வேதங்கள்
ஏத்தேர் 2


அதிகாரம் 2

யாரேதியர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கான பிரயாணத்திற்காக ஆயத்தப்படுதல் – அது ஒரு சிறந்த தேசம். அதிலே மனுஷர் கிறிஸ்துவை சேவிக்கவேண்டும், இல்லையேல் துடைக்கப்பட்டுப்போவார்கள் – கர்த்தர் யாரேதின் சகோதரனிடத்தில் மூன்று மணி நேரம் பேசுதல் – யாரேதியர்கள் தோணிகளைக் கட்டுதல் – தோணிகளுக்கு ஒளியேற்றுவது எப்படி என்று சொல்லும்படியாக யாரேதின் சகோதரனிடத்தில் கர்த்தர் சொல்லுதல்.

1 அந்தப்படியே, யாரேதும் அவன் சகோதரனும், அவர்களுடைய குடும்பங்களும் யாரேது மற்றும் அவன் சகோதரனின் சிநேகிதர்களும் அவர்களின் குடும்பங்களும், தங்கள் மந்தைகளிலுள்ள எல்லா இனத்திலுமான ஆணும் பெண்ணுமாக ஏகமாய்க்கூட்டி, வடக்கேயுள்ள பள்ளத்தாக்கினுள் போனார்கள் (அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் நிம்ரோத் என்பதாகும். அது அந்த பராக்கிரமசாலியான வேட்டைக்காரனின் பெயரால் அழைக்கப்பட்டது).

2 அவர்கள் கண்ணிகளை வைத்து ஆகாயத்தின் பட்சிகளைப் பிடித்தார்கள்; அவர்கள் ஒரு பாத்திரத்தை ஆயத்தம் பண்ணி, அதிலே தங்களுடன் ஜலத்தின் மீன்களைக் கொண்டுபோனார்கள்.

3 அவர்கள் தங்களுடன் தேனடையையும் கொண்டு சென்றார்கள். அதற்கு தேனீ என்று அர்த்தமாம்; இப்படியாக அவர்கள் தங்களுடனே தேனீக்கள் கூட்டத்தையும் பூமியின் மேலிருந்த எல்லாவற்றையும் எல்லா வகையான விதைகளையும் எடுத்துச் சென்றார்கள்.

4 அந்தப்படியே, அவர்கள் நிம்ரோத்தின் பள்ளத்தாக்கினுள்ளே வந்தபோது, கர்த்தர் கீழே இறங்கி வந்து, யாரேதின் சகோதரனுடனே பேசினார்; அவர் மேகத்திலே இருந்தார். யாரேதின் சகோதரன் அவரைக் காணவில்லை.

5 அந்தப்படியே, வனாந்தரத்தினுள், ஆம், மனுஷனே இருந்திராத பகுதிக்கு அவர்கள் போகவேண்டுமென, கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்டார். அந்தப்படியே, கர்த்தர் அவர்களுக்கு முன்னே போய் மேகத்தில் நின்றவாறே அவர்களுடன் பேசி, அவர்கள் எங்கே பிரயாணம்பண்ண வேண்டுமென அறிவுறுத்தினார்.

6 அந்தப்படியே, அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணி, தோணிகளைக் கட்டி, அதிலே கர்த்தருடைய கரத்தினால் வழிகாட்டப்பட்டபடியே அவர்கள் அநேக தண்ணீர்களைக் கடந்தார்கள்.

7 அவர்களை சமுத்திரத்திற்கு அப்பால் வனாந்தரத்தில் நிற்க கர்த்தர் அனுமதிக்கமாட்டார், ஆனால் தேவனாகிய கர்த்தர் நீதியான ஜனத்திற்கென்று பாதுகாத்திருக்கிற, மற்ற தேசங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததான, வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அவர்கள் வர அனுமதிப்பார்.

8 அச்சமயம் முதற்கொண்டு என்றென்றுமாய் இந்த வாக்குத்தத்தத்தின் தேசத்தை சுதந்தரிக்கிற எவரும் மெய்யான ஒரே தேவனாகிய அவரையே சேவிக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் மேல் அவருடைய முழுக்கோபமும் வருகிறபோது, அவர்கள் துடைக்கப்பட்டுப் போவார்கள் என்று, அவர் யாரேதின் சகோதரனுக்கு தம்முடைய கோபத்திலே ஆணையிட்டார்.

9 இப்பொழுதும் வாக்குத்தத்தத்தின் தேசமாகிய இந்த தேசத்தைக் குறித்து தேவனுடைய கட்டளைகளை நாம் பார்க்கலாம்; அதைச் சுதந்தரிக்கும் எந்த தேசமும் தேவனை சேவிக்கும். இல்லையேல் அவர்கள்மேல் அவருடைய முழுக்கோபமும் வரும்போது அவர்கள் துடைக்கப்பட்டுப் போவார்கள். அவர்கள் அக்கிரமத்திலே பழுக்கும்போது அவருடைய முழுக்கோபமும் அவர்கள்மேல் வரும்.

