வேதங்கள்
ஏலமன் 9


அதிகாரம் 9

நியாயாசனத்தின் மேல் பிரதான நியாயாதிபதி மரித்துக் கிடப்பதை தூதுவர்கள் காணுதல் – அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள் – நேபி உணர்த்தப்பட்டு, சியான்தம்தான் கொலையாளி என்று கண்டுபிடித்தல் – நேபி, சிலரால் தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளப்படுதல். ஏறக்குறைய கி.மு. 23–21.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, நேபி இவ்வார்த்தைகளைப் பேசினபோது, அவர்களுக்குள்ளிருந்த சில மனுஷர் நியாயாசனத்திற்கு ஓடினார்கள்; ஆம், போனவர்கள் ஐந்து பேராயிருந்தார்கள். அவர்கள் போனபோது தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டதாவது:

2 இதோ, இம்மனுஷன் தீர்க்கதரிசிதானா என்றும், நமக்கு இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களை தீர்க்கதரிசனமுரைக்கும்படி தேவனால் அவன் கட்டளையிடப்பட்டிருக்கிறானா என்றும், இப்பொழுது நாம் மெய்யாகவே அறிந்துகொள்வோம். இதோ, அவர் அப்படிச் செய்திருப்பார் என்று நாம் விசுவாசிக்கிறதில்லை; ஆம், அவன் ஒரு தீர்க்கதரிசி என்று நாம் விசுவாசிக்கிறதில்லை; ஆயினும், அவன் இந்தப் பிரதான நியாயாதிபதியைப்பற்றிச் சொன்ன காரியம் உண்மையாயிருந்தால், அதாவது அவன் மரித்துப் போயிருந்தால், அப்பொழுது அவன் பேசிய மற்ற வார்த்தைகளும் உண்மையென்று நாம் விசுவாசிப்போம்.

3 அந்தப்படியே, அவர்கள் தங்களால் முடிந்தமட்டும் ஓடி நியாயாசனத்திற்கு வந்தார்கள்; இதோ, பிரதான நியாயாதிபதி பூமியிலே விழுந்து, தன் இரத்தத்திலே கிடந்தான்.

4 இப்பொழுது இதோ, இதை அவர்கள் கண்டபோது, பூமியில் விழும் அளவுக்கு, அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள், ஏனெனில் அவர்கள் பிரதான நியாயாதிபதியைக் குறித்து நேபி சொன்ன வார்த்தைகளை விசுவாசித்திருக்கவில்லை.

5 ஆனால் இப்பொழுது, அவர்கள் கண்டபோது விசுவாசித்தார்கள், நேபி சொன்ன தீர்ப்புகள் யாவும் ஜனங்கள்மேல் வருமே என்ற பயம் இவர்களை ஆட்கொண்டது, ஆகவே அவர்கள் நடுங்கி பூமியில் விழுந்தார்கள்.

6 இப்பொழுது நியாயாதிபதி கொலை செய்யப்பட்ட உடனே, அவனை அவன் சகோதரன் இரகசியமாய், மாறுவேடத்தில் குத்திவிட்டு, ஓடிப்போனான். வேலையாட்கள் ஓடி ஜனங்களுக்குள்ளே கொலையைப்பற்றிய செய்தியைக் கூக்குரலிட்டு அறிவித்தார்கள்.

7 இதோ, நியாயாசனம் இருந்த இடத்திலே ஜனங்கள் திரளாய்க் கூடினார்கள். இதோ, அவர்கள் ஆச்சரியப்படும்படியாய், அந்த ஐந்துபேர் பூமியில் விழுந்து கிடப்பதை கண்டார்கள்.

8 இப்பொழுதும் இதோ, நேபியின் தோட்டத்தில் கூடியிருந்த திரளானோரைப்பற்றி ஜனங்கள் ஒன்றும் அறிந்திருக்கவில்லை; ஆதலால் அவர்கள் தங்களுக்குள்ளே: இந்த மனுஷர்கள்தான் நியாயாதிபதியைக் கொலை செய்தார்கள். அவர்கள் நம்மிடமிருந்து ஓடமுடியாதபடிக்கு தேவன் அவர்களை அடித்திருக்கிறார், என்று சொன்னார்கள்.

