2010–2019
பரிபூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்
ஏப்ரல் 2017


பரிபூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்

நாம் நமது பயத்தைப் புறந்தள்ளிவிட்டு, அதற்குப் பதிலாக ஆனந்தமாயும், தாழ்மையாயும், நம்பிக்கையாயும், கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற தைரியமான தன்னம்பிக்கையுடனும் வாழ்வோமாக.

என் அன்பு சகோதர சகோதரிகளே, அன்பு நண்பர்களே, நமது விசுவாசத்திலும் அன்பிலும் இணைந்து தேவன் மீதும், அவரது பிள்ளைகள் மீதும் விசுவாசத்திலும் அன்பிலும், இணைந்து உலகளாவிய சபையாக சந்திப்பது எவ்வளவு சிலாக்கியமும் ஆனந்தமுமானது.

நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் இங்கிருப்பதற்காக நான் விசேஷமாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தலைவரே, உங்கள் வழிகாட்டுதலையும் வார்த்தைகளையும், ஆலோசனைகளையும், ஞானத்தையும் நாங்கள் எப்போதும் இதயத்தில் வைத்திருப்போம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், ஆதரிக்கிறோம், எப்போதும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ப்ராங்க்பர்ட் ஜெர்மனியில் நான் பிணையத்தலைவராக இருந்தபோது, எங்கள் பிணைய கூட்டங்களின் முடிவில், ஒரு அன்பான ஆனால் கவலையுடைய சகோதரி என்னை அணுகினார்.

“இது பயங்கரமாயில்லையா?” அவர் சொன்னார். “நீங்கள் பேசும்போது நான்கு அல்லது ஐந்து பேர் நன்கு தூங்கியிருக்க வேண்டும்.”

நான் ஒரு கணம் யோசித்து பதிலளித்தேன், “சபையில் தூங்குவது எல்லா தூக்கங்களையும் விட ஆரோக்கியமானது என மிகவும் உறுதியாக நம்புகிறேன்.”

என் அற்புதமான மனைவி ஹாரியட் இந்த சாதாரண உரையாடலை ஒட்டுக்கேட்டு, நான் கொடுத்த பதில்களில் மிக அருமையானது அது என்றாள்.

மாபெரும் எழுப்புதல்

சில நூறு ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவில் நாட்டுப்புறம் முழுவதிலும் “மாபெரும் எழுப்புதல்” என்ற ஒரு இயக்கம் பரவியது. அதன் பிரதான நோக்கங்களில் ஒன்று, ஆவிக்குரிய விஷயங்கள் பொருத்தவரை, தூங்குவது போல் இருப்பவர்களை எழுப்புவதுதான்.

இந்த மத எழுப்புதலில் பங்குபெற்றிருந்த ,சில பிரசங்கிகள் சொல்லக் கேட்டவற்றால் ஜோசப் ஸ்மித் பாதிக்கப்பட்டார். தனிமையான ஜெபத்தில் கர்த்தரின் சித்தத்தை கருத்தாய் நாட அவர் முடிவெடுத்ததற்கு இது ஒரு காரணம்.

பாவிகளுக்காகக் காத்திருக்கிற நரகத்தின் பயங்கரங்கள் பற்றி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தால் அறியப்பட்ட அவர்களது பிரசங்கங்களுடன் இந்த பிரசங்கிகள் நாடகத் தனமான, உணர்ச்சிபூர்வ பிரசங்க நடையைக் கொண்டிருந்தனர்.1 அவர்களது பேச்சுக்கள் ஜனங்களைத் தூங்க விடவில்லை—ஆனால் அவைகள் சில கெட்ட சொப்பனங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களது நோக்கமும் மாதிரியும் சபைக்கு வருமாறு ஜனங்களை பயமுறுத்தியது போல் தோன்றியது.

பயம் பயன்படுத்தப்படல்

வரலாற்றிலேயே ஜனங்களை செயல்பட வைக்க பயம் அடிக்கடி கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமும், முதலாளிகள் வேலைக்காரர்களிடமும், அரசியல்வாதிகள் வாக்காளர்களிடமும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சந்தைப்படுத்தும் திறமைசாலிகள் பயத்தின் வல்லமையை அறிந்து அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அதனால்தான் சில விளம்பரங்கள் நாம் சரியான வகை பற்பசையை வாங்காவிட்டால், அல்லது சரியான காலை உணவு தானியத்தை சாப்பிடாவிட்டால், நாம் இக்கட்டான வாழ்க்கை வாழ்கிறோம், தனிமையில் மகிழ்ச்சியின்றி சாகிறோம் என்ற மறைமுக செய்தியைத் தாங்கியிருப்பது போல் தோன்றுகிறது.

