வேதங்கள்
2 நேபி 10


அதிகாரம் 10

யூதர்கள் தங்கள் தேவனைச் சிலுவையில் அறைவார்கள் – அவர்கள் அவரில் விசுவாசிக்க ஆரம்பிக்கும் வரையில் சிதறடிக்கப்படுவார்கள் – ஒரு ராஜாவும் ஆட்சி செய்யாமல், அமெரிக்கா சுதந்திரத்தின் தேசமாக இருக்கும் – தேவனிடத்தில் ஒப்புரவாகி, அவரின் கிருபை மூலம் இரட்சிப்பை ஆதாயம் பண்ணுங்கள். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இப்பொழுது, என் பிரியமான சகோதரரே, யாக்கோபாகிய நான் பேசின இந்த நீதியுள்ள கிளையைக் குறித்து மறுபடியும் பேசுகிறேன்.

2 ஏனெனில் இதோ, நாம் பெற்ற வாக்குத்தத்தங்கள், மாம்சத்தின்பிரகாரமாய் நமக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களாய் இருக்கின்றன; ஆதலால், அவிசுவாசத்தின் நிமித்தம், நம்முடைய அநேக பிள்ளைகள் மாம்சத்திலே அழிவார்கள் என்பது எனக்குக் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும், தேவன் அநேகருக்கு இரக்கமுள்ளவராய் இருப்பார்; நம்முடைய பிள்ளைகள் தங்களின் மீட்பரைப்பற்றிய மெய்யான ஞானத்தைக் கொடுக்கிற அதனுடன் திருப்பச் சேர்க்கப்படுவார்கள்.

3 ஆகவே, இது அவருடைய நாமமாக இருக்க வேண்டும் என தூதன் நேற்று இரவு என்னிடத்தில் பேசினபடியால், கிறிஸ்து, யூதர்களுக்குள்ளே, உலகத்தின் அதிக துன்மார்க்கமான பகுதியாக இருக்கிறவர்கள் மத்தியில் வர வேண்டும், அவர்கள் அவரை சிலுவையிலறைவார்கள், ஏனெனில் இது நமது தேவனுக்கு நீதியாயிருப்பதால், தங்கள் தேவனையே சிலுவையிலறைகிற, பூமியின் வேறு எந்த தேசமும் இல்லை என நான் உங்களுக்குச் சொன்னது போலவே, இது அவசியமாயிருக்கிறது.

4 வல்லமையான அற்புதங்கள் மற்ற தேசத்தார் மத்தியில் நடக்குமெனில், அவர்கள் மனந்திரும்பி அவரே தங்களின் தேவன் என்று அறிந்திருப்பார்கள்.

5 ஆனால், ஆசாரியவஞ்சகத்தாலும், அக்கிரமங்களினாலும் எருசலேமில் உள்ளவர்கள், அவர் சிலுவையில் அறையப்படும்படிக்கு, அவருக்கு விரோதமாய்த் தங்களின் கழுத்துக்களைக் கடினமாக்கினார்கள்.

6 ஆதலால், அவர்களின் அக்கிரமங்களினிமித்தம், அழிவுகள், பஞ்சங்கள், கொடிய நோய்கள், இரத்தஞ்சிந்துதல் ஆகியவை அவர்கள் மீது வரும்; அழிக்கப்படாதவர்கள் எல்லா தேசங்களுக்கும் சிதறடிக்கப்படுவார்கள்.

7 ஆனால் இதோ, கர்த்தராகிய தேவன் சொல்வதாவது; நான் கிறிஸ்து என்று அவர்கள் என்னில் விசுவாசிக்கும் நாள் வரும்போது, பூமியின் மீதுள்ள, அவர்கள் சுதந்தரித்த தேசங்களிலே மாம்சத்தில் அவர்கள் திரும்பச் சேர்க்கப்படுவார்கள் என்று, அவர்களின் பிதாக்களுடன் நான் உடன்படிக்கை செய்தேன்.

