வேதங்கள்
3 நேபி 19


அதிகாரம் 19

பன்னிரண்டு சீஷர்கள் ஜனங்களுக்கு பணிவிடை செய்து பரிசுத்த ஆவியானவருக்காக ஜெபித்தல் – சீஷர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரையும் தூதர்களின் பணிவிடைகளையும் பெற்றுக்கொள்ளுதல் – எழுதமுடியாத வார்த்தைகளை உபயோகித்து இயேசு ஜெபித்தல் – அவர் இந்த நேபியர்களின் மிகுந்த விசுவாசத்திற்குச் சாட்சி அளித்தல். ஏறக்குறைய கி.பி. 34.

1 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு பரலோகத்திற்கு ஏறிய பின்பு, திரளானோர் கலைந்து, அவனவன் தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

2 திரளானவர்கள் இயேசுவைக் கண்டார்களென்றும், அவர் அவர்களுக்கு ஊழியம் பண்ணினார் என்றும், நாளை மறுபடியும் அவர் திரளானோருக்கு தோன்றுவார் என்றும், இருள் சூழ்வதற்கு முன்னதாகவே, தூர இடங்களில் ஜனங்களுக்குள் உடனே செய்தி அறிவிக்கப்பட்டது.

3 ஆம், இரவு முழுவதும் இயேசுவைப்பற்றிய செய்தி தூர இடங்களில் அறிவிக்கப்பட்டது; ஜனங்களுக்குள் அனுப்பப்பட்டவர்கள் அநேகராயிருந்தார்கள். ஆம், இயேசு திரளானோருக்கு தோன்றவிருக்கும் இடத்திலே நாளை அவர்கள் இருக்கும்படி, மிக அதிக எண்ணிக்கையுள்ளவர்கள் அந்த இரவு முழுவதும் பிரயாசப்பட்டார்கள்.

4 அந்தப்படியே, மறுநாள் திரளானோர் ஏகமாய்க் கூடியிருந்தபோது, இதோ, நேபியும், அவன் மரித்தோரிலிருந்து எழுப்பின அவன் சகோதரனாகிய தீமோத்தேயு என்ற பெயர் கொண்டவனும், அவனுடைய குமாரனாகிய யோனா என்ற பெயர் உடையவனும், மத்தோனியும் அவன் சகோதரனாகிய மத்தோனிகாவும், குமேனும், குமேன்யான்கீயும், எரேமியாவும், சேம்னோனும், யோனாவும், சிதேக்கியாவும், ஏசாயாவும், இப்பொழுது இயேசு தெரிந்துகொண்ட பெயர்களுடைய சீஷர்கள் வந்து அந்தப்படியே, திரள்கூட்டத்தாரின் நடுவே நின்றார்கள்.

5 இதோ, திரள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தபடியாலே, அது பன்னிரண்டு குழுக்களாக பிரிக்கப்படும்படிச் செய்தார்கள்.

6 பன்னிரண்டு பேரும் திரள்கூட்டத்தாருக்குப் போதித்தார்கள். இதோ, திரள் கூட்டத்தார் பூமியின் பரப்பின் மேல் முழங்கால்படியிட்டு, இயேசுவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் ஜெபம் செய்யச் செய்தார்கள்.

7 சீஷர்களும் பிதாவினிடத்தில் இயேசுவின் நாமத்தினாலே ஜெபம் பண்ணினார்கள். அந்தப்படியே, அவர்கள் எழுந்து ஜனங்களுக்குப் பணிவிடை செய்தார்கள்.

8 இயேசு பேசின வார்த்தைகளிலிருந்து ஒன்றும் வேறுபடாமல், இயேசு பேசின அதே வார்த்தைகளை அவர்கள் சொன்ன பின்பு, இதோ, அவர்கள் மறுபடியும் முழங்கால்படியிட்டு, இயேசுவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் ஜெபித்தார்கள்.

9 அவர்கள் தாங்கள் மிகவும் வாஞ்சித்த காரியத்திற்காக ஜெபித்தார்கள்; பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென வாஞ்சித்தார்கள்.

10 அவர்கள் இவ்விதமாய் ஜெபித்த பின்பு, அவர்கள் தண்ணீரின் ஓரத்திற்குச் சென்றார்கள். திரளானோர் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

11 அந்தப்படியே, நேபி தண்ணீருக்குள் போய் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான்.

