வேதங்கள்
2 நேபி 25


அதிகாரம் 25

தெளிவானவற்றில் நேபி மகிமைப்படுதல் – கடைசிக் காலங்களில் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் புரிந்துகொள்ளப்படும் – பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி, மேசியாவைச் சிலுவையிலறைவார்கள். அவர்கள் சிதறடிக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்படுதல் – மேசியாவை அவர்கள் விசுவாசிக்கும்போது அவர்கள் திரும்பிச் சேர்க்கப்படுவார்கள் – எருசலேமைவிட்டு லேகி சென்று அறுநூறு வருஷங்களுக்குப் பின்பு, அவர் முதலாவது முறையாக வருவார் – நேபியர்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கிறிஸ்துவிலே விசுவாசித்தல். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இப்பொழுது நேபியாகிய நான், ஏசாயாவின் வாயால் பேசப்பட்டதும், நான் எழுதின வார்த்தைகளுமானவற்றைக் குறித்துச் சற்று பேசுகிறேன். ஏனெனில் என் ஜனத்தின் அநேகர், யூதர்கள் மத்தியில் தீர்க்கதரிசனமுரைத்தலின் தன்மையைக் குறித்து அறியாததனாலே, இதோ, ஏசாயா பேசிய பல காரியங்களை, அவர்கள் புரிந்துகொள்வது கடினமானதாயிருந்தது.

2 நேபியாகிய நான், யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்த அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கவில்லை; ஏனெனில் அவர்களின் கிரியைகள் இருளின் கிரியைகளாகவும், அவர்களின் நடப்பித்தல்கள், அருவருப்பானவைகளாகவுமிருந்தன.

3 ஆகையால், தேவன் பேசிய வார்த்தையின்படியே, எல்லா தேசங்களின் மீதும் வரவிருக்கிற, அவருடைய நியாயத்தீர்ப்புகளை என் ஜனத்தாரும், நான் எழுதுகிற இந்தக் காரியங்களைப் பெறவிருக்கிற சகலமானோரும், அறியும்படிக்கே எழுதுகிறேன்.

4 ஆதலால், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனமே கேளுங்கள். என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். ஏனெனில் ஏசாயாவின் வார்த்தைகள் உங்களுக்குத் தெளிவற்றதாய் இருந்தாலும், தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்பட்ட அனைவருக்கும் அவை தெளிவானதாயிருக்கிறது. ஆனால், எனக்குள்ளிருக்கும் ஆவியின்படியே நான் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசனம் கொடுக்கிறேன். ஆதலால் என் தகப்பனுடன் நான் எருசலேமிலிருந்து வெளியே வந்த சமயம் முதற்கொண்டு, என்னுடனிருந்து கொண்டிருக்கிற தெளிவின்படியே நான் தீர்க்கதரிசனமுரைக்கிறேன். ஏனெனில் இதோ, என் ஜனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குத் தெளிவாய்ப் பேசுவதில் என் ஆத்துமா களிகூருகிறது.

5 ஆம், ஏசாயாவின் வார்த்தைகளில் என் ஆத்துமா களிகூருகிறது, ஏனெனில் நான் எருசலேமிலிருந்து வந்தேன், யூதர்களின் காரியங்களை என் கண்கள் கண்டிருக்கின்றன, மேலும் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தையை யூதர்கள் அறிந்திருக்கிறார்கள், என்பதை நான் அறிவேன். மேலும் யூதருக்குள்ளே பேசப்பட்ட வார்த்தைகளை, அவர்களே அல்லாமல் மற்ற எந்த ஜனமும், யூதர்களுடைய தன்மையின்படி போதிக்கப்பட்டிருந்தாலொழிய, புரிந்துகொள்வது கூடாத காரியமாயிருக்கிறது.

6 ஆனால் இதோ, நேபியாகிய நான் யூதர்களுடைய முறையின்படி என் பிள்ளைகளுக்கு போதிக்கவில்லை, நான் எருசலேமில் வாசம் செய்திருக்கிறபடியால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நான் அறிவேன். மேலும் ஏசாயா பேசின சகலமானவற்றின்படி, யூதர்கள் மத்தியில் சம்பவித்த தேவனுடைய நியாயத்தீர்ப்பை என் பிள்ளைகளுக்குக் குறிப்பிட்டிருக்கிறேன். அவைகளை நான் எழுதுவதில்லை.

7 ஆனால் இதோ, என்னுடைய தெளிவின்படியே என் சொந்த தீர்க்கதரிசனத்தை நான் தொடர்கிறேன்; அதிலே எந்த மனுஷனும் தவறு செய்யமுடியாது என அறிவேன்; ஆயினும், அவைகள் சம்பவிக்கும் காலத்தின் நிச்சயத்தை, ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்படும் நாட்களில் மனுஷர் அறிவார்கள்.

