வேதங்கள்
2 நேபி 3


அதிகாரம் 3

எகிப்திலிருந்த யோசேப்பு, நேபியரைத் தரிசனத்திலே காணுதல் – அவன் பிற்கால ஞானதிருஷ்டிக்காரரான ஜோசப் ஸ்மித்தைப்பற்றியும், இஸ்ரவேலை விடுவிக்கவிருக்கிற மோசேயைப்பற்றியும், மார்மன் புஸ்தகம் வருவதைக் குறித்தும், தீர்க்கதரிசனம் உரைத்தான். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 எனக்குக் கடைசியாய்ப் பிறந்த யோசேப்பே, இப்பொழுது நான் உன்னிடம் பேசுகிறேன். நீ வனாந்தரத்திலே என் உபத்திரவக்காலத்தில் பிறந்தாய்; ஆம், என் பெரும் வருத்தத்தின் நாட்களிலே உன் தாய் உன்னைப் பெற்றெடுத்தாள்.

2 இஸ்ரவேலின் பரிசுத்தரின் கட்டளைகளை நீ கைக்கொள்ளுவாயாகில், நீ சுதந்தரிப்பதற்காகவும் உனக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பாய் இருக்கும்படி, உன் சந்ததியோடே, உனது சகோதரரின் சந்ததியும் சுதந்தரிக்கும்படி, மிகவும் விலையேறப்பெற்ற தேசமாகிய, இத்தேசத்தை உனக்குக் கர்த்தர் அருளுவாராக.

3 இப்பொழுதும், எனக்குக் கடைசியாய்ப் பிறந்தவனும், நான் என் உபத்திரவத்தில் வனாந்தரத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவனுமாகிய யோசேப்பே, உன் சந்ததி முழுவதுமாய் சங்கரிக்கப்பட்டுப்போகாதபடி, கர்த்தர் உன்னை என்றென்றைக்குமாய் ஆசீர்வதிப்பாராக.

4 இதோ, நீ என் சந்ததியாய் இருக்கிறாய்; நான் எகிப்திற்குச் சிறைத்தனத்திற்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்ட யோசேப்பின் சந்ததியாய் இருக்கிறேன். கர்த்தர், யோசேப்புடனே செய்த உடன்படிக்கைகள் மகத்துவமானவைகளாய் இருந்தன.

5 ஆதலால், மெய்யாகவே யோசேப்பு நம்முடைய காலத்தைக் கண்டான். இஸ்ரவேல் வீட்டாருக்கு நீதியுள்ள ஒரு கிளையை கர்த்தராகிய தேவன், அவன் சந்ததியிலிருந்து எழும்பப்பண்ணுவார் என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை அவன் பெற்றுக்கொண்டான். மேசியா அல்ல, ஆனால் அந்தரங்க அந்தகாரத்திலிருந்தும், சிறைத்தனத்திலிருந்தும், சுதந்திரத்திற்கு, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, வெளிக்கொண்டுவர, வல்லமையின் ஆவியினாலே, ஆம், பிற்காலங்களிலே, இஸ்ரவேலின் வீட்டாருக்கு மேசியா வெளியரங்கப்படுத்தப்பட வேண்டும், என்ற கர்த்தருடைய உடன்படிக்கைகளை அவர்கள் நினைவுகூரும்பொருட்டு, ஒரு கிளை முறிக்கப்பட வேண்டியதாயிற்று.

6 ஏனெனில், என் சந்ததிக்கென்று தெரிந்துகொள்ளப்படத்தக்க ஒரு ஞானதிருஷ்டிக்காரனை கர்த்தராகிய என் தேவன் எழும்பப் பண்ணுவார், என்று யோசேப்பு மெய்யாகவே சாட்சி கொடுத்தான்.

7 ஆம், யோசேப்பு மெய்யாகவே சொன்னதாவது: கர்த்தர் என்னை நோக்கி, உன் சந்ததியிலிருந்து ஒரு தெரிந்துகொள்ளப்படத்தக்க ஞானதிருஷ்டிக்காரனை நான் எழும்பப் பண்ணுவேன். அவன் உன் சந்ததிக்குள்ளே உயர்வாக எண்ணப்படுவான். அவனுடைய சகோதரர்களாகிய உன் சந்ததிக்கு ஒரு பணியைச் செய்ய நான் அவனுக்கு ஒரு கட்டளையைக் கொடுப்பேன். அந்தப்பணி, உனது பிதாக்களோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் ஞானத்திற்கு அவர்களை கொண்டுவருகிறதினிமித்தம், பெருமதிப்புள்ளதாயிருக்கும்.

