வேதங்கள்
3 நேபி 28


அதிகாரம் 28

பன்னிரு சீஷர்களில் ஒன்பதுபேர், தாங்கள் மரித்த பின்பு கிறிஸ்துவின் ராஜ்யத்தை சுதந்தரிக்க வாஞ்சித்து, அப்படியே அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்படுதல் – மூன்று நேபியரும் இயேசு மறுபடியும் வரும்வரைக்கும் பூலோகத்திலே தாங்கள் நிலைத்திருக்கும்படியாக வாஞ்சித்து, அப்படியே மரணத்தின்மேல் வல்லமை கொடுக்கப்படுதல் – அவர்கள் மறுரூபமாக்கப்பட்டு, உச்சரிக்கூடாதவைகளைக் காண்கிறார்கள். இப்பொழுது அவர்கள் மனுஷருக்குள்ளே ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய கி.பி. 34–35.

1 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, அவர் தமது சீஷர்களிடத்தில், ஒருவர் பின் ஒருவரோடே பேசி, நான் பிதாவினிடத்தில் போன பின்னர், என்னிடத்தில் நீங்கள் வாஞ்சிப்பது என்ன? என்றார்.

2 மூன்று பேரைத் தவிர அவர்கள் யாவரும் பேசியதாவது: நாங்கள் மனுஷன் ஜீவிக்கிற காலம் வரைக்கும் வாழ்ந்த பின்பு, நீர் எங்களை அழைத்த எங்கள் ஊழியம் முடிவுபெற்றதும், நாங்கள் சீக்கிரமாய் உம்மிடத்திலே உமது ராஜ்யத்தில் வரும்படி வாஞ்சிக்கிறோம், என்றார்கள்.

3 அவர் அவர்களை நோக்கி: இக்காரியத்தை என்னிடத்தில் நீங்கள் வாஞ்சித்ததினிமித்தம் பாக்கியவான்களாயிருக்கிறீர்கள்; ஆதலால், நீங்கள் எழுபத்திரண்டு வயதான பின்பு, என்னுடைய ராஜ்யத்திலே என்னிடம் வருவீர்கள்; என்னில் நீங்கள் இளைப்பாறுதலைக் காண்பீர்கள்.

4 அவர் அவர்களிடத்தில் பேசிய பின்பு, அவர் அந்த மூவரிடத்தில் திரும்பி, அவர்களை நோக்கி: நான் பிதாவினிடத்தில் போன பின்பு, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென வாஞ்சிக்கிறீர்கள் என்றார்.

5 அவர்கள் தங்கள் இருதயங்களிலே துக்கித்தார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் வாஞ்சித்த காரியத்தை அவரிடத்தில் சொல்லத் துணியவில்லை.

6 அவர் அவர்களை நோக்கி: இதோ, நான் உங்களுடைய எண்ணங்களை அறிந்திருக்கிறேன். நான் யூதர்களால் உயர்த்தப்படும் முன்பு, என் ஊழியத்தில் என்னோடு இருந்த, எனக்குப் பிரியமான யோவான், என்னிடத்தில் வாஞ்சித்த காரியத்தையே நீங்களும் வாஞ்சித்திருக்கிறீர்கள்.

7 ஆதலால், நீங்கள் அதிக பாக்கியவான்களாயிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மரணத்தை ஒருபோதும் ருசி பார்ப்பதில்லை; நான் என் மகிமையிலே பரலோக வல்லமைகளோடு வரும்போது, பிதாவின் சித்தத்தின்படியே அனைத்துக் காரியங்களும் நிறைவேறித்தீருமளவும், மனுபுத்திரருக்கு பிதாவின் சகல நடப்பிதல்களையும் காணும்படியாக நீங்கள் ஜீவித்திருப்பீர்கள்.