8 ஆதலால், மனுபுத்திரருக்கு அவை மேன்மையுள்ளவையாக இருக்கும். அவை அப்படியல்ல, என்று கருதுபவர்களுக்குக் குறிப்பாய்ப் பேசி வார்த்தைகளை என் சொந்த ஜனத்திற்கு மட்டும் வரையறுப்பேன். ஏனெனில், கடைசி காலங்களில் அவை அவர்களுக்கு அதிக மதிப்புள்ளவையாயிருக்கும், என நான் அறிவேன். அந்த நாளிலே அதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள், ஆதலால் அவர்களின் நலனுக்காக நான் அவைகளை எழுதியுள்ளேன்.

9 அக்கிரமத்தினிமித்தம் யூதர்கள் மத்தியில் ஒருதலைமுறை அழிக்கப்பட்டது போலவே, அவர்களின் அக்கிரமங்களுக்குத் தக்கதாக தலைமுறை தலைமுறைதோறும் அழிக்கப்பட்டனர். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்படாமல், அவர்களில் யாதொருவனும் அழிக்கப்படவில்லை.

10 ஆதலால், எருசலேமை என் தகப்பன் விட்டுச்சென்ற உடனே, அவர்கள்மீது வரப்போகிற அழிவைக்குறித்து அவர்கள் சொல்லப்பட்டிருந்தனர். ஆயினும், அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினர். என் தீர்க்கதரிசனத்தின்படியே பாபிலோனுக்குள் சிறைபிடிக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் அழிக்கப்பட்டனர்.

11 இப்பொழுது எனக்குள்ளிருக்கும் ஆவியினிமித்தம் இதை நான் பேசுகிறேன். மேலும் அவர்கள் தூக்கிச் செல்லப்பட்டவராயிருப்பினும் அவர்கள் மறுபடியும் திரும்பி, எருசலேம் தேசத்தில் வாசம் செய்வார்கள்; ஆதலால் அவர்களின் சுதந்திர தேசத்திலே மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.

12 ஆனால் இதோ, அவர்களிடத்தில் யுத்தங்களும் யுத்தங்களின் வதந்திகளும் இருக்கும். வானம் மற்றும் பூமியின் பிதாவாகிய, பிதாவின் ஒரேபேறானவர் வந்து, தன்னையே மாம்சத்தில் அவர்களுக்கு வெளிப்படுத்தும் நாளிலே, இதோ, அவர்களின் அக்கிரமங்களினிமித்தமும், அவர்களின் இருதயங்களின் கடினத்தாலும், அவர்களின் கழுத்துக்களின் இறுக்கத்தாலும், அவரை நிராகரிப்பார்கள்.

13 இதோ, அவர்கள் அவரைச் சிலுவையிலறைவார்கள்; அவர் மூன்று நாட்களளவும் கல்லறையில் வைக்கப்பட்ட பின்பு, அவர் தன் செட்டைகளில் குணமாக்குதலுடனே, மரித்தோரிலிருந்து எழும்புவார்; அவரின் நாமத்தில் விசுவாசிக்கிற யாவரும் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள். ஆதலால் நான் அவருடைய நாளைக் கண்டிருப்பதாலும், அவருடைய பரிசுத்த நாமத்தை என் உள்ளம் துதிக்கிறதாலும், என் ஆத்துமா அவரைக் குறித்து தீர்க்கதரிசனமுரைப்பதில் களிகூருகிறது.

14 மரித்தோரிலிருந்து மசியா உயிர்த்தெழுந்து, தன் நாமத்தில் விசுவாசிக்கிற யாவருக்கும் தன்னுடைய ஜனத்திற்குத் தன்னையே வெளிப்படுத்திய பின்பு, இதோ எருசலேம் மறுபடியும் அழிக்கப்படும். தேவனுக்கும் அவருடைய சபையின் ஜனத்திற்கும் விரோதமாய் சண்டையிடுகிறவர்களுக்கு, ஐயோ.

15 ஆதலால், எல்லா தேசங்களுக்கும், யூதர்கள் சிதறடிக்கப்படுவார்கள்; ஆம், பாபிலோனும் அழிக்கப்படும்; ஆதலால் மற்ற தேசங்களால் யூதர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.

