வேதங்கள்
ஏலமன் 13


நேபியர்களுக்கு லாமானியனான சாமுவேலின் தீர்க்கதரிசனம்.

அதிகாரங்கள் 13 முதல் 15 உள்ளிட்டவை.

அதிகாரம் 13

நேபியர்கள் மனந்திரும்பாவிட்டால் அவர்களுக்கு நேரிடுகிற அழிவை லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசனமுரைத்தல் – அவர்களும் அவர்களுடைய ஐஸ்வரியங்களும் சபிக்கப்படுதல் – அவர்கள் தீர்க்கதரிசிகளை மறுத்து கல்லெறிதலும், அவர்கள் பிசாசுகளால் சூழப்படுதலும். அக்கிரமம் செய்வதில் மகிழ்ச்சியை நாடுதலும். ஏறக்குறைய கி.மு. 6

1 இப்பொழுதும், அந்தப்படியே, எண்பத்தி ஆறாம் வருஷத்தில், நேபியர்கள் இன்னும் துன்மார்க்கத்தில், ஆம், பெரும் துன்மார்க்கத்தில் நிலைத்திருக்கையில், லாமானியர் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி தேவ கட்டளைகளை கைக்கொள்ளுவதை கடுமையாய் ஆசரித்து வந்தார்கள்.

2 அந்தப்படியே, இந்த வருஷத்தில் லாமானியனான சாமுவேல் என்பவன் சாரகெம்லா தேசத்திற்குள் வந்து, ஜனங்களுக்குள்ளே பிரசங்கம் பண்ணத் தொடங்கினான். அந்தப்படியே, மனந்திரும்புதலைக் குறித்து ஜனங்களுக்கு அநேக நாட்கள் பிரசங்கம் பண்ணினான். அவர்கள் அவனை வெளியே தள்ளினார்கள். அவன் தன் சொந்த தேசத்திற்குத் திரும்பவிருந்தான்.

3 இதோ, அவன் மீண்டும் திரும்பி, தன் இருதயத்தில் வருகிற எக்காரியத்தையும் ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமாய் சொல்லவேண்டுமென்ற கர்த்தருடைய சத்தம் அவனுக்கு உண்டானது.

4 அந்தப்படியே, அவன் பட்டணத்தினுள் பிரவேசிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்; ஆதலால் அவன் போய் அதன் மதில் மேல் ஏறி, தன் கையை நீட்டி, தன் இருதயத்தில் கர்த்தர் வைக்கிற எக்காரியத்தையும் ஜனங்களுக்கு உரத்த சத்தமாய் தீர்க்கதரிசனமுரைத்தான்.

5 அவன் அவர்களை நோக்கி: இதோ, லாமானியனான சாமுவேல் ஆகிய நான், கர்த்தர் என் இருதயத்தில் வைக்கிற அவருடைய வார்த்தைகளையே பேசுகிறேன்; இதோ, இந்த ஜனங்களின் மேல் நியாயத்தின் பட்டயம் தொங்குகிறது என்று இந்த ஜனங்களுக்கு சொல்லும்படியாக அவர் என் இருதயத்தில் ஏவினார்; நானூறு வருஷங்கள் கடப்பதற்கு முன்னமே இந்த ஜனங்களின் மேல் நியாயத்தின் பட்டயம் விழும்.

6 ஆம், இந்த ஜனங்களுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது. மெய்யாகவே அது இந்த ஜனங்களுக்கு சம்பவிக்கும். மனந்திரும்புதலும், மெய்யாகவே உலகினுள் வந்து, அநேகக் காரியங்களைச் சகித்து, தன் ஜனங்களுக்காகக் கொல்லப்படவிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமே அல்லாமல் வேறொன்றும் இந்த ஜனங்களை இரட்சிக்க முடியாது.

7 இதோ, கர்த்தருடைய தூதன் அதை எனக்கு அறிவித்தான். அவன் என் ஆத்துமாவிற்கு நற்செய்தியைக் கொண்டு வந்தான். இதோ, நீங்கள் நற்செய்தியைப் பெறும்படியாக அதை அறிவிக்க நான் உங்களிடத்தில் அனுப்பப்பட்டேன். ஆனால் இதோ, நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.