நாம் இதைக் கண்டு சிரித்து இந்த தந்திரத்துக்கு ஒருபோதும் ஆட்படமாட்டோம் என நினைக்கிறோம், ஆனால் சில சமயங்களில் அகப்படுகிறோம். மோசமானது என்னவென்றால், நாம் விரும்புவதைப் பிறர் செய்யவைக்க சில சமயங்களில் அதே வழிமுறைகளைக் கையாள்கிறோம்.

எனது இன்றைய செய்திக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு, முதலாவது, நம்மையும் பிறரையும் தூண்ட நாம் பயத்தை பயன்படுத்துகிற அளவைச் சிந்திக்கவும், கருத்தில் கொள்ளவும் வற்புறுத்துகிறேன். இரண்டாவது ஒரு சிறந்த வழியை ஆலோசனை சொல்ல.

பயத்தின் பிரச்சினை

முதலில் பயத்தின் பிரச்சினையைப் பற்றி பேசுவோம். நன்கு சாப்பிடவும், இருக்கை பட்டையை அணியவும், அதிக உடற்பயிற்சி செய்யவும், பணத்தை சேமிக்கவும், அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடவும், அல்லது பாவத்திலிருந்து மனந்திரும்பவும் நம்மில் யார் பயத்தினால் கட்டாயப்படுத்தப்படவில்லை?

நமது செயல்கள் மற்றும் நடத்தை மீது பயத்துக்கு வல்லமை மிக்க செல்வாக்கு உள்ளது என்பது உண்மை. ஆனால் அந்த செல்வாக்கு தற்காலிகமானது மற்றும் ஆழமற்றது. நமது இருதயங்களை மாற்ற பயத்துக்கு அதிக வல்லமையில்லை, சரியானதை நேசிக்கும், பரலோக பிதாவுக்குக் கீழ்ப்படிய விரும்பும் ஜனமாக நம்மை ஒருபோதும் மாற்றாது.

பயமுள்ளவர்கள் சரியான காரியங்களை சொல்லலாம், செய்யலாம். ஆனால் அவர்கள் சரியாக உணர்வதில்லை. அவர்கள் அடிக்கடி ஆதரவற்றவர்களாகவும் கோபமுடையவர்களாகவும், வன்மமுள்ளவர்களாகவும் உணர்கிறார்கள். காலப்போக்கில் இந்த உணர்வுகள் அவநம்பிக்கைக்கும், எதிர்ப்புக்கும், கலகத்துக்கும் வழிநடத்துகிறது.3

துரதிர்ஷ்டவசமாக, தலைமையத்துவத்துக்கான இந்த தவறான வழிநடத்தப்படுதல் மதச்சார்பற்ற உலகுக்கு வரையறுக்கப்பட்டதல்ல. சில சமயங்களில் இது பிற்காலப் பரிசுத்தவான்களுக்குக் கூட பொருந்தலாம். தங்கள் வீடுகளிலோ, சபை அழைப்புகளிலோ, வேலையிலோ, பிறருடன் அன்றாட பரிவர்த்தனைகளிலோ, சபையார் அநீதியான ஆளுகையைப் பிரயோகிக்கின்றனர் எனக் கேள்விப்படுவது என்னை துக்கப்படுத்துகிறது.

அடிக்கடி, ஜனங்கள் பிறர் அதட்டுவதைக் கண்டனம் செய்யலாம், இருப்பினும் தங்களில் அதைப் பார்க்க முடிவதில்லை. தங்கள் சுய விதிகளுக்கு இணங்க வலியுறுத்துகின்றனர். இந்த மேலோட்ட விதிகளை பிறர் பின்பற்றாதபோது, அப்படிப்படவர்கள் அவர்களை வார்த்தைகளாலும், உணர்ச்சிபூர்வமாகவும், சிலசமயம் சரீரப்பிரகாரமாயும் கண்டிக்கின்றனர்.