16 அவர்கள் சிதறடிக்கப்பட்டு, மனுஷகுலம் யாவருக்குமான முடிவற்ற பாவநிவர்த்தியிலும், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவிலும் விசுவாசிக்கும்படி உணர்த்தப்படும்வரைக்கும், தலைமுறை தலைமுறையாக, ஆம் அநேக தலைமுறைகளுக்குக் கர்த்தராகிய தேவன் பிற தேசத்தார் மூலம் அவர்களைச் சவுக்கால் அடித்திருக்கிறார். அந்த நாள் வரும்போது, அவர்கள் கிறிஸ்துவில் விசுவாசிப்பார்கள். அப்பொழுது இந்தக் காரியங்களை அவர்கள் விசுவாசிக்கவேண்டியது அவசியமாயிருக்கும்படிக்கு, மற்றொரு மேசியாவிற்காக இனி எதிர்நோக்காமல் தூய இருதயங்களோடும், சுத்த கரங்களோடும், அவருடைய நாமத்திலே பிதாவைத் தொழுதுகொள்வார்கள்.

17 கர்த்தர் மறுபடியும் இரண்டாவது விசை தன் ஜனத்தைத் தொலைந்த மற்றும் வீழ்ந்த நிலையில் இருந்து திரும்பச் சேர்க்கும்படி, தன் கரத்தை நீட்டுவார். ஆதலால் மனுபுத்திரர் மத்தியில், அவர் ஒரு அற்புதமும் ஆச்சரியமுமான கிரியை செய்யப் புறப்படுவார்.

18 ஆதலால், அவர்களைக் கடைசிக் காலத்தில் நியாயம் விசாரிக்கிற வார்த்தைகளான, தம் வார்த்தைகளை அவர்களுக்குள்ளே கொண்டுவருவார். அவர்களால் புறக்கணிக்கப்பட்டவராகிய மெய்யான மேசியாவைப்பற்றி அவர்களுக்கு உணர்த்தும் நோக்கத்திற்காகவும் மேசியா வருவதற்கு இனியும் நோக்கிப்பார்க்கத் தேவையில்லை என்பதை உணர்த்தும்பொருட்டாகவும், அவர்களுக்கு அவை கொடுக்கப்படும். ஏனெனில் மக்களை வஞ்சிக்கும் கள்ள மேசியாவைத் தவிர அங்கே ஒருவனும் வரான். ஒரே ஒரு மேசியாவைப்பற்றித்தான் தீர்க்கதரிசிகளால் பேசப்பட்டிருக்கிறது. அந்த மேசியா யூதர்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

19 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குத்தக்கதாக, எருசலேமைவிட்டு என் தகப்பன் வந்த காலத்திலிருந்து அறுநூறாவது வருஷத்திலே மேசியா வருவார். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் தேவனுடைய தூதனின் வார்த்தைகளின்படி, அவர் நாமம் தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்து என்பதாகும்.

20 இப்பொழுதும் என் சகோதரரே, நீங்கள் தவறு செய்யக்கூடாதென்பதற்காக நான் தெளிவாகப் பேசியுள்ளேன். மேலும் எகிப்து தேசத்திலிருந்து வெளியே இஸ்ரவேலைக் கொண்டுவந்தவரும், விஷ சர்ப்பங்களால் தேசத்தார்கள் கடிக்கப்பட்டபோது அவர்கள் முன்பு மோசே தூக்கின சர்ப்பத்தை அவர்கள் தங்கள் கண்களால் நோக்கினால் மாத்திரமே, அவர்களைச் சொஸ்தமாக்க, அவனுக்கு வல்லமையைக்கொடுத்து, அவன் கன்மலையை அடிக்க தண்ணீர் புறப்பட்டு வரும்படியாக அவனுக்கு வல்லமையைக் கொடுத்தவருமாகிய ஆம், இதோ, இந்தக் காரியங்கள் உண்மையானவை என நான் உனக்குச் சொல்லுகிறேன், கர்த்தராகிய தேவன் ஜீவிக்குமளவும், என்னால் பேசப்பட்ட இந்த இயேசு கிறிஸ்து என்ற நாமத்தைத் தவிர, மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு வேறு எந்த நாமமும் பரலோகத்தின் கீழ் கொடுக்கப்படவில்லை.

21 ஆதலால் பூமி நிலைக்கும் காலம் வரை, அவனுடைய சந்ததி அழியாது என யோசேப்புக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக, நான் எழுதிய இந்தக் காரியங்கள் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, என் சந்ததிக்கு தலைமுறை தலைமுறைக்கும் கொடுக்கப்படும், என்ற வாக்குத்தத்தத்தை இந்த நோக்கத்திற்காகவே கர்த்தராகிய தேவன் எனக்கு வாக்களித்தார்.

