வேதங்கள்
ஏலமன் 6


அதிகாரம் 6

நீதிமான்களான லாமானியர் துன்மார்க்க நேபியர்களுக்குப் பிரசங்கம் பண்ணுதல் – சமாதானமும், நிறைவுமுள்ள காலத்தில் இரு ஜனத்தாரும் விருத்தியடைதல் – பாவத்திற்கு காரணனான லூசிபர் துன்மார்க்கரையும், காதியாந்தன் திருடர்களையும், கொலையிலும், துன்மார்க்கத்திலும் ஈடுபட அவர்களின் இருதயங்களைத் தூண்டிவிடுதல் – திருடர்கள், நேபியர்களின் ராஜாங்கத்தைத் தங்கள் வசப்படுத்துதல். ஏறக்குறைய கி.மு. 29–23.

1 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி இரண்டாம் வருஷமும் முடிவுற்றபோது இவை எல்லாம் சம்பவித்து, லாமானியரில் பெரும்பாலானோர் நீதியுள்ள ஜனமாய் மாறினதோடு, அவர்களுடைய உறுதியினாலும், விசுவாசத்தில் அவர்களுக்கிருந்த மாறாத்தன்மையினிமித்தமும் அவர்களின் நீதி நேபியர்களைக் காட்டிலும் மிஞ்சிற்று.

2 ஏனெனில் இதோ, நேபியர்களில் அநேகர் கடினமுள்ளவர்களாயும், மனந்திரும்பாதோராயும், மிகவும் கொடியவராயும் மாறி, அவர்கள் தேவ வார்த்தையையும், தங்களுக்குள் வந்த சகல போதகத்தையும், தீர்க்கதரிசனங்களையும் நிராகரித்தார்கள்.

3 ஆயினும் சபையின் ஜனமோ, லாமானியரின் மனமாற்றத்தினிமித்தமும், ஆம், அவர்களுக்குள் ஸ்தாபிக்கப்பட்ட தேவ சபையினிமித்தமும், மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொண்டு, ஒருவரோடொருவர் களிகூர்ந்திருந்து, மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள்.

4 அந்தப்படியே, லாமானியரில் அநேகர் சாரகெம்லா தேசத்தினுள் வந்து, நேபியின் ஜனங்களுக்குத் தாங்கள் மனமாறின விதத்தைக் குறித்து அறிவித்து, அவர்களை விசுவாசத்திற்குள்ளும் மனந்திரும்புதலுக்குள்ளும் ஊக்குவித்தார்கள்.

5 ஆம், அவர்களில் அநேகரைத் தாழ்மையின் ஆழங்களில் கொண்டுவந்து, தேவனுக்கும், தேவ ஆட்டுக்குட்டிக்கும் தாழ்மையான சீஷர்களாக்கும்படிக்கு, அநேகர் மிகுந்த வல்லமையோடும், அதிகாரத்தோடும் பிரசங்கித்தார்கள்.

6 அந்தப்படியே, லாமானியரில் அநேகர் வடதேசத்திற்குப் போனார்கள்; ஜனங்களுக்குப் பிரசங்கிக்கும்படி, நேபியும் லேகியும்கூட வடதேசத்திற்கு போனார்கள். இப்படியாக அறுபத்தி மூன்றாம் வருஷமும் முடிவடைந்தது.

7 இதோ, நேபியருக்குள்ளோ அல்லது லாமானியருக்குள்ளோ, தாங்கள் விரும்புகிற தேசத்தின் எப்பகுதிக்கும் நேபியர்கள் போகும் அளவுக்கு, தேசமுழுவதும் சமாதானம் இருந்தது.

8 அந்தப்படியே, லாமானியருக்குள்ளோ அல்லது நேபியருக்குள்ளோ, தாங்கள் போக விரும்புகிற இடம் எதுவானாலும், லாமானியரும் போனார்கள்; இப்படியாக, அவர்கள் தங்களின் விருப்பத்தின்படியே வாங்கவும், விற்கவும், ஆதாயம் பெறவும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு வைத்திருந்தனர்.