10 ஏனெனில் இதோ, இந்த தேசம் மற்ற எல்லா தேசங்களைக் காட்டிலும் சிறந்த தேசமாக இருந்தது. ஆதலால் அதை சுதந்தரிக்கிறவர்கள் தேவனை சேவிக்க வேண்டும்; இல்லையேல் துடைக்கப்பட்டுப்போவார்கள். ஏனெனில் அது தேவனுடைய நித்திய கட்டளையாக இருக்கிறது. தேசத்தின் புத்திரர் மத்தியிலே அக்கிரமம் முழுமை அடையும்வரைக்கும், அவர்கள் துடைக்கப்பட்டுப் போவதில்லை.

11 புறஜாதியாரே, நீங்கள் மனந்திரும்பவும் தேசத்தின் குடிகள் இதுவரைக்கும் செய்ததைப்போல, தேவனுடைய முழுமையான உக்கிரத்தை உங்கள்மேல் நீங்கள் கொண்டுவராதபடிக்கு, நீங்கள் மனந்திரும்பி, உங்களின் அக்கிரமங்கள் முழுமையாவது தொடராமலிருக்கவும், தேவ கட்டளைகளை நீங்கள் அறியத்தக்கதாக, இது உங்களிடத்தில் வருகிறது.

12 இதோ, இது சிறந்த தேசமாய் இருக்கிறது. இதை சுதந்தரிக்கிற எந்த ஜாதியும், நாங்கள் எழுதினவைகளாலே வெளியரங்கப்பட்ட இயேசு கிறிஸ்துவாகிய, இந்த தேசத்தின் தேவனை சேவித்தால் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும், சிறைத்தனத்தலிருந்தும், வானத்தின் கீழே மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள்.

13 இப்பொழுதும், நான் என் பதிவேட்டைத் தொடருகிறேன்; ஏனெனில் இதோ, அந்தப்படியே, கர்த்தர் யாரேதையும், அவன் சகோதரரையும், தேசங்களைப் பிரிக்கிற அந்த மகா சமுத்திரம் வரைக்குமாய்க் கொண்டு வந்தார். அவர்கள் சமுத்திரத்தின் அருகாமைக்கு வந்தபோது, அவர்கள் பாளையமிறங்கினார்கள்; அவர்கள் அவ்விடத்தை மோரீயான்கூமர் என்று அழைத்தார்கள். அவர்கள் கூடாரங்களில் வசித்தார்கள், அவர்கள் நான்கு வருஷகாலமளவும் கடற்கரையில் கூடாரங்களில் வசித்தார்கள்.

14 அந்தப்படியே, நான்கு வருஷங்கள் முடிவில் கர்த்தர் மறுபடியும் யாரேதின் சகோதரனிடத்தில் வந்து மேகத்தில் நின்று, அவனுடன் பேசினார். மூன்று மணிநேரம் அளவும், கர்த்தர் யாரேதின் சகோதரனுடன் பேசி, கர்த்தருடைய நாமத்தில் விண்ணப்பம் பண்ண அவன் நினைவுகூராததின் நிமித்தம் அவனை சிட்சித்தார்.

15 யாரேதின் சகோதரன் தான் செய்த பொல்லாப்பிலிருந்து மனந்திரும்பி, தன்னோடு இருந்த தன் சகோதரருக்காக கர்த்தருடைய நாமத்தில் விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் அவனை நோக்கி, நான் உன்னையும் தங்களுடைய பாவங்களிலிருந்து உன் சகோதரரையும் மன்னிப்பேன்; ஆனால் நீ இனி ஒருபோதும் பாவம் செய்யாதே, ஏனெனில் என் ஆவி மனுஷனோடு எப்பொழுதும் கிரியை செய்வதில்லை என்பதை நினைவுகூர்வாயாக. ஆகையால் நீங்கள் பாவத்தில் முழுமையாகப் பழுப்பீர்களெனில், நீங்கள் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போவீர்கள்; நான் உங்களுடைய சுதந்தரத்திற்கென உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைப்பற்றிய என் நினைவுகள் இவைகளே; ஏனெனில் அது மற்ற தேசங்களெல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த தேசமாக இருக்கிறது, என்றார்.

16 கர்த்தர் சொன்னதாவது: நீங்கள் இதுவரைக்கும் கட்டின தோணிகளின் விதத்தின்படியே வேலைசெய்து கட்டுங்கள். அந்தப்படியே, யாரேதின் சகோதரனும் அவனுடைய சகோதரரும் கர்த்தருடைய போதனைகளுக்குத் தக்கதாக அவர்கள் கட்டியிருந்தவைகளின் பிரகாரம் வேலை செய்து, தோணிகளைக் கட்டினார்கள். அவைகள் சிறியதாயும், தண்ணீர் மேலிருக்கிற பட்சியைப் போல அவைகள் லகுவாயும் இருந்தன.

