வேதங்கள்
ஏத்தேர் 6


அதிகாரம் 6

யாரேதியர்களின் தோணிகள் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு காற்றினால் அடித்துச் செல்லப்படுதல் – ஜனங்கள் கர்த்தரை அவருடைய நன்மையினிமித்தம் துதித்தல் – அவர்கள்மேல் ராஜாவாக ஒரீகா நியமிக்கப்படுதல் – யாரேதும் அவன் சகோதரனும் மரணமடைதல்.

1 இப்பொழுதும் மரோனியான நான், யாரேது மற்றும் அவனுடைய சகோதரனுடைய வரலாற்றைக் கொடுக்கத் துவங்குகிறேன்.

2 அந்தப்படியே, மலையின்மேல் யாரேதின் சகோதரனால் எடுத்துச் செல்லப்பட்ட கற்களை கர்த்தர் ஆயத்தப்பண்ணின பின்பு, யாரேதின் சகோதரன் மலையிலிருந்து இறங்கி, ஆயத்தம்பண்ணப்பட்ட மரக்கலன்களில் கற்களை ஒவ்வொரு முனையிலும் ஒன்று என்ற விதத்தில் வைத்தான்; இதோ, அவைகள் மரக்கலங்களுக்கு ஒளி கொடுத்தன.

3 அவர்கள் பெரும் தண்ணீர்களைக் காரிருளில் கடக்காதபடிக்கு, புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும் ஒளிகொடுத்து, கர்த்தர் இவ்விதமாய்க் கற்களை இருளில் பிரகாசிக்கப்பண்ணினார்.

4 அந்தப்படியே, அவர்கள் தாங்கள் தண்ணீர்களின்மேல் நிலைத்திருக்க எல்லா விதமான உணவையும், தங்களுடைய ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் அவர்கள் தங்களோடு கூட்டிக்கொண்டுபோன எந்த மிருகத்திற்காகிலும், விலங்கிற்காகிலும், பட்சிக்காகிலும் உணவையும் ஆயத்தப்படுத்தின பின்பு, அந்தப்படியே, அவர்கள் இவைகளெல்லாவற்றையும் செய்த பின்பு, அவர்கள் தங்கள் மரக்கலங்களில் அல்லது தோணிகளில் ஏறி, தங்களையே கர்த்தராகிய தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, சமுத்திரத்தினுள் பிரயாணத்தைத் தொடங்கினார்கள்.

5 அந்தப்படியே, தேவனாகிய கர்த்தர் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நேராக தண்ணீர்களின்மேல் அதிவேகமான காற்று அடிக்கும்படியாகச் செய்தார்; இப்படியாக அவர்கள் காற்றுக்கு முன்பாக, சமுத்திரத்தின் அலைகளின் மேல் தூக்கிவீசப்பட்டார்கள்.

6 அந்தப்படியே, அவர்கள் மேல் விழுந்த மலைபோன்ற அலைகளினிமித்தமும், காற்றின் வேகத்தினால் ஏற்பட்ட பெரிய பயங்கர சூறாவளிகளினிமித்தமும், அவர்கள் அநேகந்தரம் சமுத்திரத்தின் ஆழங்களில் புதைக்கப்பட்டார்கள்.

7 அந்தப்படியே, அவர்கள் ஆழத்திலே புதைக்கப்பட்டபோதும், அவர்களுடைய மரக்கலங்கள் ஒரு கிண்ணத்தைப்போல இறுக்கமாயிருந்ததாலும், நோவாவின் பேழையைப்போல் இறுக்கமாயிருந்ததாலும் எந்த தண்ணீரும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிக தண்ணீர்களால் சூழப்பட்டபோது, அவர்கள் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டார்கள். அவர் அவர்களை மறுபடியும் தண்ணீர்கள் மேலே கொண்டுவந்தார்.

8 அந்தப்படியே, அவர்கள் தண்ணீர்கள் மேலே இருந்தபோது, காற்று வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நேராய் வீசுவதிலிருந்து ஓயவில்லை; இப்படியாக அவர்கள் காற்றுக்கு முன்பாகத் தள்ளப்பட்டார்கள்.

9 அவர்கள் கர்த்தருக்கு துதிகளைப் பாடினார்கள்; ஆம் யாரேதின் சகோதரன் கர்த்தருக்கு துதிகளைப் பாடினான்; அவன் கர்த்தருக்கு நன்றி செலுத்தி, நாள் முழுவதும் துதித்தான்; இரவு வந்தபோதும் அவர்கள் கர்த்தரைத் துதிப்பதிலிருந்து ஓயவில்லை.

10 இப்படியாக, அவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள்; சமுத்திரத்தின் எந்த பயங்கர மிருகத்தினாலும் அவைகளை உடைக்க முடியவில்லை; திமிங்கலத்தினாலும் அவர்களுக்குக் கேடு உண்டாக்க முடியவில்லை; தண்ணீருக்கு மேலோ அல்லது தண்ணீருக்குக் கீழோ, அவர்கள் தொடர்ந்து வெளிச்சம் பெற்றிருந்தார்கள்.

11 இப்படியாக அவர்கள் முன்னூற்றி நாற்பத்தி நான்கு நாட்கள் தண்ணீர் மேல் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

12 அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தில் கரையேறினார்கள். அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தின் கரைகளில் தங்கள் பாதங்களை வைத்தவுடனேயே, தேசத்தின் மேல் தாங்கள் பணிந்து கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி, அவர்கள் மேல் இருந்த அவருடைய திரளான மென்மையான இரக்கத்தினிமித்தம், கர்த்தரின் சமுகத்தில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.

