வேதங்கள்
ஏத்தேர் 9


அதிகாரம் 9

எதிர்ப்பாலும், சதியாலோசனையாலும், கொலையாலும், ராஜ்யம் ஒருவனிடமிருந்து மற்றொருவனுக்குப் போகுதல் – எமர் நீதியின் குமாரனைக் கண்டான் – அநேக தீர்க்கதரிசிகள் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிடுதல் – பஞ்சமும், விஷ சர்ப்பங்களும் ஜனத்தை வதைத்தல்.

1 இப்பொழுதும் மரோனியாகிய நான் என் பதிவேட்டினைத் தொடர்கிறேன். ஆதலால் இதோ, அந்தப்படியே, ஆகீஸ் மற்றும் அவனது நண்பர்களுடைய இரகசிய சங்கங்களினிமித்தம், இதோ, அவர்கள் ஓமரின் ராஜ்யத்தை வீழ்த்தினார்கள்.

2 ஆயினும் அவனுடைய அழிவை நாடாதிருந்த ஓமரிடத்திலும், அவனது குமாரர்களிடத்திலும் அவனுடைய குமாரத்திகளிடத்திலும் கர்த்தர் இரக்கமுள்ளவராயிருந்தார்.

3 கர்த்தர் ஓமருக்கு தரிசனத்திலே அவன் தேசத்தைவிட்டு புறப்படவேண்டுமென எச்சரித்தார். ஆதலால் ஓமர் தன் குடும்பத்துடன் தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் அநேக நாட்கள் பயணம்பண்ணி, ஷிம் என்ற மலைக்கு அருகே கடந்துபோய், நேபியர்கள் அழிக்கப்பட்டுப்போன இடத்திற்கு வந்து, அங்கிருந்து கிழக்கே போய் யாரேதையும் அவன் குடும்பத்தையும் தவிர அவன் குமாரர்களும், குமாரத்திகளும் அவன் வீட்டார் எல்லோரும் கடற்கரையோரமாய் ஆப்லோம் என்ற இடத்துக்கு வந்து அங்கே பாளையமிறங்கினார்கள்.

4 அந்தப்படியே, துன்மார்க்கத்தின் கரத்தால் யாரேது ஜனங்களின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்; அவன் தன் குமாரத்தியை ஆகீஸூக்கு மனைவியாகக் கொடுத்தான்.

5 அந்தப்படியே, ஆகீஸ் தன் மாமனின் ஜீவனை வாங்க வகை தேடினான்; அவன் பூர்வத்தாரின் உறுதிமொழியை எடுத்துக் கொண்டோரிடம் விண்ணப்பித்தான். அவர்களோ அவனுடைய மாமன் தன்னுடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து, ஜனங்களை விசாரித்துக்கொண்டிருந்தபோது அவனது தலையை வாங்கினார்கள்.

6 இந்த துன்மார்க்கமும், இரகசிய சங்கமும் அதிகமாய் பரவினதினாலே, அது எல்லா ஜனங்களுடைய இருதயத்தையும் கெடுத்தது; ஆதலால் தன் சிங்காசனத்திலேயே யாரேது கொலை செய்யப்பட்டான். ஆகீஸ் அவனுக்குப் பதிலாக ஆளுகை பண்ணினான்.

7 அந்தப்படியே, ஆகீஸ் தன் குமாரன் மேல் பொறாமைகொண்டு, அவனை சிறையிலடைத்து, அவன் மரணம் அடையும் வரைக்கும் அவனுக்குக் கொஞ்சம் உணவைக் கொடுத்தான் அல்லது எந்த உணவையும் தரவில்லை.

8 இப்பொழுதும் மரித்தவனின் சகோதரன் (அவன் பெயர் நிம்ரா என்பதாகும்) தன் தகப்பன் தன்னுடைய சகோதரனுக்கு செய்ததினிமித்தம் தன் தகப்பன் மேல் கோபமாயிருந்தான்.