8 நீண்ட சிதறலிலிருந்தும், சமுத்திரத்தின் தீவுகளிலிருந்தும், பூமியின் நான்கு பகுதிகளிலிருந்தும் அவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; அவர்களைத் தங்களின் சுதந்திர தேசங்களுக்குக் கொண்டு செல்லுவதில், புறஜாதியாரின் தேசங்கள் என்னுடைய கண்களில் மகத்துவம் பொருந்தியவைகளாக இருக்கும், என்று தேவன் சொல்கிறார்.

9 ஆம், புறஜாதியாரின் ராஜாக்கள், அவர்களை போஷிக்கும் தகப்பன்களாகவும், அவர்களின் இராணிகள், தாபரிக்கிற தாய்மார்களாகவும் இருப்பார்கள். ஆதலால் புறஜாதியாருக்குக் கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் மகத்துவமானதாய் இருக்கிறது. ஏனெனில் அவர் சொல்கிறதை, யார் தர்க்கம் பண்ணமுடியும்?

10 ஆனால், இதோ, இந்த தேசம் உங்களின் சுதந்திர தேசமாகவும், புறஜாதியார் இந்த தேசத்தின் மீது ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயும் இருப்பார்கள் என்று தேவன் சொன்னார்.

11 இந்த தேசம் புறஜாதியாருக்கு சுதந்திரத்தின் தேசமாக இருக்கும். மேலும், இந்த தேசத்தின் மேல் புறஜாதியாரை மேற்கொள்ள, ராஜாக்களே இருக்கமாட்டார்கள்.

12 மற்ற எல்லா தேசங்களுக்கும் விரோதமாய் இந்த தேசத்தை நான் பலப்படுத்துவேன்.

13 சீயோனுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறவன் அழிவான், என்று தேவன் சொல்கிறார்.

14 ஏனெனில் எனக்கு விரோதமாய் ஒரு ராஜாவை எழுப்புகிறவன் அழிவான். ஏனெனில் பரலோகங்களின் ராஜாவாகிய, கர்த்தராகிய நானே, அவர்களின் ராஜாவாக இருப்பேன். என்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்களுக்கு, நான் என்றென்றைக்கும் ஒளியாய் இருப்பேன்.

15 ஆதலால், இந்தக் காரணத்தினிமித்தம் அவர்கள் மாம்சத்தில் இருக்கும்போதே, மனுபுத்திரரிடத்தில் நான் செய்த என்னுடைய உடன்படிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, நான் அந்தகார இரகசியக் கிரியைகளையும், கொலைகளையும், அருவருப்புக்களையும் அழிக்க வேண்டியதாய் இருக்கிறது.

16 ஆதலால் சீயோனுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிற யூதனும், புறஜாதியானும், சிறைப்பட்டவனும், சுதந்திரவாளியும், ஆணும், பெண்ணும் அழிவார்கள். ஏனெனில் அவர்களே பூமியனைத்திற்கும் வேசியாய் இருக்கிறார்கள்; ஏனெனில் என்னிலிராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான், என்று தேவன் சொல்கிறார்.

17 ஏனெனில், அவர்கள் மாம்சத்தில் இருக்கும்போதே அவர்களிடத்தில் கிரியை செய்வேன், என்று மனுபுத்திரரிடத்தில் நான் செய்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவேன்.

18 ஆதலால், என் பிரியமான சகோதரரே, தேவன் சொல்வதாவது: நான் உன் சந்ததியை புறஜாதியாரின் கையினால் உபத்திரவப்படுத்துவேன்; ஆயினும் அவர்கள், அவர்களுக்கு ஒரு தகப்பனைப்போல இருக்கும்படி புறஜாதியாரின் இருதயங்களை நான் இளகவைப்பேன்; ஆதலால் புறஜாதியார் ஆசீர்வதிக்கப்பட்டு இஸ்ரவேல் வீட்டாருடன் எண்ணப்படுவர்.

