ்வொரு ஆத்துமாவும், என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, என்னுடைய கட்டளைகளுக்குக் கீழப்படிந்து என்னுடைய முகத்தைக் கண்டு நானே என்றறியும்;

2 உலகத்தில் வருகிற ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி நானே என்றும்;

3 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் எனவும்,

4 பிதா தம்முடைய பரிபூரணத்தில் என்னை அவர் கொடுத்ததால், குமாரனாகிய நான் உலகத்தில் இருந்ததாலும் மாம்சத்தை என்னுடைய கூடாரமாக்கியதாலும் மனுஷ குமாரர்களுக்கு மத்தியில் வாசம் செய்தேன்.

5 நான் உலகத்திலிருந்தேன், என்னுடைய பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், அவருடைய கிரியைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

6 என்னுடைய மகிமையின் பரிபூரணத்தை யோவான் கண்டு சாட்சி கொடுத்தான், யோவானின் சாட்சியின் பரிபூரணம் இப்போதிலிருந்து வெளிப்படவிருக்கிறது.

7 இப்படியாக அவன் சாட்சி கொடுத்து சொன்னதாவது: நான் அவருடைய மகிமையைக் கண்டேன், உலகம் உண்டாகிறதற்கு முன்னே துவக்கமுதல் அவரிருந்தார்;

8 ஆகவே, ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, ஏனெனில் அவர் வார்த்தையாயும் இரட்சிப்பின் தூதனாயும் இருந்தார்.

9 உலகத்தின் ஒளியாயும் மீட்பருமாகவும் இருந்தார்; உலகத்திற்குள் வந்த சத்தியத்தின் ஆவியாயும் இருந்தார், ஏனெனில் உலகம் அவரால் உண்டாக்கப்பட்டது, அவரிலேயே மனுஷரின் ஜீவனும் மனுஷரின் ஒளியுமிருக்கிறது.

10 உலகங்கள் அவராலேயே உண்டாக்கப்பட்டன; மனுஷர்கள் அவராலேயே உண்டாக்கப்பட்டார்கள்; சகல காரியங்களும் அவராலேயும், அவர் மூலமாகவும், அவரிலும் உண்டாக்கப்பட்டன.

11 மாம்சத்திலே வந்து வாசம் செய்தவரும் நமக்கு மத்தியிலே வாசம் செய்தவருமான சத்தியத்தின் ஆவியாகிய, கிருபை மற்றும் சத்தியம் நிறைந்தவராக, பிதாவின் ஒரேபேறானவரின் மகிமையாக அவருடைய மகிமையை நான் கண்டேன் என யோவானாகிய நான் சாட்சி கொடுக்கிறேன்.

12 முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கிருபைக்காக கிருபையைப் பெற்றதை யோவானாகிய நான் கண்டேன்;

13 முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளும்வரை கிருபையிலிருந்து கிருபைக்கு தொடர்ந்தார்;

14 இப்படியாக அவர் தேவகுமாரனென்று அழைக்கப்பட்டார், ஏனெனில் முதலில் அவர் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

15 இதோ, வானம் அவருக்கு திறக்கப்பட்டது, பரிசுத்த ஆவி ஒரு புறாவின் உருவத்தில் அவர் மேல் இறங்கி அவர் மேல் அமர்ந்தது, அப்பொழுது பரலோகத்திலிருந்து வந்த சத்தம், இவர் என் நேசகுமாரன் என சொன்னதாக யோவானாகிய நான் சாட்சி கொடுக்கிறேன்.

16 பிதாவின் மகிமையின் ஒரு பரிபூரணத்தை அவர் பெற்றார் என யோவானாகிய நான் சாட்சி கொடுக்கிறேன்;

17 வானத்திலும் பூமியிலும் சகல வல்லமையையும் அவர் பெற்றார், பிதாவின் மகிமை அவரோடிருந்தது, ஏனெனில் அவரில் அவர் வாசம் செய்தார்.

18 அதாவது, நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால் யோவானின் சாட்சியின் பரிபூரணத்தை நீங்கள் பெறுவீர்கள்.

19 எவ்வாறு தொழுது கொள்வதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாகவும், அறிந்து கொள்ளும்படியாகவும், எதை நீங்கள் தொழுது கொள்ளவேண்டுமென்றும் அறிந்து கொள்ளும்படியாகவும், என்னுடைய நாமத்தில் நீங்கள் பிதாவிடத்தில் வரும்படியாகவும், ஏற்ற காலத்தில் அவருடைய பரிபூரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாகவும், இந்த வார்த்தைகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

20 ஏனெனில் என்னுடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டால் அவருடைய பரிபூரணத்தை நீங்கள் பெற்று நான் பிதாவிலிருப்பதைப்போல என்னில் மகிமைப்படுவீர்கள், ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் கிருபைக்கு கிருபையை பெற்றுக்கொள்வீர்கள்.

