வேதங்கள்
3 நேபி 21


அதிகாரம் 21

மார்மன் புஸ்தகம் வரும்போது இஸ்ரவேல் கூட்டிச்சேர்க்கப்படும் – புறஜாதியார் அமெரிக்காவில் சுதந்திர ஜனங்களாக ஸ்திரப்படுத்தப்படுவார்கள் – அவர்கள் விசுவாசித்து கீழ்ப்படிந்தால் இரட்சிக்கப்படுவார்கள்; இல்லையெனில் அவர்கள் விலக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள் – இஸ்ரவேல் புதிய எருசலேமைக் கட்டும். தொலைந்த கோத்திரத்தார் திரும்புவார்கள். ஏறக்குறைய கி.பி. 34.

1 மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இக்காரியங்கள் சம்பவிக்கும் காலத்தை நீங்கள் அறியும்படிக்கு உங்களுக்கு ஒரு அறிகுறியைக் கொடுக்கிறேன். இஸ்ரவேலின் வீட்டாரே, என் ஜனத்தை அவர்களுடைய நீண்ட சிதறுதலிலிருந்து ஒன்றுகூட்டி, அவர்கள் மத்தியில் மறுபடியும் என்னுடைய சீயோனை ஸ்தாபிப்பேன்.

2 இதோ, நான் உங்களுக்கு ஓர் அறிகுறியாகக் கொடுக்கிற காரியம் இதுவே. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாக்கோபு வீட்டாரின் மீதியானவர்களாகிய இந்த ஜனத்தைக் குறித்தும், அவர்களால் சிதறடிக்கப்படப் போகிற இந்த என் ஜனங்களைக் குறித்தும் அறியத்தக்கதாக, நான் உங்களுக்குத் தெரிவிக்கிற இக்காரியங்களும், இனிமேல் என்னைப்பற்றி நானே அறிவிக்கிறவைகளும், பிதாவினால் உங்களுக்குக் கொடுக்கப்படவிருக்கிற, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே புறஜாதியாருக்குத் தெரிவிக்கப்படும்.

3 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவினால் அவர்களுக்கு இக்காரியங்கள் தெரிவிக்கப்பட்டு, பிதாவினிடத்திலிருந்து, அவர்கள் மூலமாக உங்களிடத்தில் வரும்.

4 இக்காரியங்கள் அவர்களிடத்திலிருந்து உங்களுடைய சந்ததியின் மீதியானோரிடத்தில் வரத்தக்கதாகவும், இஸ்ரவேலின் வீட்டாரே, தமது ஜனத்தோடு பிதா செய்துகொண்ட அவருடைய உடன்படிக்கை நிறைவேறத்தக்கதாகவும், அவர்கள் இந்த தேசத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டு, பிதாவின் வல்லமையினால் சுதந்திர ஜனமாக ஏற்படுத்தப்படவேண்டியது பிதாவின் ஞானமாயிருக்கிறது;

5 ஆதலால், இக்கிரியைகளும், இனிமேல் உங்களுக்குள் செய்யப்படவிருக்கிற கிரியைகளும், புறஜாதியாரிடத்திலிருந்து, அக்கிரமத்தினிமித்தம் அவிசுவாசத்திலே படிப்படியாக நலிகிற உங்கள் சந்ததிக்கு வரும்போது,

6 பிதாவானவர் தம்முடைய வல்லமையை புறஜாதியாருக்குக் காண்பிக்கும்படியாக, இஸ்ரவேலின் வீட்டாரே, அவர்கள் என் ஜனத்திற்குள்ளே எண்ணப்படும்படிக்கு, இந்த நோக்கத்திற்காகவே, அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாமல் மனந்திரும்பி, என்னிடத்தில் வந்து, என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, என்னுடைய உபதேசத்தின் உண்மைக் கொள்கைகளை அறியும்படிக்கு, அது புறஜாதியாரிடத்திலிருந்து வரவேண்டுமென்பது அவருடைய சித்தமாயிருக்கிறது.

