வேதங்கள்
ஏலமன் 1


ஏலமனின் புஸ்தகம்

நேபியர்களைப்பற்றிய ஒரு விவரம். அவர்களுடைய யுத்தங்கள், பிணக்குகள், பிரிவினைகள். ஏலமனின் குமாரனாகிய ஏலமனின் பதிவேட்டின்படியும், அவனுடைய குமாரர்களின் பதிவேட்டின்படியேயும், கிறிஸ்துவின் வருகையின் முன்னால் இருந்த அநேக பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களும், கிறிஸ்துவின் வருகை வரைக்குமாய். அநேக லாமானியர் மனமாறுதல் – அவர்களுடைய மனமாற்றத்தைப்பற்றிய ஓர் விவரம். லாமானியர்களின் நீதியின் ஓர் விவரம், ஏலமன் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறதும், மற்றும் பிறவும் ஆகிய, ஏலமன் மற்றும் அவனுடைய குமாரர்களின் பதிவேட்டின்படியே கிறிஸ்துவின் வருகையின் வரைக்கும் லாமானியரின் நீதியையும், நேபியரின் துன்மார்க்கத்தையும், அருவருப்பையும், பற்றிய ஓர் விவரம்.

அதிகாரம் 1

இரண்டாம் பகோரன், பிரதான நியாயாதிபதியாகி, அவன் கிஸ்குமனால் கொலை செய்யப்படுதல் – பக்குமெனி நியாயாசனத்தில் அமர்தல் – கொரியாந்தமர், லாமானிய சேனையை நடத்தி, சாரகெம்லாவைக் கைப்பற்றி, பக்குமேனியை சங்கரித்தல் – மரோனிகா, லாமானியரை வீழ்த்தி, சாரகெம்லாவை மறுபடியும் கைப்பற்றுதல். கொரியாந்தமர் கொல்லப்பட்டுதல். ஏறக்குறைய கி.மு. 52–50.

1 இப்பொழுதும் இதோ, அந்தப்படியே, நேபி ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் நாற்பதாவது வருஷ ஆளுகையின் துவக்கத்திலே, நேபியர்களின் ஜனங்களுக்குள்ளே ஓர் கடுமையான பிரச்சனை ஏற்படத் தொடங்கியது.

2 ஏனெனில் இதோ, பகோரன் மரித்து, பூலோகத்தார் போகிற வழியே போனான். ஆதலால் பகோரனின் குமாரர்களாகிய சகோதரர்களுள் யார் நியாயாசனத்தைப் பெறுவது, என்ற தீவிர பிணக்கு எழுந்தது.

3 இப்பொழுது, நியாயாசனத்திற்காகப் போராடி, ஜனங்களையும் போராடச் செய்தவர்களின் பெயர்கள்: பகோரன், பான்சீ, மற்றும் பக்குமெனி என்பவைகளே.

4 பகோரனின் குமாரர்கள் இவர்கள் மாத்திரமல்ல (ஏனெனில் அவனுக்கு அநேகர் இருந்தார்கள்), ஆனால் நியாயாசனத்திற்காக போராடியவர்கள் இவர்களே; ஆதலால் அவர்கள் ஜனங்களுக்குள்ளே மூன்று பிரிவுகளை உண்டுபண்ணினார்கள்.

5 ஆயினும், அந்தப்படியே, பகோரன், ஜனங்களின் சம்மதத்துடன் நேபி ஜனங்களின் மேல் பிரதான நியாயாதிபதியாகவும், விசாரணைக்காரனாகவும் நியமிக்கப்பட்டான்.

6 அந்தப்படியே, தான் நியாயாசனத்தைப் பெற முடியாது, என பக்குமெனி கண்டபோது, அவன் ஜனங்களின் சம்மதத்தோடு இணைந்து கொண்டான்.

7 ஆனாலும் இதோ, பான்சீயும் அவன் தங்கள் விசாரணைக்காரனாய் வரவேண்டுமென்று விரும்பின அந்த ஜனங்களின் பிரிவினரும், மிகுந்த கோபம் கொண்டார்கள்; ஆகவே அவர்களை தங்கள் சகோதரர்களுக்கு விரோதமாய்க் கலகம்பண்ண எழுப்பிவிட, அந்த ஜனங்களிடத்தில் முகஸ்துதியாய்ப் பேசவிருந்தான்.