8 நீங்கள் இனி ஒருபோதும் மரணத்தின் வேதனைகளை சகித்திருப்பதில்லை. ஆனால் நான் என் மகிமையிலே வரும்போது, நீங்கள் இமைப்பொழுதிலே அநித்தியத்திலிருந்து நித்தியத்திற்கு மாற்றப்படுவீர்கள்; பின்பு நீங்கள் என் பிதாவினுடைய ராஜ்யத்திலே ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

9 அன்றியும், நீங்கள் உலகத்தினுடைய பாவங்களுக்காகவே அல்லாமல் வேறு எதற்காகவும், மாம்சத்தில் சஞ்சரித்திருக்கும்போது, வேதனையையோ துக்கத்தையோ அனுபவிப்பதில்லை; இதையெல்லாம் நீங்கள் என்னில் வாஞ்சித்த காரியத்தின் நிமித்தமே நான் செய்வேன். ஏனெனில் உலகம் நிலைத்திருக்கும் வரைக்கும் மனுஷ ஆத்துமாக்களை நீங்கள் என்னிடம் கொண்டு வரவேண்டுமென வாஞ்சித்தீர்களே.

10 இதினிமித்தம் நீங்கள் சந்தோஷத்தைப் பூரணமாய்ப் பெறுவீர்கள்; நீங்கள் என் பிதாவின் ராஜ்யத்தில் வீற்றிருப்பீர்கள்; ஆம், பிதா எனக்கு சந்தோஷத்தின் பூரணத்தைக் கொடுத்ததைப் போலவே, உங்களுடைய சந்தோஷமும் பூரணமாயிருக்கும்; என்னைப் போலவே நீங்களும் இருப்பீர்கள். நான் பிதாவைப் போலவே இருக்கிறேன், பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம்.

11 பரிசுத்த ஆவியானவர் பிதாவைக் குறித்தும், என்னைக் குறித்தும் சாட்சி பகருவார்; பிதா என்னிமித்தம் பரிசுத்தாவியானவரை மனுபுத்திரருக்குக் கொடுக்கிறார்.

12 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசின பின்பு அவர் தரித்திருக்கவேண்டிய அந்த மூவரையும் தவிர மற்றவர்களை, ஒவ்வொருவராய்த் தமது விரலால் தொட்ட பின், புறப்பட்டார்.

13 இதோ, வானங்கள் திறந்தன. அவர்கள் வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பேச முடியாத காரியங்களைக் கண்டார்கள் மற்றும் கேட்டார்கள்.

14 அவர்கள் அவற்றை உச்சரிக்கக்கூடாதென்று தடைபண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் கண்டதும் கேட்டதுமானவைகளை உச்சரிக்க வல்லமையும் கொடுக்கப்படவில்லை.

15 அவர்கள் சரீரத்திலிருந்தார்களா அல்லது சரீரத்திற்கு புறம்பே இருந்தார்களா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை; தேவனுடைய காரியங்களை அவர்கள் காணும்படியாக, அவர்கள் இந்த மாம்ச சரீரத்திலிருந்து அழியா நிலைக்கு மாற்றப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டதைப் போல அவர்களுக்கு தென்பட்டதாம்.

16 ஆனால், அந்தப்படியே, அவர்கள் பூமியின் பரப்பின் மேல் மறுபடியும் ஊழியம் செய்தார்கள். ஆயினும் அவர்களுக்குப் பரலோகத்தில் கொடுக்கப்பட்ட கட்டளையினிமித்தம் அவர்கள் கண்டதும் கேட்டதுமான காரியங்களைக் குறித்து அவர்கள் ஊழியம் செய்யவில்லை.

17 இப்பொழுது அவர்கள் மறுரூபமாக்கப்பட்ட நாளிலிருந்து அவர்கள் அநித்தியமானவர்களா அல்லது நித்தியமானவர்களா என்று நான் அறியேன்;

18 ஆனால் கொடுக்கப்பட்டுள்ள பதிவேட்டின்படி நான் அறிந்தது இவ்வளவே, அவர்கள் பூமியின் மீதெங்கும் போய், எல்லா ஜனத்திற்கும் ஊழியம் செய்து, தங்களுடைய போதனையை விசுவாசித்த அநேகரை சபையிலே இணையச் செய்து, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.