21 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆரம்பத்தில் நான் பிதாவோடிருந்தேன், நானே முதற்பேறானவர்;

22 என் மூலமாக ஜென்மிக்கப்பட்ட யாவரும் அதே மகிமையின் பங்காளிகளாகவும் முதற்பேறானவரின் சபையுமாகிறார்கள்.

23 ஆரம்பத்தில் நீங்களும்கூட பிதாவோடு ஆவியாக, சத்தியத்தின் ஆவியாகவே இருந்தீர்கள்;

24 அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியே சத்தியம் காரியங்களைப்பற்றிய ஞானமாகும்;

25 இதற்கு அதிகமாகவோ குறைவாகவோவுள்ள எதுவும் ஆரம்பத்திலிருந்தே ஒரு பொய்யனாயிருந்த அந்த துன்மார்க்கனின் ஆவியே.

26 சத்தியத்தின் ஆவி தேவனுடையது. நானே சத்தியத்தின் ஆவி, அவர் சத்தியத்தின், ஆம், சகல சத்தியத்தின் ஒரு பரிபூரணத்தைப் பெற்றார், என சொல்லி யோவான் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தான்;

27 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாவிட்டால் எந்த மனுஷனும் பரிபூரணத்தைப் பெறுவதில்லை.

28 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன், சத்தியத்தில் அவன் மகிமையடையும் வரைக்கும், சகல காரியங்களையும் அறிந்து கொள்ளும் வரைக்கும் சத்தியத்தையும் ஒளியையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

29 ஆரம்பத்தில் மனுஷனும் தேவனோடிருந்தான். புத்தி அல்லது சத்தியத்தின் ஒளி சிருஷ்டிக்கப்படவோ அல்லது உண்டாக்கப்படவோ இல்லை, இருப்பதுமில்லை.

30 சகல புத்தியையும்போல அது தானே செயல்பட தேவன் அதை வைத்த அந்த இடத்தில் சகல சத்தியமும் சுதந்தரமாயிருக்கிறது. இல்லையென்றால் எதுவுமே இல்லை.

31 இதோ, இங்கே மனுஷனுடைய சுயாதீனமும், மனுஷனின் ஆக்கினையுமிருக்கிறது; ஏனெனில் அதுவே ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நேரடியாக காட்டப்பட்டதால் அவர்கள் ஒளியைப் பெற்றுக்கொள்ளவில்லை.

32 தன்னுடைய ஆவி ஒளியைப் பெற்றுக்கொள்ளாத ஒவ்வொரு மனுஷனும் ஆக்கினைக்குள்ளாவான்.

33 ஏனெனில் மனுஷனே ஆவியாயிருக்கிறான். பஞ்சபூதங்களும் நித்தியமானவை, ஆவியும் பஞ்சபூதங்களும் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டு, மகிழ்ச்சியின் ஒரு பரிபூரணத்தைப் பெறுகிறான்;

34 பிரிக்கப்படும்போது மனுஷன் மகிழ்ச்சியின் பரிபூரணத்தைப் பெறமாட்டான்.

35 பஞ்சபூதங்கள் தேவனின் கூடாரம்; ஆம், மனுஷன் தேவனின் கூடாரமாகவும் ஆலயங்களாகவுமிருக்கிறான்; எந்த ஆலயமாவது தீட்டுப்பட்டால், தேவன் அந்த ஆலயத்தை அழிப்பார்.

36 தேவனின் மகிமை புத்தியாயிருக்கிறது, அல்லது வேறு வார்த்தைகளில் எனில், ஒளியும் சத்தியமுமாயிருக்கிறது.

37 அந்த பொல்லாங்கனை ஒளியும் சத்தியமும் கைவிடுகிறது.

38 ஆரம்பத்தில் மனுஷனின் ஒவ்வொரு ஆவியும் வெகுளியாயிருந்தது; வீழ்ச்சியிலிருந்து தேவன் மனுஷனை மீட்டதில் மனுஷர்கள் மீண்டும் தங்களுடைய சிறுபிள்ளை ஸ்தானத்திற்கு மாறி, தேவனுக்கு முன்பாக வெகுளியானார்கள்.

39 அந்த துன்மார்க்கன் வந்து, மனுபுத்திரர்களிடத்திலிருந்து கீழ்ப்படியாமையின் மூலமாகவும் அவர்களுடைய பிதாக்களின் பாரம்பரியத்தினிமித்தமும் ஒளியையும் சத்தியத்தையும் எடுத்துப் போகிறான்.