8 ஆதலால் கர்த்தர் சொல்லுகிறதாவது: அவர்களின் இருதயக் கடினத்தினிமித்தம் நேபியர்களான ஜனங்கள் மனந்திரும்பாவிட்டால் நான் என் வார்த்தையை அவர்களிடத்திலிருந்து எடுத்துப் போடுவேன். நான் என் ஆவியை அவர்களிடத்திலிருந்து நீங்கலாக்குவேன். இனி ஒருபோதும் அவர்களை பொறுத்துக்கொள்ளேன். நான் அவர்களுடைய சகோதரரின் இருதயங்களை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்புவேன்.

9 நானூறு வருஷங்கள் கடந்துபோகும் முன்னே அவர்கள் அடிக்கப்படும்படியாகச் செய்வேன்; ஆம், நான் அவர்களை பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், வாதையினாலும் விசாரிப்பேன்.

10 ஆம், நான் என்னுடைய கொடிய கோபத்தினால் அவர்களை விசாரிப்பேன். உன் சத்துருக்களின் நாலாம் தலைமுறையினராய் ஜீவித்திருப்போர் உங்களுடைய முழு அழிவையும் காண்பார்கள்; நீங்கள் மனந்திரும்பாவிடில், இது மெய்யாகவே சம்பவிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்; அந்த நாலாம் தலைமுறையினரே உங்களை அழிவை சந்திப்பார்கள்.

11 ஆனால், நீங்கள் மனந்திரும்பி, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்புவீர்களெனில், நான் என் கோபத்தைத் திருப்புவேன் என்று கர்த்தர் உரைக்கிறார்; ஆம், கர்த்தர் உரைப்பதாவது, மனந்திரும்பி என்னிடத்தில் திரும்புகிறவர்கள் பாக்கியவான்கள், மனந்திரும்பாதவனுக்கோ ஐயோ.

12 ஆம், இப்பெரும் பட்டணமான சாரகெம்லாவிற்கு ஐயோ; இதோ, நீதிமான்களினிமித்தமே அது காக்கப்படுகிறது; ஆம், இப்பெரும் பட்டணத்திற்கு ஐயோ. ஆம், அநேகர், இப்பெரும் பட்டணத்திலிருக்கிற பெரும்பாலானோர் எனக்கு விரோதமாக தங்கள் இருதயங்களை கடினப்படுத்தப் போவதாக நான் உணர்கிறேன் என கர்த்தர் சொல்வதால் இப்பெரும் பட்டணத்திற்கு ஐயோ, என்று கர்த்தர் உரைக்கிறார்.

13 மனந்திரும்புபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களை நான் தப்புவிப்பேன். ஆனால் இதோ, இப்பெரும் பட்டணத்தில் நீதிமான்கள் இல்லையெனில், இதோ, வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணி, இதை அழியப் பண்ணுவேன்.

14 ஆனால் இதோ, நீதிமான்களினிமித்தமே இது தப்புவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதோ, கர்த்தர் சொல்வதாவது, நீங்கள் உங்களுக்குள்ளிருந்து நீதிமான்களை தள்ளுகிற காலம் வரும்போது, நீங்கள் அழிவிற்கேதுவாய் பழுத்திருப்பீர்கள்; ஆம், அவளது துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளினிமித்தம் இந்த பெரும் பட்டணத்திற்கு ஐயோ.

15 ஆம், அவளது துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளினிமித்தம் கிதியோன் பட்டணத்திற்கு ஐயோ.

16 ஆம், சுற்றுப்புற தேசத்திலுள்ள, நேபியர்கள் வசப்பட்டிருக்கிற பட்டணங்கள் யாவிற்கும், அவைகளிலுள்ள துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளினிமித்தம் ஐயோ.

17 சேனைகளின் கர்த்தர் உரைப்பதாவது, இதோ, தேசத்தின் மேலிருக்கிற ஜனங்களின் நிமித்தம், ஆம், அவர்களின் துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளினிமித்தம் தேசத்தின் மீது ஒரு சாபம் வரும்.