17 அவைகள் ஒரு கிண்ணம் எப்படி தண்ணீரைக் கொண்டிருக்கிறதோ அதைப்போல அவைகள் மிகவும் இறுக்கமான முறையில் கட்டப்பட்டன; அதனுடைய அடிப்பாகம் ஒரு கிண்ணத்தைப்போல இறுக்கமாய் இருந்தது; அவைகளுடைய பக்கங்களும் ஒரு கிண்ணத்தைப்போல இறுக்கமாயிருந்தன; அதன் முனைகளோ கூர்மையாயிருந்தன; அதனுடைய மேல் பகுதி ஒரு கிண்ணத்தைப்போல இறுக்கமாயிருந்தது; அதனுடைய நீளம் ஒரு மரத்தினுடைய நீளமாயிருந்தது; அதனுடைய கதவு மூடப்பட்டபோது ஒரு கிண்ணத்தைப்போல இறுக்கமாயிருந்தது.

18 அந்தப்படியே, யாரேதின் சகோதரன் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டு, கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்ட வேலையை நான் செய்தேன். நீர் எனக்கு ஏவினபடியே நான் தோணிகளைச் செய்தேன்.

19 கர்த்தாவே, அவைகளில் வெளிச்சமில்லை; நாங்கள் எங்கே திரும்புவோம்? நாங்கள் அழிந்துபோவோம். ஏனெனில் அவைகளுக்குள் இருக்கிற காற்றேயல்லாமல் வேறு காற்று இல்லாததினால், அவைகளுக்குள் மூச்சுவிடக்கூடாமல் அழிந்துபோவோம், என்றான்.

20 கர்த்தர் யாரேதின் சகோதரனை நோக்கி: இதோ, நீ மேலும் கீழும் துவாரமிடுவாயாக. உங்களுக்கு காற்று வேண்டும்போது, நீங்கள் துவாரத்தைத் திறந்து காற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மேல் தண்ணீர் வந்து, நீங்கள் தண்ணீரிலே அழிந்துபோகாதபடிக்கு, இதோ, நீங்கள் துவாரத்தை மூடவேண்டும் என்றார்.

21 அந்தப்படியே, கர்த்தர் கட்டளையிட்டபடியே யாரேதின் சகோதரன் செய்தான்.

22 அவன் கர்த்தரிடத்தில் மறுபடியும் கூக்குரலிட்டுச் சொன்னதாவது: கர்த்தாவே, இதோ நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; நான் என் ஜனத்திற்காக மரக்கலங்களை ஆயத்தப்படுத்தினேன். இதோ, அவைகளில் ஒளி இல்லை. இதோ, கர்த்தாவே நாங்கள் இந்த பெரும் தண்ணீரைக் காரிருளிலே கடக்க நீர் அனுமதிப்பீரோ?

23 கர்த்தர் யாரேதின் சகோதரனிடத்தில் சொன்னதாவது: உங்களுடைய மரக்கலங்களில் ஒளி உண்டாயிருக்க நான் என்ன செய்யவேண்டுமென நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள்? ஏனெனில் இதோ நீங்கள் பலகணிகளை வைத்திருக்க முடியாது. அவை துண்டுகளாக உடைந்துவிடும்; நீங்கள் அக்கினியையும் உங்களுடனே எடுத்துச் செல்லக்கூடாது, ஏனெனில் நீங்கள் அக்கினியின் வெளிச்சத்திலும் போவதில்லை.

24 ஏனெனில் இதோ, சமுத்திரத்தின் மத்தியில் ஒரு திமிங்கலத்தைப்போல இருப்பீர்கள்; மலைகளைப் போன்ற அலைகள் உங்கள் மேல் மோதும். இருப்பினும் நான் உங்களை சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து மறுபடியும் கொண்டுவருவேன்; ஏனெனில் காற்று என் வாயிலிருந்து புறப்பட்டுப்போனது. நான் மழைகளையும் பிரளயங்களையும் அனுப்பினேன்.

25 இதோ இவைகளுக்கெதிராக நான் உங்களை ஆயத்தப்படுத்துகிறேன்; ஏனெனில் சமுத்திரத்தின் அலைகளுக்கும், சென்றிருக்கிற காற்றுக்களுக்கும், வரவிருக்கிற பிரளயத்திற்கும் எதிராக நான் உங்களை ஆயத்தப்படுத்தினாலொழிய நீங்கள் இந்தப் பெரும் ஆழத்தைக் கடக்கமுடியாது. நீங்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் விழுங்கப்படும்போது உங்களுக்கு ஒளியுண்டாயிருக்கும்படிக்கு நான் உங்களுக்கு எதை ஆயத்தப்படுத்தவேண்டுமென நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள்?