வேதங்கள்
ஏத்தேர் 3


அதிகாரம் 3

கர்த்தர் பதினாறு கற்களைத் தொடும்போது யாரேதின் சகோதரன் அவருடைய விரலைக் காண்கிறான் – கிறிஸ்து தம்முடைய ஆவி சரீரத்தை யாரேதின் சகோதரனுக்குக் காண்பித்தல் – பூரண ஞானத்தைப் பெற்றிருப்போர் திரைச்சீலையினுள் வைத்திருக்கப்படமுடியாது – யாரேதியர்கள் பதிவேட்டினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்படியாக மொழிபெயர்ப்புக் கருவிகள் கொடுக்கப்பட்டிருத்தல்.

1 அந்தப்படியே, யாரேதின் சகோதரன் (இப்பொழுது ஆயத்தப்பட்டிருந்த மரக்கலங்களின் எண்ணிக்கை எட்டாக இருந்தது) மிகுந்த உயரத்தினிமித்தம் சேலீம் மலை என்று அழைக்கப்பட்ட மலைக்குப்போய், பாறையிலிருந்து பதினாறு சிறிய கற்களை உருக்கிக் கொண்டுவந்தான், அவைகள் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடியைப்போல வெண்மையாயும், தெளிவாயுமிருந்தன; அவன் அவைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மலையின் சிகரத்துக்குப்போய் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டுச் சொன்னதாவது:

2 கர்த்தாவே நாங்கள் பிரளயத்தினால் சூழப்படவேண்டும் என்று நீர் சொன்னீர். இப்போதும் இதோ, கர்த்தாவே உமக்கு முன்பாக உம்முடைய தாசனின் பலவீனத்தினிமித்தம் கோபமாயிராதேயும்; நீர் பரிசுத்தரென்றும், பரலோகங்களிலே வாசம்பண்ணுகிறீரென்றும், உமக்கு முன்பாக நாங்கள் அபாத்திரரென்றும் அறிவோம், வீழ்ச்சியினிமித்தம் எங்கள் சுபாவங்கள் தொடர்ந்து பொல்லாதவைகளாயின; ஆயினும், கர்த்தாவே, நாங்கள் உம்மை அழைக்கவும், எங்களுடைய வாஞ்சைகளுக்குத்தக்கதாக உம்மிடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளும்படியாக, நீர் எங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்திருக்கிறீர்.

3 கர்த்தாவே இதோ, எங்களுடைய அக்கிரமத்தினிமித்தம் நீர் எங்களை அடித்து, எங்களைத் துரத்தினீர். ஏனெனில் இந்த அநேக வருஷங்கள் நாங்கள் வனாந்தரத்தில் இருந்தோம். ஆயினும் நீர் எங்கள் மேல் இரக்கமாய் இருந்தீர். கர்த்தாவே என்மேல் மனதுருகி, உம்முடைய ஜனமாகிய இவர்களிடமிருந்து உம்முடைய கோபத்தைத் திருப்பும். இந்த மகா ஆழத்தினை, அவர்கள் காரிருளிலே கடக்க அனுமதியாதேயும், ஆனால் பாறையிலிருந்து நான் உருக்கின இந்த கற்களைப் பாரும்.

4 கர்த்தாவே, நீர் சர்வ வல்லமையை உடையவரென்றும் மனுஷனுடைய நலனுக்காக உம்மால் எதையும் செய்யக்கூடுமென்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆதலால் கர்த்தாவே உம்முடைய விரலினாலே இக்கற்களைத்தொட்டு, அவைகள் காரிருளிலே பிரகாசிக்கும்படிக்கும் நாங்கள் சமுத்திரத்தை கடக்கும்போது நாங்கள் ஆயத்தம்பண்ணின மரக்கலங்களில் வெளிச்சம் இருக்கவும் அவைகளை ஆயத்தப்படுத்தும்.

5 கர்த்தாவே, இதோ, உம்மாலே இதைச் செய்யக்கூடும். மனுஷனுடைய அறிவுக்கு சிறியதாய்த் தெரிகிற பெரும் வல்லமையை உம்மாலே காண்பிக்கக்கூடும் என்று நாங்கள் அறிவோம்.

6 அந்தப்படியே, யாரேதின் சகோதரன் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, இதோ, கர்த்தர் தமது கரத்தை நீட்டி கற்களை ஒவ்வொன்றாய் தம்முடைய விரலால் தொட்டார். யாரேதின் சகோதரனின் கண்களிலிருந்து திரை எடுக்கப்பட்டது. அவன் கர்த்தருடைய விரலைக் கண்டான்; மாம்சத்தினாலும், இரத்தத்தினாலுமான மனுஷனுடைய விரலைப்போல அது இருந்தது; யாரேதின் சகோதரன் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டு, கர்த்தருக்கு முன்பாக கீழே விழுந்தான்.