18 நம்முடைய மகத்துவமிக்க, உண்மையுள்ள தேவனாகிய, சேனைகளின் கர்த்தர் உரைப்பதாவது. பூமியில் பொக்கிஷங்களை மறைத்து வைக்கிற எவனும், நீதிமானாயிருந்து, அதைக் கர்த்தருக்குள்ளாக மறைத்து வைக்காவிடில், தேசத்தின் கொடிய சாபத்தினிமித்தம், அவன் அதை இனி ஒருபோதும் கண்டடைவதில்லை.

19 கர்த்தர் சொல்லுகிறதாவது, அவர்கள் எனக்குள்ளாக பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்க விரும்புகிறேன்; எனக்குள்ளாகத் தங்கள் பொக்கிஷங்களை மறைக்காத எவரும் சபிக்கப்பட்டவரே; ஏனெனில் நீதிமான்களைத் தவிர வேறொருவரும் தங்கள் பொக்கிஷங்களை எனக்குள்ளாக மறைத்து வைப்பதில்லை; எனக்குள்ளாக தன் பொக்கிஷங்களை மறைத்து வைக்காதவனும் அவனது பொக்கிஷமும் சபிக்கப்பட்டிருக்கும், தேசத்தின் சாபத்தினிமித்தம், அதை ஒருவனும் மீட்டுக் கொள்வதில்லை.

20 கர்த்தர் உரைப்பதாவது, அவர்கள் தங்கள் இருதயங்களை ஐஸ்வரியத்தின்மேல் வைத்ததினிமித்தம், அவர்கள் தங்கள் பொக்கிஷங்களை மறைத்து வைக்கிற நாள் வரும்; அவர்கள் தங்கள் இருதயங்களை தங்கள் ஐஸ்வரியங்களின்மேல் வைத்ததினிமித்தம், அவர்கள் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக ஓடுகையில் தங்கள் பொக்கிஷங்களை மறைத்து வைப்பார்கள்; அவர்கள் அவைகளை எனக்குள்ளாக மறைத்து வைக்காததினிமித்தம், அவர்களும் அவர்களின் பொக்கிஷமும் சபிக்கப்பட்டிருக்கும். அந்நாளிலே அவர்கள் அடிக்கப்பட்டுப் போவார்கள்.

21 இதோ, இப்பெரும் பட்டணத்தின் ஜனங்களாகிய நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்; ஆம், கர்த்தர் சொல்லுகிற வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்; ஏனெனில் இதோ, அவர் சொல்லுகிறதாவது, நீங்கள் உங்கள் ஐஸ்வரியத்தினிமித்தம் நீங்கள் சபிக்கப்படுகிறீர்கள், அவைகள்மேல் உங்கள் இருதயங்களை வைத்து, அவைகளை உங்களுக்குக் கொடுத்தவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாததினிமித்தம், உங்கள் ஐஸ்வரியங்களும் சபிக்கப்பட்டிருக்கும்.

22 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து கொடுத்த இக்காரியங்களுக்காக அவரை நீங்கள் நினைவுகூர்வதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் ஐஸ்வரியங்களை எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கிறீர்கள். அவைகளுக்காக தேவனாகிய உங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்வதில்லை; ஆம், உங்கள் இருதயங்கள் கர்த்தரை நோக்கி இழுக்கப்படுவதில்லை. அவை பெருமையினால் மேன்மை பாராட்டவும், பொறாமை, பிணக்குகள், வெறுப்பு, துன்புறுத்தல்கள், கொலைகள் மற்றும் எல்லாவிதமான அக்கிரமங்களாலும் நிறைந்துள்ளன.

23 இதினிமித்தம் தேவனாகிய கர்த்தர், தேசத்தின் மேலும் உங்கள் ஐஸ்வரியங்களின் மேலும் ஒரு சாபம் வரப் பண்ணினார், இது உங்களின் அக்கிரமங்களினிமித்தமே.

24 ஆம், அவர்கள் பழங்காலத்தில் செய்ததைப்போலவே, நீங்களும் தீர்க்கதரிசிகளை வெளியே தள்ளி, அவர்களைக் கேலிசெய்து, அவர்கள் மேல் கல்லெறிந்து, அவர்களை வெட்டி, அவர்களுக்கு எல்லாவிதமான அக்கிரமத்தைப்பண்ணுகிற இந்தக் காலம் வந்ததால், இந்த ஜனங்களுக்கு ஐயோ.