19 ஆதலால், உன் சந்ததிக்கும், உன் சந்ததியுடன் எண்ணப்படுபவர்களுக்கும், என்றென்றைக்குமாய் அவர்களின் சுதந்திரதேசமாய் இந்த தேசம் இருக்கும்படி, நான் அர்ப்பணம் பண்ணுவேன். ஏனெனில் இது மற்ற எல்லா தேசங்களைக் காட்டிலும் தெரிந்து கொள்ளப்பட்ட தேசமாக இருக்கிறது என்று தேவன் சொல்லுகிறார், ஆதலால், அதில் வாசம்செய்யும் அனைவரும், என்னை ஆராதிக்கும்படி செய்வேன், என்று தேவன் சொல்லுகிறார்.

20 இப்பொழுதும், என் பிரியமான சகோதரரே, நம் இரக்கமுள்ள தேவன் நமக்கு இந்தக் காரியங்களைக் குறித்து, இவ்வளவு மகத்துவமான ஞானத்தைக் கொடுக்கிறதைக் காண்கிறபடியால், அவரை நாம் நினைவுகூர்வோமாக. நம் பாவங்களை ஒதுக்கி வைப்போமாக. நாம் தூர தள்ளிவிடப்படாததினிமித்தம், நம்முடைய தலைகளைத் தொங்கவிடாமலிருப்போமாக. இருப்பினும் நம்முடைய சுதந்திர தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நாம் ஒரு மேன்மையான நிலத்திற்கே நடத்தப்பட்டோம், கர்த்தர் சமுத்திரத்தை நம் பாதையாக்கினார். நாம் சமுத்திரத்தின் தீவின்மீது இருக்கிறோம்.

21 ஆனால் சமுத்திரத்தின் தீவுகளில் இருப்பவர்களுக்கு கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் மகத்துவமானதாய் இருக்கின்றன. ஆதலால் அது தீவுகள் என்று சொல்லுவதாலே, இதைவிட அதிகமான தீவுகள் இருக்க வேண்டும்; அவைகளும் நம் சகோதரர்களால் வாசம் பண்ணப்பட்டுள்ளன.

22 ஏனெனில் இதோ, கர்த்தராகிய தேவன் தன் சித்தம் மற்றும் பிரியத்தின்படியே இஸ்ரவேலின் வீட்டாரை அவ்வப்போது வழிநடத்தியிருக்கிறார். இப்பொழுதும் இதோ, முறிக்கப்பட்டுப் போனவர்கள், அனைவரையும் கர்த்தர் நினைவுகூர்வதால், அவர் நம்மையும் நினைவுகூர்கிறார்.

23 ஆதலால், உங்கள் இருதயங்களில் திடன் கொள்ளுங்கள். நீங்கள் என்றுமுள்ள மரணத்தின் வழி அல்லது நித்திய ஜீவனின் வழியைத் தேர்ந்தெடுக்க நீங்களே செயல்பட, நீங்கள் சுதந்திரவாளிகளாய் இருக்கிறீர்கள் என்பதை நினைவுகூருங்கள்.

24 ஆதலால், என் பிரியமான சகோதரரே, மாம்சம் மற்றும் பிசாசின் சித்தத்திற்கு அல்ல, தேவனுடைய சித்தத்திற்கே உங்களை ஒப்புரவாக்குங்கள். நீங்கள் தேவனுடன் ஒப்புரவாகிய பின்னர், தேவனின் கிருபையினாலேயே, அதன் மூலம் மாத்திரமே, மீட்கப்படுவீர்கள் என்பதை நினைவுகூருங்கள்.

25 ஆதலால் தேவனுடைய என்றுமுள்ள ராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படவும், தெய்வீக கிருபையினால் அவரை நீங்கள் துதிக்கவும், பாவநிவர்த்தியின் வல்லமையால் நித்திய சாவிலிருந்தும், உயிர்த்தெழுதலின் வல்லமையால், மரணத்திலிருந்தும் தேவன் உங்களை எழுப்புவாராக. ஆமென்.