பொது மாநாடு
ஆவிக்குரிய வேகத்தின் வல்லமை
ஏப்ரல் 2022 பொது மாநாடு


ஆவிக்குரிய வேகத்தின் வல்லமை

இன்று, நேர்மறையான ஆவிக்குரிய வேகத்தை பராமரிக்க உதவும் ஐந்து குறிப்பிட்ட செயல்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

அன்பான சகோதர, சகோதரிகளே, உங்களை நான் நேசிக்கிறேன். இன்று உங்களுடன் பேசும் வாய்ப்பை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். சத்துருவின் கடுமையான தாக்குதல்களில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவதோடு, நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறவும் நான் தினமும் ஜெபிக்கிறேன்.

சில சோதனைகள் யாராலும் பார்க்க முடியாத ஆழமான தனிப்பட்ட சுமைகள். பிற உலக அரங்கில் விளையாடப்படுகின்றன. கிழக்கு ஐரோப்பாவின் ஆயுதப் போராட்டம் இவைகளில் ஒன்று. நான் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். நான் அந்த தேசங்களையும், மக்களையும், அவர்களின் மொழிகளையும் நேசிக்கிறேன். இந்த சச்சரவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அழுது ஜெபிக்கிறேன். கஷ்டப்படுபவர்களுக்கும் வாழ்வதற்குப் போராடுபவர்களுக்கும் உதவ சபையாக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தொடர்ந்து உபவாசம் இருக்கவும் ஜெபம் செய்யவும் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். எந்தப் போரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கருதுகிற மற்றும் போதிக்கிற அனைத்தின் மீதும் ஒரு பயங்கரமான மீறுதலாகும்.

நம்மில் எவராலும் நாடுகளையோ, மற்றவர்களின் செயல்களையோ, அல்லது நமது சொந்த குடும்ப உறுப்பினர்களையோ கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம் நம்மை கட்டுப்படுத்த முடியும். அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் இருதயத்திலும், உங்கள் வீட்டிலும், உங்கள் வாழ்விலும் பொங்கி எழும் மோதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே இன்று எனது அழைப்பு. மற்றவர்களைப் புண்படுத்தும் அனைத்து விருப்பங்களையும் புதைத்து விடுங்கள், அந்த விருப்பங்கள் ஒரு கோபமாகவோ, கூர்மையான நாக்காகவோ அல்லது உங்களை காயப்படுத்திய ஒருவர் மீது வெறுப்பாகவோ இருக்கலாம். ஆயினும், இரட்சகர் மறு கன்னத்தைத் திருப்பும்படியும் 1 நமது சத்துருக்களை நேசிக்கவும், நம்மைக் கேவலமாகப் பயன்படுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் கட்டளையிட்டார்.2

மிகவும் நியாயமானதாக உணரும் கோபத்தை விட்டுவிடுவது மிகவும் வேதனையின் கடினமாக இருக்கும். யாருடைய அழிவுகரமான செயல்கள் அப்பாவிகளை காயப்படுத்துகிறதோ அவர்களை மன்னிக்க முடியாது என்று தோன்றலாம். இருந்தும், “எல்லா மனிதரையும் மன்னியுங்கள்” என்று இரட்சகர் நமக்கு அறிவுறுத்தினார்.3

நாம் சமாதான பிரபுவைப் பின்பற்றுபவர்கள். முன்னெப்போதையும் விட இப்போது, அவர் மட்டுமே கொண்டு வரக்கூடிய சமாதானம் நமக்குத் தேவை. தனித்தனியாக நாம் தனிப்பட்ட சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நாடாதபோது உலகில் சமாதானம் நிலவுவதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? சகோதர சகோதரிகளே, நான் பரிந்துரைப்பது எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் இருதயங்களிலும் வாழ்க்கையிலும் தற்போது ஏற்பட்டுள்ள தனிப்பட்ட மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.

சமீபத்தில் கூடைப்பந்து விளையாட்டைப் பார்க்கும்போது எனக்கு நினைவூட்டப்பட்ட ஒரு கருத்தை விவாதிப்பதன் மூலம் இந்த நடவடிக்கைக்கான அழைப்பை நான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன்.