9 அந்தப்படியே, நிம்ரா கொஞ்சம் மனுஷரை ஏகமாய்க் கூட்டி தேசத்தைவிட்டு வெளியேறி வந்து, ஓமருடன் வாசம்பண்ணினான்.

10 அந்தப்படியே, ஆகீஸ் மற்ற குமாரரையும் பெற்றான், அவன் விரும்பினபடியே எல்லா விதமான அக்கிரமத்தையும் செய்ய அவர்கள் அவனிடத்தில் உறுதிகொடுத்திருந்தாலும், அவர்கள் ஜனங்களின் இருதயங்களை ஜெயம்கொண்டார்கள்.

11 ஆகீஸ் அதிகாரத்தை வாஞ்சித்திருந்ததைப் போல, ஆகீஸின் ஜனங்கள் ஆதாயத்தை விரும்பியிருந்தார்கள்; ஆதலால் ஆகீஸின் குமாரர்கள் அவர்களுக்குப் பணத்தைத் தந்து, அதன்மூலம் ஜனத்தின் பெரும் பகுதியினரை தங்களுக்குப் பின்னே இழுத்துச் சென்றார்கள்.

12 ஆகீஸின் குமாரர்களுக்கும், ஆகீஸூக்கும் இடையே ஒரு யுத்தம் துவங்கியது. முப்பது ஆத்துமாக்களையும், ஓமரின் வீட்டாரோடு ஓடினவர்களையும் தவிர, ராஜ்யத்தின் ஜனங்களில் கிட்டத்தட்ட அனைவரும் அழிவிற்குள்ளாகும்படியாக அது அநேக வருஷமளவும் நீடித்தது.

13 ஆதலால் ஓமர் மறுபடியும் அவனுடைய சுதந்திர பூமியிலே திரும்பக் கொண்டுவரப்பட்டான்.

14 அந்தப்படியே, ஓமர் வயதானவனானான். ஆயினும் அவன் தன் முதிர்வயதிலே எமரைப் பெற்றெடுத்தான். அவன் எமரைத் தன் ஸ்தானத்திலே ராஜரீகம் பண்ணும்படியாக ராஜாவாக அபிஷேகம் பண்ணினான்.

15 அவன் எமரை ராஜாவாக அபிஷேகம் பண்ணின பின்பு, இரண்டு வருஷ காலமளவும் அவன் தேசத்திலே சமாதானத்தைக் கண்டான், துக்கத்தால் நிறைந்த வெகு அதிகமான நாட்களைக் கண்டு அவன் மரித்துப் போனான். அந்தப்படியே, எமர் அவன் ஸ்தானத்திலே ராஜரீகம்பண்ணி, தன் தகப்பனுடைய பாதச்சுவட்டைப் பின்பற்றினான்.

16 கர்த்தர் மறுபடியும் பூமியிலிருந்து சாபத்தை எடுத்துப்போடத் தொடங்கினார். எமரின் ராஜரீகத்தின் கீழ் எமரின் வீட்டார் செழிக்கத் துவங்கினார்கள். அறுபத்திரண்டு வருஷகால அளவில் அவர்கள் வெகு பலசாலிகளாகவும் மிகவும் ஐஸ்வரியவான்களாகவும் ஆனார்கள்.

17 அவர்கள் சகலவிதமான கனிகளையும், தானியங்களையும், பட்டுக்களையும், மெல்லிய வஸ்திரங்களையும், பொன்னையும், வெள்ளியையும், விலையேறப்பெற்ற பொருட்களையும்,

18 சகல விதமான மந்தைகளையும், எருதுகளையும், பசுக்களையும், ஆடுகளையும், பன்றிகளையும், வெள்ளாடுகளையும், மனுஷனுக்கு உணவாகப் பயன்படும் மற்ற அநேக விதமான மிருகங்களையும் வைத்திருந்தார்கள்.

