வேதங்கள்
2 நேபி 13


அதிகாரம் 13

யூதாவும், எருசலேமும் தங்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் தண்டிக்கப்படுதல் – கர்த்தர் தன் ஜனத்திற்காகப் பரிந்துரைத்து நியாயந்தீர்க்கிறார் – சீயோன் குமாரத்திகள் சபிக்கப்பட்டுத், தங்களின் உலகப்பிரகாரமானவற்றின் நிமித்தம் வேதனைக்குட்படுதல் – ஏசாயா 3ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இதோ, கர்த்தர், சேனைகளின் கர்த்தர், எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும், ஊன்றுகோலையும், பற்றுக்கோலையும், ஆகாரமென்கிற முழு ஊன்றுகோலையும், தண்ணீரென்கிற பற்றுக்கோலையும்

2 பராக்கிரமசாலியையும், யுத்த மனுஷரையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், மூப்பனையும்,

3 ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம் பொருந்தினவனையும், ஆலோசகரையும், சாமர்த்திய நிபுணனையும், சாதுரியப் பிரசங்கியையும் விலக்குவார்.

4 நான் அவர்களுக்குப் பிள்ளைகளை அதிபதிகளாகத் தருவேன்; பாலகர்கள் அவர்களை அரசாளுவார்கள்.

5 ஒருவன் மற்றொருவனினாலும், ஒருவன் தன் அயலானாலுமாக, ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள். பெருமையுடன் மூப்பனுக்கு விரோதமாகக் குழந்தையும், கனம் பொருந்தியவனுக்கு விரோதமாகக் கீழ்மகனும் இறுமாப்பாக நடந்து கொள்வார்கள்.

6 அப்பொழுது ஒருவன் தன் தந்தை வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து, உனக்கு வஸ்திரம் இருக்கிறது, எங்களுக்கு அதிபதியாயிரு; இந்தக் கேடு உன் கையின் கீழாக வராமலிருப்பதாக, என்று சொல்லுவான்.

7 அந்த நாளிலே அவன் சபதம்பண்ணி நான் சுகப்படுத்துபவனாக இருக்கமாட்டேன். ஏனெனில் என் வீட்டில் ஆகாரமும் இல்லை, வஸ்திரமும் இல்லை. ஜனத்தின் அதிபதியாக என்னை வைக்க வேண்டாம், என்பான்.

8 ஏனெனில் அவரின் மகிமையின் கண்களை கோபமூட்டும்படி அவர்களின் நாவுகளும், அவர்களின் செய்கைகளும் கர்த்தருக்கு விரோதமாய் இருந்ததின் நிமித்தம் எருசலேம் அழிக்கப்பட்டும், யூதா விழுந்தும் போனது.

9 அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும். அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! ஏனென்றால் அவர்கள் தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

10 உங்களுக்கு நன்மையாய் இருக்கும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; ஏனெனில் அவர்களின் கிரியைகளின் கனியைப் புசிப்பார்கள்.

11 துன்மார்க்கருக்கோ ஐயோ, அவர்கள் அழிந்துபோவார்கள். அவர்கள் தங்கள் கைகளின் பெலனை அனுபவிப்பார்கள்.

12 என் ஜனமே, பிள்ளைகள் அவர்களை ஒடுக்குகிறவர்களாகவும், அவர்கள் மீது ஸ்திரீகள் ஆளுகை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்தியவர்களே உன்னை மோசம் போகப்பண்ணி, உன் பாதைகளின் வழிகளை அழித்தார்கள்.

13 கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.

14 கர்த்தர் தன் ஜனத்தின் மூப்பருடனும், அதன் பிரபுக்களுடனும் நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிப்பார்; ஏனெனில் நீங்கள் இந்தத் திராட்சைத் தோட்டத்தைப் பட்சித்து போட்டீர்கள்; சிறுமையானவர்களிடம் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

15 நீங்கள் சொல்வதென்ன? நீங்கள் என் ஜனத்தை நொறுக்கும்படி அடிக்கிறீர்கள். சிறுமையானவர்களின் முகங்களை நெரிக்கிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்.

16 பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நீட்டி நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, போகும்போது ஒய்யாரமாய் நடந்து தங்கள் கால்களால் ஒலிக்கச் செய்கிறார்கள்.

17 ஆதலால், கர்த்தர் சீயோனின் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாகச் சபிப்பார். கர்த்தர் அவர்களின் இரகசிய பாகங்களையும் வெளியாக்குவார்.

18 அந்த நாளிலே, கர்த்தர் அவர்களின் ஒலிக்கிற ஆபரணங்களின் திடனையும், சுட்டிகளையும், சந்திரனைப்போல வளைந்த ஆரத்தையும்,

19 சரடுகளையும், அஸ்திகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,

20 சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், தலைக்கச்சைகளையும், குப்பிகளையும், கடுக்கன்களையும்,

21 மோதிரங்களையும், மூக்கு அணிகலன்களையும்,

22 மாறக்கூடிய புடவைச் சோடுகளாகிய ஆடைகளையும், சால்வைகளையும், முக்காடுகளையும், மயிர்சுருட்டுங் கருவிகளையும்;

23 கண்ணாடிகளையும், நேர்த்தியான பஞ்சுநூல்களையும், சால்வைகளையும், திரைகளையும், உரித்துப்போடுவார்.

24 சுகந்த வாசனைக்குப் பதிலாக அங்கே துர்நாற்றமும், அரைக்கட்டுக்குப் பதிலாக ஒரு கயிறும், நன்றாக ஒழுங்குபடுத்தின மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், இரவுக்கைச் சலாகைக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப் பதிலாக எரிச்சலும் இருக்கும்.

25 உன் புருஷர் பட்டயத்தாலும், உன் பலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.

26 அவளுடைய வாசல்களே, துக்கித்துப் புலம்பும். அவள் வெறுமையாயிருந்து தரையின் மீது உட்காருவாள், என்கிறார்.