அந்த ஆட்டத்தில், முதல் பாதி முன்னும் பின்னுமாக சீசா சண்டையாக இருந்தது. பின்னர், முதல் பாதியின் கடைசி ஐந்து வினாடிகளில், ஒரு அணியின் ஆட்டக்காரர் ஒரு அழகான மூன்று-புள்ளி பந்தைப் போட்டார். ஒரே ஒரு வினாடி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அவரது அணி வீரர் தரை கடத்தல் பந்தை திருடி மற்றொரு பந்தை மணி அடிக்கும்போது போட்டார்! அதனால் அந்த அணி வேகத்தின் தெளிவான எழுச்சியுடன் ஓய்வு அறைக்குள் நான்கு புள்ளிகள் முன்னணியில் சென்றது. அந்த வேகத்தை அவர்களால் இரண்டாவது பாதியில் கொண்டு சென்று ஆட்டத்தை வெல்ல முடிந்தது.

வேகம் வல்லமையான கருத்து. நாம் அனைவரும் அதை ஏதோ ஒரு வடிவத்தில் அனுபவித்திருக்கிறோம், உதாரணமாக, வேகமெடுக்கும் வாகனத்தில் அல்லது கருத்து வேறுபாடு திடீரென வாக்குவாதமாக மாறுகையில்.

எனவே நான் கேட்கிறேன்,“ ஆவிக்குரிய வேகத்தை தூண்டக்கூடியது எது?” நேர்மறை மற்றும் எதிர்மறை வேகத்தின் உதாரணங்களைப் பார்த்தோம். மனமாற்றம் அடைந்து தங்கள் விசுவாசத்தில் வளர்ந்த, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை நாம் அறிவோம். ஆனால், ஒருமுறை ஒப்புக்கொடுத்து, பின்னர் விலகிப்போன விசுவாசிகளையும் நாம் அறிவோம். வேகம் எந்த வகையிலும் ஊசலாடலாம்.

தீமை மற்றும் காலத்தின் அறிகுறிகள் தீவிரமடையும் வேகத்தை எதிர்ப்பதற்கு, இன்று இருப்பதை விட நேர்மறையான ஆவிக்குரிய வேகம் நமக்கு ஒருபோதும் தேவைப்படவில்லை. தொற்றுநோய்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் ஆயுதமேந்திய விரோதங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நேர்மறையான ஆவிக்குரிய வேகம் நம்மை முன்னேற வைக்கும். சத்துருவின் இடைவிடாத, பொல்லாத தாக்குதல்களைத் தாங்கி, நம்முடைய தனிப்பட்ட ஆவிக்குரிய அடித்தளத்தை சிதைக்கும் அவனது முயற்சிகளை முறியடிக்க ஆவிக்குரிய வேகம் உதவும்.

அனேகமான செயல்கள் நேர்மறை ஆவிக்குரிய வேகத்தை தூண்ட முடியும். கீழ்ப்படிதல், அன்பு, பணிவு, சேவை மற்றும் நன்றியுணர்வு4 ஆகியவை சில மட்டுமே.

இன்று, நேர்மறையான ஆவிக்குரிய வேகத்தை பராமரிக்க உதவும் ஐந்து குறிப்பிட்ட செயல்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

முதலாவது, உடன்படிக்கையின் பாதையில் வந்து அங்கேயே இருங்கள்.

அண்மையில், நான் ஒரு தெளிவான கனவு கண்டேன், அதில் நான் ஒரு பெரிய குழுவை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள், அதில் அடிக்கடி கேட்கப்பட்டவை உடன்படிக்கையின் பாதை மற்றும் அது ஏன் மிகவும் முக்கியமானது.

என் கனவில், ஞானஸ்நானம் பெற்று, தேவனுடன் நமது முதல் உடன்படிக்கை செய்வதன் மூலம் உடன்படிக்கையின் பாதையில் நுழைகிறோம் என்பதை விளக்கினேன்.5 ஒவ்வொரு முறையும் நாம் திருவிருந்தில் பங்குபெறும்போது, மீட்பரின் பெயரை நம்மீது தரித்துக்கொள்வதாகவும், அவரை நினைவுகூரவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் மீண்டும் வாக்களிக்கிறோம்.6 பதிலுக்கு, கர்த்தருடைய ஆவி எப்போதும் நம்முடன் இருக்கும் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார்.