8 அந்தப்படியே, அவன் இப்படிச் செய்யவிருந்தபோது, இதோ, அவன் பிடிக்கப்பட்டு, ஜனங்களின் சம்மதத்துடன் விசாரிக்கப்பட்டு மரணத்திற்கேதுவாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டான்; ஏனெனில் அவன் கலகம்பண்ணும்படி எழுந்து, ஜனங்களுடைய சுதந்திரத்தை அழிக்க வகை தேடினான்.

9 இப்பொழுது அவன் விசாரணைக்காரனாக வரவேண்டுமென்று விரும்பின அந்த ஜனங்கள், அவன் மரணத்திற்கேதுவாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் கோபப்பட்டு, இதோ, பகோரனின் நியாயாசனம் வரைக்குமாய் கிஸ்குமன் என்று பெயருள்ள ஒருவனை அனுப்பினார்கள். அவன் பகோரனை நியாயாசனத்திலே உட்கார்ந்திருந்தபோதே கொன்று போட்டான்.

10 அவன் பகோரனின் வேலையாட்களால் தொடரப்பட்டான்; ஆனால் இதோ, கிஸ்குமன் அதிவேகமாய் ஓடினதாலே, அவனை முந்த ஒரு மனுஷனாலும் முடியவில்லை.

11 அவன் தன்னை அனுப்பியவர்களிடத்திற்குப் போனான். பகோரனை கிஸ்குமன் கொன்றான் என்று, ஒருவருக்கும் சொல்லக்கூடாதென்று, அவர்கள் யாவரும் தங்களின் என்றுமுள்ள சிருஷ்டிகரின் மேல் ஆணையிட்டு உடன்படிக்கையினுள் பிரவேசித்தார்கள்.

12 இப்படியாக, பகோரனை கிஸ்குமன் கொன்றபோது அவன் மாறுவேடத்தில் இருந்ததினால், நேபியின் ஜனங்களுக்குள்ளே அவன் அறியப்படவில்லை. அவர்களில் எல்லோரும் கண்டுபிடிக்க முடியாத விதமாய், கிஸ்குமனும், அவனோடுகூட ஒப்பந்தம் செய்துகொண்ட, அவனது கூட்டத்தாரும் ஜனங்களோடு கலந்துவிட்டனர்; ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட யாவரும் மரணத்திற்கேதுவாய் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார்கள்.

13 இப்பொழுது, இதோ, தன் சகோதரன் பகோரனின் ஸ்தானத்தில் ஜனங்களை ஆளும்படியாக, பிரதான நியாயாதிபதியாயும், விசாரணைக்காரனாயும் ஜனங்களின் சம்மதத்தின்படியே பக்குமெனி நியமிக்கப்பட்டான்; அது அவனுடைய உரிமையின்படியாயிருந்தது. இவை யாவும் நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பதாவது வருஷத்தில் நடந்தது. அதுவும் முடிவுற்றது.

14 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தோராம் வருஷத்தில், லாமானியர் எண்ணிறைந்த மனுஷ சேனையைத் திரட்டி, அவர்களை பட்டயங்களினாலும் உடைவாள்களினாலும், அம்புகளாலும், விற்களாலும், தலைக்கவசங்களாலும், மார்புக் கவசங்களாலும், சகலவித கேடயங்களாலும் ஆயுதந்தரிக்கப் பண்ணினார்கள்.

15 அவர்கள் நேபியர்களுக்கு விரோதமாய் மறுபடியும் யுத்தம் பண்ண வந்தார்கள். அவர்கள் கொரியாந்தமர் என்ற நாமமுடைய மனுஷனால் நடத்தப்பட்டார்கள். அவன் சாரகெம்லாவின் சந்ததி. அவன் நேபியருக்குள்ளிருந்த கலகக்காரன். அவன் பெரியவனாயும், பலசாலியாயுமிருந்தான்.

