வேதங்கள்
ஏத்தேர் 1


ஏத்தேரின் புஸ்தகம்

மோசியா ராஜாவின் நாட்களில், லிம்கி ஜனங்களால் கண்டெடுக்கப்பட்ட அந்த இருபத்தி நான்கு தகடுகளிலிருந்து எடுக்கப்பட்ட யாரேதியர்களின் பதிவேடு.

அதிகாரம் 1

ஏத்தேர் எழுதினவைகளை மரோனி சுருக்குதல் – ஏத்தேரின் வம்சவரலாறு கொடுக்கப்படுதல் – யாரேதியர்களின் பாஷை பாபேல் கோபுரத்தில் தாறுமாறாக்கப்படவில்லை – அவர்களைச் சிறந்த தேசத்திற்கு நடத்திச் சென்று, அவர்களைப் பெரிய தேசமாக ஆக்குவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணுதல்.

1 இப்பொழுதும் மரோனியாகிய நான், இந்த வடதேசத்திலே கர்த்தருடைய கரத்தினால் அழிக்கப்பட்ட, அந்த பூர்வ காலத்துக் குடிகளைக் குறித்த ஒரு விவரத்தைக் கொடுக்கிறேன்.

2 ஏத்தேரின் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிற, லிம்கியின் ஜனங்களால் கண்டெடுக்கப்பட்ட இருபத்தி நான்கு தகடுகளிலிருந்து என் விவரத்தை எடுக்கிறேன்.

3 உலகத்தினுடைய சிருஷ்டிப்பைக் குறித்தும், ஆதாமைக் குறித்தும், பெரிய கோபுரம் வரைக்குமான சமயம் முதலிலிருந்த விவரத்தையும், அச்சமயம் வரைக்கும் மனுபுத்திரருக்குள்ளே சம்பவித்த காரியங்கள் அனைத்தையும் பேசுகிற, இந்தப் பதிவேட்டின் முதற் பகுதி, யூதர்கள் மத்தியிலும் இருந்தது, என்று எண்ணுகிறேன்.

4 ஆதலால் ஆதாமின் நாட்களிலிருந்து, அச்சமயம் வரைக்கும் சம்பவித்த அந்தக் காரியங்களை நான் எழுதுவதில்லை; ஆனால் அவைகள் தகடுகளின் மேல் எழுதப்பட்டிருந்தன; அவைகளைக் கண்டடைகிறவன் எவனோ, அவனே முழு விவரத்தையும் பெறத்தக்கதான வல்லமையைப் பெற்றிருப்பான்.

5 ஆனால் இதோ, நான் முழு விவரத்தையும் கொடுக்காமல், கோபுரம் துவங்கி, அவர்கள் அழிக்கப்பட்டது வரையிலான ஒரு பகுதியை மாத்திரம் கொடுக்கிறேன்.

6 நான் இந்தப் பிரகாரமாய் விவரத்தைக் கொடுக்கிறேன். இந்தப் பதிவேட்டினை எழுதினவன் ஏத்தேர். அவன் கொரியாந்தரின் சந்ததியான்.

7 கொரியாந்தர், மோரானின் குமாரன்.

8 மோரான் ஏத்தேமின் குமாரன்.

9 ஏத்தேம் ஆகாவின் குமாரன்.

10 ஆகா, சேத்தின் குமாரன்.

11 சேத், சிப்லோனின் குமாரன்.

12 சிப்லோன், கோமின் குமாரன்.

13 கோம், கொரியாந்தமின் குமாரன்.

14 கொரியாந்தம், அம்னிகாத்தாவின் குமாரன்.

15 அம்னிகாத்தா, ஆரோனின் குமாரன்.

16 ஆரோன், இயர்தமின் குமாரனாகிய கேத்தின் சந்ததி.

17 இயர்தம், லிப்பின் குமாரன்.

18 லிப், கீஸின் குமாரன்.

19 கீஸ், கோரோமின் குமாரன்.

20 கோரோம் லேவியின் குமாரன்.

21 லேவி, கிம்மின் குமாரன்.

22 கிம், மோரியாந்தனின் குமாரன்.

23 மோரியாந்தன், ரிப்லாகீஸின் சந்ததியான்.

24 ரிப்லாகீஸ், சேஸின் குமாரன்.

25 சேஸ், கேத்தின் குமாரன்.

26 கேத், கோமின் குமாரன்.

27 கோம், கொரியாந்தமின் குமாரன்.

28 கொரியாந்தம், எமரின் குமாரன்.

29 எமர், ஓமரின் குமாரன்.

30 ஓமர், சியுலின் குமாரன்.

31 சியுல், கிப்பின் குமாரன்.

32 கிப், யாரேதின் குமாரனாகிய ஒரீகாவின் குமாரன்.