பின்னர், ஆலயத்தில் கூடுதலான உடன்படிக்கைகளைச் செய்கிறோம், அங்கு இன்னும் பெரிய வாக்குறுதிகளைப் பெறுகிறோம். நியமங்களும் உடன்படிக்கைகளும் தெய்வீக வல்லமை பெறும் சாத்தியத்தை நமக்கு வழங்குகிறது. உடன்படிக்கைப் பாதையே மேன்மையடைதலுக்கும் நித்திய ஜீவனுக்கும் வழிநடத்தும் ஒரே பாதையாகும்.

என் கனவில், ஒரு பெண், அவனது அல்லது அவளது உடன்படிக்கைகளை மீறி, எப்படி அந்தப் பாதையில் திரும்ப முடியும் என்று கேட்டார். அத்தகைய கேள்விக்கான பதில் எனது இரண்டாவது பரிந்துரைக்கு வழிவகுக்கிறது:

தினசரி மனந்திரும்புதலின் மகிழ்ச்சியைக் கண்டறியவும்.

மனந்திரும்புதல் எவ்வளவு முக்கியம்? “மனந்திரும்புதல் மற்றும் கர்த்தர் பேரில் விசுவாசம் தவிர வேறு எதையும் பிரசங்கிக்கக்கூடாது” என்று ஆல்மா போதித்தான்.7 நித்திய மகிமையை விரும்பும் ஒவ்வொரு பொறுப்புள்ள நபருக்கும் மனந்திரும்புதல் தேவைப்படுகிறது.8 விதிவிலக்குகள் இல்லை. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு ஒரு வெளிப்பாட்டில், ஆரம்பகால சபைத் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுவிசேஷத்தைக் கற்பிக்காததற்காக கர்த்தர் தண்டித்தார்.9 மனந்திரும்புதல் முன்னேற்றத்திற்கான திறவுகோல் ஆகும். தூய விசுவாசம், உடன்படிக்கையின் பாதையில் நம்மை முன்னேற வைக்கிறது.

தயவுசெய்து பயப்படாதீர்கள் அல்லது மனந்திரும்புவதை தாமதப்படுத்தாதீர்கள். உங்கள் துயரத்தில் சாத்தான் மகிழ்ச்சி அடைகிறான். அதை சுருக்கவும். அவனது செல்வாக்கை உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியுங்கள். சுபாவ மனிதனைத் தள்ளிவிடும் மகிழ்ச்சியை அனுபவிக்க இன்றே தொடங்குங்கள்.10 இரட்சகர் நம்மை எப்போதும் நேசிக்கிறார், ஆனால் விசேஷமாக நாம் மனந்திரும்பும்போது. ஆனாலும் அவர் வாக்களித்தார், “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், இருக்கும்.”11

நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் இருந்து வெகுதூரம் அல்லது மிக நீண்ட தூரம் சென்றுவிட்டதாக உணர்ந்தால், திரும்புவதற்கு வழி இல்லை என்றால், அது உண்மையல்ல.12 உங்கள் ஆயர் அல்லது கிளைத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும். அவர் கர்த்தரின் முகவர் மற்றும் மனந்திரும்புதலின் மகிழ்ச்சியையும் நிவாரணத்தையும் அனுபவிக்க உங்களுக்கு உதவுவார்.

இப்போது, ஒரு எச்சரிக்கை: உடன்படிக்கையின் பாதைக்குத் திரும்புவது எனில் வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. இந்த பாதை கடுமையானது மற்றும் சில சமயங்களில் செங்குத்தான ஏற்றம் போல் இருக்கும்.13 எவ்வாறாயினும், இந்த ஏற்றம், நம்மைச் சோதிப்பதற்கும், நமக்குப் போதிப்பதற்கும், நமது இயல்புகளைச் செம்மைப்படுத்துவதற்கும், நாம் பரிசுத்தவான்களாக மாறுவதற்கும் நமக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேன்மையடைதலுக்கு நடத்திச் செல்லும் ஒரே பாதை அதுதான். “தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான நிலை” 14 என்று ஒரு தீர்க்கதரிசி விவரித்தான். “ஏனெனில், இதோ ஆவிக்குரியதும் லெளகீகமானதுமான சகல காரியங்களில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் இறுதிபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சி உள்ள நிலையிலே தேவனோடு வாசம்செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.“15

உடன்படிக்கையின் பாதையில் நடப்பது, தினசரி மனந்திரும்புதலுடன் சேர்ந்து, நேர்மறையான ஆவிக்குரிய வேகத்தைத் தூண்டுகிறது.