13 அந்தப்படியே, அவர்கள் பூமியின் மீது போய் பூமியைப் பண்படுத்தத் துவங்கினார்கள்.

14 யாரேதிற்கு நான்கு குமாரர்களிருந்தார்கள் அவர்கள் யாக்கோம், கில்கா, மாகா, ஒரீகா என்று அழைக்கப்பட்டார்கள்.

15 யாரேதின் சகோதரனும் குமாரர்களையும், குமாரத்திகளையும், பெற்றெடுத்தான்.

16 யாரேது மற்றும் அவனது சகோதரனின் நண்பர்களும் எண்ணிக்கையிலே இருபத்திரண்டு ஆத்துமாக்களாய் இருந்தார்கள். அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு வருவதற்கு முன்னதாகவே குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்தார்கள்; ஆதலால் அவர்கள் அநேகராய்ப் பெருகத் துவங்கினார்கள்.

17 அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையாய் நடக்கப் போதிக்கப்பட்டார்கள்; அவர்கள் பரத்திலிருந்தும் போதிக்கப்பட்டார்கள்.

18 அந்தப்படியே, அவர்கள் பூமியின் மேலே படரவும், பெருகவும், பூமியைப் பண்படுத்தவும் துவங்கினார்கள்; அவர்கள் தேசத்திலே பலசாலிகளாக இருந்தார்கள்.

19 யாரேதின் சகோதரன் வயது முதிர்ந்தவனாய், சீக்கிரத்திலே கல்லறைக்குப் போகவேண்டும் என்று கண்டான்; ஆதலால் அவன் யாரேதைப் பார்த்து நம்முடைய கல்லறைகளுக்குப் போகும் முன் நம்முடைய ஜனங்கள் நம்மிடத்தில் வாஞ்சிப்பதென்ன என்று அவர்களிடத்திலிருந்து, நாம் அறியும்படிக்கும் அவர்களைத் தொகையிடும்படிக்கும் ஏகமாய்க் கூடச்செய்வோமாக என்றான்.

20 அப்படியே ஜனங்களும் ஏகமாய்க் கூட்டப்பட்டார்கள். இப்பொழுது யாரேதின் சகோதரனின் குமாரர்கள் குமாரத்திகள் எண்ணிக்கை இருபத்தி இரண்டு ஆத்துமாக்களாய் இருந்தது; யாரேதின் குமாரர் குமாரத்திகளின் எண்ணிக்கை பன்னிரண்டாயிருந்தது. அவனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள்.

21 அந்தப்படியே, அவர்கள் தங்கள் ஜனங்களை எண்ணினார்கள். அவர்களை எண்ணினபின்பு தாங்கள் தங்கள் கல்லறைகளுக்கு போவதற்கு முன்பு அவர்கள் தங்களிடத்தில் வாஞ்சிக்கிற காரியம் என்னவென்று கேட்டார்கள்.

22 அந்தப்படியே, ஜனங்கள் அவர்களுடைய குமாரர்களில் ஒருவன் தங்கள் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படவேண்டும் என்று விரும்பினார்கள்.

23 இப்பொழுதும் இதோ, இது அவர்களுக்கு துயரமாயிருந்தது. யாரேதின் சகோதரன் அவர்களை நோக்கி: இக்காரியம் நிச்சயமாகவே சிறைத்தனத்திற்குள் வழிநடத்தும், என்றான்.

24 ஆனால் யாரேது தன் சகோதரனை நோக்கி: அவர்கள் ஒரு ராஜாவைப்பெற அவர்களை அனுமதியும், என்றான். ஆதலால் அவன் அவர்களை நோக்கி: எங்கள் குமாரர்களுள் நீங்கள் விரும்புகிற யாரையேனும் ராஜாவாகத் தெரிந்துகொள்ளுங்கள், என்றான்.

25 அந்தப்படியே, யாரேதின் சகோதரனின் முதற்பேரானவனை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்: அவன் பெயர் பகாகு என்பதாகும். அந்தப்படியே, அவர்களின் ராஜாவாக இருக்க அவன் மறுத்தான். அவன் தகப்பன் அவனை கட்டாயப்படுத்தவேண்டுமென ஜனங்கள் விரும்பினார்கள். அவன் தகப்பனோ அப்படிச் செய்யவிரும்பவில்லை; அவர்கள் ஒருவனையும் தங்கள் ராஜாவாக இருக்கக் கட்டாயப்படுத்தக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

26 அந்தப்படியே, அவர்கள் பகாகுவின் எல்லா சகோதரரையும் தெரிந்துகொண்டார்கள். அவர்களோ விரும்பவில்லை.

27 அந்தப்படியே, யாரேதின் குமாரர்களில் ஒருவனைத் தவிர வேறொருவரும் விரும்பவில்லை; ஜனங்களின் மேல் ஒரீகா, ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.

28 அவன் ஆளத்துவங்கினான், ஜனங்கள் விருத்தியடையத் துவங்கினார்கள்; அவர்கள் மிகவும் ஐஸ்வரியவான்களானார்கள்.

29 அந்தப்படியே, யாரேதும் அவனுடைய சகோதரனும் மரித்தார்கள்.

30 அந்தப்படியே, ஒரீகா கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையாக நடந்து, கர்த்தர் தனது பிதாக்களுக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தார் என்று நினைவுகூர்ந்து, தங்களுடைய பிதாக்களுக்கு கர்த்தர் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தார் என்று, தன் ஜனத்திற்குப் போதித்தான்.