வேதங்கள்
3 நேபி 16


அதிகாரம் 16

இஸ்ரவேலரின் தொலைந்துபோன ஆடுகளாகிய மற்றவர்களையும் இயேசு சந்திப்பார் – பிற்காலங்களில் சுவிசேஷம் புறஜாதியாருக்குச் சென்று, பின்பு இஸ்ரவேலின் வீட்டாருக்குச் செல்லும் – கர்த்தர் மறுபடியும் சீயோனைக் கொண்டுவரும்போது அவருடைய ஜனங்கள் கண்ணாரக் காண்பார்கள். ஏறக்குறைய கி.பி. 34.

1 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இத்தேசத்திலும், எருசலேம் தேசத்திலும், நான் ஊழியம் செய்யப்போன தேசத்தின் சுற்றிலுமுள்ள எந்தப் பகுதியிலும் இராத மற்ற ஆடுகளும் எனக்கு உண்டு.

2 நான் யாரைக் குறித்துப் பேசுகிறேனோ, அவர்கள் இன்னும் என் சத்தத்தைக் கேட்கவில்லை; நான் என்னை அவர்களுக்கு எப்போதும் காண்பிக்கவுமில்லை.

3 ஆனாலும் அங்கே ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் இருக்கும்படியாக, நான் அவர்களுக்குள் போகவும், அவர்கள் என் சத்தத்தைக் கேட்டு, என் ஆடுகளுக்குள்ளே எண்ணப்படவும் வேண்டுமென்று, நான் பிதாவினிடத்திலிருந்து ஒரு கட்டளையைப் பெற்றிருக்கிறேன். ஆதலால் நான் என்னை அவர்களிடத்தில் காண்பிக்கப்போகிறேன்.

4 தங்களுடைய அவிசுவாசத்தினால் பூமியின் பரப்பின் மேலெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போகவிருக்கிற, அவர்களுடைய சந்ததியாரின் மீதியானோராகிய, புறஜாதியாரின் முழுமை நிறைவேறும் மட்டும், அல்லது, அவர்கள் தங்கள் மீட்பராகிய என்னைப்பற்றிய ஞானத்திற்குக் கொண்டுவரப்படும்படிக்கு, நீங்கள் எழுதுகிற, சொல்லப்பட்ட இவை, பாதுகாக்கப்பட்டு, புறஜாதியாருக்கு வெளியரங்கமாக்கப்படும்படிக்கு, தாங்கள் பரிசுத்த ஆவியாலே உங்களைப்பற்றியும், தாங்கள் அறிந்திராத மற்ற கோத்திரங்களைப்பற்றியும், என்னைக் கண்டவர்களும், என் ஊழியத்தில் என்னோடு இருந்தவர்களுமாகிய, எருசலேமிலிருந்த என் ஜனங்கள், ஞானத்தைப் பெற பிதாவினிடத்தில் என் நாமத்தில் கேட்காதபடிக்கு, நான் போன பின்பு சொல்லப்பட்ட இவற்றை நீங்கள் எழுதிவைக்கவேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

5 பின்பு நான் அவர்களைப் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பேன். பின்பு பிதாவானவர் இஸ்ரவேலின் வீட்டாராகிய ஜனங்கள் யாவருக்கும் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவேன்.

6 என்னிலும், என்னைக் குறித்தும், பிதாவைக் குறித்தும், சாட்சி கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரிலும், பரிசுத்த ஆவியைக் குறித்ததுமான, தங்களது விசுவாசத்தினிமித்தம் புறஜாதிகள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்.

7 இதோ, என்னில் அவர்களின் விசுவாசத்தினிமித்தமும், இஸ்ரவேலின் வீட்டாரே, உங்களின் அவிசுவாசத்தினிமித்தமும், இக்காரியங்களின் முழுமை அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்படிக்கு, பிற்காலத்தில் சத்தியம் புறஜாதியாரிடத்தில் வரும், என்று பிதா உரைக்கிறார்.

8 அவர்கள் இந்த தேசத்தின் பரப்பின் மேல் வந்திருந்தாலும், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனத்தைச் சிதறடித்ததினிமித்தம், புறஜாதியாரில் விசுவாசியாதவர்களுக்கு ஐயோ, என்று பிதா உரைக்கிறார். இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனங்கள் அவர்கள் மத்தியிலிருந்து தள்ளப்பட்டு, அவர்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டார்கள்.

9 புறஜாதியார் மேலுள்ள பிதாவின் இரக்கங்களாலும், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனத்தின் மேலுள்ள பிதாவின் நியாயத்தீர்ப்புகளினிமித்தமும், மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவை அனைத்திற்குப் பின்பும், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனம் அடிக்கப்படவும், உபத்திரவப்படுத்தப்படவும், கொல்லப்படவும், அவர்களின் மத்தியிலிருந்து வெளியே துரத்தப்படவும், அவர்களால் வெறுக்கப்படவும், அவர்களுக்குள்ளே சீறுதலாகவும், பழிச் சொல்லாகவும் ஆகும்படிச் செய்தேன்.

