வேதங்கள்
3 நேபி 17


அதிகாரம் 17

தம்முடைய வார்த்தைகளைத் தியானிக்கும்படிக்கும், புரிந்துகொள்ளுதலுக்காக ஜெபிக்கும்படிக்கும் இயேசு ஜனங்களுக்குப் போதித்தல் – அவர் அவர்களின் சுகவீனரை சுகப்படுத்தல் – அவர், எழுதமுடியாத பாஷையைப் பயன்படுத்தி ஜனங்களுக்காக ஜெபித்தல் – தூதர்கள் அவர்களுடைய சிறுபிள்ளைகளுக்குப் பணிவிடை செய்தலும் அக்கினி சூழ்ந்துகொள்ளுதலும். ஏறக்குறைய கி.பி. 34.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசின பின்பு, அவர் மறுபடியும் திரளானோரைச் சுற்றிலும் பார்த்து, அவர்களை நோக்கி: இதோ, என் நேரம் சமீபமாயிருக்கிறது.

2 நீங்கள் பெலவீனராயிருப்பதாலே, இச்சமயத்தில் உங்களிடத்தில் நான் பேசவேண்டுமென்று பிதாவினால் கட்டளையிடப்பட்ட என் வார்த்தைகள் அனைத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாதென்று உணர்கிறேன்.

3 ஆகவே நீங்கள் உங்கள் வீடுகளுக்குப் போய், நான் சொன்ன காரியங்களைத் தியானித்து, நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டு, நாளைக்கென்று உங்கள் மனங்களை ஆயத்தம் பண்ணுங்கள், நான் மறுபடியும் உங்களிடம் வருகிறேன்.

4 இப்பொழுதோ நான் பிதாவினிடத்திற்கும், காணாமற்போன இஸ்ரவேலின் கோத்திரத்தாருக்கு என்னைக் காண்பிக்கும்படிக்கும் போகிறேன். ஏனெனில் அவர்கள் பிதாவின் பார்வையில் தொலைந்துபோனவர்களல்ல, ஏனெனில் அவர் அவர்களை எங்கே கூட்டிச் சென்றிருக்கிறார் என்பதை அறிவார்.

5 அந்தப்படியே, இயேசு இவ்வாறு பேசினவுடனே, அவர் தம்முடைய கண்களை மறுபடியும் திரளானோருக்கு நேராய் ஏறெடுத்து, அவர்கள் கண்ணீர் விடுவதையும், அவர் தங்களோடு சற்று அதிகமாய்த் தங்கவேண்டுமென்று கேட்பதுபோன்று அவர்கள் அவரையே, கண்ணிமைக்காமல் பார்த்ததையும் கண்டார்.

6 அவர் அவர்களை நோக்கி: இதோ, என் உள்ளம் உங்கள் பேரில் மனதுருக்கத்தால் நிரம்பியிருக்கிறது.

7 உங்களிடையே வியாதியஸ்தர் எவரேனும் உண்டா? அவர்களை இங்கே கொண்டு வாருங்கள். உங்களிடையே முடவர், குருடர், சப்பாணி, ஊனர், குஷ்டரோகி, சூம்பின உறுப்படையர், செவிடர், எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவர் எவரேனும் உண்டா? அவர்களை இங்கே கொண்டு வாருங்கள். நான் அவர்களை சுகப்படுத்துவேன், ஏனெனில் நான் உங்கள்மேல் மனதுருக்கமாயிருக்கிறேன். என் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியிருக்கிறது.

8 நான் எருசலேமிலிருக்கும் உங்களுடைய சகோதரருக்குச் செய்ததை, உங்களுக்கும் காண்பிக்கவேண்டுமென்று நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள், என்று நான் உணர்கிறேன், ஏனெனில் உங்கள் விசுவாசம் நான் உங்களை சுகப்படுத்த போதுமானதாயிருக்கிறது, என்று காண்கிறேன்.

9 அந்தப்படியே, அவர் இவ்வாறு பேசின பின்பு, திரளானோர் அனைவரும் ஒரு மனதாய்த் தங்கள் வியாதியஸ்தரோடும், தங்கள் உபத்திரவப்பட்டோருடனும், தங்கள் முடவர்களுடனும், தங்கள் குருடர்களுடனும், தங்கள் ஊமையோருடனும், எந்த விதத்திலும் உபத்திரவப்பட்ட அனைவருடனும் போனார்கள். அவர், அவர்கள் தம்மிடத்தில் அழைத்துவரப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார்.

10 சுகப்பட்டோரும், சுகமாயிருந்தோருமான யாவரும் அவருடைய பாதத்தில் விழுந்து, அவரைத் தொழுதுகொண்டார்கள்; திரள்கூட்டம் அதிகமாயிருந்ததினிமித்தம், வரமுடிந்த யாவரும் அவருடைய பாதத்தைத் தங்கள் கண்ணீரால் கழுவும் அளவுக்கு, அவருடைய பாதத்தை முத்தமிட்டார்கள்.

