வேதங்கள்
3 நேபி 5


அதிகாரம் 5

நேபியர்கள் மனந்திரும்பி தங்கள் பாவங்களைக் கைவிடுதல் – மார்மன் தன் ஜனத்தின் வரலாற்றை எழுதி, அவர்களுக்கு நித்திய வார்த்தையை அறிவித்தல் – இஸ்ரவேல் அதனுடைய நீண்ட சிதறடிப்பிலிருந்து கூட்டிச்சேர்க்கப்படும். ஏறக்குறைய கி.பி. 22–26.

1 இப்பொழுதும் இதோ, எல்லா பரிசுத்த தீர்க்கதரிசிகளும் பேசிய வார்த்தைகளைச் சிறிதளவாகிலும் சந்தேகப்படுகிற ஒரு ஜீவனுள்ள ஆத்துமாகூட நேபியின் ஜனங்களெல்லோருக்குள்ளும் இருக்கவில்லை; ஏனெனில் அவை நிறைவடைய வேண்டியது அவசியம், என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

2 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படியே கொடுக்கப்பட்ட அநேக அறிகுறிகளினிமித்தம், கிறிஸ்து வந்திருப்பது அவசியமானது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏற்கனவே சம்பவித்த காரியங்களினிமித்தம் பேசப்பட்டவைகளின்படியே, எல்லாக் காரியங்களுமே சம்பவிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது, என்று அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள்.

3 ஆதலால் அவர்கள் தங்கள் எல்லா பாவங்களையும் தங்கள் அருவருப்புகளையும், தங்கள் வேசித்தனங்களையும் விட்டுவிட்டு, தேவனை இராப்பகலாய் சகல கருத்தோடும் சேவித்தார்கள்.

4 இப்பொழுதும், அந்தப்படியே, கொல்லப்படாத ஒருவரும் தப்பித்துப் போகாத வண்ணம், எல்லா திருடர்களையும் சிறைபிடித்த பின்பு, அவர்கள் தங்கள் கைதிகளை சிறையில் போட்டு அவர்களுக்கு தேவ வார்த்தை அறிவிக்கப்படும்படிச் செய்தார்கள்; எவ்வளவுபேர் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இனி ஒருபோதும் கொலை செய்யமாட்டோம் என்று உடன்படிக்கையினுள் பிரவேசிக்கிறார்களோ, அவ்வளவு பேரும் சுதந்தரமாக்கப்பட்டார்கள்.

5 ஆனால் எவ்வளவுபேர் உடன்படிக்கையினுள் பிரவேசிக்காமல், அந்த இரகசியக் கொலைகளை இன்னும் தங்கள் இருதயங்களில் வைத்திருந்தார்களோ, ஆம், எவ்வளவுபேர் தங்கள் சகோதரருக்கு விரோதமாகப் பயமுறுத்துபவர்களாகக் காணப்பட்டார்களோ அவ்வளவுபேரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டார்கள்.

6 இப்படியாக அதிக துன்மார்க்கமும், அநேகக் கொலைகளும் செய்த, அந்த பொல்லாததும், இரகசியமானதும், அருவருப்புமுள்ள மொத்த சங்கத்துக்கும் ஒரு முடிவு கட்டினார்கள்.

7 இப்படியாக இருபத்தி இரண்டாம் வருஷமும், இருபத்தி மூன்றாம் வருஷமும், இருபத்தி நான்கும், இருபத்தி ஐந்தும் கடந்து போயின; இந்தப்படியே இருபத்தி ஐந்து வருஷங்களும் கடந்துபோயின.

8 அங்கே அநேகக் காரியங்கள் நடந்தேறியது, சிலருடைய கண்களுக்கு அவை பெரிதாயும், அற்புதமாயுமிருந்திருக்கும்; ஆயினும், அவை யாவும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்படமுடியாது; ஆம், இருபத்தைந்து வருஷங்களில், ஜனங்களுக்குள்ளே சம்பவித்த அநேகத்தில், நூற்றில் ஒரு பகுதியாகிலும் இப்புஸ்தகம் கொண்டிருக்க முடியாது;

9 ஆனால் இதோ, இந்த ஜனங்களினுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் கொண்டிருக்கிற பதிவேடுகள் உள்ளன. குறுகிய ஆனால் மெய்யான ஒரு குறிப்பு நேபியினால் கொடுக்கப்பட்டது.

10 ஆதலால் இக்காரியங்களைக் கொண்டு, நேபியின் தகடுகள் என்று அழைக்கப்படுகிற, தகடுகளின் மேல் பதிக்கப்பட்ட, நேபியின் பதிவேட்டின்படி என் பதிவேட்டைச் செய்திருக்கிறேன்.

11 இதோ, என் சொந்தக் கைகளால் செய்த தகடுகளின் மேலே, இந்த பதிவேட்டைச் செய்கிறேன்.

