வேதங்கள்
3 நேபி 10


அதிகாரம் 10

பலமணி நேரத்திற்கு தேசத்தில் அமைதி நிலவுதல் – கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பதைப்போல தம்முடைய ஜனத்தையும் சேர்க்கப்போவதாக கிறிஸ்துவின் சத்தம் வாக்குத்தத்தம் பண்ணுதல் – ஜனங்களின் அதிக நீதிமான்களானவர்கள் காக்கப்படுதல். ஏறக்குறைய கி.பி. 34–35.

1 இப்பொழுதும், இதோ, அந்தப்படியே, தேசத்திலிருந்த சகல ஜனங்களும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அது பற்றி சாட்சியளித்தார்கள். இவ்வார்த்தைகளுக்குப் பின்பு, பல மணிநேரத்திற்கு தேசத்தில் அமைதி நிலவியது.

2 ஜனங்கள் மிகுதியாய் ஆச்சரியப்பட்டதினிமித்தம், அவர்கள் கொல்லப்பட்டுப்போன தங்களுடைய வம்சத்தாரின் இழப்பிற்காய் புலம்புவதையும் துக்கிப்பதையும் நிறுத்தினார்கள்; ஆதலால் தேசமெங்கும் பலமணிநேரம் அமைதி நிலவியது.

3 அந்தப்படியே, அங்கே ஒரு சத்தம் மறுபடியும் ஜனங்களுக்குள் உண்டானது. ஜனங்கள் அனைவரும் அதைக் கேட்டு அதைப்பற்றி சாட்சியளித்ததாவது:

4 யாக்கோபின் சந்ததியும், ஆம், இஸ்ரவேலின் வீட்டாருமாகிய வீழ்ந்துபோன இப்பெரும் பட்டணங்களின் ஜனமே, கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குள் கூட்டிச் சேர்ப்பதைப்போல, நானும் உங்களை எவ்வளவு விசை கூட்டிச் சேர்த்து உங்களைப் போஷித்தேன்.

5 மறுபடியும் வீழ்ந்துபோன இஸ்ரவேலின் வீட்டாராகிய ஜனங்களே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள் சேர்த்து வைப்பதைப்போல, நானும் உங்களை எவ்வளவு விசை கூட்டிச் சேர்த்திருக்கிறேன், ஆம், எருசலேமில் வாசம் பண்ணுகிற இஸ்ரவேலின் வீட்டாராகிய ஜனங்களே நீங்களும் வீழ்ந்துபோனதாலே, ஆம், கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பதைப்போல நான் உங்களை எவ்வளவு விசை கூட்டிச் சேர்த்தேன். நீங்கள் மனதில்லாதிருந்தீர்கள்.

6 நான் தப்புவிக்கப்பண்ணின இஸ்ரவேலின் வீட்டாரே, நீங்கள் மனந்திரும்பி, இருதயத்தின் முழு நோக்கத்தோடு என்னிடத்தில் திரும்பினால், கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குக் கீழ் கூட்டிச்சேர்ப்பதைப்போல நானும் உங்களை எத்தனைமுறை கூட்டிச் சேர்ப்பேன்.

7 அப்படியில்லையெனில், இஸ்ரவேலின் வீட்டாரே, உங்களுடைய பிதாக்களுடனான உடன்படிக்கை நிறைவேறும் காலம் மட்டுமாய் உங்கள் வாசஸ்தலங்கள் பாழாய்ப் போகும்.

8 இப்பொழுதும், அந்தப்படியே, ஜனங்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டபின்பு, இதோ, அவர்கள் தங்கள் இனத்தார் மற்றும் சிநேகிதர்களின் இழப்பினிமித்தம் மறுபடியும் அழுது புலம்பத் துவங்கினார்கள்.

9 அந்தப்படியே, இப்படியாக மூன்று நாட்கள் கடந்துபோயிற்று. காலையில் பூமியின் மீதிருந்த காரிருள் கலைந்து போயிற்று. பூமி அதிர்வதிலிருந்து நின்றது. கன்மலைகள் பிளந்து போவதிலிருந்து நின்றன. பெரும் முனகுதல்களும் முற்றுப்பெற்றன. இடிபாடான சகல சத்தங்களும் கடந்துபோயின.

10 பூமியானது மறுபடியும் ஒன்றாய்க் கூடினதால் அது நின்றது. தப்புவிக்கப்பட்டு உயிரோடு இருந்த ஜனங்களின் துக்கமும், அழுகையும் புலம்பலும் நின்றன. அவர்களின் துக்கம் சந்தோஷமாயும், அவர்களின் புலம்பல்கள் தங்கள் மீட்பரான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு துதியாயும், நன்றி செலுத்துவதாயும் மாறின.