25 இப்பொழுதும் நீங்கள் பேசும்போது, எங்களுடைய நாட்கள், எங்களின் பிதாக்களின் நாட்களில் இருந்திருக்குமேயானால், நாங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று போட்டிருக்கமாட்டோம்; அவர்களின் மேல் கல்லெறிந்திருக்கமாட்டோம், அவர்களைப் புறம்பே தள்ளிவிட்டிருக்கமாட்டோம், என்கிறீர்கள்.

26 இதோ, அவர்களைப் பார்க்கிலும் நீங்கள் கெட்டவர்கள்; கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், உங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசி வந்து, உங்களுடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் குறித்து சாட்சி கூறும் கர்த்தரின் வார்த்தையை உங்களுக்கு அறிவித்தால், நீங்கள் அவன் மேல் கோபம் கொண்டு, அவனைத் தள்ளி, அவனை அழித்துப்போட எல்லா வழிகளிலும் வகை தேடுகிறீர்கள்; ஆம், அவன் உங்கள் நடத்தை பொல்லாததாயிருக்கிறது என்று சொன்னதினிமித்தம், அவன் கள்ளத் தீர்க்கதரிசி என்றும், அவன் பாவியென்றும், அவன் பிசாசு பிடித்தவனென்றும் சொல்லுகிறீர்கள்.

27 ஆனால் இதோ, உங்களுக்குள் ஒரு மனுஷன் வந்து சொல்வான், இதைச் செய்யுங்கள், இதில் அக்கிரமம் இல்லை, அதைச் செய்யுங்கள், நீங்கள் கஷ்டப்படுவதில்லை; ஆம்; உங்கள் சொந்த இருதயங்களின் பெருமையின்படியே நடவுங்கள்; ஆம், உங்கள் கண்களின் பெருமையின்படியே நடந்து, உங்கள் இருதயம் வாஞ்சிக்கிறதெதுவோ அதைச் செய்யுங்கள், உங்களுக்குள் ஒருவன் வந்து இதைச் சொல்வானாகில், நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டு, அவன் ஒரு தீர்க்கதரிசி, என்பீர்கள்.

28 ஆம், நீங்கள் அவனை கனம்பண்ணி, அவனுக்கு உங்களுடைய பொருட்களைக் கொடுப்பீர்கள்; நீங்கள் அவனுக்கு உங்களுடைய பொன்னையும், உங்களுடைய வெள்ளியையும் கொடுத்து, விலையுயர்ந்த ஆடையை அவனுக்குப் போர்த்துவீர்கள்; அவன் உங்களிடத்தில் இச்சகமாய்ப் பேசி, எல்லாம் நலமே என்று சொல்லுகிறதினிமித்தம், அவனில் நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பதில்லை.

29 துன்மார்க்கமும், மாறுபாடுமுள்ள தலைமுறையே, இதயக் கடினமும், வணங்காக் கழுத்துமுள்ள ஜனமே, கர்த்தர் உங்களை எவ்வளவு காலம் விட்டுவைப்பார் என்று எண்ணுகிறீர்கள்? ஆம், எவ்வளவு காலம் தான் நீங்கள் மூடரும் குருடருமான வழிகாட்டிகளால் நடத்தப்பட உங்களையே அனுமதிப்பீர்கள்? ஆம் எவ்வளவு காலம்தான் வெளிச்சத்திற்குப் பதிலாக இருளைத் தெரிந்துகொள்வீர்கள்?

30 ஆம், இதோ கர்த்தருடைய உக்கிரம் ஏற்கனவே உங்களுக்கு விரோதமாய் மூட்டிவிடப்பட்டிருக்கிறது; இதோ, உங்களுடைய அக்கிரமத்தினிமித்தம், அவர் தேசத்தை சபித்திருக்கிறார்.

31 இதோ, அவர் உங்கள் ஐஸ்வரியங்களை சபித்து, அவை நிலைகொள்ளாமலும், நீங்கள் அவைகளைப் பெற்றிருக்க முடியாமற் போகும் காலமும் வரும்; உங்களுடைய ஏழ்மையின் நாட்களில் அவைகளை நீங்கள் திரும்பப் பெற முடியாது.

