வேதங்கள்
ஏத்தேர் 4


அதிகாரம் 4

யாரேதின் எழுத்துக்களை முத்திரையிடும்படி மரோனி கட்டளையிடப்படுதல் – மனுஷர் யாரேதின் சகோதரனைப்போல விசுவாசத்தைப் பெற்றிடும்வரைக்கும் அவைகள் வெளிப்படுத்தப்படாது – தம்முடைய வார்த்தைகளையும், தம்முடைய சீஷருடைய வார்த்தைகளையும் விசுவாசிக்கும்படி மனுஷருக்குக் கிறிஸ்து கட்டளையிடுதல் – மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசித்து இரட்சிக்கப்படும்படி மனுஷர் கட்டளையிடப்படுதல்.

1 மலையிலிருந்து இறங்கி, கர்த்தருடைய சமுகத்தை விட்டுப்போய், தான் கண்ட காரியங்களை எழுதும்படியாக யாரேதின் சகோதரனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டார்; அவர் சிலுவையிலே உயர்த்தப்படுமளவும் மனுபுத்திரருக்குள்ளே அவை வர தடை செய்யப்பட்டன; கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு தம்மைக் காண்பிக்கும்வரைக்கும் அவைகள் உலகத்தினுள் வரக்கூடாதென்ற முகாந்தரத்தினிமித்தம் மோசியா ராஜா அவைகளை வைத்திருந்தான்.

2 கிறிஸ்து தம்மை தமது ஜனங்களுக்கு உண்மையாகவே காண்பித்த பின்னர், அவைகள் வெளியரங்கப்படவேண்டுமென்று கட்டளையிட்டார்.

3 இப்பொழுதும் அதற்குப் பின்னர், அவர்கள் யாவரும் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்தார்கள்; லாமானியரைத் தவிர அங்கே ஒருவருமில்லை. அவர்கள் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை மறுதலித்திருந்தார்கள்; ஆதலால் அவைகளை மறுபடியும் பூமியிலே மறைத்து வைக்கும்படி நான் கட்டளையிடப்பட்டேன்.

4 இதோ, யாரேதின் சகோதரன் கண்ட அதே காரியங்களைத்தான் நான் இந்த தகடுகளில் எழுதியிருக்கிறேன்; யாரேதின் சகோதரனுக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளைக்காட்டிலும் பெரிதானவைகள் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டதில்லை.

5 ஆகையால் அவைகளை எழுதும்படியாக கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்; நான் அவைகளை எழுதியிருக்கிறேன். நான் அவைகளை முத்திரையிடவேண்டும் என்றும் அவர் எனக்குக் கட்டளையிட்டார்; நான் அவைகளினுடைய மொழிபெயர்ப்பையும் முத்திரையிடவேண்டுமென அவர் கட்டளையிட்டார்; ஆதலால் நான் கர்த்தருடைய கட்டளையின்படியே மொழிபெயர்ப்புக் கருவிகளையும் முத்திரையிட்டேன்.

6 கர்த்தர் என்னை நோக்கி: புறஜாதியார் தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பி, கர்த்தருக்கு முன்பாக சுத்தமாகும் நாள் வரைக்கும் அவைகள் அவர்களுக்குள்ளே போவதில்லை, என்றார்.

7 கர்த்தர் உரைப்பதாவது, அந்நாளிலே அவர்கள் என்னிலே சுத்திகரிக்கப்படும்பொருட்டு, யாரேதின் சகோதரனைப்போலவே என்னில் விசுவாசத்தைப் பிரயோகிப்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு யாரேதின் சகோதரன் கண்ட காரியங்களையும், என்னுடைய சகல வெளிப்படுத்தல்களையும், வானத்திலும் பூமியிலுமுள்ள சகலத்தையும் தெரிவிக்கும் வரைக்குமாய் வெளியரங்கமாக்குவேன் என்று, அவைகளின் பிதாவும், தேவகுமாரனுமாகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

8 கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக பிணக்கு செய்கிறவன் சபிக்கப்பட்டவனாயிருப்பானாக; இக்காரியங்களை மறுதலிக்கிறவன் சபிக்கப்பட்டவனாயிருப்பானாக. ஏனெனில் அவர்களுக்கு நான் எந்தப் பெரும் காரியங்களையும் காண்பிப்பதில்லை என்றும், பேசுகிறவர் நானே என்றும், இயேசு கிறிஸ்து சொல்கிறார்.

9 என்னுடைய கட்டளைக்கு வானங்கள் திறக்கப்பட்டு மூடப்படுகின்றன; என் வார்த்தைக்கு பூமி அதிரும்; என் கட்டளைக்கு அதன் குடிகள் அக்கினியால் கடந்து போவதைப்போல கடந்து போவார்கள்.

