வேதங்கள்
2 நேபி 32


அதிகாரம் 32

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே தூதர்கள் பேசுதல் – மனுஷர் ஜெபித்து, தங்களுக்கென ஞானத்தைப் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து பெறவேண்டும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இதோ, இப்பொழுதும் பிரியமான சகோதரரே, இந்த வழியாய் உட்பிரவேசித்த பின்பு, என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து, உங்கள் இருதயங்களில் சற்று சிந்திக்கிறீர்கள், என நான் எண்ணுகிறேன். ஆனாலும் இதோ, ஏன் இந்தக் காரியங்களை உங்கள் இருதயங்களில் சிந்திக்கிறீர்கள்?

2 பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட பின்பு, நீங்கள் தூதர்களின் பாஷையில் பேசக்கூடுமென்று நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நினைவுகூரவில்லையா? இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் அல்லாமல், நீங்கள் தூதர்களின் பாஷையை எப்படிப் பேசக்கூடும்?

3 தூதர்கள் பரிசுத்த ஆவியானவர் வல்லமையினால் பேசுகிறார்கள்; ஆகையால் அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். ஆகிலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள்; ஏனெனில் இதோ, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.

4 ஆகையால் இப்பொழுதும், நான் இந்த வார்த்தைகளைப் பேசிய பின்பும், அவைகளை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியவில்லையெனில், அது நீங்கள் கேட்காமலும், நீங்கள் தட்டாமலுமிருப்பதினிமித்தமே; ஆகையால் நீங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படவில்லையானால், இருளிலேயே அழிய வேண்டும்.

5 ஏனெனில் இதோ, நீங்கள் இந்த வழியாய் உட்பிரவேசித்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டால், அது நீங்கள் செய்யவேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிக்குமென்று, மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 இதோ, இதுவே கிறிஸ்துவின் உபதேசமாயிருக்கிறது, அவர் தம்மை மாம்சத்தில் உங்களுக்கு வெளிப்படுத்துமளவும், வேறெந்த உபதேசமும் கொடுக்கப்படமாட்டாது. அவர் தம்மை மாம்சத்தில் உங்களுக்கு வெளிக்காட்டும்பொழுது, அவர் உங்களுக்குச் சொல்லும் காரியங்களை நீங்கள் ஆசரிப்பீர்களாக.

7 இப்பொழுதும், நேபியாகிய நான், இதற்கு மேலும் சொல்லமுடியாது, என் உச்சரிப்பை ஆவியானவர் தடுக்கிறார்; நான் மனுஷர்களுடைய அவிசுவாசம், துன்மார்க்கம், அறியாமை, வணங்காக்கழுத்து ஆகியவைகளினிமித்தம் துக்கிக்கும்படி விடப்பட்டிருக்கிறேன்; ஏனெனில், முடிந்தவாறு வார்த்தை தெளிவாயிருக்கும்படி, அது அவர்களுக்குத் தெளிவாகக் கொடுக்கப்பட்டபோதும், அவர்கள் அறிவைத் தேடமாட்டார்கள், அவர்கள் சிறந்த அறிவை உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.

8 இப்பொழுதும், என் பிரியமான சகோதரரே, நீங்கள் உங்கள் இருதயங்களில் இன்னும் சிந்திக்கிறீர்களென்பதை நான் உணர்கிறேன், நான் இந்தக் காரியத்தைக் குறித்துப் பேச சஞ்சலப்படுகிறேன். ஜெபிக்கும்படி மனுஷனுக்குப் போதிக்கும் ஆவியானவருக்கு நீங்கள் செவிகொடுப்பீர்களெனில், நீங்கள் ஜெபிக்கவேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அசுத்த ஆவி ஜெபிக்கும்படி மனுஷனுக்குப் போதிப்பதில்லை, ஆனால் அவன் ஜெபிக்கக்கூடாதெனப் போதிக்கிறது.

9 ஆனால் இதோ, நீங்கள் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபிக்கவேண்டுமென்றும், நீங்கள் செய்வதை அவர் பரிசுத்தமாக்கும்படிக்கும், உங்களின் கிரியை உங்கள் ஆத்தும நலனுக்கேதுவாக இருக்கும்படிக்கும், கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவினிடத்தில் நீங்கள் முதற்கண் ஜெபித்தாலொழிய கர்த்தருக்கு எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாதென்றும் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.