வேதங்கள்
ஏலமன் 11


அதிகாரம் 11

அவர்களின் யுத்தத்தை ஒரு பஞ்சத்தால் மாற்றிப் போடும்படி நேபி கர்த்தரிடத்தில் வேண்டுதல் – அநேக ஜனங்கள் அழிந்துபோகுதல் – அவர்கள் மனந்திரும்புதலும், மழைக்காக கர்த்தரிடத்தில் நேபி மன்றாடுதலும் – நேபியும் லேகியும் அநேக வெளிப்படுத்தல்களைப் பெறுதல் – காதியாந்தன் திருடர்கள் தேசத்தில் வலுவாய் தங்களை ஸ்தாபித்துக் கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 20–6.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் எழுபத்தி இரண்டாம் வருஷத்தில், தேசம் முழுவதும் நேபியின் எல்லா ஜனங்களுக்குள்ளும், தேசம் முழுவதிலும், யுத்தங்கள் சம்பவிக்கும் அளவில், பிணக்குகள் அதிகரித்தன.

2 இந்த அழிவின் கிரியையையும், துன்மார்க்கத்தையும் செய்து வந்தவர்களும், இந்த இரகசிய திருடர் கூட்டத்தார்தான். இந்த யுத்தம் அந்த வருஷம் முழுவதும் நீடித்திருந்தது; அது எழுபத்தி மூன்றாம் வருஷத்திலும் நீடித்திருந்தது.

3 அந்தப்படியே, இந்த வருஷத்தில் நேபி கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டு:

4 கர்த்தாவே, பட்டயத்தால் இந்த ஜனம் அழிந்துபோக அனுமதியாதேயும்; ஆனால் கர்த்தாவே அவர்களைத் தேவனாகிய தங்கள் கர்த்தரைக் குறித்து நினைக்கத் தூண்டும்படிக்கு, அதற்குப் பதிலாக தேசத்திலே பஞ்சம் இருப்பதாக. ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி உம்மிடத்தில் திரும்புவார்கள்.

5 எனவே, நேபியின் வார்த்தைகளின்படி அது அப்படியே சம்பவித்தது. தேசத்தில் நேபியின் எல்லா ஜனங்களுக்குள்ளும் மிகுந்த பஞ்சம் உண்டாயிற்று. இப்படியாக எழுபத்தி நாலாம் வருஷத்தில் பஞ்சம் தொடர்ந்தது. பட்டயத்தால் அழிவின் கிரியை நின்றுபோனாலும், பஞ்சத்தால் மிகவும் கொடியதானது.

6 இந்த அழிவின் கிரியை எழுபத்தி ஐந்தாம் வருஷத்திலும் தொடர்ந்தது. பூமியானது வெட்டாந்தரையாக்கப்பட்டபோது, தானியங்களை விளைவிக்கிற காலத்தில் தானியங்களைக் கொடுக்காமற் போனது; அதினிமித்தம் அவர்கள் அடிக்கப்பட்டு தேசத்தின் அதிக துன்மார்க்கப் பகுதிகளில் இருக்கிற, ஆயிரக்கணக்கானோர் அழிந்து போகும்படியாக லாமானியருக்குள்ளும் நேபியருக்குள்ளும் பூமியனைத்தும் அடிக்கப்பட்டது.

7 அந்தப்படியே, ஜனங்கள் தாங்கள் பஞ்சத்தால் அழியவிருக்கிறதைக் கண்டபோது, தேவனாகிய தங்கள் கர்த்தரை நினைவுகூரத் துவங்கினார்கள்; அவர்கள் நேபியின் வார்த்தைகளை நினைவுகூரத் துவங்கினார்கள்.