9 அந்தப்படியே, லாமானியரும், நேபியருமான இருவரும் மிகவும் ஐஸ்வரியவான்களானார்கள்; அவர்கள் தென் தேசத்திலும், வடதேசத்திலும் மிகவும் அதிகமான பொன்னையும், வெள்ளியையும் எல்லாவிதமான விலையுயர்ந்த உலோகங்களையும் வைத்திருந்தார்கள்.

10 இப்பொழுது தென் தேசம் லேகி என்றும், வடதேசம் சிதேக்கியாவின் குமாரனின் பேரால் மூலெக் என்றும் அழைக்கப்பட்டது; ஏனெனில் கர்த்தர் மூலெக்கை வடதேசத்திற்கும், லேகியை தென்தேசத்திற்கும் அழைத்து வந்தார்.

11 இதோ, இவ்விரண்டு தேசங்களிலும், பொன்னும், வெள்ளியும், எல்லாவிதமான விலையுயர்ந்த தாதுக்களும் இருந்தன; எல்லா விதமான தாதுக்களைப் பயன்படுத்தவும், அதைச் சுத்திகரிக்கவும் அங்கே கைதேர்ந்த பணியாளர்கள் இருந்தார்கள்; இப்படியாக அவர்கள் ஐஸ்வர்யவான்களானார்கள்.

12 அவர்கள் வடக்கிலும், தெற்கிலும் தானியங்களை மிகுதியாய் விளையப் பண்ணினார்கள்; அவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மிகுதியாய் செழிப்படைந்தார்கள். அவர்கள் தேசத்தில் பெருகி, பலசாலிகளானார்கள். அவர்கள் அநேக ஆடு மாடுகளையும், ஆம், கொழுத்தவைகளையும் வளர்த்தார்கள்.

13 இதோ அவர்களுடைய பெண்கள் தங்களின் நிர்வாணத்தை மறைக்க உழைத்து, நூற்று, நன்றாய் பின்னப்பட்ட பட்டுச் சீலைகளையும், எல்லா விதமான துணிகளையும் செய்தார்கள். இப்படியாக, அறுபத்தி நான்காம் வருஷமும் சமாதானமாய் கடந்து போயிற்று.

14 அறுபத்தி ஐந்தாம் வருஷத்திலும் அவர்கள் மிகுந்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும், ஆம், அதிகமான போதகத் தையும், வரப்போகிறவைகளைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்களையும் பெற்றிருந்தார்கள். இப்படியாக அறுபத்தி ஐந்தாம் வருஷமும் கடந்து போயிற்று.

15 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி ஆறாம் வருஷத்தில், இதோ, சிசோரம் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு அறியப்படாதவனால் கொலை செய்யப்பட்டான். அந்தப்படியே, அதே வருஷத்தில், அவனது ஸ்தானத்தில், ஜனங்களால் நியமிக்கப்பட்ட, அவனது குமாரனும் கொலை செய்யப்பட்டான். இப்படியாக அறுபத்தி ஆறாம் வருஷமும் முடிவுற்றது.

16 அறுபத்தி ஏழாம் வருஷ துவக்கத்திலே ஜனங்கள் மறுபடியும் துன்மார்க்கராய் மாற ஆரம்பித்தார்கள்.

17 ஏனெனில் இதோ, அவர்கள் கோபத்திற்கும், யுத்தங்களுக்கும், இரத்தம் சிந்துதலுக்கும், தூண்டப்படாமல் இருக்கும்வரைக்கும், கர்த்தர் அவர்களை உலக ஐஸ்வரியங்களால் ஆசீர்வதித்தார்; ஆதலால் அவர்கள் தங்கள் இருதயங்களைத் தங்களின் ஐஸ்வரியத்தில் வைக்கத் துவங்கினார்கள்; ஆம், அவர்கள் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவராயிருக்கத்தக்கதான ஆதாயத்தைப் பெறும்படி வகை தேடினார்கள்; ஆதலால், ஆதாயத்தைப் பெறுவதற்காக, அவர்கள் இரகசியமாய்க் கொலைகளைச் செய்யவும், திருடவும், கொள்ளையடிக்கவும் ஆரம்பித்தார்கள்.