12 அவன் தண்ணீருக்கு வெளியே வந்து ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தான். அவன் இயேசு தெரிந்துகொண்ட அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான்.

13 அந்தப்படியே, அவர்கள் யாவரும் ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து வெளியே வந்த பின்பு, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தது, அவர்கள் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியாலும் நிரப்பப்பட்டார்கள்.

14 இதோ, அவர்கள் அக்கினியால் சூழப்படுவதைப்போல் சூழப்பட்டார்கள்; அது வானத்திலிருந்து வந்தது. திரளானோர் அதைக் கண்டு சாட்சி கொடுத்தனர். தூதர்கள் பரலோகத்திலிருந்து கீழே வந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்கள்.

15 அந்தப்படியே, தூதர்கள் சீஷர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கையில், இதோ, இயேசு வந்து நடுவே நின்று, அவர்களுக்கு ஊழியம் செய்தார்.

16 அந்தப்படியே, அவர் திரளானோரிடம் பேசி, அவர்கள் பூமியின்மேல் மறுபடியும் முழங்கால்படியிட வேண்டுமென்றும், அவருடைய சீஷர்களும் பூமியின்மேல் முழங்கால்படியிட வேண்டுமென்றும், கட்டளையிட்டார்.

17 அந்தப்படியே, அவர்கள் யாவரும் பூமியின்மேல் முழங்கால்படியிட்ட பின்பு, அவர் தம்முடைய சீஷர்கள் ஜெபிக்கவேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

18 இதோ, அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்தார்கள்; அவரைத் தங்கள் கர்த்தரென்றும் தங்கள் தேவனென்றும் கூப்பிட்டு, அவர்கள் இயேசுவினிடத்தில் ஜெபித்தார்கள்.

19 அந்தப்படியே, இயேசு அவர்கள் நடுவிலிருந்து போய், அவர்களிடமிருந்து சற்றுதூரம் போய், பூமிமட்டும் குனிந்து சொன்னதாவது:

20 பிதாவே, நான் தெரிந்துகொண்ட இவர்களுக்கு நீர் பரிசுத்த ஆவியானவரை அளித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்; அவர்கள் என்னில் வைத்த விசுவாசத்தினிமித்தமே அவர்களை இவ்வுலகிலிருந்து தெரிந்துகொண்டேன்.

21 பிதாவே, அவர்களுடைய வார்த்தைகளை நம்புகிற யாவருக்கும் நீர் பரிசுத்த ஆவியானவரை அளிக்கும்படி உம்மை வேண்டுகிறேன்.

22 பிதாவே, அவர்கள் என்னில் விசுவாசிக்கிறதினிமித்தம் நீர் அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறீர்; நீர் அவர்களுக்குச் செவிகொடுப்பதினிமித்தம் அவர்கள் என்னில் விசுவாசிப்பதை நீர் காண்கிறீர். அவர்கள் என்னை நோக்கி ஜெபிக்கிறார்கள்; நான் அவர்களோடு இருப்பதினாலே அவர்கள் என்னை நோக்கி ஜெபிக்கிறார்கள்.

23 இப்பொழுதும் பிதாவே, அவர்களுக்காகவும், அவர்களுடைய வார்த்தைகளை விசுவாசிக்கிற யாவருக்காகவும், அவர்கள் என்னில் விசுவாசிக்கவும் நாம் ஒன்றாய் இருக்கும்படி, பிதாவே, நீர் என்னில் இருப்பதைப்போல, நான் அவர்களிலும் இருக்கும்படியாக உம்மிடத்தில் ஜெபிக்கிறேன்.

24 அந்தப்படியே, இயேசு இவ்விதமாய் பிதாவினிடத்தில் ஜெபித்த பின், அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்தார். இதோ, அவர்கள் இடைவிடாமல் இன்னும் தொடர்ந்து அவரை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் என்ன ஜெபிக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாலே, அவர்கள் அதிக வார்த்தைகளை உபயோகிக்கவில்லை. அவர்கள் வாஞ்சையினால் நிரப்பப்பட்டிருந்தார்கள்.