8 ஜனங்கள் தங்களின் பிரதான நியாயாதிபதிகளுடனும், தங்களின் தலைவர்களுடனும் நேபியினிடத்தில்: இதோ, நீ தேவனுடைய மனுஷன் என்று நாங்கள் அறிவோம். ஆகவே எங்களுடைய அழிவைக் குறித்து நீ சொன்ன எல்லா வார்த்தைகளுமே நிறைவேறாதிருக்கும்படிக்கு, நீ தேவனாகிய நம்முடைய கர்த்தர் இந்த பஞ்சத்தை நம்மிடத்திலிருந்து திருப்பிப்போடும்படியாக அவரிடத்தில் கூக்குரலிடு, என்று சொல்லச் சொல்லி கெஞ்சத் துவங்கினார்கள்.

9 அந்தப்படியே, நியாயாதிபதிகள் நேபியை நோக்கி, வாஞ்சிக்கப்பட்ட வார்த்தைகளின்படியே சொன்னார்கள். அந்தப்படியே, நேபி ஜனங்கள் மனந்திரும்பினார்களென்றும், இரட்டுடுத்தி தங்களைத் தாழ்த்தினார்களென்றும் கண்டபோது, மீண்டும் அவன் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டு சொன்னதாவது:

10 கர்த்தாவே இதோ, இந்த ஜனங்கள் மனந்திரும்பினார்கள்; அவர்கள் தங்கள் மத்தியிலிருந்து காதியாந்தன் கூட்டத்தினர் அழிந்து போகும்படிக்கும், அவர்கள் தங்களுடைய இரகசியத் திட்டங்களை பூமியிலே புதைக்கும்படிக்கும், அவர்கள் துரத்தியடித்தனர்.

11 இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய இந்த தாழ்மையினிமித்தம், நீர் உம்முடைய கோபத்தை திருப்புவீரா, நீர் ஏற்கனவே அழித்துப்போட்ட அந்த துன்மார்க்கரின் அழிவிலே உம்முடைய கோபம் முடிவதாக.

12 கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தை, ஆம், கொடிய கோபத்தைத் திருப்பி, இந்த பஞ்சம் இத்தேசத்திலிருந்து முடியச் செய்வீரா.

13 கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து, என் வார்த்தைகளின்படி நடக்கச் செய்து, பூமியானது தன் கனியையும், தானியக் காலத்தில் தானியத்தையும் கொடுக்கும்படி, பூமியின்மேல் மழையைப் பெய்யப்பண்ணுவீரா.

14 கர்த்தாவே, பட்டயத்தின் வாதை நிற்கும்படியாக, அங்கே பஞ்சம் உண்டாவதாக என்று நான் சொன்னபோது, நீர் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தீர்; இந்த ஜனம் மனந்திரும்பினால் அவர்களைத் தப்புவிப்பேன், என்று நீர் சொன்னதினிமித்தம், இச்சமயத்திலும் என் வார்த்தைகளுக்கு நீர் செவிகொடுப்பீர், என்று அறிந்திருக்கிறேன்.

15 ஆம், கர்த்தாவே, தங்கள் மேல் வந்த பஞ்சத்தினாலும், வாதையினாலும், அழிவினாலும் அவர்கள் மனந்திரும்பினார்கள் என்று பார்க்கிறீர்.

16 இப்பொழுதும் கர்த்தாவே நீர் உமது கோபத்தைத் திருப்புவீரா. அவர்கள் உம்மை சேவிப்பார்களா என மறுபடியும் சோதிப்பீரா. அப்படியானால், கர்த்தாவே நீர் சொன்ன பிரகாரம், உம் வார்த்தைகளின்படி அவர்களை ஆசீர்வதிக்க உம்மால்கூடும்.

17 அந்தப்படியே, எழுபத்தி ஆறாம் வருஷத்தில் கர்த்தர் தமது கோபத்தை ஜனங்களிடத்திலிருந்து திருப்பி, பூமியின் மேல் மழையைப் பொழியப் பண்ணினார். அதனால், அது கனியின் காலத்தில் தன் கனிகளைத் தந்தது. அந்தப்படியே, அது தன் தானியத்தின் காலத்தில் தன் தானியங்களைத் தந்தது.