19 அவர்கள் குதிரைகளையும் கழுதைகளையும் வைத்திருந்தார்கள். அங்கே யானைகளும், சூரிலம்ஸங்களும், குமாம்ஸ்களும் இருந்தன. அவைகள் யாவும் மனுஷருக்கு பயனுள்ளவைகளாயிருந்தன. மிகவும் குறிப்பாக யானைகளும், சூரிலம்ஸூகளும், குமாம்ஸ்களும் உபயோகமாயிருந்தன.

20 இவ்விதமாக மற்ற எல்லா தேசங்களையும்விட சிறந்த தேசமான இந்த தேசத்தின் மேல் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை ஊற்றினார்; தேசத்தை சுதந்தரிக்கும் எவரும் அதைக் கர்த்தருக்கேதுவாய் சுதந்தரிக்கவேண்டும், இல்லையேல் அவர்கள் அக்கிரமத்தில் பழுத்திருக்கும்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள், என்று அவர் கட்டளையிட்டார்; அப்படிப்பட்டவர்கள் மேல் நான் என்னுடைய கோபாக்கினையின் முழுமையை ஊற்றுவேன், என்று கர்த்தர் உரைக்கிறார்.

21 எமர் தன் வாழ்நாட்கள் முழுவதிலும் நீதியாய் நியாயம் விசாரித்தான். அவன் அநேக குமாரர்களையும், குமாரத்திகளையும் பெற்றான். அவன் கொரியாந்தமைப் பெற்றான். தன் ஸ்தானத்திலே ஆளுகைபண்ணும்படியாக அவன் கொரியாந்தமை அபிஷேகம் பண்ணினான்.

22 அவன் கொரியாந்தமைத் தன்னுடைய ஸ்தானத்திலே ஆளுகைபண்ணும்படியாக அபிஷேகம் பண்ணின பின்னர் அவன் நான்கு வருஷங்கள் வாழ்ந்தான். அவன் தேசத்தில் சமாதானத்தைக் கண்டான்; ஆம், அவன் நீதியின் குமாரனைக் கண்டு தன் நாளில் களிகூர்ந்து மகிமைப்பட்டான்; அவன் சமாதானமாய் மரித்தான்.

23 அந்தப்படியே, கொரியாந்தம் தன் பிதாவின் முறைகளின்படி நடந்து, அநேக பலமான பட்டணங்களைக் கட்டி, தன் நாட்கள் முழுவதும் தன் ஜனங்களுக்கு நன்மையானதைக் கொடுத்தான். அந்தப்படியே, அவன் மிகவும் வயதாகும்வரைக்கும் பிள்ளைகள் ஏதுமில்லாதிருந்தான்.

24 அந்தப்படியே, அவன் மனைவி நூற்றிரண்டு வயதாயிருந்து மரித்தாள். அந்தப்படியே, கொரியாந்தம் தன் முதிர்வயதிலே ஒரு இளம் வேலைக்காரியை மனைவியாகக்கொண்டு, குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான்; ஆதலால் அவன் நூற்றி நாற்பத்தி இரண்டு வயதாகும்வரைக்கும் வாழ்ந்தான்.

25 அந்தப்படியே, அவன் கோமைப் பெற்றான். கோம் அவன் ஸ்தானத்தில் ஆளுகை பண்ணினான். அவன் நாற்பத்தி ஒன்பது வருஷம் ஆளுகை பண்ணினான். அவன் கேத்தை பெற்றான்; மற்ற குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான்.

26 ஜனங்கள் மறுபடியும் தேசத்தின் மேலெங்கும் பரவினார்கள். மறுபடியும் அங்கே தேசத்தின் மேல் மிகப் பெரும் துன்மார்க்கம் ஏற்படத் துவங்கியது. கேத் தன் தகப்பனை அழிக்க பழங்காலத்தினரின் திட்டங்களை மறுபடியும் தழுவத் துவங்கினான்.