40 ஆனால் ஒளியிலும் சத்தியத்திலும் உங்கள் பிள்ளைகளை வளர்த்துவர நான் உங்களுக்கு கட்டளையிட்டேன்.

41 ஆனால் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ், நீ இந்த ஆக்கினையில் தொடர்ந்து வந்தாய்;

42 கட்டளைகளின்படி ஒளியையும் சத்தியத்தையும் உன்னுடைய பிள்ளைகளுக்கு நீ போதிக்கவில்லை; இதுவரை அந்த துன்மார்க்கன் உன்மீதும் அதிகாரம் கொண்டான், இதுவே உன்னுடைய உபத்திரவத்திற்கான காரணம்.

43 இப்பொழுது நான் உனக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், நீ விடுவிக்கப்பட்டால் உன்னுடைய வீட்டை நீ ஒழுங்குபடுத்துவாய், ஏனெனில் உன்னுடைய வீட்டில் அநேக காரியங்கள் சரியாக இல்லை.

44 அவனுடைய பிள்ளைகளைக் குறித்து சில காரியங்களில் அவன் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை; ஆகவே முதலாவதாக உன்னுடைய வீட்டை ஒழுங்குபடுத்து என என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுக்கு மெய்யாகவே நான் சொல்லுகிறேன்.

45 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவனுக்கு மெய்யாகவே நான் சொல்லுகிறேன், அல்லது வேறு வார்த்தைகளில் எனில், நான் உங்களை சிநேகிதரே என்றழைப்பேன், ஏனெனில் நீங்கள் என்னுடைய சிநேகிதராயிருக்கிறீர்கள், என்னிடம் நீங்களும் ஒரு சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்,

46 உலகத்தாருக்காக ஊழியக்காரர்கள் என்று உங்களை நான் அழைத்தேன், எனக்காக நீங்கள் அவர்களுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறீர்கள்,

47 இப்பொழுது ஜோசப் ஸ்மித், இளையவனுக்கு மெய்யாகவே நான் சொல்லுகிறேன். நீ என்னுடைய கட்டளைகளை கைக்கொள்ளவில்லை, கர்த்தருக்கு முன்பாக தண்டிக்கப்பட்டவனாக நிற்கவேண்டியது அவசியமாயிருக்கிறது;

48 உன்னுடைய குடும்பம் மனந்திரும்பி சில காரியங்களை விட்டுவிட்டு, நீ சொல்லுகிறவற்றிற்கு மிகுந்த சிரத்தையாய் செவிகொடுக்க வேண்டும், அல்லது அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

49 நான் ஒருவனுக்குச் சொல்வது யாவருக்கும் சொல்வதாகும்; எப்பொழுதும் ஜெபியுங்கள், இல்லையெனில் அந்த துன்மார்க்கன் உங்கள்மேல் அதிகாரம்கொண்டு உங்கள் இடத்திலிருந்து உங்களை அகற்றிப்போடுவான்.

50 என்னுடைய சபையின் ஆயரும், என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னியும் கூட தண்டிக்கப்பட்டு, அவனுடைய குடும்பத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், வீட்டில் அவர்கள் மிகுந்த கருத்தாயும் அக்கறையுடனுமிருக்க பார்க்கவேண்டும், எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும், அல்லது அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

51 இப்பொழுது, என்னுடைய சிநேகிதரே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன் அவனுடைய பயணத்தை மேற்கொள்வானாக, தீவிரமாய் செல்வானாக, கர்த்தரின் அநுக்கிரக வருஷத்தையும், இரட்சிப்பின் சுவிசேஷத்தையும் நான் அவனைப் பேச வைப்பதைப்போல அறிவிப்பானாக. ஒருமனதோடு உங்களுடைய விசுவாசத்தின் ஜெபத்தினால் அவனை நான் ஆதரிப்பேன்.

52 என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித் இளையவனும் பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூம் தீவிரமாய்ச் செல்வார்களாக, விசுவாசத்தின் ஜெபத்தின்படி அது அவர்களுக்குக் கொடுக்கப்படும்; நான் சொன்னவைகளை நீங்கள் கைக்கொள்ளுகிற அளவில் இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் கலக்கமடையமாட்டீர்கள்.

53 என்னுடைய வேதங்களை மொழிபெயர்க்கவும் மற்றும் தேசங்கள் மற்றும் ராஜ்யங்களின் வரலாற்றைப்பற்றிய அறிவைப் பெறவும், இவை யாவும் சீயோனின் இரட்சிப்புக்காக தேவன் மற்றும் மனுஷனின் சட்டங்களைப்பற்றிய அறிவைப்பெறவும் நீங்கள் விரைய வேண்டும், என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆமென்.