எனது மூன்றாவது பரிந்துரை: தேவனைப்பற்றியும் அவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப்பற்றியும் கற்கவும்.

இன்று நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, தேவனின் சத்தியங்களையும் சாத்தானின் போலிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது. அதனால்தான் கர்த்தர் நம்மை எச்சரித்தார், “எப்போதும் ஜெபியுங்கள், … [நாம்] சாத்தானை வெல்லவும், … அவனுடைய வேலையை ஆதரிக்கும் சாத்தானின் ஊழியர்களின் கைகளிலிருந்து தப்பிக்கவும்.”16

தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் எவ்வாறு பகுத்தறிவென்பதற்கு மோசே ஒரு சிறந்த உதாரணத்தைக் கொடுத்தான். சாத்தான் அவனைச் சோதிக்க வந்தபோது, மோசே அப்போதுதான் தேவனுடன் நேருக்கு நேர் தொடர்பு கொண்டதால் ஏமாற்றத்தைக் கண்டுபிடித்தான். இவ்வாறு, சாத்தான் யார் என்பதை மோசே விரைவாக உணர்ந்து அவனை அப்பாலே போகச் சொன்னான்.17 சாத்தான் பிடிவாதமாக இருந்தபோது, அதிக உதவிக்காக தேவனை எப்படிக் கூப்பிடுவது என்று மோசே அறிந்திருந்தான். மோசே தெய்வீக பலத்தைப் பெற்று, அந்தத் தீயவனை மீண்டும் கடிந்துகொண்டு, “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ, இந்த ஒரு தேவனை மட்டுமே நான் ஆராதிப்பேன்” என்று கூறினான்.18

நாம் அந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். சாத்தானின் செல்வாக்கை உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியுங்கள். தயவுசெய்து அவனுடைய “பொல்லாத தரவுக்கும் நித்திய துன்பத்துக்கும்” அவனைப் பின்தொடராதீர்கள்.19

பயமுறுத்தும் வேகத்தில், “தேவனுடைய நல்ல வசனத்தினால்”20 தினசரி போஷிக்கப்படாத ஒரு சாட்சி சிதைந்துவிடும். எனவே, சாத்தானின் சதித்திட்டத்திற்கு எதிரான மருந்து தெளிவாக உள்ளது: கர்த்தரை ஆராதிப்பதிலும் அவருடைய சுவிசேஷத்தைப் படிப்பதிலும் நமக்கு தினசரி அனுபவங்கள் தேவை. உங்கள் வாழ்க்கையில் தேவன் ஜெயம்கொள்வாராக என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். உங்கள் நேரத்தின் நியாயமான பங்கை கர்த்தருக்குக் கொடுங்கள். நீங்கள் செய்யும்போது, உங்கள் நேர்மறையான ஆவிக்குரிய வேகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

ஆலோசனை எண் 4: அற்புதங்களைத் தேடுங்கள், எதிர்பாருங்கள்.|

“தேவன் அற்புதங்களின் தேவனாக இருப்பதிலிருந்து நின்று போவதில்லை” என்று மரோனி நமக்கு உறுதியளித்தான்.21 தம்மை நம்புகிறவர்களின் வாழ்வில் கர்த்தர் தலையிட எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பதை ஒவ்வொரு வேத வசனமும் காட்டுகிறது.22 அவர் மோசேக்காக செங்கடலைப் பிரித்தார், பித்தளைத் தகடுகளை மீட்டெடுக்க நேபிக்கு உதவினார், மேலும் ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மூலம் தமது சபையை மறுஸ்தாபிதம் செய்தார். இந்த அற்புதங்கள் ஒவ்வொன்றும் நேரம் எடுத்தன, மேலும் அந்த நபர்கள் முதலில் கர்த்தரிடம் கோரியவையாக இல்லாமல் இருக்கலாம்.

அதுபோலவே, “யாதொன்றையும் சந்தேகிக்காமல்” நீங்கள் அவரை விசுவாசித்தால், அதே விதமாக கர்த்தர் அற்புதங்களால் உங்களை ஆசீர்வதிப்பார்.23 அற்புதங்களைத் தேட ஆவிக்குரிய பணியைச் செய்யுங்கள். அப்படிப்பட்ட விசுவாசத்தைக் கடைப்பிடிக்க உங்களுக்கு உதவுமாறு தேவனிடம் ஜெபத்துடன் கேளுங்கள். “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற,” இயேசு கிறிஸ்துவை நீங்களே அனுபவிக்க முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன்.24 உங்கள் வாழ்க்கையில் ஒரு மலையை நகர்த்த கர்த்தர் உங்களுக்கு உதவுகிறார் என்பதை உணர்ந்து கொள்வதை விட சில விஷயங்கள் உங்கள் ஆவிக்குரிய வேகத்தை துரிதப்படுத்தும்.