33 கர்த்தர் ஜனங்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்கள் பூமியின் பரப்பின் மீதெங்கும் சிதறடிக்கப்படவேண்டுமென தம்முடைய கோபத்திலே ஆணையிட்ட சமயத்தில், பெரிய கோபுரத்திலிருந்து இந்த யாரேது தன் சகோதரனுடனும், அவர்களுடைய குடும்பங்களுடனும், வேறு சிலருடனும், அவர்களுடைய குடும்பங்களுடனும் வந்தான். கர்த்தருடைய வார்த்தையின்படியே ஜனங்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.

34 யாரேதின் சகோதரன் பெரிய பலசாலியான மனுஷனும். கர்த்தரிடத்தில் மிகவும் சிலாக்கியம் பெற்ற மனுஷனாயும் இருந்தபடியால், அவன் சகோதரனாகிய யாரேது அவனை நோக்கி: நம்முடைய வார்த்தைகளை நாம் புரியாதபடிக்கு கர்த்தர் நம்மைத் தாறுமாறாக்காதவாறு, அவரிடத்தில் கூக்குரலிடு என்றான்.

35 அந்தப்படியே, யாரேதின் சகோதரன் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டான். கர்த்தர் யாரேதின் மேல் மனதுருக்கமாயிருந்தார்; ஆதலால் அவர் யாரேதின் பாஷையைத் தாறுமாறாக்கவில்லை; யாரேதும் அவன் சகோதரனும் தாறுமாறாக்கப்படவில்லை.

36 யாரேது தன்னுடைய சகோதரனை நோக்கி: நம்முடைய நண்பர்களிடத்திலிருந்து அவர் தம்முடைய கோபத்தைத் திருப்பி, அவர் அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்காதபடி கர்த்தரிடத்தில் மறுபடியும் கூக்குரலிடு, என்றான்.

37 அந்தப்படியே, யாரேதின் சகோதரன் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டான். கர்த்தர் அவர்களுடைய நண்பர்கள் மேலும் அவர்களுடைய குடும்பங்கள் மேலும் இரங்கினார், அதினிமித்தம் அவர்கள் தாறுமாறாக்கப்படவில்லை.

38 அந்தப்படியே, யாரேது மறுபடியும் தன் சகோதரனிடத்தில் பேசினதாவது: நீ போய் கர்த்தர் நம்மை தேசத்தைவிட்டு அனுப்பப்போகிறாரா என்று அவரிடத்தில் விசாரி, அவர் நம்மை தேசத்தைவிட்டு அனுப்பினால், நாம் எங்கே போகவேண்டும் என்று அவரிடத்தில் கூக்குரலிடு. பூமியின் மேலுள்ள சகல தேசங்களிலும் சிறந்த தேசத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வார் என்று கர்த்தரேயன்றி யார் அறிவார்? அது அப்படியானால் அதை நம்முடைய சுதந்திரமாக நாம் பெற்றுக்கொள்ளும்படி கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருப்போமாக.

39 அந்தப்படியே, யாரேதின் வாயால் பேசப்பட்டபடியே, யாரேதின் சகோதரன் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டான்.

40 அந்தப்படியே, கர்த்தர் யாரேதின் சகோதரனுக்குச் செவிகொடுத்து, அவன் மேல் மனதுருகி, அவனை நோக்கி:

41 நீ போய் உன் மந்தையில் எல்லா இனத்திலும் ஆணும் பெண்ணுமானவையையும், எல்லா விதமான பூமியின் விதைகளையும், உன் குடும்பங்களையும், உன் சகோதரனாகிய யாரேதையும், அவன் குடும்பத்தையும், உன் சிநேகிதர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும், யாரேதின் சிநேகிதர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும், ஏகமாய்க் கூட்டுவாயாக.

42 இதை நீ செய்த பின்பு, நீ அவர்களுக்கு தலைமையேற்று வடக்கேயுள்ள பள்ளத்தாக்கிற்கு இறங்கிப்போவாயாக. அங்கே நான் உன்னை சந்திப்பேன். பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் சிறந்த தேசத்தினுள் நான் உன்னை வழிநடத்திச் செல்வேன்.

43 அங்கே நான் உன்னையும் உன் சந்ததியையும் ஆசீர்வதித்து உன் சந்ததியையும் உன் சகோதரனுடைய சந்ததியையும் எனக்கென்று எழுப்பி, உன்னோடுகூட வருகிறவர்களையும், ஒரு பெரிய தேசமாக்குவேன். உன் சந்ததியாரைக்கொண்டு, நான் எனக்கென்று எழும்பப்பண்ணுகிற தேசத்திலும் மேலானவர்கள் ஒருவரும் பூமியின் பரப்பின் மேல் எங்கும் இருக்கமாட்டார்கள். நீ என்னிடத்தில் இதுவரைக்கும் நீண்ட நேரம் கூக்குரலிட்டதினிமித்தம், இதை நான் உனக்குச் செய்வேன் என்றார்.