கர்த்தர் சொல்லியிருப்பதாவது, “நாம் மனுஷகுமாரர்களின் ஆத்துமாக்களின் மீது கட்டுப்பாடு அல்லது ஆளுகை அல்லது கண்டிப்பை எவ்வளவு அநீதியான வகையிலும் பிரயோகப்படுத்தும்போது,.. பரலோகம் விலகும், கர்த்தரின் ஆவி துக்கப்படும்”, என நினைவுகொள்ளத் தவறுகிறார்கள்.2

முடிவு வழியை நியாயப்படுத்துகிறது என நம்பி நமது செயல்களை நாம் நியாயப்படுத்த நாம் தூண்டப்படுகிற சமயங்கள் இருக்கலாம். கட்டுப்படுத்துவதும், செயல்படுத்துவதும், கடுமையாயிருப்பதுவும் பிறரின் நன்மைக்காகவே என நாம் நினைக்கலாம். அப்படியல்ல, ஏனெனில் கர்த்தர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம்.”3

சிறந்த வழி

நான் பரலோக பிதாவை அதிகமாக அறியும்போது, அவர் எப்படி தன் பிள்ளைகளை உணர்த்தி வழிநடத்துகிறார் என்பதை அதிகமாக நான் பார்க்கிறேன். அவர் கோபமானவரல்ல, பழிவாங்குபவரல்ல, பதிலடி கொடுப்பவரல்ல.4 அவரது ஒரே நோக்கம்—அவரது பணியும் மகிமையும்—நமக்கு ஆலோசனை சொல்வது, நம்மை உயர்த்துவது மற்றும் அவரது முழுமைக்கு நம்மை வழிநடத்துவது.5

“இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவராக’, மோசேக்கு தேவன் தம்மை விவரித்தார்.6

அவரது பிள்ளைகளாகிய நம்மீது நமது பரலோக பிதாவின் அன்பு நமது புரிந்து கொள்ளும் திறமையைக் கடந்தது.7

அவரது கட்டளைகளுக்கு எதிராக இருக்கிற நடத்தைகளை மன்னிக்கிறார் அல்லது அசட்டை பண்ணுகிறார் என்பது இதன் அர்த்தமா? கண்டிப்பாக இல்லை!

ஆனால் அவர் தன் நடத்தையையும் விட அதிகமாக மாற்ற விரும்புகிறார். நமது தன்மைகளையே அவர் மாற்ற விரும்புகிறார். அவர் நமது இருதயங்களை மாற்ற விரும்புகிறார்.

நாம் கடந்து சென்று, இருப்புக் கோலை உறுதியாகப் பற்றிக்கொண்டு, நமது பயங்களை எதிர்த்து, இடுக்கமான மற்றும் நெருக்கமான வழியே முன்னோக்கியும் மேல் நோக்கியும் தைரியமாக அடியெடுத்து வைக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அவர் நம்மை நேசிப்பதால் நாம் இதைச் செய்ய விரும்புகிறார். ஏனெனில் இதுவே சந்தோஷத்துக்கான வழி.

தேவன் தமது பிள்ளைகளை அவரைப் பின்பற்றுமாறு எப்படி தூண்டுகிறார்?

அவர் தன் குமாரனை அனுப்பினார்!

நமக்கு சரியான வழிகாட்ட தனது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தேவன் அனுப்பினார்.

விடாமுயற்சியாலும், நீடிய சாந்தத்தாலும், மென்மையாகவும், சாந்தத்தாலும் மாறாத அன்பினாலும் தேவன் நம்மை தூண்டுகிறார்.8 தேவன் நமது பாரிசத்தில் இருக்கிறார். நாம் தடுமாறும்போது அவர் நம்மை நேசிக்கிறார், நாம் எழும்பவும், மேலும் முயலவும், பலமடையவும் அவர் விரும்புகிறார்.

அவர் நமது ஆலோசகர்

அவர் நமது மாபெரும் மனமார்ந்த நம்பிக்கை.

அவர் நம்மை விசுவாசத்துடன் தூண்ட விரும்புகிறார்.

நமது தவறுகளிலிருந்து கற்று, சரியான தேர்வுகளை செய்ய அவர் நம்மை நம்புகிறார்.