10 என் வார்த்தைகளை விசுவாசியாதவன் என் சீஷர்களை விசுவாசிப்பதில்லை; நான் பேசவில்லையென்றால் நிதானித்துப் பாருங்கள்; ஏனெனில் கடைசி நாளிலே நான் தான் பேசுகிறேன் என்று, நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

11 ஆனால் நான் பேசின இவைகளை விசுவாசிக்கிறவன் எவனோ அவனை என் ஆவியின் வெளிப்படுதலினாலே சந்திப்பேன். அவன் அறிந்து சாட்சி பகருவான். ஏனெனில் என் ஆவியினிமித்தம் அவன் இக்காரியங்களை உண்மை என்று அறிந்துகொள்வான்; ஏனெனில் அது மனுஷனை நன்மை செய்யுமாறு வற்புறுத்துகிறது.

12 மனுஷனை நல்லதைச் செய்யத் தூண்டும் எதுவும் என்னுடையது; என்னையல்லாமல் வேறு யாரிடத்திலிருந்தும் நன்மை வருவதில்லை. மனுஷரை எல்லா நன்மைக்கும் வழிநடத்துபவரும் நானே. என் வார்த்தைகளை விசுவாசிக்காதவன், நான் இருக்கிறேன் என்று விசுவாசிக்கமாட்டான், என்னை விசுவாசிக்காதவன் என்னை அனுப்பின பிதாவை விசுவாசிக்கமாட்டான். ஏனெனில் இதோ, நானே பிதாவும், நானே ஒளியும், ஜீவனும், உலகத்தின் சத்தியமுமாயிருக்கிறேன்.

13 புறஜாதியாரே, என்னிடத்தில் வாருங்கள். அவிசுவாசத்தினிமித்தம் மறைக்கப்பட்ட ஞானமாகிய பெரும் காரியங்களை உங்களுக்குக் காண்பிப்பேன்.

14 இஸ்ரவேலின் வீட்டாரே, என்னிடத்தில் வாருங்கள். உலகத்தினுடைய அஸ்திபாரம் முதலாய் உங்களுக்காக எவ்வளவு பெரிதான காரியங்களை, பிதா ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார் என்று உங்களுக்கு வெளியரங்கமாக்கப்படும். அவிசுவாசத்தினிமித்தம் அது உங்களுக்கு வரவில்லை.

15 இதோ, உங்களை உங்களுடைய துன்மார்க்கமான, அஞ்சத்தக்க நிலையிலும், இருதயக் கடினத்தன்மையிலும், மனதின் குருட்டுத்தன்மையிலும் நினைக்கச் செய்கிற, அந்த அவிசுவாசமென்னும் திரையைக் கிழிக்கும்போதுதான், உலக அஸ்திபாரம் முதல் உங்களிடத்திலிருந்து மறைக்கப்பட்ட பெரிதும் மகத்துவமுள்ள காரியங்கள், ஆம் நொறுங்குண்ட இருதயத்தோடும், நருங்குண்ட ஆவியோடும் என் நாமத்தினாலே பிதாவை நீங்கள் தொழுதுகொண்டால், இஸ்ரவேலின் வீட்டாராகிய உங்களுடைய பிதாக்களுடன், பிதாவானவர் செய்துகொண்ட உடன்படிக்கையை அவர் நினைவுகூர்ந்தார், என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

16 அப்பொழுது நான் என் ஊழியனான யோவானால் எழுதப்படும்படிச் செய்த, என் வெளிப்படுத்தல்கள் எல்லா ஜனத்தின் கண்களுக்கும் தெரிவிக்கப்படும். இக்காரியங்களை நீங்கள் காணும்போது அவைகள் உண்மையாகவே வெளியரங்கமாக்கப்படும் சமயம் சமீபமாயிருக்கிறது, என்று அறிவீர்கள் என்பதை நினைவுகூருங்கள்.

17 ஆதலால் இந்தப் பதிவேட்டினை நீங்கள் பெறும்போது, தேசத்தின்மேல் எங்கும் பிதாவினுடைய கிரியை துவங்கியது என்று நீங்கள் அறிவீர்கள்.

18 ஆதலால் உலகத்தின் கடையாந்திரங்கள் எல்லாம் மனந்திரும்பி, என்னிடத்தில் வந்து, என் நாமத்தில் என் சுவிசேஷத்தை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். என் நாமத்தில் விசுவாசிக்கிறவர்களுக்கு அறிகுறிகள் பின் தொடரும்.

19 கடைசி நாளில் என் நாமத்தில் விசுவாசமாய்க் காணப்படுகிறவன் எவனோ அவன் பாக்கியவான். ஏனெனில் அவனுக்காக உலகத்தின் அஸ்திபாரம் முதல் ஆயத்தப்படுத்தப்பட்ட ராஜ்யத்தில் வாசம்பண்ணும்படியாக உயர்த்தப்படுவான். இதோ, அதைச் சொன்னவர் நானே. ஆமென்.