18 இப்பொழுதும் இதோ, கிஸ்குமனாலும், காதியாந்தனாலும் உருவாக்கப்பட்ட கூட்டத்தை அந்த கொலைகாரரும், கொள்ளைக்காரரும் சார்ந்திருந்தார்கள். இப்பொழுது காதியாந்தனின் கூட்டத்தைச் சார்ந்த அநேகர் நேபியர்களுக்குள்ளும் இருந்தார்கள். ஆனாலும் இதோ அவர்களில் மிகவும் அதிகமானோர் மிக துன்மார்க்கமான லாமானியருக்குள் இருந்தார்கள். அவர்கள் காதியாந்தனின் திருடர்களென்றும், கொலைகாரர்களென்றும் அழைக்கப்பட்டார்கள்.

19 இவர்களால்தான் பிரதான நியாயாதிபதியான சிசோரமும் அவன் குமாரனும் நியாயாசனத்திலே இருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்; இதோ, அவர்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

20 இப்பொழுதும், அந்தப்படியே, லாமானியர் தங்களுக்குள் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் எனக் கண்டவுடன் மிகவும் வருந்தினார்கள்; அவர்கள் அவர்களை பூமியின் பரப்பின் மீதிருந்து அழித்துப்போட தங்கள் பெலத்திற்குட்பட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.

21 ஆனால் இதோ, அவர்கள் அந்தத் திருடர் கூட்டத்தோடு ஐக்கியமாகி, அவர்கள் எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலிருந்தாலும், அவர்கள் தங்கள் கொலைகளுக்காவும், கொள்ளைகளுக்காவும், தங்கள் களவுகளுக்காவும் தண்டிக்கப்படக்கூடாதபடிக்கு ஒருவருக்கொருவர் பாதுகாத்து, காப்பாற்றவேண்டுமென்ற அவர்களுடைய உடன்படிக்கைகளுக்குள்ளும் வாக்குறுதிகளுக்குள்ளும் பிரவேசிக்கும் அளவுக்கு, நேபியர்களின் அதிகமானோரின் இருதயங்களை சாத்தான் ஏவிவிட்டான்.

22 அந்தப்படியே, அவர்கள் தங்கள் அறிகுறிகளை, ஆம், தங்கள் இரகசிய அறிகுறிகளையும் தங்கள் இரகசிய வார்த்தைகளையும் பெற்றிருந்தார்கள்; இது உடன்படிக்கையினுள் பிரவேசித்திருந்த சகோதரனை வேறுபடுத்தவும், அவன் சகோதரன் எத்தகைய துன்மார்க்கம் செய்திருப்பினும் அவன் தனது சகோதரனாலோ அல்லது இந்த உடன்படிக்கையினுள் பிரவேசித்திருந்த அவன் கூட்டத்தை சார்ந்தோராலோ காயப்படுத்தப்படக் கூடாதென்பதற்காகவுமாகும்.

23 இப்படியாக அவர்கள் தங்கள் தேசத்தின் சட்டங்களுக்கும், தங்கள் தேவனின் நியாயப் பிரமாணங்களுக்கும் விரோதமாக கொலையையும், களவையும், திருட்டையும், வேசித்தனத்தையும் மற்றும் எல்லாவிதமான துன்மார்க்கங்களையும் செய்ய முடிந்தது,

24 அவர்களுடைய கூட்டத்தைச் சார்ந்த எவரும் தங்களுடைய துன்மார்க்கத்தையும், தங்களுடைய அருவருப்புகளையும் உலகத்திற்கு வெளிப்படுத்தினால், அவர்கள் தங்கள் தேசத்தின் சட்டங்களால் அல்ல, காதியாந்தன் மற்றும் கிஸ்குமனால் கொடுக்கப்பட்ட தங்கள் துன்மார்க்கத்தின்படியேயான சட்டங்களுக்குத்தக்கதாக விசாரிக்கப்படவேண்டும்.

