வேதங்கள்
3 நேபி 6


அதிகாரம் 6

நேபியர்கள் விருத்தியடைதல் – பெருமை, ஐஸ்வர்யம், மற்றும் வகுப்பு பிரிவினைகள் எழும்புதல் – சபை பிரிவினைகளால் பிளந்து போகுதல் – சாத்தான் ஜனங்களை வெளிப்படையான கலகத்திற்குள்ளாக நடத்துதல் – அநேக தீர்க்கதரிசிகள் மனந்திரும்புதலைப் பிரசங்கித்து அவர்கள் கொல்லப்பட்டுப்போகுதல் – அவர்களைக் கொலை செய்தவர்கள் ராஜாங்கத்தை கைப்பற்றத் திட்டமிடுதல். ஏறக்குறைய கி.பி. 26–30.

1 இப்பொழுதும், அந்தப்படியே, இருபத்தி ஆறாம் வருஷத்தில் நேபியர்களின் ஜனங்கள் எல்லோரும், ஒவ்வொரு மனுஷனும் தன் குடும்பத்தையும், தன் மந்தைகளையும், குதிரைகளையும், தன்தன் கால்நடைகளையும், தங்களுக்குச் சொந்தமாயிருந்த சகல பொருட்களையும் எடுத்துக் கொண்டு தங்கள் சொந்த தேசங்களுக்குத் திரும்பினார்கள்.

2 அந்தப்படியே, அவர்கள் தங்களுடைய எல்லா உணவுகளையும் சாப்பிடாதிருந்ததினால், அவர்கள் தாங்கள் சாப்பிடாமல் வைத்திருந்த தங்களின் எல்லாவிதமான தானியங்களையும், தங்கள் பொன்னையும், தங்கள் வெள்ளியையும், சகல விலையுயர்ந்த பொருட்களையும், தங்களோடு எடுத்துக்கொண்டு, வடக்கிலும், தெற்கிலும், வடதேசத்திலும், தென்தேசத்திலும் உள்ள தங்களுடைய சொந்த தேசங்களுக்கும், தங்களுடைய ஆஸ்திகளுக்கும் திரும்பினார்கள்.

3 அவர்கள் லாமானிராய் இருக்க வாஞ்சித்து, தேசத்திலே சமாதானத்தைக் கைக்கொள்ளும்படியாக ஓர் உடன்படிக்கையினுள் பிரவேசித்த, அந்தத் திருடர்களுக்கு, தங்கள் பிரயாசத்தினால் ஜீவித்திருக்க, அவர்களுடைய எண்ணிக்கைகளுக்குத் தக்கதாக, பெற்றுக்கொள்ளும்படிக்கு, நிலங்களை வழங்கினார்கள். இப்படியாக அவர்கள் தேசமெங்கிலும் சமாதானத்தை நிலைவரப்பண்ணினார்கள்.

4 அவர்கள் மறுபடியும் விருத்தியடையவும், பெலன்கொள்ளவும் துவங்கினார்கள், இருபத்தி ஆறாம் மற்றும் ஏழாம் வருஷங்கள் கடந்துபோயின. தேசத்திலே பெரும் ஒழுங்கு இருந்தது. அவர்கள் தங்களுடைய சட்டங்களை சமத்துவத்திற்கும், நியாயத்திற்கும் ஏற்றதாய் இருக்கும்படி இயற்றினார்கள்.

5 இப்பொழுது அவர்கள் மீறுதலினுள் விழுவதைத் தவிர, ஜனங்கள் தொடர்ந்து விருத்தியடைவதற்குத் தடையாக தேசம் முழுவதிலும் வேறொன்றுமில்லை.

6 இப்பொழுதும், கித்கித்தோனியும், நியாயாதிபதியாகிய லாசோனியஸூம், தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களுமே, இந்தப் பெரும் சமாதானத்தை தேசத்தில் நிலைவரப்பண்ணினார்கள்.

7 அந்தப்படியே, அங்கே அநேக பட்டணங்கள் புதிதாகக் கட்டப்பட்டன, அங்கே அநேக பழைய பட்டணங்கள் பழுது நீக்கப்பட்டன.

8 பட்டணத்திலிருந்து பட்டணத்திற்கும், தேசத்திலிருந்து தேசத்திற்கும், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கும் போகிற, அநேக நெடுஞ்சாலைகள் போடப்பட்டன, சாலைகள் பல அமைக்கப்பட்டன.

9 இப்படியாக, இருபத்தி எட்டாம் வருஷமும் கடந்து போயிற்று. ஜனங்கள் தொடர்ந்து சமாதானத்தைப் பெற்றார்கள்.

10 ஆனால், அந்தப்படியே, இருபத்தி ஒன்பதாம் வருஷத்தில் ஜனங்களுக்குள்ளே சில வாக்குவாதங்கள் இருக்கத் துவங்கியது, பெரும் துன்புறுத்தல்களைச் செய்யும் அளவிற்கு, சிலர் தங்களுடைய மிகுந்த பெரும் ஐஸ்வரியங்களினிமித்தம் பெருமையாலும் மேட்டிமையாலும் உயர்த்தப்பட்டார்கள்.