18 இதோ, ஜனங்கள் களிகூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். தேசம் முழுவதும் களிகூருதலினால் நிறைந்தது; அவர்கள் இனிமேலும் நேபியை அழிக்க வகை தேடவில்லை, ஆனால் அவன் தேவனிடத்திலிருந்து மிகுந்த வல்லமையையும், அதிகாரத்தையும் பெற்ற பெரிய தீர்க்கதரிசி என்றும் தேவ மனுஷன் என்றும் அவர்கள் மரியாதை கொடுத்தார்கள்.

19 இதோ, அவன் சகோதரனாகிய லேகி, நீதிக்கடுத்த காரியங்களில் அவனுக்கு கொஞ்சமும் சளைத்தவனல்ல.

20 நேபியின் ஜனங்கள் மறுபடியும் தேசத்தில் விருத்தியடையத் துவங்கி, தங்களுடைய பாழான ஸ்தலங்களைக் கட்டத்துவங்கி, வடக்கிலும், தெற்கிலும், மேற்கு சமுத்திரம் தொடங்கி கிழக்கு சமுத்திரம் வரைக்குமாய், தேசம் முழுவதையும் அவர்கள் நிரப்புமளவும் பலுகிப்பெருகி படர்ந்தார்கள்.

21 அந்தப்படியே, எழுபத்தி ஆறாம் வருஷம் சமாதானமாய் முடிவடைந்தது. எழுபத்தி ஏழாம் வருஷம் சமாதானமாய் துவங்கியது; சபை தேசத்தின் மீதெங்கும் பரவியது; நேபியர்களும், லாமானியர்களுமாக ஜனங்களில் அதிகமானோர் சபையைச் சார்ந்திருந்தார்கள்; அவர்கள் தேசத்தில் மிகுந்த சமாதானத்தைப் பெற்றிருந்தார்கள்; இப்படியாக எழுபத்தி ஏழாம் வருஷமும் முடிவடைந்தது.

22 தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட உபதேசத்தின் கருத்துக்களைக் குறித்து சில பிணக்குகள் எழுந்ததே தவிர, எழுபத்தி எட்டாம் வருஷத்திலும் அவர்கள் சமாதானம் பெற்றிருந்தனர்.

23 எழுபத்தி ஒன்பதாம் வருஷத்தில் மிகுந்த தர்க்கங்கள் வரத் துவங்கியது. ஆனால், அந்தப்படியே, அநேக வெளிப்படுத்தல்களை தினமும் பெற்று, உபதேசத்தின் மெய்யான கருத்துக்களைக் குறித்து அறிந்தவர்களான நேபியும், லேகியும், அவர்களுடைய சகோதரரில் அநேகரும், அதே வருஷத்தில் அவர்களின் தர்க்கத்துக்கு முடிவு வரும்பொருட்டு ஜனங்களுக்குப் பிரசங்கித்தார்கள்.

24 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் எண்பதாவது வருஷத்தில், லாமானியரிடத்தில் சில வருஷங்களுக்கு முன்னதாகவே போய், லாமானியரின் பெயரைத் தங்கள் மேல் எடுத்துக்கொண்ட நேபியின் ஜனங்களிலிருந்த கலகத்தார் சிலரும், லாமானியரின் மெய்யான சந்ததியினர் சிலரும், அவர்களால், அதாவது அந்த கலகக்காரரால் கோபப்படும்படி தூண்டிவிடப்பட்டு, தங்கள் சகோதரரோடு யுத்தம் பண்ணத் துவங்கினார்கள்.

25 அவர்கள் கொலையையும், களவையும் செய்தார்கள்; பின்பு அவர்கள் மலைகளுக்கும், வனாந்தரத்திற்கும், இரகசிய இடங்களுக்கும் திரும்பி தாங்கள் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஒளிந்து கொண்டார்கள். கலகக்காரர் அவர்களிடத்தில் போய்க்கொண்டிருந்தபடியால், அவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே வந்தது.