11 இப்படியாக இதுவரைக்கும் தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட வேதவாக்கியங்கள் நிறைவேறின.

12 ஜனங்களில் அதிக நீதிமான்களாயிருந்தவர்களே தப்புவிக்கப்பட்டனர். இவர்களே தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கல்லெறியாதிருந்தவர்கள்; பரிசுத்தவான்களின் இரத்தத்தைச் சிந்தாதிருந்து தப்புவிக்கப்பட்டவர்கள் இவர்களே.

13 அவர்கள் மூழ்கி புதைபட்டுப் போகாமல் தப்புவிக்கப்பட்டனர். அவர்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் அமிழ்ந்து போகவில்லை, அவர்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படவோ, ஒன்றும் அவர்கள் மேல் விழுந்து, மரணத்திற்கேதுவாய் அவர்கள் நொறுக்கப்படவோ இல்லை; அவர்கள் சுழல் காற்றினால் எடுத்துச் செல்லப்படவோ, புகை மற்றும் காரிருளின் தாக்கத்தினால் மேற்கொள்ளப்படவோ இல்லை.

14 இப்பொழுதும் வாசிக்கிற எவனும், புரிந்து கொள்ளக்கடவன். வேதங்களை வைத்திருக்கிறவன் அவைகளை ஆராய்ந்து, அக்கினியாலும் புகையினாலும், புயல்களாலும், சுழல்காற்றுகளாலும், அவர்களை ஏற்றுக்கொள்ளும்படியான பூமியின் பிளவுகளாலும், ஏற்பட்ட இந்த மரணங்களும், அழிவுகளும், மற்றும் இந்தக் காரியங்கள் யாவும், அநேக பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களின்படியே நிறைவேறவில்லையோ என்று நோக்கிப் பார்க்கக் கடவன்.

15 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம், அநேகர் இக்காரியங்களைக் குறித்து கிறிஸ்துவின் வருகையின்போது சாட்சி கொடுத்தார்கள். இக்காரியங்களைக் குறித்து சாட்சி பகர்ந்ததினிமித்தம் கொல்லப்பட்டும் போனார்கள்.

16 ஆம், தீர்க்கதரிசி சீனஸ் இக்காரியங்களைக் குறித்துச் சாட்சி கொடுத்தான். சீனாக்கும் இவைகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறான். ஏனெனில் அவர்களுடைய சந்ததியாரின் மீதியானவர்களான, நம்மைக் குறித்து குறிப்பாக அவர்கள் சாட்சி கொடுத்திருக்கிறார்கள்.

17 இதோ, நம்முடைய பிதாவாகிய யாக்கோபும் யோசேப்பின் சந்ததியாரின் மீதியானவர்களைக் குறித்து சாட்சி கொடுத்தாரே. இதோ, நாம் யோசேப்பின் சந்ததியாரில் மீதியானவர்கள் அல்லவா? நம்மைப்பற்றி சாட்சி கொடுக்கும் இக்காரியங்கள் எருசலேமை விட்டு நம்முடைய பிதாவாகிய லேகி கொண்டுவந்த பித்தளைத் தகடுகளின்மேல் எழுதப்பட்டிருக்கவில்லையா?

18 அந்தப்படியே, முப்பத்தி நான்காம் வருஷ முடிவில், இதோ, தப்புவிக்கப்பட்ட நேபியின் ஜனங்களுக்கும், தப்புவிக்கப்பட்டு லாமானியர்கள் என்றழைக்கப்பட்டவர்களுக்கும், பெரும் அனுக்கிரகங்கள் காண்பிக்கப்பட்டதென்றும், அவர்களுடைய சிரசுகளின் மேல் பெரும் ஆசீர்வாதங்கள் ஊற்றப்பட்டதென்றும், இதினிமித்தம் பரலோகத்திற்கு கிறிஸ்து ஏறினவுடனே அவர் அவர்களிடத்தில் மெய்யாகவே தம்மை வெளிப்படுத்தினார் என்பதையும், உங்களுக்குக் காண்பிப்பேன்.

19 அவர் அவர்களுக்குத் தம்முடைய சரீரத்தைக் காண்பித்து அவர்களிடத்தில் பணிவிடை செய்கிற, அவருடைய ஊழியத்தைக் குறித்த குறிப்புகள் இதற்குப் பின்பு கொடுக்கப்படும். ஆகவே, இப்போதைக்கு என் வார்த்தைகளை முடித்துக் கொள்கிறேன்.