வேதங்கள்
2 நேபி 27


அதிகாரம் 27

கடைசிக்காலங்களில், பூமியை அந்தகாரமும், மதமாறுபாடும் மூடுதல் – மார்மன் புஸ்தகம் வெளிவரும் – மூன்று சாட்சிகள், புஸ்தகத்தைக் குறித்து சாட்சி கொடுப்பர் – கல்விமான் முத்திரையிடப்பட்ட புஸ்தகத்தை வாசிக்க இயலாது என்பான் – கர்த்தர் அற்புதமும், மகத்துவமுமுள்ள கிரியை செய்வார் – ஏசாயா 29ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஆகிலும் இதோ, கடைசி நாட்களில், அல்லது புறஜாதியாரின் நாட்களிலே, புறஜாதியாரின் தேசங்களனைத்தும் யூதர்களும், இந்த நிலத்தின்மீது வருபவர்களும், இதர நிலங்களிலிருப்போருமான, ஆம், பூமியின் நிலங்களிலிருக்கும் யாவரும் இதோ, அக்கிரமத்தாலும், பற்பல அருவருப்புகளாலும் குடித்து வெறிப்பார்கள்.

2 அந்த நாள் வரும்போது, அவர்களைச் சேனைகளின் கர்த்தராகிய தேவன், இடிமுழக்கத்தாலும், பூமி அதிர்ச்சியாலும், பெருத்த சத்தத்தாலும், புயலாலும், சூறைக்காற்றாலும், பட்சிக்கிற நெருப்பின் அக்கினி ஜூவாலையினாலும் சந்திப்பார்.

3 சீயோனுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறவர்களும் இடுக்கண் புரிகிற அனைத்து தேசங்களும், இராக்கால தரிசனத்தின் சொப்பனத்துக்கு ஒப்பாயிருப்பார்கள்; ஆம், அது அவர்களிடத்தில் பசியாயிருக்கிறவன் இதோ, தான் புசிக்கிறதாய் சொப்பனம்கண்டு விழிக்கும்போது, அவன் ஆத்துமா வெறுமையாயிருக்கிறது போலவும், தாகமாயிருக்கிறவன், இதோ, தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும் விழிக்கும்போது, விடாய்த்துள்ள ஆத்துமா பசியாறாமல் மயக்கமாயிருப்பதுபோலவும், சீயோன் பர்வதத்திற்கு விரோதமாய் யுத்தம் செய்கிற சகல தேசங்களின் திரளானோரும் அப்படியே இருப்பார்கள்.

4 ஏனெனில், இதோ அக்கிரமம் செய்கிற அனைவரும், தரித்து நின்று திகையுங்கள். நீங்கள் சத்தமிட்டு அழுவீர்கள்; ஆம் நீங்கள் குடித்து வெறிப்பீர்கள், ஆனால் திராட்சை ரசத்தால் அல்ல. நீங்கள் தள்ளாடுவீர்கள். ஆனால் மதுபானத்தால் அல்ல.

5 ஏனெனில் இதோ, கனநித்திரையின் ஆவியைக் கர்த்தர் உங்கள்மீது ஊற்றினார். ஏனெனில் இதோ, நீங்கள் உங்கள் கண்களை மூடினீர்கள். தீர்க்கதரிசிகளையும் தள்ளினீர்கள், உங்கள் அக்கிரமத்தினிமித்தம் அவர் உங்கள் அதிகாரிகளையும், ஞானதிருஷ்டிக்காரர்களையும் மறைத்தார்.

6 கர்த்தராகிய தேவன் உங்களிடத்தில் ஒரு புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கொண்டுவருவார். அவைகள் நித்திரையடைந்தவர்களின் வார்த்தைகளாயிருக்கும்.

7 இதோ, அந்தப் புஸ்தகம் முத்திரையிடப்படும்; புஸ்தகத்திலே உலகத்தோற்ற முதல் அதன் முடிவுவரைக்குமாக, தேவனிடத்திலிருந்து ஒரு வெளிப்படுத்தல் இருக்கும்.

8 ஆகையால், முத்திரையிடப்பட்ட காரியங்களினிமித்தம், ஜனத்தின் துன்மார்க்கம், மற்றும் அருவருப்புகளின் நாளிலே, முத்திரையிடப்பட்ட காரியங்கள் கொடுக்கப்படமாட்டாது. ஆதலால் அவர்களிடத்திலிருந்து அந்தப் புஸ்தகம் மறைத்து வைக்கப்படும்.

9 ஆனால் அந்தப் புஸ்தகம் ஒரு மனுஷனிடத்தில் கொடுக்கப்படும். புழுதியிலே நித்திரையடைந்தவர்களின் வார்த்தைகளான, அந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளை, அவன் வெளியே கொண்டுவருவான். அவன் அந்த வார்த்தைகளை மற்றொருவனிடத்தில் ஒப்படைப்பான்.