11 அந்தப்படியே, அவர்களுடைய சிறுபிள்ளைகளைக் கூட்டிவரும்படிக்கு அவர் கட்டளையிட்டார்.

12 அவர்கள் தங்கள் சிறுபிள்ளைகளைக் கூட்டிவந்து, அவரைச் சுற்றிலும் தரையிலே உட்கார வைத்தார்கள். இயேசு நடுவிலே நின்றார். அவர்கள் எல்லோரும் அவரிடம் கொண்டுவரப்படும் வரைக்கும் திரளானோர் வழிவிட்டார்கள்.

13 அந்தப்படியே, அவர்கள் அனைவரும் கொண்டுவரப்பட்டபோது, இயேசு நடுவிலே நின்று, திரளானோர் பூமியில் முழங்கால்படியிடும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

14 அந்தப்படியே, அவர்கள் பூமியில் முழங்கால்படியிட்டபோது, இயேசு தமக்குள்ளே துக்கித்து, பிதாவே, இஸ்ரவேல் வீட்டாரின் துன்மார்க்கத்தினிமித்தம் நான் கலங்கியிருக்கிறேன், என்றார்.

15 அவர் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது அவரும் பூமியிலே முழங்கால்படியிட்டார்; இதோ, அவர் பிதாவினிடத்தில் ஜெபித்தார். அவர் ஜெபித்த காரியங்கள் எழுதப்படமுடியாது. அவர் ஜெபித்ததைக் கேட்ட திரளானோர் சாட்சி கொடுத்தார்கள்.

16 இவ்விதமாய் அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்: இயேசு பிதாவினிடத்தில் பேசினதை நாங்கள் கண்டதும் கேட்டதும், முன்பு ஒருக்காலும் கண் காணாததும், காது கேளாததுமான, பெரிதும் மகத்துவமுள்ளதுமான காரியங்களாய் இருந்தன.

17 நாங்கள் கண்டதும் கேட்டதுமான, இயேசு பேசின அந்தப் பெரியதும் மகத்துவமுள்ளதுமான காரியங்களை எந்த நாவும் பேசமுடியாது, எந்த மனுஷனாலும் அவை எழுதப்படவும் முடியாது, மனுஷரின் இருதயங்கள் எண்ணிப்பார்க்கவும் முடியாது, எங்களுக்காக அவர் பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணுகிறதை நாங்கள் கேட்ட அச்சமயத்தில், எங்கள் ஆத்துமாக்களை நிறைத்த அந்த சந்தோஷத்தை ஒருவராலும் எண்ணிப்பார்க்க முடியாது.

18 அந்தப்படியே, இயேசு பிதாவிடத்தில் ஜெபம்பண்ணுகிறதை முடித்தவுடனே அவர் எழுந்தார். ஆனால் திரளானோர் மேற்கொள்ளப்பட்டிருக்கும்படியாக, அவர்களது சந்தோஷம் மிகுதியாயிருந்தது.

19 அந்தப்படியே, இயேசு அவர்களிடத்தில் பேசி, அவர்கள் எழும்படிச் சொன்னார்.

20 அவர்கள் பூமியிலிருந்து எழுந்தார்கள். அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசத்தினிமித்தம் நீங்கள் பாக்கியவான்களாயிருக்கிறீர்கள். இப்பொழுதும் இதோ, என் சந்தோஷம் நிறைவாயிருக்கிறது, என்றார்.

21 அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபின்பு அழுதார். திரளானோர் அதற்கு சாட்சி கொடுத்தார்கள். அவர் அவர்களுடைய சிறுபிள்ளைகளை ஒவ்வொருவராய் எடுத்து, அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்காக பிதாவினிடத்தில் ஜெபித்தார்.

22 அவர் இதைச் செய்தபோது அவர் மறுபடியும் அழுதார்;

23 அவர் திரளானோருடன் பேசி, அவர்களை நோக்கி: உங்கள் சிறுபிள்ளைகளைப் பாருங்கள், என்றார்.

24 அவர்கள் பார்க்க தங்கள் கண்களை வானத்திற்கு நேராய் ஏறெடுத்தார்கள். அவர்கள் வானம் திறக்கிறதைக் கண்டார்கள். தூதர்கள் அக்கினியால் சூழப்பட்டு, வானத்திலிருந்து இறங்குவதுபோலக் கண்டார்கள். அவர்கள் கீழே வந்து அந்த சிறுபிள்ளைகளைச் சுற்றிலும் நின்றார்கள். அப்பொழுது அவர்கள் அக்கினியால் சூழப்பட்டார்கள். தூதர்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்கள்.

25 திரளானோர் பார்த்து, கேட்டு, சாட்சி கொடுத்தார்கள்; அவர்களில் அனைவரும் ஒவ்வொருவரும் தாமே பார்த்தும் கேட்டும் இருந்ததால், அவர்களுடைய பதிவுகள் உண்மையானவை என்று அறிந்திருக்கிறார்கள்; அவர்கள் எண்ணிக்கையிலே ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு ஆத்துமாக்களாய் இருந்தார்கள்; அவர்களில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அடங்குவர்.