12 இதோ, ஜனங்களுக்குள்ளே சபையை ஆல்மா ஸ்தாபித்த தேசமாகிய, மார்மன் தேசத்தின் பேரிலே அழைக்கப்பட்டவனாய், நான் மார்மன் என்று அழைக்கப்படுகிறேன், ஆம், அவர்களுடைய மீறுதல்களுக்குப் பிறகு அவர்களுக்குள்ளே ஸ்தாபிக்கப்பட்ட முதல் சபை இதுவே.

13 இதோ, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷன் நான். அவருடைய ஜனங்கள் நித்திய ஜீவனைப் பெறும்படிக்கே, அவருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்காக, அவரால் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

14 கடந்து போன, பரிசுத்தவான்களின் ஜெபங்கள் அவர்களுடைய விசுவாசத்திற்கேற்ப நிறைவேறத்தக்கதாக, நடந்தேறிய காரியங்களான இவைகளைக் குறித்து பதிவேட்டை நான் தேவ சித்தத்தின்படியே செய்யவேண்டியது அவசியமாயிற்று.

15 ஆம், எருசலேமை விட்டு லேகி வந்த காலம் துவங்கி, இந்நாள் வரைக்குமாய் சம்பவித்தவைகளைப்பற்றிய, ஒரு சிறிய பதிவேடு.

16 ஆதலால் எனக்கு முன்னதாக இருந்தவர்களால் கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து என் நாட்களின் துவக்கம் வரைக்குமாய் நான் என்னுடைய பதிவேட்டைச் செய்கிறேன்.

17 பிறகு நான் என் சொந்தக் கண்களால் கண்டவைகளைப்பற்றிய ஒரு பதிவேட்டைச் செய்கிறேன்.

18 நான் செய்கிற இப்பதிவேடு நியாயமானதும் மெய்யானதுமான பதிவேடு என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆயினும் எங்களுடைய மொழியின்படி, அநேக காரியங்களை எங்களால் எழுதக் கூடாமற்போகிறது.

19 இப்பொழுது, நான் என்னைக் குறித்த எனது பேச்சை நிறுத்திவிட்டு, எனக்கு முன் நடந்தவைகளைப்பற்றிய என் குறிப்பைக் கொடுக்கப்போகிறேன்.

20 நானே மார்மன். நான் லேகியின் சுத்தமான சந்ததி. நான் என் தேவனையும் என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் ஸ்தோத்திரிக்க முகாந்தரமுண்டு, ஏனெனில் அவர் எங்கள் பிதாக்களை எருசலேம் தேசத்தைவிட்டு கூட்டிவந்தார் (அவரும் அவர் அத்தேசத்திலிருந்து கூட்டிவந்தவர்களுமே தவிர வேறொருவரும் இதை அறியார்) அவர் எனக்கும், என் ஜனத்திற்கும், எங்கள் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கேதுவான அதிக ஞானத்தைக் கொடுத்திருக்கிறார்.

21 நிச்சயமாகவே, அவர் யாக்கோபின் வீட்டாரை ஆசீர்வதித்து, யோசேப்பின் சந்ததியாருக்கு இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார்.

22 லேகியின் பிள்ளைகள் எவ்வளவாய் தமது கட்டளைகளைக் கைக்கொண்டிருக்கிறார்களோ அவ்வளவாய் அவர் அவர்களை ஆசீர்வதித்து, தம்முடைய வார்த்தையின்படியே அவர்களை விருத்தியடையப் பண்ணியிருக்கிறார்.

23 ஆம், நிச்சயமாகவே அவர் யோசேப்பின் சந்ததியின் மீதியானோரை மறுபடியும் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய ஞானத்திற்குக் கொண்டுவருவார்.

24 கர்த்தர் ஜீவிக்கிற நிச்சயம் போலவே, பூமியின் பரப்பின் மீதெங்கும் சிதறிக்கிடக்கிற யாக்கோபின் சந்ததியின் மீதியானோர் அனைவரையும் அவர் பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.

25 அவர் யாக்கோபின் வீட்டார் எல்லோருடனும் உடன்படிக்கை செய்துகொண்டதுபோலவே, அவர் யாக்கோபின் வீட்டாரோடு செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த ஞானத்துக்கு யாக்கோபின் வீட்டார் எல்லோரையும் திரும்பக் கொண்டுவரும்படியாக, யாக்கோபின் வீட்டாரோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கை, அவருடைய ஏற்ற காலத்திலே நிறைவேறும்.

26 அப்பொழுது அவர்கள் தேவகுமாரனும், தங்கள் மீட்பருமான, இயேசு கிறிஸ்துவை அறிவார்கள். அப்பொழுது அவர்கள் தாங்கள் எங்கிருந்து சிதறடிக்கப்பட்டுப் போனார்களோ அங்கேயே, தங்கள் சொந்த தேசங்களுக்கே, பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள், ஆம், கர்த்தர் ஜீவிக்குமளவும் அது அப்படியே சம்பவிக்கும். ஆமென்.