வேதங்கள்
3 நேபி 14


அதிகாரம் 14

குற்றம் தீர்க்காதிருங்கள். தேவனிடத்தில் கேளுங்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு கட்டளையிடுதல் – பிதாவினுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு அவர் இரட்சிப்பை வாக்குத்தத்தம் பண்ணுதல் – மத்தேயு 7ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.பி. 34.

1 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசின பின்பு, அவர் மறுபடியும் திரளானோரிடத்தில் திரும்பி, தமது வாயைத் திறந்து அவர்களிடத்தில் மறுபடியும் சொன்னதாவது: மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு, நீங்கள் பிறரைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

2 ஏனெனில் நீங்கள் செய்கிற தீர்ப்பின்படியே, நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் திரும்ப அளக்கப்படும்.

3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைக் கவனியாமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்ப்பதென்ன?

4 அல்லது, நீ உன் சகோதரனிடத்தில், நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை நான் எடுத்துவிடுகிறேன், என்று எப்படி சொல்லுவாய். இதோ, உன் கண்ணில்தான் உத்திரம் இருக்கிறதே.

5 மாயக்காரனே, முதலில் உன் கண்ணிலிருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடு. அப்பொழுது உன் சகோதரனின் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போட நீ தெளிவாய்க் காண்பாய்.

6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள். உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள், போட்டால் தங்கள் கால்களின் கீழ் அவைகளை மிதித்து, திரும்பிவந்து, உங்களைப் பீறிவிடும்.

7 கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

8 கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு அது திறக்கப்படும்.

9 தன்னிடம் ஆகாரத்தைக் கேட்கும் மகனுக்கு, கல்லைக் கொடுக்கும் மனுஷன் உங்களுக்குள் எவனாகிலும் உண்டோ?

10 அல்லது மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானோ?

11 இப்படியானால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு நலமானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?

12 ஆதலால் மனுஷர் உங்களுக்கு செய்யவேண்டுமென நீங்கள் விரும்புகிற அனைத்தையும், நீங்களும் அவர்களுக்கு அப்படியே செய்யுங்கள். ஏனெனில் இதுவே நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுமாய் இருக்கிறது.

13 இடுக்கமான வாசல்வழியே பிரவேசியுங்கள். அழிவுக்குப் போகிற வாசல் அகலமாயும் வழி விரிவாயும் இருக்கிறது. அதன் வழியாய்ப் போகிறவர்கள் பலர்.

14 ஜீவனுக்கேதுவாய் போகிற வாசலோ இடுக்கமும் நெருக்கமுமாய் இருக்கிறது. அதைக் கண்டடைபவர்கள் சிலரே.

15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

16 நீங்கள் அவர்களை அவர்களுடைய கனிகளாலே அறிவீர்கள். மனுஷர் முட்செடிகளிலிருந்து திராட்சைப் பழங்களையும், நெரிஞ்சில்களிலிருந்து அத்திப் பழங்களையும் பறிப்பாரோ?

17 அப்படியே நல்ல மரம் எதுவும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனியைக் கொடுக்கும்.

18 நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது. கெட்ட மரமும் நல்ல கனியைக் கொடுக்காது.

19 நல்ல கனியைக் கொடுக்காத எந்த மரமும் வெட்டப்பட்டு, அக்கினியிலே போடப்படும்.

20 ஆதலால் அவர்களுடைய கனிகளாலே அவர்களை நீங்கள் அறிவீர்கள்.

21 கர்த்தாவே, கர்த்தாவே, என்று என்னிடம் சொல்லுகிற ஒவ்வொருவரும் அல்ல, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பான்.

22 அந்நாளில் அநேகர் என்னிடத்தில் கர்த்தாவே, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா. உம்முடைய நாமத்தில் பிசாசுகளைத் துரத்தவில்லையா. உம்முடைய நாமத்தில் அநேக அற்புதமான கிரியைகளைச் செய்யவில்லையா? என்பார்கள்.

23 நான் அப்பொழுது அவர்களை நோக்கி: நான் உங்களை ஒருக்காலும் அறியேன். அக்கிரமக்காரரே என்னிடத்திலிருந்து விலகிப்போங்கள், என்று சொல்வேன்.

24 ஆதலால், என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு, அதைச் செய்கிறவன் எவனோ, அவனை நான் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின ஒரு புத்திமானுக்கு ஒப்பிடுவேன்.

25 மழை சொரிந்து, வெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியது. அது கன்மலையின்மேல் கட்டப்பட்டிருந்ததால் அது விழுந்து போகவில்லை.

26 என் வார்த்தைகளைக் கேட்டு, அதைச் செய்யாதவன் ஒவ்வொருவனும், மணல் மேல் தன் வீட்டைக் கட்டின ஒரு புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

27 மழை சொரிந்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியது, அப்பொழுது அது விழுந்தது. அதனுடைய வீழ்ச்சி பெரிதாயிருந்தது.