27 அந்தப்படியே, அவன் தன் சொந்த பட்டயத்தினால் தன் தகப்பனை வெட்டி, அவனை சிங்காசனத்திலிருந்து கீழிறக்கினான். அவன் அவனுடைய ஸ்தானத்திலே ஆளுகை பண்ணினான்.

28 தேசத்திலே மறுபடியும் தீர்க்கதரிசிகள் வந்து, அவர்களுக்கு மனந்திரும்புதலைப் பிரசங்கித்தார்கள், அவர்கள் கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்தவேண்டுமென்றும், இல்லாவிடில் தேசத்தின் மேல் சாபம் வருமென்றும், ஆம், அவர்கள் மனந்திரும்பாவிடில் அங்கே ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டு, அதினாலே அவர்கள் அழிக்கப்படுவார்களென்றும் பிரசங்கித்தார்கள்.

29 ஜனங்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசியாமல் அவர்களைப் புறம்பே தள்ளினார்கள்; அவர்களில் சிலரை அவர்கள் துரவுகளில் தள்ளி அவர்களை அழியவிட்டார்கள். அந்தப்படியே, ராஜாவாகிய கேத்தின் கட்டளையின்படியே அவர்கள் இவைகள் யாவையும் செய்தார்கள்.

30 அந்தப்படியே, பூமியின் பரப்பின் மீது பெரும் பஞ்சம் துவங்கியது. பூமியின்மேல் மழை இல்லாததால், பஞ்சத்தினிமித்தம் குடிகள் மிகவும் சீக்கிரமாய் அழிய ஆரம்பித்தார்கள்.

31 தேசத்தின்மேல் விஷ சர்ப்பங்களும் வந்து, அநேக ஜனங்களுக்கு விஷமேற்றின. அந்தப்படியே, அவர்களுடைய மந்தைகள் விஷ சர்ப்பங்களுக்கு முன்பாக, சாரகெம்லா என்று நேபியர்களால் அழைக்கப்பட்ட தென் தேசத்திற்கு நேராய் பறந்தோட ஆரம்பித்தன.

32 அந்தப்படியே, அவைகளில் அநேகம் வழியிலேயே மாண்டன. ஆயினும் சில தென் தேசத்திற்குப் பறந்தோடின.

33 அந்தப்படியே, சர்ப்பங்கள் இனி ஒருபோதும் அவைகளைப் பின்தொடராதிருக்கவும், ஜனங்கள் கடந்துபோகாதபடி வழியை அவைகள் அடைக்கவும், கடக்க முயற்சிக்கும் எவரும் விஷ சர்ப்பங்களால் வீழ்ந்து போகும்படியாகவும், கர்த்தர் செய்தார்.

34 அந்தப்படியே, ஜனங்கள் மிருகங்களின் மார்க்கத்தைப் பின்பற்றி, அவைகள் அனைத்தையும் பட்சிக்கும்வரை, வழியில் விழுந்தவைகளின் பிரேதங்களைப் பட்சித்தார்கள். இப்பொழுது தாங்கள் அழிந்தாக வேண்டுமென்று ஜனங்கள் கண்டபோது, அவர்கள் தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் கூக்குரலிடத் துவங்கினார்கள்.

35 அந்தப்படியே, அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் தங்களைப் போதுமான அளவு தாழ்த்தின பின்பு, அவர் பூமியின் பரப்பின்மீது மழையை அனுப்பினார்; ஜனங்கள் மறுபடியும் செழிக்கத் துவங்கி, வடதேசங்களிலும், சுற்றுப் புறத்திலுள்ள சகல தேசங்களிலும் கனியிருக்கத் துவங்கியது. அவர்களைப் பஞ்சத்திலிருந்து பாதுகாப்பதில் கர்த்தர் தம்முடைய வல்லமையைக் காண்பித்தார்.