25 இப்பொழுது இதோ, அந்த இரகசிய ஆணைகளும், உடன்படிக்கைகளும் ஜனங்களை அழிவிற்குள்ளாகக் கொண்டுபோகும் வழி என்பதினால், அவைகள் உலகினுள் போகக்கூடாதென்று ஆல்மா தன் குமாரனுக்குக் கட்டளையிட்டான்.

26 இப்பொழுதும் இதோ, ஏலமனிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பதிவேடுகளின் மூலமாக காதியாந்தனுக்கு இந்த இரகசிய ஆணைகளும் உடன்படிக்கைகளும் கிடைக்கவில்லை; ஆனால் இதோ, தவிர்க்கப்பட்ட கனியை புசிக்கும்படியாக நம்முடைய முதற்பெற்றோரை வஞ்சித்த அவன்தான் இவைகளையும் காதியாந்தனின் இருதயத்திலே போட்டான்.

27 ஆம், தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தால் அது உலகத்திற்குத் தெரிவிக்கப்பட மாட்டாது என்று காயினுடன் ஒரு திட்டம் தீட்டின அவன்தான். அவன் அச்சமயம் முதற்கொண்டு. காயீனோடும், தன்னைப் பின்பற்றினவர்களோடும் ஒரு திட்டம் தீட்டினான்.

28 பரலோகத்தை கிட்டிச்சேர, போதுமான ஒரு உயரமான கோபுரத்தை ஜனங்கள் கட்டும்படியான வாஞ்சையை அவர்கள் இருதயங்களில் போட்டவனும் அவன்தான். அந்தக் கோபுரத்திலிருந்து இத்தேசத்திற்கு வந்த ஜனங்களையும் அவன்தான் வழிநடத்திக்கொண்டு போனான். அவன் ஜனங்களை முழு அழிவிற்கும், என்றுமுள்ள பாதாளத்திற்கும் இழுத்துப் போகுமளவும், அவன் உலகம் முழுவதும் காரிருளான கிரியைகளையும் அருவருப்புகளையும் பரப்பினான்.

29 ஆம், காரிருளான கிரியையும், இரகசியக் கொலையையும் இன்னும் செய்யும்படியாக காதியாந்தனின் இருதயத்திலே அந்த வாஞ்சையை போட்டவனும் அவன்தான்; அதை அவன் மனுஷ துவக்கம் கொண்டு இந்நாள் வரைக்குமாய் நடத்தி வந்திருக்கிறான்.

30 இதோ, அவனே எல்லா பாவத்திற்கும் காரணனாய் இருக்கிறான். இதோ, அவன் தன் காரிருளான கிரியைகளையும், இரகசியக் கொலையையும் செய்து, அவர்களின் திட்டங்களையும், அவர்களின் ஆணைகளையும், அவர்களின் உடன்படிக்கைகளையும், அவர்களின் அஞ்சத்தக்க துன்மார்க்கத்தின் திட்டங்களையும், அவன் மனுபுத்திரரின் இருதயங்களைப் பிடித்துப் போடுவதற்குத் தக்கதாக தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கையளித்து வருகிறான்.

31 இப்பொழுதும் இதோ, ஆம், இதனால் அவர்கள் மிகவும் துன்மார்க்கராகும் அளவுக்கு அவன் நேபியர்களின் இருதயங்களை பெரிதும் பற்றிக்கொண்டான். ஆம், அவர்களின் பெரும்பகுதியினர் நீதியின் மார்க்கத்தினின்று விலகி, தேவ கட்டளைகளைத் தங்கள் பாதங்களுக்குக் கீழ் மிதித்துப்போட்டு, தங்களின் சொந்த வழிகளுக்குத் திரும்பி, தங்களுக்கென்று தங்கள் பொன்னினாலும், தங்கள் வெள்ளியினாலும் விக்கிரகங்களைச் செய்தார்கள்.