இதுவே சிறந்த வழி!9

உலகின் தீமைகள் பற்றி என்ன செய்வது?

சாத்தான் பிறரை சமாளிக்க விரும்பும் வழிகளில் ஒன்று, உலகத்தின் தீமைகளில் தரித்திருந்து, மிகைப்படுத்துவதே ஆகும்.

கண்டிப்பாக நமது உலகம் பரிபூரணமற்றதாகத்தான் இருந்திருக்கிறது, அப்படித்தான் தொடர்ந்து இருக்கும். மிக அதிகமான குற்றமற்றோர் சூழ்நிலைகளின் தன்மைகளாலும், மனுஷனின் மனுஷத்தன்மையற்ற தன்மையாலும் கஷ்டப்படுகிறார்கள். ஊழலும் துன்மார்க்கமும் நமது நாளில் விசித்திரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கிறது.

இவை யாவுமிருந்தாலும், உலக சரித்திரத்தில் வேறு எதுவுடனும் இக்காலத்தில் வாழ்வதை ஒப்பிட மாட்டேன். எப்போதுமில்லாத முன்னேற்றத்தாலும், அறிவு விருத்தியாலும் சாதகமானவற்றாலும் நாம் அளக்க முடியாத அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அனைத்தையும் விட உலக ஆபத்துகளின் விசித்திர பரிமாணங்களை நமக்கு கொடுக்கிற, அவற்றை எப்படித் தவிர்ப்பது அல்லது எதிர்கொள்வது என்கிற இயேசு கிறிஸ்துவின் முழுமையான சுவிசேஷத்தால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் நினைக்கும்போது, அவரது பிள்ளைகள் அனைவர் மீதும் நமது பரலோக பிதாவின் முடிவிலா அன்புக்காக நான் முழங்கால் படியிட்டு, முடிவில்லா ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க விரும்புகிறேன்.

தன் பிள்ளைகள் பயப்பட வேண்டுமெனவோ, உலகத்தின் தீமைகளில் தரித்திருக்க வேண்டுமெனவோ தேவன் விரும்புவதாக நான் நினைக்கவில்லை. “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” 10

நாம் களிகூர அவர் நமக்கு பல காரணங்களைக் கொடுத்திருக்கிறார். நாம் அவற்றைக் கண்டுபிடித்து அடையாளம் காண வேண்டும். அவர் நமக்கு அடிக்கடி நினைவூட்டுகிறார், “பயங்கொள்ளாதே”,11 “உற்சாகமாயிரு, மற்றும் பயப்படாதே, சிறுமந்தையே”.12

நமது யுத்தங்களை கர்த்தர் செய்வார்

சகோதர சகோதரிகளே, நாம் கர்த்தரின் “சிறு மந்தை.” நாம் பிற்காலத்தின் பரிசுத்தவான்கள். இரட்சகர் திரும்ப வருவதை எதிர்பார்க்கவும், அவரை வரவேற்க உலகத்தை ஆயத்தப்படுத்தவும், ஒப்புக்கொடுத்தல் நமது பெயரிலேயே அடங்கியுள்ளது. ஆகவே நாம் தேவனுக்கும் நமது சக மனுஷருக்கும் சேவை செய்வோமாக. தாழ்மையுடன் எந்த மதம் அல்லது மனித குழுவையும் குறைவானதாகப் பார்க்காமல் இதை சுபாவமான தன்னம்பிக்கையுடன் செய்வோமாக. சகோதர சகோதரிகளே, “நாம் காலங்களின் அடையாளங்களையும் மனுஷ குமாரனின் வருகையின் அடையாளங்களையும் அறியவும்”, 13 தேவ வார்த்தைகளைப் படிக்கவும், ஆவியின் குரலை கேட்கவும் நாம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளோம்.

ஆகவே நாம், உலகின் சவால்களை அறியாமலில்லை, நமது காலத்தின் கஷ்டங்களை தெரியாமலில்லை. ஆனால் நம்மை அல்லது பிறரை பயத்தால் பாரப்படுத்த வேண்டும் என்பது அதன் பொருளல்ல. நமது சவால்களின் கடினத்தில் உழல்வதை விட தேவனின் எல்லையற்ற மகத்துவத்தையும், தயையையும், நன்மையையும், முழு வல்லமையையும் பார்த்து, அவரை நம்பி, இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக ஒரு ஆனந்தமான இருதயத்துடன் ஆயத்தமாவது சிறந்ததில்லையா?