7 இக்காரியங்கள் சம்பவிக்கும்போது, உன் சந்ததி இவைகளைக் குறித்து அறியத் துவங்கும்போது, பிதா இஸ்ரவேலின் வீட்டாராகிய ஜனங்களிடத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கேதுவான அவருடைய கிரியை ஏற்கனவே துவங்கி விட்டது, என்று அவர்கள் அறியத்தக்கதாக, இது அவர்களுக்கு ஒரு அறிகுறியாக இருக்கும்.

8 அந்த நாள் வருகிறபோது, ராஜாக்கள் தங்கள் வாய்களை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குச் சொல்லப்படாதவைகளைக் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாததை கருத்தில் கொள்வார்கள்.

9 ஏனெனில் அந்த நாளிலே என்னிமித்தம் பிதா, பெரிதும் அற்புதமுமான ஒரு கிரியையை அவர்களுக்கு மத்தியிலே செய்வார்; அதை ஒரு மனுஷன் அவர்களுக்கு அறிவித்தாலும், அதை விசுவாசியாதவர்களும் அவர்களுக்குள்ளே இருப்பார்கள்.

10 ஆனால் இதோ, என் ஊழியக்காரனின் ஜீவன் என் கரத்திலிருக்கும்; ஆகவே அவர்கள் அவனுக்குக் கேடு உண்டாக்கமாட்டார்கள். இருப்பினும் அவர்களால் அவன் உருக்குலைக்கப்படுவான். ஆயினும் என் ஞானம் பிசாசின் தந்திரத்தைக் காட்டிலும் பெரிது என்று அவர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு, நான் அவனை குணமாக்குவேன்.

11 ஆதலால் இயேசு கிறிஸ்துவாகிய, என் வார்த்தைகளில் விசுவாசியாதவன் எவனோ, பிதாவானவர் அவ்வார்த்தைகளை புறஜாதியாருக்குள்ளே அவன் கொண்டு போகப்பண்ணி, அவைகளை புறஜாதியாருக்குள்ளே கொண்டு செல்லும்பொருட்டு அவனுக்கு வல்லமையை அருளுவார், (மோசே சொன்னது போலவே அது நடந்தேறும்) என் உடன்படிக்கையின் ஜனத்திலிருந்து அவர்கள் அறுப்புண்டு போவார்கள்.

12 யாக்கோபின் மீதியானவர்களாகிய என் ஜனம் புறஜாதிகளின் மத்தியிலே இருப்பார்கள், ஆம், அவர்கள் மத்தியிலே போனால், தப்புவிப்பார் இல்லாமல், மிதித்துத் பீறிப்போடுகிற, சிங்கம் காட்டு மிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், பாலசிங்கம் ஆட்டு மந்தைக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், அவர்களின் நடுவே இருப்பார்கள்.

13 அவர்களுடைய கரம் அவர்களின் சத்துருக்களின்மேல் உயர்த்தப்பட்டிருக்கும். அவர்களுடைய விரோதிகளெல்லாம் வெட்டப்பட்டுப் போவார்கள்.

14 ஆம், புறஜாதியார் மனந்திரும்பாவிடில் அவர்களுக்கு ஐயோ; ஏனெனில் அந்நாளிலே, நான் உன் நடுவிலிருந்து குதிரைகளைக் கொன்றுபோட்டு, உனது இரதங்களை அழித்துப் போடுவேன், என்று பிதா உரைக்கிறார்.

15 நான் உன் தேசத்தின் பட்டணங்களை அழித்துப் போட்டு, உனது எல்லா கொத்தளங்களையும் தரைமட்டமாக்குவேன்.

16 நான் உன் தேசத்திலிருந்து சூனியங்களை வெளியேற்றுவேன், இனி எந்த அஞ்சனம் பார்க்கிறவனையும் நீ வைத்திருப்பதில்லை;

17 நான் உன் வார்ப்பிக்கப்பட்ட சொரூபங்களையும் அழித்துப் போடுவேன். உன் நடுவிலிருந்து உன்னுடைய நிற்கிற சொரூபங்களை நீக்குவேன். நீ இனி உன் கைகளின் கிரியைகளை ஒருபோதும் வணங்குவதில்லை.