9 அந்தப்படியே, அவர்கள், அவர்களைப் பிடித்துக் கட்டி, சிறைச்சாலையில் போட்டார்கள். நியாயாதிபதி கொல்லப்பட்டார் என்றும், கொலையாளிகள் பிடிக்கப்பட்டு சிறையினுள் போடப்பட்டார்களென்றும் பிரகடனம் தூர இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

10 அந்தப்படியே, மறுநாளில் கொல்லப்பட்ட மகா, பிரதான நியாயாதிபதியின் அடக்கத்தின்போது, ஜனங்கள் துக்கிக்கவும் உபவாசிக்கவும் திரளாய்க் கூடியிருந்தார்கள்.

11 நேபியின் தோட்டத்திலே இருந்து அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அந்த நியாயாதிபதிகளும் அடக்கத்தின்போது திரளாய்க் கூடியிருந்தார்கள்.

12 அந்தப்படியே, அவர்கள் ஜனங்களிடத்தில்: பிரதான நியாயாதிபதி மரித்துப்போனானா என்பதைக் குறித்து விசாரிக்க அனுப்பப்பட்ட அந்த ஐந்து பேர் எங்கே, என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நீங்கள் அனுப்பினதாக சொல்லுகிற அந்த ஐந்து பேரைக் குறித்து நாங்கள் அறியோம்; ஆனால், சிறைச்சாலையினுள் போடப்பட்ட, கொலைபாதகர்களான ஐந்து பேர் இருக்கிறார்கள், என்றார்கள்.

13 அந்தப்படியே, அவர்களை அழைத்து வரும்படிக்கு நியாயாதிபதிகள் விரும்பினார்கள்; அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இதோ, அவர்கள் அனுப்பப்பட்ட ஐந்து பேராயிருந்தார்கள்; இதோ, நடந்த விஷயத்தைக் குறித்து தெரிந்து கொள்ளும்படி நியாயாதிபதிகள் அவர்களை விசாரித்தார்கள். அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னார்கள்:

14 நாங்கள் ஓடி, நியாயாசனத்தின் இடத்திற்கு வந்தோம். நேபி சொன்னதைப்போலவே சகலவற்றையும் நாங்கள் கண்டபோது, நாங்கள் பூமியில் விழுந்துபோகுமளவும் ஆச்சரியப்பட்டுப் போனோம்; நாங்கள் அதிர்ச்சியிலிருந்து விடுபடும்முன்பே இதோ, அவர்கள் எங்களை சிறைச்சாலையினுள் போட்டார்கள்.

15 இப்பொழுதும் இந்த மனுஷனின் கொலையைப் பொறுத்தவரையில், அதைச் செய்தது யார் என்று நாங்கள் அறியோம்; நாங்கள் அறிந்ததெல்லாம், நீங்கள் விரும்பினபடியே நாங்கள் ஓடிவந்தோம். இதோ, நேபியின் வார்த்தைகளின்படியே அவன் செத்துப் போயிருந்தான்.

16 இப்பொழுதும், அந்தப்படியே, நியாயாதிபதிகள் விஷயத்தை ஜனங்களுக்கு விளக்கி, நேபிக்கு விரோதமாய்க் கூக்குரலிட்டு: இதோ, இந்த நேபி நியாயாதிபதியை வெட்டும்படி ஒருவனிடம் ஒப்பந்தம் பண்ணியிருந்தான், என நாங்கள் அறிவோம். தன்னை பெரிய மனுஷனாயும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவனாயும், தீர்க்கதரிசியாயும் உயர்த்திக் கொள்ளும்படிக்கும், நம்மை அவனுடைய விசுவாசத்திற்குள் மனம்மாறச் செய்யும்படிக்கும், அதை அவன் நமக்கு அறிவித்திருக்கலாம்.

17 இப்பொழுதும் இதோ, இம்மனுஷனை நாம் சோதிப்போம். அவன் தன் குற்றத்தை அறிக்கை பண்ணி இந்த நியாயாதிபதியின் உண்மைக் கொலைகாரனை நமக்குத் தெரியப் பண்ணுவான்.