10 நான் உங்களிடத்தில் சொல்லவேண்டுமென பிதா கட்டளையிடுவதாவது: புறஜாதிகள் என் சுவிசேஷத்திற்கு விரோதமாய் பாவம் செய்து, என் சுவிசேஷத்தின் முழுமையை நிராகரித்து எல்லா தேசங்களைவிடவும், பூமியின் மீதெங்குமுள்ள ஜனங்களைவிடவும், தங்களின் இருதயத்தின் பெருமையினால் உயர்த்தப்பட்டு, எல்லாவிதமான பொய்களாலும், வஞ்சகங்களாலும், பொல்லாப்புகளாலும், எல்லா விதமான மாய்மாலங்களாலும், கொலைகளாலும், ஆசாரிய வஞ்சகங்களாலும், வேசித்தனங்களாலும், இரகசிய அருவருப்புகளாலும் நிறைக்கப்பட்டிருக்கும் நாளிலே இக்காரியங்கள் யாவையும் அவர்கள் செய்து, என் சுவிசேஷத்தின் முழுமையை நிராகரித்தால் இதோ, நான் என் சுவிசேஷத்தின் முழுமையை அவர்கள் மத்தியிலிருந்து எடுத்துப் போடுவேன், என்று பிதா உரைக்கிறார்.

11 இஸ்ரவேலின் வீட்டாரே, என் ஜனங்களிடம் செய்துகொண்ட என் உடன்படிக்கையை அப்பொழுது நான் நினைவு கூருவேன், நான் அவர்களிடத்தில் என் சுவிசேஷத்தைக் கொண்டு வருவேன்.

12 புறஜாதிகள் உங்கள்மேல் வல்லமை கொண்டிருப்பதில்லை என்று இஸ்ரவேலின் வீட்டாரே உங்களுக்கு நான் காண்பிப்பேன். ஆனால், இஸ்ரவேலின் வீட்டாரே உங்களுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நான் நினைவுகூருவேன். நீங்கள் என் சுவிசேஷத்தின் முழுமையின் ஞானத்திற்கு வருவீர்கள்.

13 ஆனால் புறஜாதியார் மனந்திரும்பி, என்னிடத்தில் திரும்புவார்களெனில், இதோ, இஸ்ரவேலின் வீட்டாரே, அவர்கள் என் ஜனங்களுக்குள்ளாக எண்ணப்படுவார்கள், என்று பிதா உரைக்கிறார்.

14 இஸ்ரவேலின் வீட்டாரைச் சேர்ந்த என் ஜனத்தார், அவர்களுக்கு மத்தியிலே போய் அவர்களை மிதிக்கும்படியாக நான் அனுமதிப்பதில்லை, என்று பிதா உரைக்கிறார்.

15 ஆனால் அவர்கள் என்னிடத்தில் திரும்பாமலும், என் சத்தத்திற்குச் செவிகொடாமலும் இருந்தால், ஆம், என் ஜனமாகிய இஸ்ரவேலின் வீட்டாரே, அவர்கள் அவர்களுக்குள்ளே போய் அவர்களை மிதித்துப்போடும்படி அனுமதிப்பேன். இஸ்ரவேலின் வீட்டாரே அவர்கள் வெளியே எறியப்படுவதற்கும், என் ஜனத்தின் காலால் மிதிபடவும் ஒழிய, வேறொன்றுக்கும் உதவாத சாரமற்றுப்போன உப்புக்கு அவர்கள் ஒப்பாயிருப்பார்கள்.

16 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதா எனக்குக் கட்டளையிட்டதாவது, நான் இந்த ஜனத்திற்கு இந்த இடத்தை அவர்களின் சுதந்திரமாக கொடுக்கவேண்டும்.

17 அப்பொழுது, இப்படிச் சொல்லுகிற ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிறைவேறும்.

18 உன்னுடைய காவல்காரர் தொனியை எழுப்புவார்கள்; அவர்கள் ஒருமித்துக் கெம்பீரிப்பார்கள். ஏனெனில் கர்த்தர் சீயோனை மறுபடியும் கொண்டுவரும்போது அவர்கள் கண்ணாரக் காண்பார்கள்.

19 எருசலேமின் பாழான இடங்களே, பூரிப்படைந்து, ஏகமாய்ப் பாடுங்கள்; கர்த்தர் தம் ஜனத்தைத் தேற்றி, எருசலேமை மீட்டுக்கொண்டார்.

20 கர்த்தர் தமது பரிசுத்த புயத்தை எல்லா தேசங்களின் கண்களுக்கும் வெளிப்படுத்தினார். பூமியின் கடையாந்திரங்கள் யாவும், தேவனுடைய இரட்சிப்பைக் காணும்.