வேதங்கள்
3 நேபி 11


இயேசு கிறிஸ்து உதாரத்துவஸ்தலத்தில் திரளானோர் ஏகமாய்க் கூடியிருக்கையில், நேபியின் ஜனங்களுக்குத் தம்மைக் காண்பித்து, அவர்களுக்குஊழியம் செய்தார்; இப்படியே அவர் அவர்களுக்குத் தம்மைக் காண்பித்தார்.

அதிகாரங்கள் 11 முதல் 26 உள்ளிட்டவை.

அதிகாரம் 11

பிதா தம்முடைய நேச குமாரனைக் குறித்து சாட்சி கொடுத்தல் – கிறிஸ்து தோன்றி தம்முடைய பாவநிவர்த்தியைக் குறித்து அறிவித்தல் – அவருடைய கைகளிலும் கால்களிலும், விலாவிலுமுள்ள காயத்தழும்புகளை ஜனங்கள் உணர்தல் – அவர்கள் ஓசன்னா என்று கூக்குரலிடுதல் – அவர் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டிய வழியையும் முறையையும் ஏற்படுத்துதல் – பிணக்குகளின் ஆவி பிசாசினாலானது – மனுஷர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டுமென்பதே கிறிஸ்துவினுடைய உபதேசமாயிருக்கிறது. ஏறக்குறைய கி.பி. 34.

1 இப்பொழுதும், அந்தப்படியே, உதாரத்துவஸ்தலத்தில் இருந்த ஆலயத்தைச் சுற்றியும் நேபியின் ஜனங்கள் திரளானோர் ஏகமாய்க் கூடியிருந்தார்கள்; அவர்கள், ஆச்சரியப்பட்டும் வியந்து கொண்டும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டும் இருந்தார்கள். சம்பவித்த அந்தப் பெரிதும் அற்புதமுமான மாற்றத்தை அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

2 யாரைப்பற்றிய மரணத்தைக் குறித்து அறிகுறி கொடுக்கப்பட்டிருந்ததோ, அந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர்கள் சம்பாஷித்துக் கொண்டுமிருந்தார்கள்.

3 அந்தப்படியே, அவர்கள் ஒருவரோடு ஒருவர் இப்படியாக சம்பாஷித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் பரலோகத்திலிருந்து வந்ததைப் போன்ற ஒரு சத்தத்தைக் கேட்டார்கள்; தாங்கள் கேட்ட சத்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால், அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும் ஏறெடுத்தார்கள், அது ஒரு முரடான சத்தமாயிருக்கவில்லை. அது ஒரு உரத்த சத்தமாயுமிருக்கவில்லை, ஆயினும் அது மெல்லிய சத்தமாயிருந்தும்கூட, அதைக் கேட்டவர்களின் உள்ளத்தை ஊடுருவிப்போனது. அதனால் அவர்களுடைய சரீரத்தில் அது அசையச் செய்யாத எந்தப் பகுதியும் இல்லை. ஆம், அது அவர்களது ஆத்துமாவில் ஊடுருவிப்போய் அவர்களுடைய இருதயங்களை அனலடையச் செய்தது.

4 அந்தப்படியே, அவர்கள் மறுபடியும் அந்த சத்தத்தைக் கேட்டார்கள். அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

5 மறுபடியும் மூன்றாந்தரம் அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டு, அதைக் கேட்கத்தக்கதாக தங்கள் காதுகளைத் திறந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை, சத்தம் வருகிறதற்கு நேராய் ஏறெடுத்தார்கள்; சத்தம் வந்த வானத்திற்கு நேராய் அசையாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

6 இதோ, மூன்றாந்தரம் அவர்கள் தாங்கள் கேட்ட அந்த சத்தத்தைப் புரிந்து கொண்டார்கள்; அது அவர்களை நோக்கி:

7 இதோ, என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன், இவரில் என் நாமத்தை நான் மகிமைப்படுத்தினேன், அவருக்குச் செவிகொடுங்கள் என்றது.

8 அந்தப்படியே, அவர்கள் புரிந்துகொண்டபோது, அவர்கள் மறுபடியும் தங்கள் கண்களை வானத்திற்கு நேராய் ஏறெடுத்தார்கள்; இதோ, வானத்திலிருந்து ஒரு மனுஷன் இறங்குவதைக் கண்டார்கள்; அவர் ஒரு வெண்ணிற அங்கியை அணிந்திருந்தார். அவர் கீழே வந்து அவர்கள் மத்தியில் நின்றார்; திரளானோர் யாவரின் கண்களும் அவர்மேல் திரும்பினது. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசும்படி தங்கள் வாயைத் திறக்க பயந்தார்கள், அதற்கு அர்த்தம் என்னவென்று புரியாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுக்குத் தோன்றியது ஒரு தூதன் என்று நினைத்தார்கள்.