19 அவர்கள் சபையைச் சாராதவர்களால் சிறையினுள் போடப்பட்டார்கள். சிறைகள் அவர்களைக் கொள்ள முடியாமல் இரண்டாகப் பிளந்தன.

20 அவர்கள் பூமியில் ஆழத்திலே போடப்பட்டார்கள்; அவர்களோ தேவ வார்த்தையால் பூமியை அடித்தார்கள். இதினிமித்தம் அவருடைய வல்லமையினால் அவர்கள் பூமியின் ஆழங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்; ஆதலால் அவர்களை வைத்திருக்க போதுமான துரவுகளை வெட்ட அவர்களால் கூடாமற் போயிற்று.

21 மூன்றுதரம் அவர்கள் அடுப்பிலே போடப்பட்டார்கள். ஒரு கேடும் அவர்களுக்கு நேரவில்லை.

22 இரண்டு தரம் வனவிலங்குகளின் கெபிக்குள் போடப்படார்கள்; இதோ, அவர்களோ பால் குடிக்கிற ஆட்டுக்குட்டியுடன் ஒரு சிறு பிள்ளை விளையாடுவதைப் போல மிருகங்களிடம் விளையாடினார்கள். ஒரு கேடும் அவர்களுக்கு நேரிடவில்லை.

23 அந்தப்படியே, அவர்கள் நேபியின் ஜனங்கள் எல்லோருக்குள்ளும் போய் பூமியின் மேலுள்ள எல்லா ஜனங்களுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்; அவர்கள் கர்த்தருக்குள்ளாக மனம்மாறி கிறிஸ்துவின் சபையோடு இணைந்தார்கள், இப்படியாக அந்த தலைமுறையினரின் ஜனம் இயேசுவின் வார்த்தையின்படியே ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

24 இப்பொழுதும், மார்மனாகிய நான் சிறிது காலத்துக்கு இக்காரியங்களைக் குறித்துச் சொல்வதிலிருந்து நிறுத்துகிறேன்.

25 இதோ, மரணத்தை ஒருபோதும் ருசிபார்க்காதிருப்பவர்களின் பெயர்களை எழுத இருந்தேன். ஆனால் கர்த்தர் அதற்குத் தடைபண்ணினார்; ஆதலால் நான் அவைகளை எழுதுகிறதில்லை, ஏனெனில் அவை உலகத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளன.

26 ஆனால் இதோ, நான் அவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எனக்குப் பணிவிடை செய்திருக்கிறார்கள்.

27 இதோ, அவர்கள் புறஜாதிகளுக்குள்ளே இருப்பார்கள். புறஜாதியார் அவர்களை அறிந்திருக்கமாட்டார்கள்.

28 அவர்கள் யூதர்களுக்குள்ளும் இருப்பார்கள், யூதர்கள் அவர்களை அறிந்திருக்கமாட்டார்கள்.

29 அவர்கள் இஸ்ரவேலின் சிதறடிக்கப்பட்ட இனத்தார் அனைவருக்கும், சகல தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் ஊழியம் செய்கிறதும், அவர்கள் தங்கள் வாஞ்சை நிறைவேறத்தக்கதாய், தங்களுக்குள்ளிருக்கும் தேவனுடைய உணர்த்தும் வல்லமையினிமித்தம் அவர்களிலிருந்து அநேக ஆத்துமாக்களையும் இயேசுவினிடத்தில் கொண்டுவருவதும் தமது ஞானத்திற்கு ஏற்றது, என கர்த்தர் காணும்போது அது சம்பவிக்கும்.

30 அவர்கள் தேவதூதர்களைப் போன்றவர்கள். அவர்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் ஜெபித்தால், தங்களுக்கு நல்லவர்களாகப்படுகிற எந்த மனுஷனுக்கும் தங்களையே அவர்கள் காண்பிக்கமுடியும்.