ஆலோசனை எண் 5: உங்கள் வாழ்க்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும்.

உங்கள் வாழ்க்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர திரும்பவும் அழைக்கிறேன். மன்னிப்பதற்கும் மன்னிப்பு தேடுவதற்கும் தேவைப்படும் பணிவு, தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். “மனுஷருடைய தப்பிதங்களை [நாம்] அவர்களுக்கு மன்னித்தால், [நமது] பரலோக பிதா [நமக்கும்] மன்னிப்பார்,” என இரட்சகர் வாக்களித்திருக்கிறார்.25

இன்று முதல் இரண்டு வாரங்களில் நாம் ஈஸ்டர் கொண்டாடுகிறோம். இப்போதுக்கும் அப்போதுக்கும் இடையிலும், உங்களைப் பாதித்த ஒரு தனிப்பட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரணத்திற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பொருத்தமான செயல் இருக்க முடியுமா? மன்னிப்பு தற்போது சாத்தியமற்றதாகத் தோன்றினால், உங்களுக்கு உதவ இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண இரத்தத்தின் மூலம் வல்லமைக்காக மன்றாடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நான் தனிப்பட்ட சமாதானத்தையும் ஆவிக்குரிய வேகத்தின் வெடிப்பையும் உறுதியளிக்கிறேன்.

இரட்சகர் அனைத்து மனிதகுலத்திற்காகவும் பாவநிவர்த்தி செய்தபோது, அவரைப் பின்தொடர்பவர்கள் அவருடைய குணப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் மீட்கும் வல்லமையை அணுகுவதற்கான ஒரு வழியைத் திறந்தார். இந்த ஆவிக்குரிய சிலாக்கியங்கள், அவரைக் கேட்கவும், அவரைப் பின்பற்றவும் முயல்பவர்களுக்குக் கிடைக்கும்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, எனது இருதயத்தின் அனைத்து வேண்டுகோளுடனும், உடன்படிக்கையின் பாதையில் சென்று அங்கேயே இருக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். தினமும் மனம்மாறுவதன் மகிழ்ச்சியை அனுபவியுங்கள். தேவனைப்பற்றியும் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப்பற்றியும் அறியவும். அற்புதங்களைத் தேடுங்கள் மற்றும் எதிர்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

இந்த இலக்குகளில் நீங்கள் செயல்படும்போது, நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் எதுவாக இருந்தாலும், உடன்படிக்கைப் பாதையில் அதிகரித்த வேகத்துடன் முன்னேறும் திறனை உங்களுக்கு வாக்களிக்கிறேன். சோதனையை எதிர்ப்பதற்கு அதிக பலம், அதிக மன சமாதானம் மற்றும் பயத்திலிருந்து விடுதலை மற்றும் உங்கள் குடும்பங்களில் அதிக ஒற்றுமை ஆகியவற்றை நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

தேவன் ஜீவிக்கிறார்! இயேசுவே கிறிஸ்து! அவர் ஜீவிக்கிறார்! அவர் நம்மை நேசிக்கிறார் அவர் நமக்கு உதவி செய்வார். இதைப்பற்றி நான் நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 12:39 பார்க்கவும்.

  2. 3 நேபி 12:44 பார்க்கவும்.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:10; வசனம் 9 ஐயும் பார்க்கவும்.

  4. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல, “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:18.) விரக்தி, ஊக்கமின்மை மற்றும் ஆவிக்குரிய சோம்பல் ஆகியவற்றுக்கான உறுதியான மாற்று மருந்துகளில் ஒன்று நன்றியுணர்வு. நாம் தேவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய சில விஷயங்கள் யாவை? பூமியின் அழகுக்காகவும், சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்துக்காகவும், எண்ணற்ற வழிகளுக்காகவும் அவரும் அவருடைய குமாரனும் இந்த பூமியில் தங்கள் வல்லமையை நமக்குக் கிடைக்கச் செய்ததற்காக அவருக்கு நன்றி. வேதங்களுக்காகவும், உதவிக்காகவும், வெளிப்பாட்டிற்காகவும், நித்திய குடும்பங்களுக்காகவும் தேவனிடம் நாம் செய்யும் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் தேவதூதர்களுக்காகவும் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய குமாரனின் வரம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள், இது நாம் பூமிக்கு அனுப்பப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதை சாத்தியமாக்குகிறது.

