வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97


பாகம் 97

ஆகஸ்டு 2, 1833ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தகவலுக்காக கர்த்தரிடம் தீர்க்கதரிசி விசாரித்ததின் பதிலாக, குறிப்பாக சீயோனிலுள்ள, ஜாக்சன் மாகாணத்தின், மிசௌரியிலுள்ள பரிசுத்தவான்களைப்பற்றி இந்த வெளிப்படுத்தல் குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் மிசௌரியிலுள்ள சபை அங்கத்தினர்கள் கொடிய துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார்கள், ஜூலை 23, 1833ல் ஜாக்சன் மாகாணத்தைவிட்டு வெளியேற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

1–2, சீயோனிலுள்ள பரிசுத்தவான்கள் அநேகர் (ஜாக்சன் மாகாணம், மிசௌரி) தங்களின் விசுவாசத்தினிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்; 3–5, சீயோனிலுள்ள பள்ளிக்கூடத்தில் பார்லி பி. பிராட்டின் பிரயாசங்களுக்காக அவர் பாராட்டப்பட்டார்; 6–9, தங்களுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிறவர்கள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; 10–17, சீயோனில் ஒரு வீடு கட்டப்படவேண்டும், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் அதில் தேவனைக் காண்பார்கள்; 18–21, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் சீயோன்; 22–28, அவள் உண்மையுள்ளவளாயிருந்தால் கர்த்தரின் சவுக்கடியிலிருந்து சீயோன் தப்புவாள்.

1 என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சீயோன் தேசத்தில் உங்களுடைய சகோதரர்களைக் குறித்து என்னுடைய சித்தத்தை நான் உங்களுக்குக் காட்டும்படியாக என்னுடைய குரலிலும் என்னுடைய ஆவியின் குரலிலும் நான் உங்களுடனே பேசுகிறேன், அவர்களில் அநேகம்பேர் மெய்யாகவே தாழ்மையுள்ளவர்களாயும் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவும் சத்தியத்தைக் காணவும் கருத்தாய் நாடுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

2 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அத்தகையவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்; ஏனெனில் சாந்தகுணமுள்ள யாவர் மேலும், அவர்களை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வரும்போது நான் நீதிபரராகக் கருதப்பட எனக்கு சித்தமான யாவர் மேலும் கர்த்தராகிய நான் இரக்கத்தைக் காட்டுவேன்.

3 இதோ, சீயோனிலுள்ள பள்ளிக்கூடத்தைக் குறித்து நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சீயோனில் ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டுமென்பதற்காகவும், அவன் என்னில் நிலைத்திருப்பதால் என்னுடைய ஊழியக்காரனாகிய பார்லி பி. பிராட்டுடன் கர்த்தராகிய நான் மிகப் பிரியமாயிருக்கிறேன்.

4 நான் அவனுக்கு பிற கட்டளைகளைக் கொடுக்கும்வரைக்கும் அவன் என்னில் நிலைத்திருக்கிற அளவில் சீயோன் தேசத்தில் பள்ளிக்கூடத்துக்கு அவன் தொடர்ந்து தலைமை தாங்குவான்.

5 சகல வேதங்களையும், பள்ளிக்கூடம் மற்றும் சீயோனின் சபையின் பக்திவிருத்திக்கான இரகசியங்களையும் விவரிப்பதில் பலவிதமான ஆசீர்வாதங்களுடன் நான் அவனை ஆசீர்வதிப்பேன்.

6 பள்ளிக்கூடத்தின் மீதியானவர்களுக்கு இரக்கம் காட்ட கர்த்தராகிய நான் விரும்புகிறேன்; ஆயினும், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அங்கே இருக்கிறார்கள், அவர்களின் கிரியைகள் அறியப்படுத்தப்படும்.

7 கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். கர்த்தராகிய நான் இதைப் பேசினேன்.

8 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுக்கு மத்தியிலே தங்களுடைய இருதயங்கள் ஒழுக்கமுள்ளதாயும், நொறுங்குண்டதாயும், தங்களுடைய ஆவிகள் நருங்குண்டதாயுமுள்ளது என அறிந்த யாவரும், தியாகத்தால், ஆம், கர்த்தராகிய நான் கட்டளையிட்ட சகல தியாகத்தாலும் அவர்களுடைய உடன்படிக்கைகளை ஆசரிக்க வாஞ்சையுள்ள யாவரும், என்னால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.

9 ஏனெனில், ஒரு நல்ல நிலத்தில் ஒரு சுத்தமான நீரோடைக்கருகில் நடப்பட்டிருக்கிற மிகவும் விலையேறப்பெற்ற கனி கொடுக்கிற மரமாக கர்த்தராகிய நான் ஆக்குவேன்.

10 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கொடுத்த மாதிரியைப் போன்று, சீயோன் தேசத்தில் எனக்கு ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

11 ஆம், என்னுடைய ஜனங்களின் தசமபாகத்தினால் சீக்கிரத்திலேயே அது கட்டப்படுவதாக.