9 அந்தப்படியே, அவர் தம்முடைய கரத்தை நீட்டி ஜனங்களிடத்தில் பேசிச் சொன்னதாவது:

10 இதோ, உலகினுள் வருவதாக தீர்க்கதரிசிகள் சாட்சி பகர்ந்த, இயேசு கிறிஸ்து நானே.

11 இதோ, நானே இவ்வுலகின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன்; என் பிதா எனக்குக் கொடுத்த அந்த கசப்பான பாத்திரத்திலிருந்து பானம் பண்ணியிருக்கிறேன், உலகினுடைய பாவங்களை என்மேல் எடுத்துக்கொண்டதினிமித்தம் பிதாவை மகிமைப்படுத்தியிருக்கிறேன், இப்படியாக ஆதியிலிருந்து சகல காரியங்களிலும் பிதாவானவரின் சித்தத்திற்கு பொறுமையோடு கீழ்ப்படிந்திருக்கிறேன்.

12 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசினவுடனே, திரளானோரும் பூமியில் விழுந்தார்கள்; ஏனெனில் கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறின பிறகு, அவர் தம்மையே தங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று, தங்களுக்குள் தீர்க்கதரிசினமுரைக்கப்பட்டதை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

13 அந்தப்படியே, கர்த்தர் அவர்களுக்கு பேசிச் சொன்னதாவது:

14 இஸ்ரவேலின் தேவனும் பூமியனைத்தின் தேவனும் நான் என்பதையும், உலகத்தினுடைய பாவத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறியத்தக்கதாக, எழுந்துவந்து உங்களுடைய கைகளை என் விலாவினுள் போட்டு, என் கைகளிலும் என் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளை உணருங்கள்.

15 அந்தப்படியே, திரளானோர் போய், தங்கள் கைகளை அவருடைய விலாவினுள் போட்டும், அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளைத் தொட்டும் பார்த்தார்கள்; இப்படியாக அவர்கள் யாவரும் போய், தங்கள் கண்களால் கண்டும், தங்கள் கைகளினால் உணர்ந்தும், வரப்போகிறவர் என்று தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவர் அவரே என்று, மெய்யாகவே அறியவும், சாட்சி கொடுக்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் போனார்கள்.

16 அவர்கள் யாவரும் போய் தாங்களே கண்டபின்பு, அவர்கள் ஒருமித்துக் கூக்குரலிட்டுச் சொன்னதாவது:

17 ஓசன்னா! அதி உன்னத தேவனுடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக! அவர்கள் இயேசுவின் பாதத்தில் விழுந்து அவரைத் தொழுதுகொண்டார்கள்.

18 அந்தப்படியே, அவர் நேபியை நோக்கி, (ஏனெனில் திரளானோருக்குள்ளே நேபியும் இருந்தான்) அவன் முன்னே வரவேண்டுமெனக் கட்டளையிட்டார்.

19 நேபி எழுந்து முன்னே போய், கர்த்தருக்கு முன்பாக குனிந்து, அவருடைய பாதத்தை முத்தமிட்டான்.

20 அவன் எழவெண்டுமென கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டார். அவன் எழுந்து அவருக்கு முன்பாக நின்றான்.

21 கர்த்தர் அவனை நோக்கி: நான் பரத்திற்கு மறுபடியும் ஏறின பின்பு இந்த ஜனத்திற்கு நீ ஞானஸ்நானம் கொடுக்கும்படிக்கு, நான் உனக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறேன், என்றார்.

22 மறுபடியும் கர்த்தர் மற்றவர்களையும் அழைத்து அவர்களிடமும் அவ்வண்ணமே பேசினார்; ஞானஸ்நானம் கொடுக்க அவர்களுக்கு அவர் அதிகாரம் கொடுத்தார். அவர் அவர்களை நோக்கி: இப்படியே நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்; உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் இருக்கக்கூடாது.

23 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் வார்த்தைகளின் மூலம் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பி என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற விரும்புகிற எவருக்கும், நீங்கள் இவ்விதத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள், இதோ, நீங்கள் தண்ணீரில் இறங்கி நின்று, என் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.

24 இப்பொழுதும் இதோ, நீங்கள் அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து சொல்லவேண்டிய வார்த்தைகளாவன:

25 இயேசு கிறிஸ்துவினால் எனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதால், நான் உனக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கிறேன், ஆமென்.