  5. உடன்படிக்கையின் பாதையைப் புரிந்து கொள்ள, ஒரு உடன்படிக்கையானது தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளில் ஒருவருக்கும் இடையே இருவழி ஒப்புக்கொடுத்தலை உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு உடன்படிக்கையில், தேவன் விதிமுறைகளை அமைக்கிறார், அந்த விதிமுறைகளை நாம் ஒப்புக்கொள்கிறோம். மாற்றாக, தேவன் நமக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார். பல உடன்படிக்கைகள் வெளிப்புற அடையாளங்களோடு அல்லது பரிசுத்த நியமங்களோடு உள்ளன, இதில் நாம் சாட்சிகளுடன் பங்கேற்கிறோம். உதாரணமாக, ஞானஸ்நானம் என்பது கர்த்தருக்கு அடையாளமாக உள்ளது, ஞானஸ்நானம் பெற்ற நபர் தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க ஒரு உடன்படிக்கை செய்தார்.

  6. மரோனி 4:23; 5:2; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்.

  7. மோசியா 18:20.

  8. மோசே 6:50, 57 பார்க்கவும்.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:40–48 பார்க்கவும்.

  10. மோசியா 3:19 பார்க்கவும்.

  11. ஏசாயா 54:10; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது; மற்றும் 3 நேபி 22:10 ஐயும் பார்க்கவும். தயவு என்பது ஹெஸ்ட் என்ற எபிரேய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது தயவு, இரக்கம், உடன்படிக்கை அன்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆழமான பொருளைக் கொண்ட வல்லமை வாய்ந்த வார்த்தையாகும்.

  12. சில பாவங்களுக்குப் பரிகாரம் செய்யலாம் ஆனால் சிலவற்றுக்குப் பரிகாரம் செய்ய முடியாது. ஒருவர் நிந்தித்தால் அல்லது மற்றொருவரை தாக்கினால்அல்லது ஒருவர் இன்னொருவரின் உயிரைப் பறித்துவிட்டாலோ, முழு ஈடு செய்ய முடியாது. அந்த சமயங்களில் பாவி இவ்வளவுதான் செய்ய முடியும், மேலும் தனிப்பட்ட மனந்திரும்புதலின் காரணமாக ஒரு பெரிய சமநிலை உள்ளது. நிலுவையை மன்னிக்க கர்த்தர் தயாராக இருப்பதால், நாம் எவ்வளவு தூரம் தவறிவிட்டாலும் அவரிடம் வரலாம். நாம் உண்மையாக மனந்திரும்பும்போது, அவர் நம்மை மன்னிப்பார். நம்முடைய பாவங்களுக்கும், ஈடுசெய்யும் திறனுக்கும் இடையே உள்ள எந்தவொரு சமநிலையையும், இரக்கத்தின் பரிசாக வழங்கக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். நமது நிலுவைத் தொகையை மன்னிக்க அவர் தயாராக இருப்பது விலைமதிப்பற்ற வரம்.

  13. 2 நேபி 31:18–20 பார்க்கவும்.

  14. நேபிய தீர்க்கதரிசி பென்யமீன் ராஜா.

  15. மோசியா 2:41.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  17. மோசே 1:16 பார்க்கவும், வசனங்கள் 1–20 ஐயும் பார்க்கவும்.

  18. மோசே 1:20.

  19. ஏலமன் 5:12.

  20. மரோனி 6:4.

  21. மார்மன் 9:15; வசனம் 19 ஐயும் பார்க்கவும்.

  22. “இயேசுவே கிறிஸ்து என்று நாம் நம்புவதற்காக” இரட்சகரின் அற்புதங்களை பதிவு செய்ததாக அப்போஸ்தலனாகிய யோவான் அறிவித்தான் (யோவான் 20:31).

  23. மார்மன் 9:21.

  24. ஏசாயா 40:29.

  25. மத்தேயு 6:14.