26 இப்படியாக சிறிதுகாலத்தில், ஆம், சில வருஷங்களுக்குள்ளாகவே அவர்கள் பெரிய திருடர் கூட்டமானார்கள்; அவர்கள் காதியாந்தனின் இரகசியத் திட்டங்களைக் கண்டறிந்து, இப்படியாக அவர்கள் காதியாந்தன் திருடர்களானார்கள்.

27 இப்பொழுதும் இதோ, இந்தத் திருடர்கள், நேபி ஜனங்களுக்குள்ளும், லாமானிய ஜனங்களுக்குள்ளும் கூட பெரும் பாதிப்பை, ஆம், பெரும் அழிவை உண்டாக்கினார்கள்.

28 அந்தப்படியே, இந்த அழிவின் கிரியையை நிறுத்துவது அவசியமானது. ஆதலால் அவர்கள் பராக்கிரமசாலிகளின் சேனையை, வனாந்தரத்தினுள்ளும், மலையின் மேலும் போய், இந்தத் திருடர் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவர்களை அழித்துப்போட அனுப்பினார்கள்.

29 ஆனால், இதோ, அந்தப்படியே, அதே வருஷத்தில் அவர்கள் தங்கள் சொந்த தேசங்களுக்குள்ளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் எண்பதாவது வருஷமும் முடிவுற்றது.

30 அந்தப்படியே, எண்பத்தி ஒன்றாம் வருஷத் துவக்கத்தில் அவர்கள் இந்த திருடர் கூட்டத்திற்கு விரோதமாக மறுபடியும் போய் அநேகரை அழித்தார்கள்; அவர்களும் மிகுந்த அழிவினால் சந்திக்கப்பட்டார்கள்.

31 மலைகளிலும் வனாந்தரங்களிலும் பெருகின அந்தத் திருடர்களின் எண்ணிக்கையின் மிகுதியினிமித்தம் அவர்கள் மறுபடியும் வனாந்தரத்திலிருந்தும், மலைகளிலிருந்தும் தங்கள் சொந்த தேசங்களுக்குத் திரும்பும்படியாகக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

32 அந்தப்படியே, இந்த வருஷம் முடிவுற்றது. திருடர்கள் இன்னும் பெருகி பலம்கொண்டு நேபியரின் மற்றும் லாமானியரின் சேனை முழுவதையும் எதிர்த்தார்கள்; அவர்கள் தேசத்தின் மேலிருந்த ஜனங்கள் மீது பெரும் பயம் வரக் காரணமாயிருந்தார்கள்.

33 ஆம், அவர்கள் தேசத்தின் அநேக பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்குள்ளே மிகுந்த அழிவை ஏற்படுத்தினார்கள்; ஆம், அவர்கள் அநேகரைக் கொன்று, மற்றவர்களைக், குறிப்பாக அவர்களுடைய ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் வனாந்தரத்தினுள் கைதிகளாகக் கொண்டு போனார்கள்.

34 ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம் அவர்கள் மேல் வந்த இந்தப் பெரும் பொல்லாப்பு அவர்களை தேவனாகிய தங்கள் கர்த்தரை மறுபடியும் நினைவு கூரும்படியாய் தூண்டிற்று.

35 இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் எண்பத்தி ஒன்றாம் வருஷமும் முடிவடைந்தது.

36 எண்பத்தி இரண்டாம் வருஷத்தில் அவர்கள் மறுபடியும் தேவனாகிய தங்கள் கர்த்தரை மறக்கத் தொடங்கினார்கள். எண்பத்தி மூன்றாம் வருஷத்தில் அவர்கள் அக்கிரமத்திலே பலத்தார்கள். எண்பத்தி நான்காம் வருஷத்தில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்ப்படுத்தவில்லை.

37 அந்தப்படியே, எண்பத்தி ஐந்தாம் வருஷத்தில், அவர்கள் தங்கள் பெருமையிலும், தங்கள் துன்மார்க்கத்திலும் மென்மேலும் திடனடைந்து, அப்படியாக அழிவிற்கேதுவாய் பழுத்திருந்தார்கள்.

38 இப்படியாக எண்பத்து ஐந்தாம் வருஷமும் முடிவடைந்தது.