அவரது உடன்படிக்கையின் ஜனமாக, நாம் பயப்படுவது நடக்கலாம் என்பதால் நாம் செயலிழக்கத் தேவையில்லை. மாறாக முன்னேயுள்ள சவால்களையும் சந்தர்ப்பங்களையும் நாம் அணுகும்போது, விசுவாசத்துடனும், தைரியத்துடனும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும், தேவனில் நம்பிக்கையுடனும் முன்னேறலாம்.14

நாம் சீஷத்துவத்தின் பாதையில் தனியே நடப்பது இல்லை. “உன் தேவனாகிய கர்த்தர் தாமே… உன்னோடே கூட வருகிறார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”15

“கர்த்தர் உங்களுக்காய் யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள்.”16

பயப்படும்போது, “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்,” 17 என்ற வாக்குத்தத்தத்தில் தைரியம் காண்போமாக, விசுவாசத்தை வளர்ப்போமாக, தைரியமாய் நம்புவோமாக.

நாம் அழிவு மற்றும் குழப்பத்தின் காலத்தில் வாழ்கிறோமா? ஆமாம், கண்டிப்பாக.

தேவன் தாமே சொல்லியிருக்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்.”18

நம்பவும் அவ்வாறே செயல்படவும் நாம் விசுவாசத்தைப் பிரயோகிக்கலாமா? நாம் நமது ஒப்புக்கொடுத்தல்களையும் பரிசுத்த உடன்படிக்கைகளையும் காத்துக்கொள்ள முடியுமா? சவால் நிறைந்த சூழ்நிலைகளிலும் கூட நாம் தேவனின் கட்டளைக் காத்துக்கொள்ள முடியுமா? கண்டிப்பாக நம்மால் முடியும்!

தேவன் வாக்குத்தத்தம் செய்திருப்பதால் நம்மால் முடியும், “நீ நேர்மையாக நடந்தால் எல்லாம் உனது நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.” 19 ஆகவே நாம் நமது பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு மாறாக ஆனந்தமாயும், தாழ்மையாயும், நம்பிக்கையுடனும், கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியமிக்க தன்னம்பிக்கையுடனும் வாழ்வோமாக.

பரிபூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்

என் அன்பு நண்பர்களே, கிறிஸ்துவுக்குள் எனது அன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் உங்களை பயத்திலோ, அல்லது ஆத்திரத்திலோ கண்டால், அல்லது உங்கள் வார்த்தைகளோ, மனோபாவங்களோ, செயல்களோ பிறரில் பயத்தை ஏற்படுத்தினால், பயத்திலிருந்து விடுபட தெய்வீகத்தால் கொடுக்கப்பட்ட மருந்தைக் கருத்தில் கொள்ளுமாறு எனது ஆத்துமாவின் முழு பெலத்தோடும் நான் ஜெபிக்கிறேன்:கிறிஸ்துவின் பரிசுத்தமான அன்பு, ஏனெனில் “பரிபூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்.” 20

கிறிஸ்துவின் பரிபூரண அன்பு காயப்படுத்தவும், பயமுறுத்தவும், இடித்துரைக்கவும், அல்லது எதிர்க்கவும் ஏற்படுகிற தூண்டுதல்களை ஜெயிக்கிறது.

நமது அன்புமிக்க இரட்சகரைப் பின்பற்றுபவர்களாக கிறிஸ்துவின் பரிபூரண அன்பு, நம்மை தாழ்மையாயும், கண்ணியமாயும், தைரியமிக்க தன்னம்பிக்கையுடனும் நடக்க அனுமதிக்கிறது. கிறிஸ்துவின் பரிபூரண அன்பு பயத்தினூடே கடந்து செல்லவும், நமது ஆலோசகரும், நமது நம்பிக்கையுமான நமது பரலோக பிதா மற்றும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையிலும் நற்பெயரிலும் நமது முழு நம்பிக்கையை வைக்க இந்த தைரியமான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது.