16 ஆதலால், கொரியாந்தமர் பராக்கிரமசாலியாய் இருந்தபடியால், அவனுடைய பெலத்தினாலும், அவனுடைய மிகுந்த ஞானத்தினாலும், நேபியர்களுக்கு விரோதமாய் நிற்கமுடியும் என்றும், அவனை அனுப்பினால், அவன் நேபியர்கள் மேல் ஜெயம்பெற முடியுமென்றும், துபாலோத்து என்னும் பெயருடைய அம்மோரனின் குமாரனான லாமானிய ராஜா நினைத்தான்.

17 ஆதலால் அவன் அவர்களை கோபம் அடையத் தூண்டிவிட்டு, தன் சேனைகளை ஒன்று திரட்டி, அவைகளின் தலைவனாக கொரியாந்தமரை நியமித்து, அவர்கள் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண சாரகெம்லா தேசத்திற்குப் போகப்பண்ணினான்.

18 அந்தப்படியே, மிகுந்த பிணக்கினிமித்தமும், ராஜாங்கத்திலிருந்த கஷ்டத்தினிமித்தமும், அவர்கள் சாரகெம்லா தேசத்தில் போதுமான காவற்காரர்களை வைக்கவில்லை; ஏனெனில் அந்த மாநகரமாகிய சாரகெம்லாவைத் தாக்க லாமானியர் தங்களின் தேசங்களுக்குள்ளே வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தார்கள்.

19 அந்தப்படியே, கொரியாந்தமர் தன் எண்ணிறைந்த சேனையின் தலைமையேற்று அணிவகுத்துப்போய் பட்டணத்தின் குடிகளின்மேல் வந்தான். அவர்களுடைய அணிவகுப்பு மிகவும் வேகமாய் இருந்ததாலே, நேபியர் தங்கள் சேனைகளைத் திரட்ட நேரமில்லாமல் போனது.

20 ஆதலால், கொரியாந்தமர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்த காவல்காரனைக், கொன்று போட்டு, அவன் தன் முழு சேனையோடுகூட பட்டணத்திற்குள்ளே போனான். அவர்கள் முழுப்பட்டணத்தையும் வசப்படுத்திக் கொள்ளும் அளவில், தங்களை எதிர்த்த அனைவரையும் சங்கரித்தனர்.

21 அந்தப்படியே, பிரதான நியாயாதிபதியாகிய பக்குமெனி கொரியாந்தமர் முன்பு பறந்தோடி, பட்டணத்தின் மதில்கள் வரைக்கும் போனான். அந்தப்படியே, அவனைக் கொரியாந்தமர், அவன் செத்துப்போகும்படிக்கு மதிலில் மோதி அடித்தான். இப்படியாக பக்குமெனியின் நாட்கள் முடிவடைந்தது.

22 இப்பொழுதும், தான் சாரகெம்லா பட்டணத்தை வசப்படுத்திக்கொண்டதையும், நேபியர் தங்களுக்கு முன்பு ஓடுகிறதையும், கொல்லப்படுகிறதையும், பிடிபட்டு சிறையினுள் தள்ளப்படுகிறதையும், தேசமனைத்திலுமுள்ள மிக பலமுள்ள கொத்தளத்தைத் தான் கைப்பற்றினதையும் கண்டபோது, கொரியாந்தமர் தனது மனதில் திடன்கொண்டு, தேச முழுவதிற்கும் எதிராகப் போக இருந்தான்.

23 இப்பொழுது, அவன் சாரகெம்லா தேசத்தில் தங்கிவிடாமல், அவன் உதாரத்துவஸ்தல பட்டணத்திற்கு நேராய் தனது மிகப்பெரிய சேனையோடுகூட அணிவகுத்துப் போனான்; ஏனெனில், அவன் தேசத்தின் வடபகுதியைப் பிடிக்க, பட்டயத்தினால் வழியுண்டாக்கி போவது அவனது தீர்மானமாயிருந்தது.