22 ஆதலால், உலகம் எவ்வளவு காலம் நிலைத்திருக்குமோ, அவ்வளவு காலமும் தலைமுறை தலைமுறைக்கும் இந்தக் காரியங்கள் செல்லும்; அவைகள் தேவனின் சித்தம் மற்றும் பிரியத்தின்படியே செல்லும், அவைகளை வைத்திருக்கும் தேசங்கள், அவைகளாலே எழுதப்பட்டிருக்கிற வார்த்தைகளின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

23 ஏனெனில் எங்கள் பிள்ளைகளும், எங்கள் சகோதரரும், கிறிஸ்துவில் விசுவாசிக்கவும், தேவனோடுகூட ஒப்புரவாகவும் வேண்டுமென்று, அவர்களுக்கு உணர்த்துவதற்கு எழுதவே நாங்கள் கருத்துடன் பிரயாசப்படுகிறோம்; ஏனென்றால் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்பு, நாம் கிருபையாலேயே இரட்சிக்கப்படுகிறோம், என்பதை நாங்கள் அறிவோம்.

24 நாங்கள் கிறிஸ்துவிலே விசுவாசித்தாலும், மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, நியாயப்பிரமாணம் நிறைவேறுமட்டும் கிறிஸ்துவை திடநம்பிக்கையாய் எதிர்பார்க்கிறோம்.

25 ஏனெனில், இந்த நோக்கத்திற்காகவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. ஆகவே நமக்கு நியாயப்பிரமாணம் மரித்து, நம்முடைய விசுவாசத்தினிமித்தம், கிறிஸ்துவிலே உயிர்ப்பிக்கப் பெற்றுள்ளோம். இருப்பினும் நாம் கட்டளைகளினிமித்தம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறோம்.

26 எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறியும்பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம், கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கிறோம். எங்கள் தீர்க்கதரிசனங்களின்படியே நாங்கள் எழுதுகிறோம்.

27 ஆதலால், எங்கள் பிள்ளைகள் உயிரற்ற நியாயப்பிரமாணத்தைக் குறித்து அறியும்படிக்கு, நியாயப்பிரமாணத்தைக் குறித்து நாங்கள் பேசுகிறோம். நியாயப்பிரமாணத்தின் உயிரற்ற தன்மையை அறிவதின்மூலமாய், கிறிஸ்துவிலிருக்கும் அந்த ஜீவனை அவர்கள் எதிர்நோக்கிப் பார்க்கலாம். என்ன நோக்கத்திற்காக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதென்பதை அறிந்துகொள்ளலாம். கிறிஸ்துவிலே நியாயப்பிரமாணம் நிறைவேறிய பின்பு அதாவது நியாயப்பிரமாணம் முற்றுப்பெற்ற பின்பு, அவருக்கு விரோதமாய்த் தங்கள் இருதயங்களை அவர்கள் கடினப்படுத்தத் தேவையில்லை.

28 இப்பொழுது, இதோ, என் ஜனமே, நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனமாக இருப்பதினிமித்தம், நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது, என்பதற்காக நான் தெளிவாக உங்களிடம் பேசினேன். மேலும் நான் பேசின வார்த்தைகள், உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாய் நிற்கும். ஏனெனில் எந்த மனுஷனுக்கும் உத்தம மார்க்கத்தைப் போதிக்க அவை போதுமானதாயிருக்கிறது, ஏனெனில் கிறிஸ்துவில் விசுவாசித்து அவரை மறுதலியாமலிருப்பதே உத்தம மார்க்கம். அவரை மறுதலிப்பதினித்தம் தீர்க்கதரிசிகளையும், நியாயப்பிரமாணத்தையும் மறுதலிக்கிறீர்கள்.

29 இப்பொழுது இதோ, கிறிஸ்துவில் விசுவாசித்து, அவரை மறுதலியாமலிருப்பதே உத்தம மார்க்கமென நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; கிறிஸ்துவே இஸ்ரவேலின் பரிசுத்தர், ஆகையால் அவர் முன்பாக குனிந்து வணங்கி உங்களின் சகல ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும், உங்களின் முழு ஆத்துமாவோடும், அவரைத் தொழுதுகொள்ளுங்கள். மேலும் இதைச் செய்வீர்களெனில், நீங்கள் எவ்விதத்திலும் புறம்பே தள்ளப்படமாட்டீர்கள்.

30 எவ்வளவு அவசியமானதாயிருக்குமோ அவ்வளவாய், மோசேக்குக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் நிறைவேறும்வரைக்கும், தேவனுடைய காரியங்களையும், நியமங்களையும் நீங்கள் கைக்கொள்ளவேண்டும்.