நமது வீடுகளிலும், வியாபார ஸ்தலங்களிலும், நமது சபை அழைப்புகளிலும், நமது சக மனுஷர்களுடனான பரிவர்த்தனைகள் யாவற்றிலும், நமது சொந்த இருதயங்களிலும், நமது அன்புமிக்க கிறிஸ்துவின் பரிபூரண அன்பினால் பயத்தை மாற்றுவோமாக. கிறிஸ்துவின் அன்பு பயத்தை விசுவாசத்தால் மாற்றும்.

அவரது அன்பு, நமது பரலோக பிதாவின் நன்மையிலும், அவரது தெய்வீக திட்டத்திலும், அவரது சுவிசேஷத்திலும், அவரது கட்டளைகளிலும், விசுவாசம் கொண்டு, அடையாளம் கண்டு, நம்புவதை நமக்கு சாத்தியப்படுத்தும். 21 தேவனையும் நமது சக மனுஷரையும் நேசிப்பது தேவனுடைய கட்டளைகளுக்கு நமது கீழ்ப்படிதலை பாரமாக அல்லாமல் ஆசீர்வாதமாக மாற்றும். கிறிஸ்துவின் அன்பு நாம் கொஞ்சம் தயவுள்ளவர்களாகவும், மன்னிப்பவர்களாயும், போஷிப்பவர்களாயும் அவரது பணிக்கு அதிக அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் மாற்றும்.

கிறிஸ்துவின் அன்பால் நாம் நமது இருதயங்களை நிரப்பும்போது, நாம் புதுப்பிக்கப்பட்ட ஆவிக்குரிய புத்துணர்வுடனும் எழுந்து, நமது அன்பு இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியிலும் மகிமையிலும் ஆனந்தமாயும், தன்னம்பிக்கையுடனும், எழுச்சியுடனும், உயிரோட்டமாயும் நடப்போம்.

அப்போஸ்தலனாகிய யோவானுடன் நான் சாட்சியளிக்கிறேன், “[கிறிஸ்துவின்]அன்பிலே பயமில்லை” 22 சகோதர சகோதரிகளே, அன்பு நண்பர்களே, அவர் உங்களை பரிபூரணமாக அறிகிறார். அவர் உங்களை பரிபூரணமாக நேசிக்கிறார். உங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என அவர் அறிகிறார். “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” 23 எனவும், “அவரது [பரிபூரண]அன்பிலே நிலைத்திருக்கவும் 24 கர்த்தர் விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இதுவே எனது தாழ்மையான ஜெபமும் ஆசீர்வாதமுமாகும், ஆமென்.

குறிப்புகள்

  1. இவ்விதமான பிரசங்கிகளுக்கு ஜார்ஜ் ஒய்ட் பீல்டும் ஜோனத்தான் எட்வர்ட்ஸும் இரண்டு பிரபலமான உதாரணங்கள்.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:37.

  3. கலாத்தியர் 5:22–23.

  4. ஒரு சந்தர்ப்பத்தில் இரட்சகர் சமாரிய ஊரில் நுழைய விரும்பினார், ஆனால் ஜனங்கள் இயேசுவை மறுதலித்து, அவரை ஊருக்குள் விடவில்லை. அவரது இரு சீஷர்களாகிய யாக்கோபுவும் யோவானும் மிகவும் வருத்தமுற்று, கர்த்தரிடம் கேட்டார்கள், “ஆண்டவரே வானத்திலிருந்து அக்கினி இரங்கி, இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா...?” இயேசு கவனமாக பதிலளித்தார்: “ நீங்கள் இன்ன ஆவியுடையவர்கள் என அறியீர்கள். மனுஷ குமாரன் மனுஷர்களின் ஆவியை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கவே வந்தார்.” லூக்கா 951–56 பார்க்கவும், New King James Version. 1982

  5. மோசே 1:39 பார்க்கவும், மற்றும் எபேசியர் 3:19 பார்க்கவும்.

  6. யாத்திராகமம் 34:6.

  7. எபேசியர் 3:19 பார்க்கவும்.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41 பார்க்கவும். அவரது அநித்திய பிள்ளைகள் ஒருவரிடம் மற்றொருவர் இவ்விதமாகப் பழக கண்டிப்பாக நம்மை எதிர்பார்க்கிறார். அவர் எல்லா நற்குணங்களுமுடைய பரிபூரணராயிருப்பதால், அவ்வித நடத்தைக்கு அவர் மாதிரியாக இருப்பார்.