10 ஆனால் முத்திரையிடப்பட்டிருக்கிற வார்த்தைகளையோ, புஸ்தகத்தையோ அவன் வெளியிடான். ஏனெனில் புஸ்தகம் தேவனுடைய வல்லமையினால் முத்திரையிடப்படும். இதோ முத்திரையிடப்பட்ட வெளிப்படுத்தல், உலகத்தின் ஆதிமுதல் அதன் முடிவுவரைக்குமான எல்லா காரியங்களையும், அவைகள் வெளிப்படுத்துவதாய் இருக்கிறபடியால், அவைகள் கர்த்தருடைய சொந்த ஏற்ற காலத்தில் வெளியே வரும்வரைக்கும் புஸ்தகத்திலேயே வைக்கப்படும்.

11 முத்திரையிடப்பட்ட புஸ்தகத்தின் வார்த்தைகள், கூரைகளின்மேல் வாசிக்கப்படும் காலம் வரும்; அவைகள் கிறிஸ்துவின் வல்லமையினால் வாசிக்கப்படும்; உலக முடிவுபரியந்தம் இருக்கப்போகிறதும் மனுபுத்திரர் மத்தியிலிருக்கிறதுமான சகல காரியங்களும், மனுபுத்திரருக்கு வெளிப்படுத்தப்படும்.

12 ஆதலால், நான் யாரைக்குறித்துப் பேசினேனோ, அந்த மனுஷனிடத்தில் இப்புஸ்தகம் ஒப்படைக்கப்படுகிற நாளிலே, தேவனுடைய வல்லமையினால், மூன்று சாட்சிகள் மற்றும் இப்புஸ்தகம் ஒப்படைக்கப்படுபவர் காண்பதைத் தவிர, வேறொருவருடைய கண்களும் அதைக் காணாதபடிக்கு, உலகத்தினுடைய கண்களிலிருந்து அந்தப் புஸ்தகம் மறைக்கப்படும்; அவர்கள் இந்தப் புஸ்தகத்தையும், அதிலுள்ளவைகளின் உண்மையையும் குறித்து சாட்சி கொடுப்பார்கள்.

13 தேவனுடைய சித்தத்தின்படியே, மனுபுத்திரருக்கு அவரின் வார்த்தையை சாட்சி பகர, சிலரைத் தவிர வேறொருவரும் அதைக் காணமாட்டார்கள்; மரித்தோர் பேசுவதைப்போல விசுவாசமுள்ளவர்களின் வார்த்தைகள் பேசவேண்டும், என்று கர்த்தராகிய தேவன் சொல்லியிருக்கிறாரே.

14 ஆனபடியால், கர்த்தராகிய தேவன் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளை வெளியே கொண்டுவரும்படி புறப்படுவார். அவருக்கு நன்மையாய்ப்படுகிறபடியே அநேக சாட்சிகளின் வாயினாலே அவர் தம் வார்த்தையை ஸ்தாபிப்பார்; தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கிறவனுக்கு ஐயோ!

15 இதோ, ஒருவனிடத்தில் இந்தப் புஸ்தகத்தை ஒப்புவித்து, அவனை நோக்கி: முத்திரையிடப்படாத வார்த்தைகளை எடுத்துக்கொண்டுபோய் மற்றொருவனிடத்தில் ஒப்படைத்துவிடு. அவன் அதை கல்விமானிடத்தில் காண்பித்து, இதை வாசிக்கும்படி உம்மை வேண்டுகிறேன், என்பான். அதற்குக் கல்விமான்: புஸ்தகத்தை இங்கே கொண்டுவாரும், வாசிக்கிறேன், என்பான்.

16 இப்பொழுது, தேவனுடைய மகிமைக்காக அல்லாமல் உலகப் புகழுக்காகவும், ஆதாயம் அடையவுமே இதை அவர்கள் சொல்லுவார்கள்.

17 அப்பொழுது அந்த மனுஷன்: அது முத்திரையிடப்பட்டுள்ளதால், அந்தப் புஸ்தகத்தை நான் கொண்டுவர முடியாது, என்பான்.

18 பின்பு கல்விமான்: நான் அதைப் படிக்கமுடியாது என்பான்.

19 ஆனபடியால், கர்த்தராகிய தேவன் மறுபடியும் புஸ்தகத்தையும், அதிலுள்ள வார்த்தைகளையும், கல்லாதவனிடத்தில் ஒப்புவிப்பார். அதற்குக் கல்லாதவன்: நான் கல்விமான் அல்லவே, என்பான்.

20 பின்பு கர்த்தராகிய தேவன் அவனிடத்தில்: கல்விமான்கள் அவைகளைப் புறக்கணித்ததினிமித்தம், அவைகளை அவர்கள் வாசிக்க கூடாது. நான் என் சொந்த கிரியையை செய்யக்கூடும்; ஆதலால் நான் உனக்குக் கொடுக்கும் வார்த்தைகளை நீ வாசிப்பாயாக என்றார்.

21 முத்திரையிடப்பட்டவைகளை தொடாதே, ஏனெனில் அவற்றை என்னுடைய சொந்த ஏற்ற காலத்திலே கொண்டுவருவேன், ஆதலால், என் சுயகிரியையை நான் செய்ய எனக்கு வல்லமையுண்டென்று நான் மனுபுத்திரருக்கு காண்பிப்பேன்.