12 இதோ, சீயோனின் இரட்சிப்புக்காக அங்கே எனக்காக ஒரு ஆலயம் கட்டப்படும்படியாக, அவர்களின் கைகளினால் இது தசமபாகமாகவும் பலியாகவுமிருக்க,

13 சகல பரிசுத்தவான்களும் நன்றி தெரிவிக்கும் இடமாகவும், அவர்களுடைய ஏராளமான சகல அழைப்புகளிலும் அலுவல்களிலும் ஊழியத்தின் பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் யாவருக்கும் அறிவுறுத்தலின் ஒரு இடமாகவும்;

14 தங்களுடைய ஊழியத்திலும், கருத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும், பூமியில் தேவனின் ராஜ்யத்திற்கு சம்பந்தப்பட்ட சகல காரியங்களிலும், உங்கள் மேல் அருளப்பட்ட ராஜ்யத்தின் திறவுகோல்களைப் புரிந்துகொள்வதில் அவர்கள் பரிபூரணப்படவும் கர்த்தராகிய நான் விரும்புகிறேன்.

15 என்னுடைய ஜனங்கள் எவ்வளவாய் கர்த்தருடைய நாமத்தில் எனக்காக ஒரு ஆலயத்தைக்கட்டி, அது தீட்டுப்படாதிருக்க அதனுள்ளே எந்த அசுசியானவையும் வரவிடாதிருக்கிறார்களோ அவ்வளவாய் என்னுடைய மகிமை அதன்மேல் இறங்கும்;

16 ஆம், அவ்வளவாய் என்னுடைய பிரசன்னம் அங்கேயிருக்கும், ஏனெனில் அதனுள் நான் வருவேன், இருதயத்திலே சுத்தமுள்ளவர்கள் அனைவரும் அதனுள் வந்து தேவனைக் காண்பார்கள்.

17 ஆனால் அது தீட்டுப்பட்டால் அதனுள் நான் வரமாட்டேன், என்னுடைய மகிமை அங்கே இருக்காது; ஏனெனில் அசுத்தமான ஆலயங்களுக்குள் நான் வரமாட்டேன்.

18 இப்பொழுது, இதோ, சீயோன் இந்த காரியங்களைச் செய்தால் அவள் செழித்தோங்கி, பரவி, அதிக மகிமையும், மிகப் பெரியதும், மகா பயங்கரமுமாவாள்.

19 பூமியின் தேசங்கள் அவளை கனம்பண்ணி, சீயோன் நிச்சயமாக நமது தேவனின் பட்டணமாயிருக்கிறது, நிச்சயமாக சீயோன் வீழவோ, அவளது இடத்திலிருந்து நகரவோ மாட்டாது, ஏனெனில் தேவன் அங்கிருக்கிறார், கர்த்தரின் கரம் அங்கேயிருக்கிறது எனச் சொல்லும்.

20 அவளுடைய இரட்சிப்பாகவும், அவளுடைய உயர்ந்த கோபுரமாகவுமிருக்க அவருடைய பராக்கிரமத்தின் வல்லமையால் அவர் ஆணையிட்டார்.

21 ஆகவே, மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், சீயோன் களிகூருவதாக, இருதயத்தில் சுத்தமுள்ள இதுவே சீயோன்; ஆகவே, துன்மார்க்கர் யாவரும் துக்கிக்கும்போது, சீயோன் களிகூருவதாக.

22 ஏனெனில் இதோ, அவபக்தியுள்ளவர்கள்மேலே சுழல் காற்றைப்போல பழிதீர்த்தல் சீக்கிரமாய் வருகிறது; அதிலிருந்து தப்புபவன் யார்?

23 கர்த்தரின் சவுக்கு நாள்தோறும் இரவும் பகலும் புரண்டுவரும், அதிலுள்ள செய்தி சகல ஜனங்களையும் துன்பப்படுத்தும்; ஆம், கர்த்தர் வரும்வரை அது தடுக்கப்படாது;

24 ஏனெனில் அவர்களுடைய அருவருப்புகளுக்கும் அவர்களுடைய சகல துன்மார்க்க கிரியைகளுக்கும் எதிராக கர்த்தருடைய எரிச்சல் மூண்டது.

25 ஆயினும், அவளுக்கு நான் கட்டளையிட்ட சகல காரியங்களையும் செய்ய அவள் கவனமாயிருந்தால் சீயோன் தப்பும்.

26 ஆனால் அவளுக்கு நான் கட்டளையிட்டவற்றைச் செய்ய அவள் கவனமாயிராவிட்டால், அவளுடைய சகல கிரியைக்குத்தக்கதாக, மிகுந்த வேதனையுடனும், கொள்ளை நோயுடனும், வாதையுடனும், பட்டயத்துடனும், பழிதீர்த்தலுடனும், பட்சிக்கிற அக்கினியுடனும் நான் அவளை விசாரிப்பேன்.

27 ஆயினும், கர்த்தராகிய நான் அவளுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொண்டேன், இனியும் அவள் பாவஞ்செய்யாதிருந்தால் இவைகளில் ஒன்றும் அவள்மேல் வராதிருக்கும் என்பது அவளுடைய செவிகளில் ஒருமுறை படிக்கப்படுவதாக;

28 ஆசீர்வாதங்களுடன் நான் அவளை ஆசீர்வதிப்பேன். அவள் மேலும் அவளுடைய தலைமுறைகள் மேலும் என்றென்றைக்குமாய் பலவிதமான ஆசீர்வாதங்களைப் பெருகப்பண்ணுவேன் என கர்த்தராகிய உங்களின் தேவன் சொல்லுகிறார். ஆமென்.