  9. அநித்தியத்துக்கு முந்தின ஆலோசனைக்குழு, தேவனின் குணத்தை தெரிவிக்கிற அற்புதமான மாதிரி ஆய்வு. அங்கு நமது பரலோக பிதா நமது நித்திய முன்னேற்றத்துக்கான அவரது திட்டத்தை வழங்கினார். அத்திட்டத்தின் முக்கிய கூறுபாடுகளில், சுயாதீனமும், கீழ்ப்படிதலும், கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் இரட்சிப்பும் அடங்கும். எனினும் லூசிபர் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை சொன்னான். எல்லாரும் கீழப்படிவார்கள், ஒருவரும் இழந்து போக மாட்டார்கள் என உறுதி கொடுத்தான். இதை அடைவதற்கான ஒரே வழி கொடுங்கோன்மையும் கட்டாயப்படுத்தலும்தான். ஆனால் நமது அன்பான பரலோக பிதா அப்படிப்பட்ட திட்டத்தை அனுமதிக்கவில்லை. அவர் தன் பிள்ளைகளின் சுயாதீனத்தை மதித்தார். நாம் உண்மையாகவே கற்க வேண்டுமானால் வாழ்க்கையில் தவறு செய்ய வேண்டும் என அவர் அறிந்தார். அதனால்தான் அவர் ஒரு இரட்சகரைக் கொடுத்தார், அவரது நித்திய பலி நம்மைப் பாவங்களிலிருந்து கழுவி, தேவ இராஜ்யத்துக்கு நாம் திரும்புவதை அனுமதிக்கும்.

    அவரது அன்புமிக்க அநேக பிள்ளைகள் லூசிபரால் வஞ்சிக்கப்பட்டார்கள் என பரலோக பிதா பார்த்தபோது, அவர் தனது திட்டத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தினாரா? அப்படிப்பட்ட பயங்கரமான தேர்வை செய்தவர்களை மிரட்டினாரா அல்லது பயமுறுத்தினாரா? இல்லை. இந்த கலகத்தை நமது சர்வ வல்ல தேவன் கண்டிப்பாக நிறுத்தியிருக்க முடியும். மீறினவர்களை அவர் தன் சித்தத்துக்கு கட்டாயப்படுத்தி, அவர்களை இணங்கச் செய்திருக்க முடியும். ஆனால் மாறாக, அவர் தன் பிள்ளைகள் தங்களுக்காக தேர்வு செய்ய தன் பிள்ளைகளை அனுமதித்தார்.

  10. 2 தீமோத்தேயு 1:7.

  11. உதாரணத்துக்கு யோசுவா 1:9; ஏசாயா 41:13; லூக்கா 12:32; யோவான் 16:33; 1 பேதுரு 3:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36; 50:41; 61:36; 78:18 பார்க்கவும்.

  12. லூக்கா 12:32.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:11.

  14. அவனுடைய நாளின் ஜனங்களுக்கு மோசேயின் ஆலோசனை இன்றும் பொருந்துகிறது: “பயப்படாதிருங்கள். ...இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” (யாத்திராகமம் 14:13, New King James Version)

  15. உபாகமம் 31:6.

  16. யாத்திராகமம் 14:14, New King James Version

  17. ஏசாயா 54:17.

  18. யோவான் 16:33.

  19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24; மற்றும் 2 கொரிந்தியர் 2:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:14ம் பார்க்கவும்.

  20. 1  யோவான் 4:18.

  21. “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி உலகத்தில் வராமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே, (யோவான் 3:17), இரட்சகர் வந்தார்” என்பதை நினைவுகூர்வோமாக. உண்மையாகவே, “அவர் உலகத்தின் நன்மைக்கு ஏதுவானதையே அல்லாமல், எந்தக் காரியத்தையும் செய்யார். எல்லா மனுஷரையும் தம்மிடம் கொண்டுவர தன் சொந்த ஜீவனைக் கொடுக்குமளவுக்கு அவர் இந்த உலகத்தை நேசித்தார்” (2  நெப்பி 26:24).

  22. 1 யோவான் 4:18. மற்றும் 1 யோவான் 4:16 பார்க்கவும்.

  23. மாற்கு 5:36.

  24. யோவான் 15:10.