24 அவர்களின் மிகுந்த பெலன் தேசத்தின் நடுவிலிருக்கிறதென்று எண்ணி, அவர்கள் சிறுகுழுக்களாய் கூடுவதைத்தவிர, திரளாகக்கூட நேரம் இராதவாறு அணிவகுத்துப்போனான்; இப்படியாய் அவர்கள், அவர்கள்மேல் விழுந்து அவர்களை பூமியிலே வெட்டிச் சாய்த்தார்கள்.

25 ஆனாலும் இதோ, கொல்லப்பட்ட நேபியர் எண்ணிக்கை அநேகமாயிருந்தாலும், கொரியாந்தமர் தேசத்தின் நடுவிலே அணிவகுத்திருப்பது, மரோனிகாவிற்கு மிகுந்த அனுகூலமாய் அமைந்தது.

26 ஏனெனில் இதோ, லாமானியர் தேசத்தின் நடுவிலே வரப்பயந்து, இதுவரைக்கும் செய்ததைப்போல பட்டணத்தின் சுற்றுப்புறங்களில் எல்லைகளிலிருந்தவாறே தாக்குவார்கள், என்று மரோனிகா, எண்ணியிருந்தான், ஆதலால் தங்களின் பலமுள்ள சேனைகள், எல்லைகளைச் சுற்றிலுமுள்ள அப்பகுதிகளைக் காக்கவேண்டுமென்று, மரோனிகா கட்டளையிட்டிருந்தான்.

27 இதோ, அவனுடைய வாஞ்சைக்கேற்ப லாமானியர் பயப்படாமல், தேசத்தின் நடுவே வந்து, தலைநகரமாகிய சாரகெம்லாவைப் பிடித்து, தேசத்தின் மிக முக்கிய பகுதிகளில் அணிவகுத்துப்போய் ஆண்கள், ஸ்திரீகள், பிள்ளைகளுமாக, ஜனங்களை மிகுதியாய் சங்காரம்பண்ணி, பல பட்டணங்களையும், அநேக கொத்தளங்களையும் வசப்படுத்திக்கொண்டார்கள்.

28 மரோனிகா இதை அறிந்தபோது, அவர்கள் உதாரத்துவஸ்தலத்திற்கு போகும் முன்னே ஒரு சேனையோடு சுற்றிக் கொண்டு போகவேண்டுமென லேகியை அனுப்பினான்.

29 இப்படியாக அவன் செய்தான்; அவர்கள் உதாரத்துவஸ்தலத்திற்கு வருவதற்கு முன்னதாகவே சென்று, அவர்கள் சாரகெம்லா தேசத்திற்குத் திரும்பிப் போகத் துவங்கும்படிக்கு, அவர்கள் மேல் போர் தொடுத்தான்.

30 அந்தப்படியே, அவர்கள் பின்வாங்கும்போது மரோனிகா அவர்களுக்கு எதிரில் போய் அவர்கள் மேல் யுத்தம் பண்ணினான். அந்த யுத்தம் மிகுந்த இரத்தக்களமாயிற்று; ஆம், அநேகர் வெட்டப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் கொரியாந்தமரும் காணப்பட்டான்.

31 இப்பொழுது, இதோ, நேபியர் லாமானியரை எல்லா பக்கங்களிலும், சூழ்ந்துகொண்டபடியால், அவர்கள் வடக்கிலோ, தெற்கிலோ, கிழக்கிலோ, மேற்கிலோ எந்த திசையிலும் பின்வாங்க முடியாமற்போனது.

32 இப்படியாக கொரியாந்தமர் லாமானியரை நேபியரின் நடுவே கொண்டுவந்து நிறுத்தினதால், அவர்கள் நேபியர்களின் வல்லமையினுள் அகப்பட்டார்கள். அவனும் கொல்லப்பட்டுப் போனான். லாமானியரும் தங்களையே நேபியர்களின் கைகளுக்குள் ஒப்புக்கொடுத்தார்கள்.

33 அந்தப்படியே, மரோனிகா மறுபடியும் சாரகெம்லா பட்டணத்தை வசப்படுத்தி, சிறைக்கைதிகளாகப் பிடிபட்ட லாமானியர் சமாதானமாய் தேசத்தை விட்டுப்போகும்படிச் செய்தான்.

34 இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்தோராம் வருஷமும் முடிவுற்றது.