31 ஆதலால், கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிச்சயமாகவே அனைவரும் நிற்கவேண்டிய அந்தப் பெரிதும் வருகிறதுமான நாளிற்கு முன்பதாகவே பெரிதும் அற்புதமானதுமான கிரியைகள் அவர்களால் நடப்பிக்கப்படும்.

32 ஆம், நியாயத்தீர்ப்பின் நாளுக்கு முன்பதாக, புறஜாதியாருக்குள்ளேயும் அவர்களால் பெரிதும், அற்புதமானதுமான கிரியை நடப்பிக்கப்படும்.

33 கிறிஸ்துவினுடைய எல்லா அற்புதமான கிரியைகளின் விவரத்தைக் கொடுக்கிற அனைத்து வேதங்களையும் நீங்கள் வைத்திருந்தால், கிறிஸ்துவினுடைய வார்த்தைகளின்படியே இவைகள் நிச்சயமாகவே வரும் என்பதை அறியுங்கள்.

34 இயேசுவின் வார்த்தைகளுக்கும், அவர் தெரிந்துகொண்டு அவர்களுக்குள்ளே அனுப்பியவர்களுக்கும் செவிகொடாதிருக்கிறவனுக்கு ஐயோ, ஏனெனில் இயேசுவின் வார்த்தைகளையும் அவர் அனுப்பியவர்களின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாதவன் அவரை ஏற்றுக் கொள்வதில்லை; ஆதலால் அவர் அவர்களைக் கடைசி நாளின்போது ஏற்றுக்கொள்வதில்லை.

35 அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தால், அது அவர்களுக்கு நலமாயிருந்திருக்கும். இரட்சிப்பு வரும்படிக்கு, மனுஷரின் காலால் மிதிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்ட தேவனின் நியாயத்திற்கு உங்களையே நீங்கள் நீங்கலாக்கிக் கொள்ளலாம், என்று எண்ணுகிறீர்களா?

36 இப்பொழுதும் இதோ, கர்த்தர் தெரிந்துகொண்டோரைக் குறித்து நான் பேசின, குறிப்பாக பரலோகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்ட மூவரும் அநித்தியத்திலிருந்து சாவற்ற நிலைமைக்கு சுத்திகரிக்கப்பட்டார்களா இல்லையா என்பதை நான் அறியேன்.

37 ஆனாலும் இதோ, நான் எழுதினது முதல், நான் கர்த்தரிடத்தில் விசாரித்தேன். அவர்களுடைய சரீரங்களில் மாற்றம் வரவேண்டியது அவசியம் என்றும், இல்லாவிடில் அவர்கள் மரணத்தை ருசிபார்ப்பது அவசியமென்றும், அவர் எனக்கு அதை தெரியப்படுத்தினார்.

38 ஆதலால் மரணத்தை அவர்கள் ருசிபார்க்காதிருக்கும்படி அவர்கள் உலகத்தினுடைய பாவங்களுக்கே அல்லாமல் வேறு எதற்காகவும் வலியையோ, துக்கத்தையோ அனுபவிக்காமலிருக்க அவர்களுடைய சரீரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

39 இந்த மாற்றம் கடைசிநாளில் ஏற்படும் மாற்றத்திற்குச் சமமானதல்ல; ஆனால் சாத்தான் அவர்கள் மேல் வல்லமை எதுவும் கொள்ளாமல், அவர்களைச் சோதிக்காதவாறு ஓர் மாற்றம் அவர்கள்மேல் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் பரிசுத்தராயிருக்கும்படிக்கு, பூமியின் வல்லமைகள் அவர்களைத் தடுக்காதபடி, அவர்கள் மாம்சத்திலே சுத்திகரிக்கப்பட்டார்கள்.

40 இந்த நிலையிலே அவர்கள் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் நிலைத்திருக்க வேண்டும். அந்நாளிலே அவர்கள் பெரிதான மாற்றத்தைப் பெற்று, இனி ஒருபோதும் வெளியே போகாமல், பரலோகத்தில் நித்தியமாய் தேவனோடு வாசம்பண்ண, பிதாவின் ராஜ்யத்தினுள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.