18 அந்தப்படியே, அந்த ஐவரும் அடக்க நாளில் விடுவிக்கப்பட்டார்கள். ஆயினும், இவர்கள் நியாயாதிபதிகளை அவர்கள் நேபிக்கு விரோதமாய்ப் பேசின வார்த்தைகளினிமித்தம் கடிந்துகொண்டு, அவர்களை மலைக்கச் செய்யுமளவும் ஒவ்வொருவராய் அவர்களோடு விவாதித்தார்கள்.

19 ஆயினும் அவர்கள், நேபி பிடிக்கப்பட்டு, கட்டப்பட்டு, திரளானோருக்கு முன்பாகக் கொண்டு வரப்படும்படிச் செய்தார்கள். அவர்கள் அவனில் குற்றம் கண்டுபிடித்து, அதினிமித்தம் அவர்கள் அவனை மரணத்திற்கேதுவாக குற்றம் சுமத்துவதற்காக, அவர்கள் பலவிதமான வழிகளில் அவனிடத்தில் குறுக்கு விசாரணை செய்தார்கள்.

20 அவர்கள் அவனை நோக்கி: நீ சதிகாரன்; இந்தக் கொலையைப் புரிந்த அந்த மனுஷன் யார்? இப்பொழுது நீ சொல்லி, உன் குற்றத்தை ஒப்புக்கொள் என்றார்கள்; அவர்கள், இதோ பணம். நீ எங்களிடத்தில் சொல்லி, நீ அவனோடுகூட செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வாயாகில், நாங்கள் உன் ஜீவனை உனக்குக் கொடுப்போம், என்றார்கள்.

21 ஆனால் நேபி அவர்களை நோக்கி: நீங்கள் மூடர்களாயும், நீங்கள் இருதயத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களாயும், நீங்கள் குருடராயும், நீங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்களாயும் இருப்பவர்களே, நீங்கள் எவ்வளவு காலம்தான் உங்களுடைய இந்தப் பாவ வழியில் போக தேவனாகிய உங்கள் கர்த்தர் அனுமதிப்பார், என அறிவீர்களா?

22 நீங்கள் மனந்திரும்பாவிட்டால், இச்சமயம் உங்களுக்காகக் காத்திருக்கும், அந்தப் பெரும் சங்காரத்தினிமித்தம், நீங்கள் ஓலமிட்டு, துக்கிக்கத் துவங்கவேண்டுமே.

23 இதோ, நம்முடைய பிரதான நியாயாதிபதியாகிய சிசோரமை கொலை பண்ண ஒரு மனுஷனோடு ஒப்பந்தம் செய்து கொண்டேன், என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம் உங்களுக்குள்ளிருக்கிற துன்மார்க்கத்தையும் அருவருப்புகளையும் நான் அறிந்திருக்கிறேன் என்று, உங்களுக்கு சாட்சியாக இந்தக் காரியம் இருக்கும் பொருட்டும், இதைக் குறித்து நீங்கள் அறியும்படிக்குமே இதை நான் உங்களுக்கு சாட்சி பகர்ந்தேன்.

24 இதை நான் செய்ததினிமித்தம், இக்காரியத்தை அவன் செய்ய வேண்டுமென ஒரு மனுஷனோடு நான் ஒப்பந்தம் செய்து கொண்டேன் என்கிறீர்கள்; ஆம், இந்த அறிகுறியை நான் உங்களுக்குக் காண்பித்ததினிமித்தம், நீங்கள் என்மேல் கோபம் கொண்டு, என் ஜீவனை அழிக்கத் தேடுகிறீர்கள்.

25 இப்பொழுது இதோ, நான் உங்களுக்கு மற்றொரு அறிகுறியைக் காண்பித்து, நீங்கள் இக்காரியத்தில் என்னை அழிக்க முடிகிறதா, என்று பார்க்கிறேன்.

26 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: சிசோரமின் சகோதரனாகிய, சியான்தம்மின் வீட்டுக்குப் போங்கள். அவனை நோக்கி,

27 இந்த ஜனத்தைக் குறித்து அதிக பொல்லாப்பை தீர்க்கதரிசனமாய் உரைக்கிற நேபி என்ற அந்த மாய்மால தீர்க்கதரிசி உன்னோடு ஒப்பந்தம் செய்துகொண்டானா, அதினிமித்தம் நீ உன் சகோதரனாகிய, சிசோரமைக் கொலை செய்தாயா என்று கேளுங்கள்.