32 அந்தப்படியே, அதில் அநேகம் அவர்களுக்கு நேபியின் ஜனங்களின்மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி ஏழாம் வருஷத்தில் வரும் அளவுக்கு இந்த அக்கிரமங்கள் யாவும் அவர்களுக்குக் குறுகிய காலத்திற்குள்ளாகவே வந்தது.

33 நீதிமான்களுக்கு பெரும் துக்கத்தையும் புலம்பலையும் உண்டாக்கும் வண்ணம், அவர்கள் தங்கள் அக்கிரமங்களிலே அறுபத்தி எட்டாம் வருஷத்திலும் வளரத் துவங்கினார்கள்.

34 இப்படியாக நேபியர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து, துன்மார்க்கத்திலும், அருவருப்புகளிலும் வளரத் துவங்குவதையும், லாமானியர் தங்கள் தேவனுடைய ஞானத்தில் மிகுதியாய் வளரத் துவங்குவதையும் நாம் காண்கிறோம்; ஆம், அவர்கள் அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் கைக்கொண்டு அவருக்கு முன்பாக சத்தியத்திலும், சன்மார்க்கத்திலும் நடக்கத் துவங்கினார்கள்.

35 இப்படியாக நேபியர்களின் துன்மார்க்கத்தினிமித்தமும், அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினிமித்தமும், அவர்களிடமிருந்து கர்த்தருடைய ஆவி நீங்கத் துவங்கியது, என்று நாம் காண்கிறோம்.

36 இப்படியாக, லாமானியரின் எளிமையினிமித்தமும், கர்த்தருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க மனமுள்ளவர்களாயிருந்தபடியாலும், அவர் அவர்கள்மேல் தமது ஆவியை ஊற்றத் துவங்கினார் என்றும் நாம் காண்கிறோம்.

37 அந்தப்படியே, லாமானியர் காதியாந்தனின் திருடர் கூட்டத்தை வேட்டையாடினார்கள்; லாமானியருக்குள்ளிருந்து இந்தத் திருடர் கூட்டம் முற்றிலுமாய் அழிக்கப்படுமட்டிலும், அவர்களில் அதிக துன்மார்க்கப் பகுதியினருக்குள்ளே அவர்கள் தேவ வார்த்தையைப் பிரசங்கித்தார்கள்.

38 அந்தப்படியே, மறுபுறத்திலே நேபியர்கள், காதியாந்தன் திருடர் கூட்டத்திலும் பெரும் துன்மார்க்கரில் துவங்கி, அவர்கள் நேபியர்களின் தேசமெங்கும் பரவி, நீதிமான்கள் அதிகமானோரை வஞ்சிக்கும் வரைக்குமாயும், அவர்களுடைய கொள்ளைகளில் பங்குகொண்டு அவர்களுடைய இரகசியக் கொலைகளிலும், சங்கங்களிலும் நம்பி சேர்ந்துகொள்ளும் வரைக்குமாயும் அவர்களை வளர்த்து ஆதரித்தார்கள்.

39 இப்படியாக அவர்கள் எளிமையானோரையும், சிறுமையானோரையும், தேவனைத் தாழ்மையாய் பின்பற்றுகிறவர்களையும், தங்கள் பாதங்களுக்குக் கீழ் மிதித்து, அடித்து, பீறிப்போட்டு அவர்களுக்குத் தங்கள் முதுகுகளைக் காண்பிக்கும் அளவிலும் அவர்கள் ராஜாங்கத்தின் முழு அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

40 இப்படியாக அவர்கள் அஞ்சத்தக்க நிலையிலிருந்து, என்றுமுள்ள அழிவிற்கேதுவாய் பழுத்திருந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

41 அந்தப்படியே, நேபியின் ஜனங்கள் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி எட்டாம் வருஷமும் முடிவுற்றது.