18 நான் உன் நடுவிலிருந்து உன்னுடைய தோப்புகளை பிடுங்கிப் போடுவேன்; அப்படியே நான் உன்னுடைய பட்டணங்களை அழித்துப் போடுவேன்.

19 எல்லா பொய்யுரைகளும், வஞ்சனைகளும், பொறாமைகளும், பிணக்குகளும், ஆசாரிய வஞ்சகங்களும், வேசித்தனங்களும் நீக்கப்படும்.

20 இஸ்ரவேலின் வீட்டாரே, அந்நாளில் மனந்திரும்பாமலும், என்னுடைய பிரியமான குமாரனிடத்தில் வராமலுமிருக்கிற எவரையும் என் ஜனத்திற்குள்ளிருந்து நீக்கிப்போடுவேன்;

21 நான் அவர்கள்மேல் நீதியைச் சரிக்கட்டி, கோபத்தை வரப்பண்ணுவேன், அப்படியே அஞ்ஞானிகள் மேலும், அவர்கள் கேள்விப்படாத அளவில் வரப்பண்ணுவேன்.

22 அவர்கள் மனந்திரும்பி, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருந்தார்களெனில், அவர்களுக்குள்ளே என் சபையை நான் ஸ்தாபிப்பேன். அவர்கள் உடன்படிக்கையினுள் வந்து, யாக்கோபின் மீதியானவர்களாகிய இவர்களுடன் எண்ணப்படுவார்கள். இந்த தேசத்தை இவர்களுடைய சுதந்திரத்திற்காக நான் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

23 யாக்கோபின் மீதியானோரும், என் ஜனமும், வரப்போகிற இஸ்ரவேல் வீட்டார் அநேகரும், புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிற ஒரு பட்டணத்தைக் கட்டும்படியாக, என் ஜனத்துக்கு உதவிபுரிவார்கள்.

24 பூமியின் மீதெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறவர்கள், புதிய எருசலேமிற்குள்ளாக, கூட்டிச்சேர்க்கப்படும்படி அவர்கள் என் ஜனத்துக்கு உதவி புரிவார்கள்.

25 அப்பொழுது பரலோகத்தின் வல்லமை அவர்களுக்குள்ளே வரும்; நானும் அவர்களுக்கு நடுவே இருப்பேன்.

26 இந்த சுவிசேஷம் இந்த ஜனங்களின் மீதியானோருக்குள்ளேயும் பிரசங்கிக்கப்படும், அந்த நாளிலே, பிதாவின் கிரியையும் துவங்கும். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் ஜனங்களில் சிதறடிக்கப்பட்டுப்போன எல்லாருக்குள்ளும், ஆம், எருசலேமை விட்டு பிதா நடத்திச் சென்ற தொலைந்து போனவர்களுமான கோத்திரங்களுக்குள்ளும், அந்நாளில் பிதாவின் கிரியை துவங்கும்.

27 ஆம், அவர்கள் என் நாமத்தினாலே பிதாவை அழைக்கும்படியாக, அதனிமித்தம் அவர்கள் என்னிடத்தில் வர, பிதா வழியை ஆயத்தப்படுத்துவதுடன், சிதறடிக்கப்பட்டுப்போன என் ஜனங்கள் எல்லோருக்குள்ளும் கிரியை துவங்கும்.

28 ஆம், அப்பொழுது பிதாவினுடைய ஜனங்கள் தங்களின் சுதந்திர தேசத்தில் கூடும்படியாக, பிதா எல்லா தேசங்களுக்கும் வழியை ஆயத்தப்படுத்துவதுடன், அக்கிரியை துவங்கும்.

29 அவர்கள் எல்லா தேசங்களிலிருந்தும் போவார்கள்; அவர்கள் தீவிரித்தோ அல்லது ஓடியோ போகமாட்டார்கள். ஏனெனில் நான் அவர்கள் முன்னே போவேன். நான் அவர்களுக்கு பின்னாலுமிருப்பேன், என்று பிதா உரைக்கிறார்.