32 உங்களுடைய ஏழ்மையின் காலத்தில் கர்த்தரிடத்தில் நீங்கள் கூக்குரலிடுவீர்கள்; நீங்கள் வீணிலே கூக்குரலிடுவீர்கள்; ஏனெனில் உங்கள்மேல் உங்களின் பாழ்க்கடிப்பு ஏற்கனவே வந்துவிட்டது, உங்கள் அழிவு உறுதியாக்கப்பட்டிருக்கிறது, அந்நாளிலே நீங்கள் அழுது, ஓலமிடுவீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நீங்கள் புலம்பி சொல்வீர்கள்:

33 நான் மனந்திரும்பி, தீர்க்கதரிசிகளை கொலை பண்ணாமலும், அவர்களைக் கல்லெறியாமலும், அவர்களை புறம்பே தள்ளாமலும் இருந்தேனே. ஆம், அந்நாளில் நீங்கள்: தேவனாகிய நம்முடைய கர்த்தர் நமக்கு ஐஸ்வரியங்களைக் கொடுத்த அந்த நாளில் அவரை நினைத்திருந்தோமானால், அவைகளை நாம் இழக்கும்படியாய் அவை நிலை கொள்ளாமற் போயிராது; ஏனெனில் இதோ, நம்முடைய ஐஸ்வரியங்கள் நம்மை விட்டுப் போயிற்று.

34 இதோ, நாம் இங்கே ஒரு கருவியை வைக்கிறோம். அது மறுநாளில் தொலைந்து போகிறது; இதோ, நம்முடைய பட்டயங்களை நாம் யுத்தத்திற்காகத் தேடும் நாளிலே அவை நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

35 ஆம், நம்முடைய பொக்கிஷங்களை மறைத்து வைத்தோம். தேசத்தின் மீதுள்ள சாபத்தினிமித்தம் அவை நம்மிடத்திலிருந்து நழுவிப்போயின.

36 கர்த்தருடைய வார்த்தை நம்மிடத்தில் வந்த அந்த நாளிலே நாம் மனந்திரும்பியிருக்க வேண்டும்; ஏனெனில் இதோ, தேசம் சபிக்கப்பட்டது. அனைத்தும் நிலைகொள்ளாமற் போயின. அவைகளை நாம் வைத்திருக்க முடியவில்லை.

37 இதோ, நாம் பிசாசுகளால் சூழப்பட்டிருக்கிறோம். ஆம் நம்முடைய ஆத்துமாக்களை அழிக்க வகை தேடுகிறவனின் தூதர்களால் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம். இதோ, நம்முடைய அக்கிரமங்கள் பெரிதாயிருக்கின்றன. கர்த்தாவே, நீர் உம்முடைய உக்கிரத்தை எங்களிடமிருந்து திருப்பிக் கொள்ளமுடியாதா. அக்காலத்தில் உங்களின் பேச்சு இவ்விதமாயிருக்கும்.

38 இதோ, உங்களுடைய சோதனைக் காலம் கடந்து போயிற்று. நித்தியமாய் காலம் கடந்து போகுமட்டும், உங்களுடைய இரட்சிப்பின் நாளை தள்ளிப்போட்டீர்கள். உங்களுடைய அழிவு நிச்சயிக்கப்பட்டுள்ளது; ஆம், நீங்கள் பெற முடியாததை, உங்கள் வாழ்நாள் முழுவதும் தேடினீர்கள், நீங்கள் அக்கிரமம் செய்து, மகிழ்ச்சியைத் தேடினீர்கள். அதுவே நம்முடைய வல்லவரும், நித்தியத் தலைவருமானவரில் இருக்கிற நீதியின் தன்மைக்குப் புறம்பானது.

39 என் வார்த்தைகளைக் கேட்கிற தேசத்திலிருக்கிற ஜனங்களே! கர்த்தருடைய கோபம் உங்களிடத்திலிருந்து திரும்பும்படிக்கும், நீங்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் ஜெபிக்கிறேன்.