25 அந்தப்படியே, இயேசு அவர்கள் தம்மை நோக்கி ஜெபித்தபோது அவர்களை ஆசீர்வதித்தார்; அவருடைய முகரூபம் அவர்கள் மேல் புன்னகை பூத்தது. அவருடைய முகரூபத்தின் வெளிச்சம் அவர்கள் மேல் பிரகாசித்தது. இதோ, அவர்கள் இயேசுவின் முகரூபத்தைப் போலவும் மற்றும் அவரின் வஸ்திரங்களைப் போலவும் வெண்மையாக இருந்தார்கள்; இதோ, அந்த வெண்மை எல்லா வெண்மையையும் மிஞ்சியது. ஆம், அந்த வெண்மையைப்போல உலகினுள் வேறொன்றும் இருக்கமுடியாது.

26 இயேசு அவர்களை நோக்கி: தொடர்ந்து ஜெபியுங்கள் என்றார்; எனினும் அவர்கள் ஜெபிப்பதை நிறுத்தவில்லை.

27 அவர் மறுபடியும் அவர்களிடமிருந்து திரும்பி சற்றுதூரம் போய், பூமியிலே குனிந்தார். அவர் மறுபடியும் பிதாவினிடத்தில் ஜெபித்து:

28 பிதாவே, நான் தெரிந்து கொண்டவர்களை, அவர்களுடைய விசுவாசத்தினிமித்தம் நீர் சுத்திகரித்ததிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவர்களுக்காகவும், அவர்களுடைய வார்த்தைகளை விசுவாசிக்க இருக்கிறவர்களுக்காகவும் கூட ஜெபிக்கிறேன். அவர்கள் என்னில் சுத்திகரிக்கப்பட்டதுபோல, அவர்களுடைய வார்த்தைகளின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம், இவர்கள் என்னில் சுத்திகரிக்கப்படுவார்களாக.

29 பிதாவே, நான் உலகத்திற்காக அல்ல. உலகத்திலிருந்து நீர் எனக்குக் கொடுத்தவர்களின் விசுவாசத்தினிமித்தம் அவர்களுக்காகவும், அவர்கள் என்னில் சுத்திகரிக்கப்படவும், பிதாவே, நாம் ஒன்றாய் இருக்கும்படி, நீர் என்னில் இருப்பதைப் போல, நான் அவர்களில் இருக்கும்படிக்கும், நான் அவர்களில் மகிமையடையும்படிக்கும் ஜெபிக்கிறேன், என்றார்.

30 இயேசு இவ்வார்த்தைகளைப் பேசினவுடனே, அவர் மறுபடியும் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்தார்; இதோ, அவர்கள் அவரிடத்தில் இடைவிடாமல் ஊக்கமாய் ஜெபித்தார்கள். அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தார். இதோ, அவர்களும் இயேசுவைப் போலவே வெண்மையாயிருந்தார்கள்.

31 அந்தப்படியே, அவர் மீண்டும் சற்றுதூரம் போய் பிதாவினிடத்தில் ஜெபித்தார்.

32 அவர் ஜெபித்த வார்த்தைகளை நாவு பேசமுடியாது. அவர் ஜெபித்த வார்த்தைகள் மனுஷனால் எழுத்தப்படவும் முடியாது.

33 திரளானோர் கேட்டு சாட்சி பகர்கிறார்கள்; அவர்களது இருதயங்கள் திறந்திருந்தன. அவர் ஜெபித்த வார்த்தைகளை அவர்கள் தங்கள் இருதயங்களிலே புரிந்துகொண்டார்கள்.

34 எனினும் அவர் ஜெபித்த வார்த்தைகள் மிகவும் மகத்தானதும் அற்புதமாயும் இருந்ததால், அவை மனுஷனால் எழுதப்படவோ, சொல்லப்படவோ முடியாது.

35 அந்தப்படியே, இயேசு ஜெபித்து முடித்த பின்பு அவர் சீஷர்களிடத்தில் மறுபடியும் வந்து, அவர்களை நோக்கி: யூதர் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட உறுதியான விசுவாசத்தை நான் கண்டதில்லை. ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் நான் அவர்களிடத்தில் பெரும் அற்புதங்களைக் காண்பிக்க முடியவில்லை.

36 மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் இப்படிப்பட்ட விசேஷித்த காரியங்களைக் கண்டதைப்போல அவர்களில் ஒருவனும் கண்டதில்லை; நீங்கள் இப்படிப்பட்ட விசேஷித்த காரியங்களைக் கேட்டதைப் போல அவர்கள் கேட்டதேயில்லை.