7 யாரேதின் சகோதரன் பூமியிலே விழுந்ததைக் கர்த்தர் கண்டு அவனை நோக்கி: எழுந்திரு, ஏன் விழுந்தாய் என்றார்.

8 அவன் கர்த்தரை நோக்கி: நான் கர்த்தருடைய விரலைக் கண்டேன். அவர் என்னை அடிப்பாரோ என்று பயந்தேன்; கர்த்தருக்கு மாம்சமும் இரத்தமும் உண்டென்று நான் அறியாதிருந்தேன் என்றான்.

9 கர்த்தர் அவனை நோக்கி: உன்னுடைய விசுவாசத்தினிமித்தம் நான் மாம்சத்தையும், இரத்தத்தையும் என்மேல் எடுத்துக்கொள்வேன் என்று நீ கண்டிருக்கிறாய்: உன்னைப்போல இவ்வளவு மிகுந்த விசுவாசத்தோடு மனுஷன் என்றுமே எனக்கு முன்பு வந்ததில்லை: ஏனெனில் அப்படியில்லையெனில் நீ என் விரலைக் கண்டிருக்கமுடியாது. இதற்கும் அதிகமாய் நீ கண்டாயோ என்றார்.

10 அவன் பிரதியுத்தரமாக: இல்லை, கர்த்தாவே, உம்மை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.

11 கர்த்தர் அவனை நோக்கி: நான் பேசவிருக்கிற வார்த்தைகளை நீ விசுவாசிப்பாயா என்றார்.

12 அவன் பிரதியுத்தரமாக: ஆம், கர்த்தாவே நீர் சத்தியத்தின் தேவனாய் இருப்பதினாலே பொய்யுரைக்க முடியாது. நீர் உண்மையையே பேசுகிறீர் என்று நான் அறிவேன் என்றான்.

13 அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, இதோ, கர்த்தர் தம்மையே அவனுக்குக் காண்பித்து, நீ இவைகளை அறிந்திருக்கிறதினிமித்தம் நீ வீழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறாய்; ஆதலால் நீ மறுபடியும் என் சமுகத்தினுள் கொண்டுவரப்பட்டிருக்கிறாய்; எனவே நான் என்னையே உனக்குக் காண்பிக்கிறேன்.

14 இதோ, என் ஜனத்தை மீட்பதற்காக உலகத்தினுடைய அஸ்திவாரத்திலிருந்தே ஆயத்தம் பண்ணப்பட்டவர் நானே. இதோ, நானே இயேசு கிறிஸ்து. நானே பிதாவும் குமாரனுமானவர். என்னிலே சகல மனுக்குலமும் ஜீவனைப் பெற்றிருக்கும். என் நாமத்தில் விசுவாசிக்கிறவர்கள் அதை நித்தியமாய்ப் பெற்றிருப்பார்கள். அவர்கள் என் குமாரர்களும் குமாரத்திகளுமாவார்கள்.

15 நீ என்னில் விசுவாசித்ததுபோல மனுஷன் என்றுமே விசுவாசிக்காததினிமித்தம் நான் சிருஷ்டித்த மனுஷனுக்கு என்னை நான் என்றுமே காண்பித்ததில்லை. நீ என் சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாயா? ஆம், சகல மனுஷரும் ஆதியிலே என் சொந்த சாயலிலேயே சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

16 இதோ, நீ காண்கிற இந்த சரீரம் என் ஆவியின் சரீரமாயிருக்கிறது. மனுஷனை என் ஆவியின் சரீரத்தைப் போலவே நான் சிருஷ்டித்திருக்கிறேன்; நான் உனக்கு ஆவியிலே தென்படுவதைப்போலவே என் ஜனத்துக்கு மாம்சத்திலே தென்படுவேன்.

17 இப்பொழுதும் எழுதப்பட்ட இவைகளின் முழு விவரத்தை என்னால் எழுதமுடியாதென்று மரோனியாகிய நான் சொன்னேன். ஆதலால் இயேசு நேபியருக்கு தம்மையே காண்பித்த அதே சரீரத்தின் விதத்திலும், சாயலிலேயும் இம்மனுஷனுக்குக் காண்பித்தார், என்று சொல்வது எனக்கு போதுமானதாயிருக்கிறது.