28 இதோ, அவன் உங்களை நோக்கி, இல்லை, என்பான்.

29 நீங்கள் அவனை நோக்கி: நீ உன் சகோதரனை கொலை செய்தாயா, என்று கேளுங்கள்.

30 அவன் பயந்து, சொல்வதறியாது நிற்பான். இதோ, அவன் மறுதலிப்பான்; அவன் ஆச்சரியப்பட்டவனைப்போல நடிப்பான். ஆயினும் தான் நிரபராதி என்று உங்களிடம் அறிக்கை பண்ணுவான்.

31 ஆனால் இதோ, நீங்கள் அவனைச் சோதியுங்கள். நீங்கள் அவனுடைய அங்கியின் வஸ்திரத்தில் இரத்தத்தைக் காண்பீர்கள்.

32 நீங்கள் இதைக் காணும்போது, இந்த இரத்தம் எங்கிருந்து வந்தது? இது உன் சகோதரனுடைய இரத்தம் என்று நாங்கள் அறியோமோ, என்று சொல்லுங்கள்.

33 அவன் நடுங்கி, மரணம் தன்மேல் வந்ததைப்போல, வெளுத்துக் காணப்படுவான்.

34 அப்பொழுது நீங்கள்: உன் முகத்தில் காணப்படுகிற இந்த பயம் மற்றும் வெளுப்பினிமித்தம், இதோ, நீயே குற்றவாளி என்று அறிவோம், என்று சொல்லுங்கள்.

35 அவனை பயங்கர பயம் பிடிக்கும்; அவன் உங்களிடம் அறிக்கை பண்ணி, அந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று, ஒருபோதும் மறுதலிக்கமாட்டான்.

36 பின்பு அவன் உங்களை நோக்கி, நேபியாகிய நான், தேவ வல்லமையினால் அருளப்பட்டாலொழிய இந்த விஷயத்தைக் குறித்து ஒன்றும் அறிவதில்லை, என்பான். பின்பு நீங்கள் நான் நேர்மையானவனென்றும், நான் உங்களிடத்தில் தேவனால் அனுப்பப்பட்டவனென்றும் அறிந்து கொள்வீர்கள், என்பான்.

37 அந்தப்படியே, அவர்கள் தங்களுக்கு நேபி சொன்னபடியே போய்ச் செய்தார்கள். இதோ, அவன் சொன்ன வார்த்தைகள் மெய்யானவை; ஏனெனில் அவனது வார்த்தைகளின்படியே அவன் மறுதலித்தான்; அவனது வார்த்தைகளின்படியே அவன் அறிக்கையுமிட்டான்.

38 அந்த ஐவரும், நேபியும் விடுதலையாக்கப்படும் அளவில், அவன், தானே அந்தக் கொலைபாதகன் என்று நிரூபிக்கும்படிக்கு கொண்டுவரப்பட்டான்.

39 அங்கே நேபியர்களில் சிலர் நேபியின் வார்த்தைகளில் விசுவாசித்தார்கள்; சிலர் அந்த ஐவரின் சாட்சியமத்தினிமித்தம் விசுவாசித்தார்கள். ஏனெனில் அவர்கள் சிறையிலிருக்கும்போது மனமாற்றப்பட்டவர்கள்.

40 இப்பொழுது, ஜனங்களுக்குள் நேபி ஒரு தீர்க்கதரிசி என்று சொன்ன சிலர் இருந்தார்கள்.

41 வேறு சிலர்: இதோ, இவன் தெய்வம், இவன் தெய்வமாயிராமலிருந்தால், இவன் சகல காரியங்களையும் அறியக்கூடாதே. ஏனெனில் இதோ, இவன் நம்முடைய இருதயத்தின் நினைப்புகளையும், காரியங்களையும் நமக்குச் சொன்னான்; நம்முடைய பிரதான நியாயாதிபதியைக் கொன்ற உண்மையான கொலை பாதகனையும் நமக்குத் தெரியப் பண்ணினான், என்றார்கள்.