வேதங்கள்
3 நேபி 23


அதிகாரம் 23

இயேசு ஏசாயாவின் வார்த்தைகளை அங்கீகரித்தல் – அவர் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கும்படி ஜனங்களுக்குக் கட்டளையிடுதல் – உயிர்த்தெழுதலைக் குறித்த லாமானியனான சாமுவேலின் வார்த்தைகள் அவர்களுடைய பதிவேடுகளில் சேர்க்கப்படுதல். ஏறக்குறைய கி.பி. 34.

1 இப்பொழுதும் இதோ, இக்காரியங்களை நீங்கள் ஆராயவேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆம், நீங்கள் இக்காரியங்களைக் கருத்தாய் ஆராயவேண்டும் என்ற கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்; ஏனெனில் ஏசாயாவின் வார்த்தைகள் விசேஷித்தவையாயிருக்கின்றன.

2 ஏனெனில் நிச்சயமாகவே இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனத்தைக் குறித்து எல்லாவற்றையும்பற்றி அவன் பேசினான். ஆகவே அவன் புறஜாதியாருக்கும் பேசுவது அவசியமானதே.

3 அவன் பேசின அனைத்துக் காரியங்களும், அவன் பேசின வார்த்தைகளின்படியே சம்பவித்தும், சம்பவிக்கவும் இருக்கின்றன.

4 ஆதலால், என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்குச் சொன்ன காரியங்களை எழுதுங்கள். பிதாவினுடைய காலம் மற்றும் சித்தத்தின்படியே அவை புறஜாதியாருக்குள் போகும்.

5 என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெறுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் இவைகளைக் குறித்து சாட்சி கொடுக்கிற அநேகர் இருக்கிறார்கள்.

6 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, அவர் மறுபடியும் அவர்களை நோக்கி சொன்னார், அவர்கள் பெற்றுக்கொண்ட எல்லா வேதவாக்கியங்களையும் அவர்களுக்கு அவர் விவரித்துச் சொன்ன பின்பு, அவர் அவர்களை நோக்கி: இதோ, நீங்கள் எழுதவேண்டுமென நான் விரும்பும், நீங்கள் பெற்றிராத மற்ற வேத வாக்கியங்கள், என்றார்.

7 அந்தப்படியே, அவர் நேபியை நோக்கி: நீ வைத்திருக்கிற பதிவேடுகளை இங்கே கொண்டுவா என்றார்.

8 நேபி பதிவேடுகளைக் கொண்டுவந்து அவருக்கு முன்பாக வைத்தபோது, அவர் கண்களை ஏறெடுத்துச் சொன்னதாவது:

9 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதா என்னில் தமது நாமத்தை மகிமைப்படுத்துகிற அந்நாளில் மரித்தோரிலிருந்து அநேக பரிசுத்தவான்கள் எழுந்து அநேகருக்குத் தோன்றி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்களென்று, இந்த ஜனத்திற்குச் சாட்சிகூரவேண்டுமென்று என் ஊழியக்காரனாகிய லாமானியனான சாமுவேலுக்குக் கட்டளையிட்டேன். அவர் அவர்களை நோக்கி: அது அப்படியில்லையா என்றார்.

10 அவரது சீஷர்கள் பிரதியுத்தரமாக: ஆம், கர்த்தாவே, சாமுவேல் உம்முடைய வார்த்தைகளின்படியே தீர்க்கதரிசனம் உரைத்தான். அவைகளெல்லாம் நிறைவேறின, என்றார்கள்.

11 இயேசு அவர்களை நோக்கி: அநேக பரிசுத்தவான்கள் எழுந்து, அநேகருக்குத் தோன்றி, அவர்களுக்குப் பணிவிடை செய்தார்களென்று, இந்த காரியத்தை நீங்கள் எழுதாதிருப்பது எப்படி? என்றார்.

12 அந்தப்படியே, இக்காரியம் எழுதப்படவில்லை என்று நேபி நினைவுகூர்ந்தான்.

13 அந்தப்படியே, அது எழுதப்படவேண்டுமென்று இயேசு கட்டளையிட்டார். ஆதலால் அவர் கட்டளையிட்டபடியே அது எழுதப்பட்டது.

14 இப்பொழுதும், அந்தப்படியே, அவர்கள் எழுதின எல்லா வேத வாக்கியங்களையும் இயேசு ஏகமாய் விளக்கிச் சொன்னபோது, தாம் அவர்களுக்கு விளக்கிச் சொன்னவைகளை, அவர்கள் போதிக்கவேண்டுமென்று, அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.