18 அவர் நேபியர்களுக்குப் பணிவிடை செய்ததுபோல அவனுக்குப் பணிவிடை செய்தார்; கர்த்தர் அவனுக்கு அநேக பெரும் கிரியைகளைக் காண்பித்ததினிமித்தம் தாமே தேவன் என்று இந்த மனுஷன் அறியத்தக்கதாக இவையெல்லாம் செய்தார்.

19 இந்த மனுஷனின் ஞானத்தினிமித்தம் அவன் திரைச்சீலைக்குள்ளிருந்தே பார்ப்பதிலிருந்து தடுக்க முடியவில்லை; அவன் இயேசுவின் விரலைக் கண்டான். அதை அவன் கண்டபோது, அவன் அச்சத்தால் விழுந்தான்; ஏனெனில் அது கர்த்தருடைய விரலென்று அவன் அறிந்திருந்தான். யாதொன்றையும் சந்தேகிக்காமல் அறிந்திருந்தபடியால், அவனுக்கு இதற்கு மேலும் விசுவாசம் தேவை இருக்கவில்லை.

20 ஆதலால் தேவனைக் குறித்த பூரண ஞானத்தை அவன் பெற்றிருந்ததால், அவன் திரைக்குள்ளிருந்து தடுக்கப்பட முடிவில்லை; ஆதலால் அவன் இயேசுவைக் கண்டான்; அவர் அவனுக்குப் பணிவிடை செய்தார்.

21 அந்தப்படியே, கர்த்தர் யாரேதின் சகோதரனை நோக்கி: இதோ, நான் என் நாமத்தை மாம்சத்திலே மகிமைப்படுத்தும் சமயம் வருமளவும், நீ கண்டதும் கேட்டதுமான இவைகள் உலகத்தினுள் போகவிடாதே; ஆகையால் நீ கண்டும் கேட்டதுமான காரியங்களை பொக்கிஷப்படுத்து. அதை ஒருவனுக்கும் காண்பிக்கவேண்டாம்.

22 இதோ, நீ என்னிடத்தில் வரும்போது, அவைகளை நீ எழுதி ஒருவனும் அதை மொழிபெயர்க்க முடியாதபடி அதை முத்திரையிடுவாயாக; ஏனெனில் வாசிக்கப்பட முடியாத பாஷையிலே அவைகளை நீ எழுதுவாயாக.

23 இதோ, இந்த இரண்டு கற்களை உனக்குக் கொடுக்கிறேன். நீ எழுதுகிறவைகளோடு சேர்த்து இவற்றையும் முத்திரையிடுவாயாக.

24 இதோ, நீ எழுதுகிற பாஷையை நான் தாறுமாறாக்கினேன்; ஆகையால் இக்கற்கள் நீ எழுதுகிறவைகளை என்னுடைய சொந்த ஏற்ற வேளையில், மனுஷ கண்களுக்கு தெளிவுபடுத்த வைப்பேன்.

25 கர்த்தர் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, உலகத்திலிருந்த சகல குடிகளையும் இருக்கப்போகிற சகலமானோரையும் அவர் யாரேதின் சகோதரனுக்குக் காண்பித்தார்; அவர் பூமியின் கடையாந்தரம் வரையிலும் அவனுடைய பார்வையிலிருந்து நிறுத்தி வைக்கவில்லை.

26 அவன் தம்மில் விசுவாசித்தால், தாம் அவனுக்கு சகலத்தையும் காண்பிக்கக்கூடும் என்று, அவர் அவனுக்கு முற்காலங்களில் சொல்லியிருந்தார், அது அவனுக்குக் காண்பிக்கப்படவேண்டும். கர்த்தர் தனக்குச் சகலத்தையும் காண்பிக்க முடியும் என்று அவன் அறிந்திருந்ததாலே, கர்த்தர் அவனுக்கு எதையும் நிறுத்தி வைக்கமுடியவில்லை.

27 கர்த்தர் அவனை நோக்கி: இவைகளை எழுதி முத்திரையிடு; நான் அவைகளை என்னுடைய சொந்த ஏற்ற வேளையில் மனுபுத்திரருக்குக் காண்பிப்பேன், என்றார்.

28 அந்தப்படியே, அவன் தான் பெற்ற இரண்டு கற்களையும் முத்திரையிட்டு, கர்த்தர் அவைகளை மனுபுத்திரருக்குக் காண்பிக்கும்வரைக்கும், அவைகளை அவன் காண்பிக்கக்கூடாதென்று, அவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.