22 ஆதலால், நான் உனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை நீ படித்து, உனக்கு நான் வாக்குத்தத்தம்பண்ணின சாட்சிகளைப் பெற்ற பின்பு, மனுபுத்திரருக்கு அனைத்துக் காரியங்களையும் வெளிப்படுத்த, என் சொந்த ஞானத்தில் ஏற்றதாய் இருக்கிறதா, என நான் காணும்வரைக்கும், நீ வாசிக்காத வார்த்தைகளை நான் பாதுகாக்க, நீ மறுபடியும் புஸ்தகத்தை முத்திரையிட்டு, எனக்குள் மறைத்து வைப்பாயாக.

23 இதோ, நானே தேவன்; நான் அற்புதங்களின் தேவன். நான் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும், மாறாதவர் என்பதை உலகத்திற்குக் காண்பிப்பேன். மனுபுத்திரரின் விசுவாசத்தினாலேயல்லாமல் அவர்களுக்குள்ளே நான் கிரியை செய்வதில்லை, என்பார்.

24 மீண்டும், கர்த்தர், தனக்கு ஒப்படைக்கப்பட்ட வார்த்தைகளை வாசிக்கிறவனை நோக்கி:

25 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது, அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம், மனுஷராலே போதிக்கப்பட்ட கட்டளையாயிருக்கிறது.

26 ஆதலால், நான் இந்த மக்களுக்குள்ளே ஒரு மகத்துவமுள்ள கிரியை செய்யப் புறப்படுவேன். ஆம் அது ஒரு அற்புதமும் மகத்துவமுமுள்ள கிரியை. ஏனெனில், ஞானிகளின் ஞானமும், கல்விமான்களின் ஞானமும் கெட்டுப்போகும். விவேகிகளின் விவேகம் மறைக்கப்படும்.

27 தங்கள் ஆலோசனையைக் கர்த்தரிடத்திலிருந்து மறைக்கத் தீவிரமாய் தேடுகிறவர்களுக்கு ஐயோ! மேலும் அவர்கள் கிரியைகள் அந்தகாரத்திலிருக்கின்றன. நம்மைக் காண்கிறவர் யார், நம்மை அறிந்தவர் யார் என்றும் சொல்லுகிறார்கள். மேலும் அவர்கள் மெய்யாகவே, காரியங்களைத் தலைகீழாக நீங்கள் திருப்புவது, குயவனின் களிமண்ணைப்போல மதிக்கப்படும் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் இதோ நான் அவர்களின் எல்லாக் கிரியைகளையும் அறிந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காண்பிப்பேன் என சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். உண்டாக்கப்பட்டது, தன்னை உண்டாக்கினவரைக் குறித்து, அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும், உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக் குறித்து, அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லுமோ, என்பார்.

28 இதோ, சேனைகளின் கர்த்தர், சொல்வது என்னவெனில்: லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறுவதற்கு இன்னும் கொஞ்சக் காலமேயுள்ளது என மனுபுத்திரருக்கு நான் காண்பிப்பேன். செழிப்புள்ள வயல்வெளி, காட்டுக்கு சமமாய் மதிக்கப்படும் என்கிறார்.

29 அந்நாளிலே செவிடர் அந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்பார்கள், குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் நீங்கலாகப் பார்வையடையும்.

30 சாந்த குணமுள்ளவர்கள் விருத்தியடைந்து, அவர்கள் சந்தோஷம் கர்த்தருக்குள்ளாக இருக்கும். மனுஷருக்குள் எளிமையானோர் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.

31 நிச்சயமாக கர்த்தர் ஜீவிக்குமளவும், கொடியவன் அதமாக்கப்பட்டு, பரியாசக்காரன் நிர்மூலமாக்கப்பட்டு, அக்கிரமத்திற்காகக் காத்திருந்தவர்கள் அனைவரும் தள்ளப்பட்டுப் போவதை, அவர்கள் காண்பார்கள்

32 ஒரு வார்த்தையினிமித்தம், ஒரு மனுஷனைக் குற்றவாளியாக்கி, நியாயவாசலில் கடிந்துகொள்கிறவனுக்கு ஒரு கண்ணியை வைத்து, பயனற்ற பொருளைப்போல, நியாயவானைத் தள்ளுகிறவர்கள் சங்கரிக்கப்படுவார்கள்.

33 ஆதலால், ஆபிரகாமை மீட்ட கர்த்தர் யாக்கோபின் வீட்டாரைக் குறித்துச் சொல்லுகிறதாவது: இனி யாக்கோபு வெட்கப்படுவதுமில்லை, அவன் முகம் வெளிருவதுமில்லை.

34 ஆனால் அவன் என் கரங்களின் கிரியையாகிய, தன் பிள்ளைகளைத், தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள், யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

35 ஆவியிலே தவறு செய்தவர்கள், புரிந்து கொள்வார்கள். முறுமுறுத்தவர்களும் உபதேசத்தைக் கற்பார்கள்.