11 ஏனெனில் தேசத்திலே அநேக வியாபாரிகளும், அநேக நியாயசாஸ்திரிகளும், அநேக அதிகாரிகளுமிருந்தார்கள்.

12 ஜனங்கள் பதவிகளினாலும், அவர்களுடைய ஐஸ்வரியங்களின்படியேயும், கல்வி கற்பதற்கான அவர்களின் வாய்ப்புகளின்படியேயும், வேறுபடுத்தப்பட்டனர். ஆம், சிலர் தங்களுடைய வறுமையினிமித்தம் அறியாமையிலிருந்தார்கள். மற்றவர்களோ தங்களுடைய ஐஸ்வரியங்களினிமித்தம் அதிகக் கல்வியைப் பெற்றனர்.

13 சிலர் பெருமையில் உயர்த்தப்பட்டிருந்தார்கள். மற்றவர்களோ மிகவும் தாழ்மையாய் இருந்தார்கள் சிலர் நிந்தைக்கு நிந்தையை சரிக்கட்டினார்கள். மற்றவர்களோ நிந்தைகளையும், துன்புறுத்தல்களையும், எல்லாவிதமான உபத்திரவங்களையும் பெற்றும், எதிர்த்து நிந்திக்காமல், தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், பச்சாதாபமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

14 சபை உடைந்துபோகுமளவும் தேசம் எங்கிலும் பெரும் சமநிலையின்மை ஏற்படத் துவங்கியது, ஆம், முப்பதாவது வருஷத்தில் சபையானது, மெய்யான விசுவாசத்திற்கு மனமாறிய லாமானியரில் சிலர் மத்தியிலிருந்ததைத் தவிர தேசம் எங்கிலும் உடைந்துபோயிற்று. அவர்கள் திடமனதாயும், உறுதியாயும், அசைக்கமுடியாதவர்களாயும், கட்டளைகளைச் சகல கருத்தோடும் கைக்கொள்ள மனதுள்ளவர்களாயும் இருந்ததால், அதிலிருந்து விலகவில்லை.

15 இப்பொழுது ஜனங்களின் இந்த அக்கிரமத்திற்கான காரணம் இதுவே, ஜனங்களை எல்லாவிதமான அக்கிரமத்தை செய்யத் தூண்டவும், பெருமையினால் அவர்களை இறுமாப்படையச் செய்யவும், வல்லமை, அதிகாரம், ஐஸ்வரியம், மற்றும் உலகத்தின் வீணானவைகளைத் தேடும்படி, அவர்களைத் தூண்டிவிடவும் சாத்தான் பெரும் வல்லமை கொண்டிருந்தான்.

16 இப்படியாக எல்லாவிதமான அக்கிரமங்களையும் செய்யும்படி ஜனங்களுடைய இருதயங்களை சாத்தான் நடத்திச் சென்றான். ஆதலால் அவர்கள் சமாதானத்தை சில வருஷங்கள் மட்டுமே அனுபவித்தார்கள்.

17 இப்படியாக முப்பதாவது வருஷத் துவக்கத்திலே, ஜனங்களை தான் எவ்விடத்திற்குத் தூக்கிச் செல்லவேண்டுமென்றும், அவர்கள் எத்தகைய அக்கிரமத்தைச் செய்யவேண்டுமென்றும், பிசாசு தான் விரும்புகிற பிரகாரம் அவனுடைய தூண்டுதல்களால் அநேக காலமளவும் அவர்களை வழிநடத்தும்படியாக ஒப்படைக்கப்பட்டு, இப்படியாக இந்த முப்பதாவது வருஷத் துவக்கத்திலே, அவர்கள் கொடிய துன்மார்க்க நிலையிலே இருந்தார்கள்.

18 இப்பொழுதும், அவர்கள் அறியாமையில் பாவம் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைக் குறித்த தேவ சித்தத்தை அறிந்திருந்தார்கள். ஏனெனில் அது அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. ஆதலால் அவர்கள் தேவனுக்கு விரோதமாய் வேண்டுமென்றே கலகம் பண்ணினார்கள்.

19 இப்பொழுதும் லாசோனியஸின் குமாரனாகிய, லாசோனியஸின் காலங்களிலே இது சம்பவித்தது. ஏனெனில் லாசோனியஸ் தன் தகப்பனின் ஆசனத்தில் அமர்ந்து, அந்த வருஷத்தில் ஜனத்தை ஆட்சி செய்தான்.

