வேதங்கள்
ஏலமன் 2


அதிகாரம் 2

ஏலமனின் குமாரனாகிய ஏலமன் பிரதான நியாயாதிபதியாகுதல் – கிஸ்குமனுடைய கூட்டத்தாரை காதியாந்தன் வழிநடத்துதல் – ஏலமனின் வேலைக்காரன் கிஸ்குமனை சங்கரித்தல். காதியாந்தன் கூட்டத்தார் வனாந்தரத்தினுள் ஓடிப்போகுதல். ஏறக்குறைய கி,மு. 50–49.

1 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்திரண்டாம் வருஷத்தில், நேபியர்களுக்குள்ளும் லாமானியர்களுக்குள்ளும் மரோனிகா சமாதானத்தை நிலைவரப்பண்ணின பின்பு, இதோ, நியாயாசனத்தை நிரப்ப அங்கு ஒருவருமில்லை; எனவே நியாயாசனத்தை நிரப்புவது யார் என்று ஜனங்களுக்குள்ளே மறுபடியும் பிணக்குகள் ஏற்படத் துவங்கின.

2 அந்தப்படியே, ஏலமனின் குமாரனாகிய ஏலமன், ஜனங்களின் வேண்டுகோளின்படி நியாயாசனத்தை நிரப்பும்படியாய் நியமிக்கப்பட்டான்.

3 ஆனால் இதோ, பகோரனை கொலைபண்ணின கிஸ்குமன், ஏலமனை அழிக்கவும் காத்திருந்தான்; ஒருவரும் அவனுடைய துன்மார்க்கத்தைக் குறித்து அறியக்கூடாதென்று ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசித்திருந்த அவனுடைய கூட்டத்தார் அவனை ஆதரித்தார்கள்.

4 ஏனெனில் காதியாந்தன் என்ற ஒருவன் வார்த்தை ஜாலங்களிலும், கொலைகளையும் களவுகளையும் இரகசியமாய்ப் பண்ணுவதாகிய தன் தந்திரங்களிலும் கைதேர்ந்தவனாய் இருந்ததால் அவன் கிஸ்குமன் கூட்டத்திற்குத் தலைவனானான்.

5 எனவே, தனது கூட்டத்தார் தன்னை நியாயாசனத்தில் அமர்த்தினால், அவர்கள் ஜனங்களுக்குள்ளே வல்லமையையும், அதிகாரத்தையும், பெற்றிருக்கும்படியாக அமர்த்தப்படுவார்களென்று அவன் அவர்களிடமும், கிஸ்குமனுடனும் முகஸ்துதியாய்ப் பேசினான்; ஆகையால் கிஸ்குமன் ஏலமனை அழிக்க வகைதேடினான்.

6 அந்தப்படியே, அவன் ஏலமனை அழிக்க நேராய் நியாயாசனத்திற்குப் போய்க்கொண்டிருக்கும்போது, இதோ, ஏலமனின் வேலைக்காரரில் ஒருவன் ஜாமத்தில் வெளியே வந்து, மாறுவேஷம் பூண்டு, ஏலமனை அழிக்க இந்தக் கூட்டத்தினரால் போடப்பட்ட திட்டத்தைக் குறித்து அறிந்தான்.

7 அந்தப்படியே, அவன் கிஸ்குமனை சந்தித்து, அவனுக்கு ஒரு சமிக்ஞை காட்டினான்; ஆதலால் கிஸ்குமன், தான் ஏலமனைக் கொலை செய்யும்படி, தன்னை அவன் நியாயாசனத்திற்குக் கூட்டிச் செல்லவேண்டுமென்ற, தனது வாஞ்சையின் நோக்கத்தினை அவனுக்கு தெரிவித்தான்.

8 ஏலமனின் வேலைக்காரன் கிஸ்குமனின் நோக்கம் முழுவதையும், அவன் நோக்கம் எப்படி கொலை செய்வது என்பதாயிருந்ததென்றும், அவன் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் அனைவருடைய நோக்கமும் எப்படி கொலை செய்வது, திருடுவது, மற்றும் அதிகாரத்தை அடைவது என்று இருந்ததென்றும் (இதுவே அவர்களுடைய இரகசிய திட்டமும், சங்கமுமாம்), அறிந்தவுடன், ஏலமனின் வேலைக்காரன் கிஸ்குமனை நோக்கி: நாம் நியாயாசனத்தினிடத்திற்குப் போவோம், என்றான்.

9 இப்பொழுது கிஸ்குமனை இது வெகுவாய் சந்தோஷமடையச் செய்தது. ஏனெனில் அவன் தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினான், ஆனால் இதோ, அவர்கள் நியாயாசனத்திற்குப் போய்க்கொண்டிருக்கும்போது ஏலமனின் வேலைக்காரன் கிஸ்குமன் இருதயத்தில் குத்தினான், அவன் முனங்காமல், கீழே விழுந்து மரித்துப் போனான். அவன் ஓடிப்போய், தான் கண்டதும் கேட்டதும், நடந்ததுமான எல்லாக் காரியங்களையும் ஏலமனிடத்தில் சொன்னான்.

10 அந்தப்படியே, இந்த திருடர்களின் கூட்டத்தினரையும், இரகசிய கொலைகாரர்களையும் பிடித்து சட்டத்தின்படி அவர்களை மரண தண்டனைக்குள்ளாக்கும்படியாக ஏலமன் ஆட்களை அனுப்பினான்.

11 ஆனால் இதோ, கிஸ்குமன் திரும்பாததை காதியாந்தன் கண்டு ஒருவேளை அவன் அழிக்கப்பட்டிருக்கக்கூடுமோ என்று பயந்தான்; ஆதலால், அவன் தன் கூட்டத்தார் தன்னைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவர்கள் இரகசிய வழியாய் தேசத்தைவிட்டு, வனாந்தரத்தினுள் ஓடிப்போனார்கள்; இப்படியாக ஏலமன் அவர்களைப் பிடிக்கும்படி ஆட்களை அனுப்பியபோது அவர்களை எங்கும் பிடிக்க முடியாமற்போனது.

12 காதியாந்தனைக் குறித்து இதற்குப் பின்பு அதிகமாய் பேசப்படும். இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் நாற்பத்திரண்டாம் வருஷமும் முடிவுற்றது.

13 இதோ, இந்த காதியாந்தன் எப்படி நேபியின் ஜனங்கள், ஏறக்குறைய அனைவரும் வீழ்ச்சியடையவும், ஆம், அழியவும் வழிவகுத்தான் என்று இப்புஸ்தகத்தின் முடிவிலே காண்பீர்கள்.

14 இதோ நான் ஏலமனின் புஸ்தக முடிவை அல்ல, ஆனால் நேபியின் புஸ்தகத்தின் முடிவைக் குறிப்பிடுகிறேன். நான் எழுதின விவரம் யாவையும் அவைகளிலிருந்து எடுத்திருக்கிறேன்.