26 பிறகு நீங்கள் அவர்களைத் தண்ணீரில் மூழ்கப்பண்ணி, மறுபடியும் தண்ணீரை விட்டு வெளியே வரப்பண்ணவேண்டும்.

27 இந்த விதமாக, நீங்கள் என் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள். ஏனெனில் இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் ஒன்றாயிருக்கிறோம்; நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார். பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம்.

28 நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே நீங்கள் ஞானஸ்நானம் கொடுங்கள். இதுவரைக்கும் இருந்ததைப்போல, உங்களுக்குள் வாக்குவாதங்கள் இல்லாதிருப்பதாக. என் உபதேசத்தின் எந்தப் பகுதிகளைப்பற்றியும், இதுவரைக்கும் இருந்ததைப்போல, உங்களுக்குள் வாக்குவாதங்கள் இல்லாமலிருப்பதாக.

29 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிணக்கின் ஆவியையுடையவன் என்னுடையவனல்ல. பிணக்குகளின் தகப்பனாகிய பிசாசினுடையவன், அவன் மனுஷர் ஒருவரோடு ஒருவர் கோபத்தோடு சண்டையிடவேண்டுமென்று அவர்களுடைய இருதயங்களைத் தூண்டிவிடுகிறான்.

30 இதோ, மனுஷ இருதயங்களைக் கோபத்தோடு ஒருவருக்கு விரோதமாய் மற்றொருவரைத் தூண்டிவிடுவது என்னுடைய உபதேசம் அல்ல; ஆனால் அப்படிப்பட்டவைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே என்னுடைய உபதேசமாயிருக்கிறது.

31 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் உங்களுக்கு என் உபதேசத்தை அறிவிப்பேன்.

32 இதுவே என் உபதேசமாய் இருக்கிறது. இந்த உபதேசம் பிதா எனக்குக் கொடுத்ததாயிருக்கிறது, நான் பிதாவைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன். பிதா என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் பிதாவைக் குறித்தும் என்னைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறார். பிதா எல்லா இடங்களிலுமுள்ள மனுஷரெல்லாரும் மனந்திரும்பி, என்னில் விசுவாசிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார் என்று, நான் சாட்சி கொடுக்கிறேன்.

33 என்னில் விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவர்களே தேவ ராஜ்யத்தைச் சுதந்தரிப்பார்கள்.

34 என்னில் விசுவாசியாமலும் ஞானஸ்நானம் பெறாமலும் இருக்கிற எவனும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

35 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுவே என் உபதேசமாயிருக்கிறது. பிதாவினாலானது என்று அதைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன். என்னில் விசுவாசிக்கிறவன் என் பிதாவிலும் விசுவாசிக்கிறான்; அவனிடத்தில் பிதாவும் என்னைப்பற்றி சாட்சிகொடுப்பார். ஏனெனில் அவர் அவனை அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் சந்திப்பார்.

36 இப்படியாக, பிதா என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். அவனிடத்தில் பரிசுத்த ஆவியானவர் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் சாட்சி கொடுப்பார், ஏனெனில் பிதாவும் நானும் பரிசுத்த ஆவியானவரும் ஒன்றாயிருக்கிறோம்.

37 மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி ஒரு சிறுபிள்ளையைப் போலாகி, என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் நீங்கள் எந்தவிதத்திலும் இவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.

38 மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பி என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவேண்டும், ஒரு சிறு பிள்ளையைப் போலாகிட வேண்டும். இல்லாவிடில் நீங்கள் ஒருபோதும் தேவனின் ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாது.

39 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுவே என் உபதேசம். இதின்மேல் கட்டுகிற எவனும் என் கன்மலையின்மேல் கட்டுகிறான். பாதாளத்தின் வாசல்கள் அவனை மேற்கொள்ளாது.

40 இதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ அறிக்கைபண்ணி, அதை என் உபதேசமென்று நிலைநிறுத்துகிறவன் எவனோ, அவனே பொல்லாப்பினிடத்திலிருந்து வருகிறவனாயும், என் கன்மலையின்மேல் கட்டப்படாதவனுயுமாயிருக்கிறான்; ஆனால் அவன் மணல் அஸ்திபாரத்தின் மேல் கட்டுகிறான். வெள்ளம் வரும்போதும், அவைகள் மேல் காற்று அடிக்கும்போதும், அப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள பாதாளத்தின் வாசல்கள் திறந்திருக்கும்.

41 ஆதலால், இந்த ஜனங்களுக்குள் போய், பூமியின் கடையாந்தரங்கள் வரைக்குமாய் நான் பேசிய வார்த்தைகளை அறிவியுங்கள்.