20 மனுஷர் பரலோகத்திலிருந்து ஏவப்படத்துவங்கி, தேசமெங்கிலும் ஜனங்களுக்குள் நின்று, ஜனங்களுடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் குறித்து தைரியமாய்ப் பிரசங்கம்பண்ணி, சாட்சி பகரவும், தமது ஜனத்திற்காக கர்த்தர் செய்யவிருக்கிற மீட்பையும் அல்லது வேறு வார்த்தைகளிலெனில் கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்களுக்கு சாட்சி பகரவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அவருடைய மரணத்தைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும் தைரியமாய் சாட்சி கொடுத்தார்கள்.

21 இப்பொழுது இக்காரியங்களைக் குறித்து சாட்சி கொடுத்தவர்களினிமித்தம், ஜனங்களில் அநேகர் மிகவும் கோபம் கொண்டார்கள். கோபப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பிரதான நியாயாதிபதிகளாயும், பிரதான ஆசாரியர்களாயும், நியாயசாஸ்திரிகளாயும் இருந்தவர்கள். ஆம், இக்காரியங்களைக் குறித்து சாட்சி பகர்ந்தவர்களோடு நியாயசாஸ்திரிகளாக இருந்த அனைவரும் கோபம் கொண்டார்கள்.

22 இப்பொழுதும் தேசத்தின் விசாரணைக்காரனால் அவர்களின் ஆக்கினைத்தீர்ப்பு ஒப்பமிடப்படாவிடில், யாரையும் சாவுக்கேதுவாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க நியாயசாஸ்திரிக்கோ, நியாயாதிபதிக்கோ, பிரதான ஆசாரியனுக்கோ அதிகாரமில்லை.

23 இப்பொழுதும் கிறிஸ்துவைக் குறித்த காரியங்களைப்பற்றி தைரியமாய் சாட்சி சொன்னவர்களில் அநேகர், நியாயாதிபதிகளால் பிடிக்கப்பட்டு, இரகசியமாய் சாகடிக்கப்பட்டார்கள். அவர்கள் மரித்துப்போன பிறகும், அவர்களின் மரணச் செய்தி தேசத்தின் விசாரணைக்காரனுக்கு எட்டவில்லை.

24 இப்பொழுதும் இதோ, தேசத்தின் விசாரணைக்காரனிடத்திலிருந்து அதிகாரம் பெற்ற பிறகே, எந்த மனுஷனும் மரணத்திற்குள்ளாக்கப்படவேண்டுமென்ற, தேசத்தின் சட்டங்களுக்கு இது முரண்பாடாய் இருந்தது.

25 ஆதலால் சட்டத்தின்படியல்லாமல், கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை மரணத்திற்கேதுவாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்த இந்த நியாயாதிபதிகளுக்கு விரோதமாக, சாரகெம்லா தேசத்தில் இருக்கும் தேசத்தின் விசாரணைக்காரனுக்கு ஒரு முறையீடு வந்தது.

26 இப்பொழுது, அந்தப்படியே, அவர்கள் பிடிக்கப்பட்டு, அவர்கள் செய்த குற்றத்திற்குத்தக்கதாக, ஜனங்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின்படியே, நியாயந்தீர்க்கப்படும்படிக்கு நியாயாதிபதிக்கு முன்பாக கொண்டு போகப்பட்டார்கள்.

27 இப்பொழுது, அந்தப்படியே, அந்த நியாயாதிபதிகளுக்கு அநேக நண்பர்களும், இனத்தாரும் இருந்தார்கள், ஏறக்குறைய எல்லா நியாயசாஸ்திரிகளும், பிரதான ஆசாரியர்களும், ஆம், மீதியானவர்கள், ஏகமாய்க் கூடி, சட்டத்தின்படி விசாரிக்கப்படவிருந்த அந்த நியாயாதிபதிகளுடைய இனத்தாருடன் இணைந்தார்கள்.

28 அவர்கள் ஒருவருக்கொருவர் பூர்வகாலத்தினரால் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையினுள்ளாக பிரவேசித்தார்கள். அந்த உடன்படிக்கை எல்லா நீதிக்கும் விரோதமாய்த் திரண்டு எழும்பும்படியாக பிசாசினால் கொடுக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வந்தது.

29 ஆதலால் அவர்கள் கர்த்தருடைய ஜனங்களுக்கு விரோதமாகச் சேர்ந்துகொண்டு, அவர்களை அழிக்கவும், சட்டத்தின்படி நிர்வகிக்கப்படவிருந்த, நியாயத்தின் பிடியிலிருந்து கொலைக் குற்றம் புரிந்தோரை விடுவிக்கவும் ஓர் உடன்படிக்கையினுள் பிரவேசித்தார்கள்.

30 அவர்கள் தங்கள் தேசத்தின் சட்டத்தையும், உரிமைகளையும் எதிர்த்து விசாரணைக்காரனை அழிக்கவும், தேசம் இனி ஒருபோதும் சுதந்திரமாய் இராமல், ராஜாக்களுக்குக் கீழ்ப்பட்டு இருக்கும்படியாக, தேசத்தின் மேல் ஒரு ராஜாவை ஸ்தாபிக்கவும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.