வேதங்கள்
3 நேபி 15


அதிகாரம் 15

மோசேயின் நியாயப்பிரமாணம் தம்மில் நிறைவேறியது என்று இயேசு அறிவித்தல் – மற்ற ஆடுகள் என்று அவர் எருசலேமில் சொன்னது நேபியர்களையே – அக்கிரமத்தினிமித்தம் எருசலேமிலிருக்கும் கர்த்தருடைய ஜனம், இஸ்ரவேலின் சிதறடிக்கப்பட்ட ஆடுகளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. ஏறக்குறைய கி.பி. 34.

1 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவைகளைச் சொல்லி முடித்த பின்பு, அவர் தமது கண்களைத் திரளானோரைச் சுற்றிலும் பார்த்து, அவர்களை நோக்கி சொன்னதாவது: இதோ, நான் பிதாவினிடத்தில் ஏறிப்போகும் முன்பு நான் போதித்த காரியங்களை நீங்கள் கேட்டீர்கள். ஆதலால், இந்த என் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அதைச் செய்கிறவன் எவனோ, அவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன்.

2 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, அவர்களுக்குள் சிலர் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் குறித்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆச்சரியப்பட்டு மலைத்துப்போனதை அவர் அறிந்தார்; ஏனெனில் பழையவை எல்லாம் ஒழிந்து போயின. அனைத்தும் புதியவையாயின என்ற வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

3 அவர் அவர்களை நோக்கி: பழையவை எல்லாம் ஒழிந்து போயின. அனைத்தும் புதியவையாயின என்று நான் சொன்னதினிமித்தம் நீங்கள் மலைத்துப் போகவேண்டாம்.

4 இதோ, மோசேயினிடத்தில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் நிறைவேறியது, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 இதோ, நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர் நானே. இஸ்ரவேல் என்ற என் ஜனத்தோடு உடன்படிக்கை பண்ணினவரும் நானே. ஆதலால் என்னில் நியாயப்பிரமாணம் நிறைவேறியது. ஏனெனில் நான் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன். ஆகவே அது முடிந்து போயிற்று.

6 இதோ, நான் தீர்க்கதரிசிகளை அழிப்பதில்லை. ஏனெனில் என்னில் நிறைவேறாமல் இருக்கிற அனைத்தும் நிறைவேறும், என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

7 பழையவை ஒழிந்து போயின, என்று நான் உங்களுக்குச் சொன்னதினிமித்தம், வரப்போகிறவைகளைக் குறித்து சொல்லப்பட்டதை நான் அழிப்பதில்லை.

8 ஏனெனில் இதோ, என் ஜனத்தோடு நான் செய்த உடன்படிக்கை முழுவதும் நிறைவேறவில்லை; ஆனால், மோசேயினிடத்தில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் என்னில் முடிந்து போயிற்று.

9 இதோ, நானே நியாயப்பிரமாணமும், ஒளியுமாயிருக்கிறேன். என்னை நோக்கிப்பார்த்து, முடிவுபரியந்தம் நிலைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் ஜீவிப்பீர்கள்; ஏனெனில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனுக்கு நித்திய ஜீவனை அளிப்பேன்.

10 இதோ, நான் உங்களுக்கு கட்டளைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆதலால் என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுமாயிருக்கிறது. ஏனெனில் அவைகள் மெய்யாகவே என்னைக் குறித்து சாட்சி கொடுத்தன.

11 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசின பின்பு, அவர் தாம் தெரிந்துகொண்ட அந்தப் பன்னிருவரை நோக்கி:

12 நீங்கள் என் சீஷர்கள். யோசேப்பின் வீட்டாரில் மீதியானோரான இந்த ஜனத்திற்கு நீங்களே ஒளியாயிருக்கிறீர்கள்.

13 இதோ, உங்களுடைய சுதந்திர பூமி இதுவே; பிதா இதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

14 எருசலேமிலிருக்கும் உங்கள் சகோதரருக்கு நான் இதைச் சொல்லவேண்டும், என்ற கட்டளையை பிதா என்னிடத்தில் எச்சமயத்திலும் கொடுத்ததில்லை.

15 தேசத்திலிருந்து பிதா வழிநடத்திப்போன இஸ்ரவேலின் வீட்டாரைச் சேர்ந்த மற்ற கோத்திரங்களைக் குறித்து, அவர்களிடத்தில் நான் சொல்லவேண்டுமென்ற கட்டளையை, பிதா எனக்கு எச்சமயத்திலும் கொடுத்ததில்லை.

16 நான் அவர்களுக்குச் சொல்லவேண்டுமென்று பிதா எனக்குக் கட்டளையிட்டது இவைகள் மாத்திரமே.

17 இம்மந்தையில்லாத மற்ற ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும். அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்; அப்பொழுது அங்கே ஒரே மந்தையிருக்கும், ஒரே மேய்ப்பனிருப்பார்.

18 இப்பொழுதும், வணங்காக்கழுத்தினிமித்தமும் அவிசுவாசத்தினிமித்தமும், அவர்கள் என் வார்த்தையை அறிந்து கொள்ளவில்லை. ஆதலால் இதைக் குறித்து, அவர்களிடத்தில் மேலும் ஒன்றும் சொல்லக்கூடாதென்று, பிதாவினால் கட்டளையிடப்பட்டேன்.

19 பிதா எனக்குக் கட்டளையிட்டார் என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தம் நீங்கள் அவர்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆதலால் அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தமே அவர்கள் உங்களைக் குறித்து அறிந்திருக்கவில்லை.

20 மற்ற கோத்திரங்களை அவர்களிடத்திலிருந்து பிதா பிரித்து வைத்தார் என்று மறுபடியும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தமே அவர்கள் தங்களைப்பற்றி அறிந்திருக்கவில்லை.

21 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த மந்தையில்லாத மற்ற ஆடுகளும் எனக்கு உண்டு; அவர்களையும் நான் கொண்டுவரவேண்டும், அவர்கள் என் சத்தத்தைக் கேட்பார்கள். அப்பொழுது அங்கே ஒரே மந்தையாயும், ஒரே மேய்ப்பனுடையவர்களுமாயிருப்பார்கள் என்று நான் சொன்னது உங்களைக் குறித்தே.

22 அவர்களோ என்னைப் புரிந்து கொள்ளாமல், அது புறஜாதியாரைக் குறிக்கிறது, என்று நினைத்தார்கள்; ஏனெனில் புறஜாதியார் தங்களுடைய போதகத்தினால் மனம் மாற்றப்படவேண்டும், என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

23 என்னுடைய சத்தத்தை அவர்கள் கேட்பார்கள் என்று நான் சொன்னபோது அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. புறஜாதியார் என் சத்தத்தை ஒருபோதும் கேட்பதில்லை என்றபோதும், பரிசுத்த ஆவியானவராலே அல்லாமல் வேறு எவ்விதத்திலும் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்றபோதும் அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.

24 ஆனால் இதோ, நீங்கள் என் சத்தத்தைக் கேட்டும், என்னைக் கண்டும் இருக்கிறீர்கள்; நீங்கள் என் ஆடுகள், பிதா எனக்குக் கொடுத்தவர்களுக்குள்ளே நீங்களும் எண்ணப்பட்டிருக்கிறீர்கள்.