8 நான் அவனுக்குக் கட்டளையிடுகிற பணியைத்தவிர மற்ற எந்த வேலையையும் செய்யக்கூடாதென்று, ஒரு கட்டளையை அவனுக்குக் கொடுப்பேன். அவன் என் பணியைச் செய்யப்போகிறதினாலே, என் பார்வையிலே அவனை, பெரியவனாக்குவேன்.

9 இஸ்ரவேலின் வீட்டாரே, என் ஜனத்தை விடுதலையாக்க, உங்களுக்குள்ளே நான் எழும்பப்பண்ணுவேன் என்று சொன்னவன், மோசேயைப்போலவே மகத்தானவனாயிருப்பான்.

10 எகிப்து தேசத்திலிருந்து உனது ஜனத்தை விடுதலையாக்க, மோசேயை எழும்பச்செய்வேன்.

11 ஒரு ஞானதிருஷ்டிக்காரனை, உன் சந்ததியிலிருந்து எழும்பப்பண்ணுவேன். உன் சந்ததிக்கு என் வார்த்தையைக் கொண்டுசெல்லும்படியாகவும், என்னுடைய வார்த்தைகளை எடுத்துச்செல்லும்படியாக மாத்திரம் அல்ல, அவர்களுக்குள் ஏற்கனவே போன வசனங்களைக்குறித்து, அவர்களிடத்தில் என் வார்த்தையை உணர்த்தும்படியாகவும், அவனுக்கு வல்லமையைக் கொடுப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

12 ஆகையால் உன் சந்ததியும் எழுதும்; யூதாவின் சந்ததியும் எழுதும்; உன் சந்ததியால் எழுதப்படுபவைகளும், யூதாவின் சந்ததியால் எழுதப்படுபவைகளும், கள்ள உபதேசங்களைத் தாறுமாறாக்கி, பிணக்குகளை ஒழியப்பண்ணி, உன் சந்ததிக்குள்ளே சமாதானத்தை நிலைவரப்பண்ணி, பிற்காலத்திலே அவர்களைத் தங்களின் பிதாக்களின் ஞானத்திற்கும், என்னுடைய உடன்படிக்கைகளின் ஞானத்திற்கும் கொண்டுவந்து சேர்ந்து வளரும், என்று கர்த்தர் உரைக்கிறார்.

13 இஸ்ரவேலின் வீட்டாரே, உங்களை மறுபடியும் சீர்படுத்தும்படி, என் கிரியையை என்னுடைய சகல ஜனங்களுக்குள்ளும் துவங்குகிற அந்நாளிலே, அவன் பலவீனத்திலிருந்து பராக்கிரமசாலியாக்கப்படுவான், என்று கர்த்தர் உரைக்கிறார்.

14 யோசேப்பு தீர்க்கதரிசனமாய் உரைத்ததாவது: இதோ, அந்த ஞானதிருஷ்டிக்காரனை கர்த்தர் ஆசீர்வதிப்பார். அவனை அழிக்க வகை தேடுகிறவர்கள் தாறுமாறாக்கப்படுவார்கள். ஏனெனில், என் சந்ததியைக் குறித்து கர்த்தரிடத்திலிருந்து நான் பெற்றுக்கொண்ட இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும். இதோ, இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நான் உறுதியாயிருக்கிறேன்.

15 அவன் நாமம் என் நாமத்தின்படியே அழைக்கப்படும். அது அவனுடைய தகப்பனின் நாமத்தின்படியே இருக்கும். அவன் என்னைப்போலவே இருப்பான். கர்த்தர் அவனுடைய கரத்தைக்கொண்டு நடப்பிக்கிற காரியம், கர்த்தருடைய வல்லமையினாலே என் ஜனத்தை இரட்சிப்புக்கு கொண்டுவரும்.

16 ஆம், யோசேப்பு தீர்க்கதரிசனமுரைத்ததாவது: மோசேயின் வாக்குத்தத்தத்தை நான் நிச்சயமாய் நம்புகிறதுபோல, இந்தக் காரியங்களின் நிச்சயத்தையும் அறிவேன். ஏனெனில் கர்த்தர் என்னிடத்தில்: நான் உன் சந்ததியை என்றென்றைக்குமாய் பாதுகாப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.

17 கர்த்தர்: நான் மோசேயை எழும்பப்பண்ணுவேன். அவனுக்கு வல்லமையை ஒரு கோலில் வைத்துத்தருவேன். எழுத்தினாலே அவனுக்கு நியாயத்தீர்ப்புகளைக் கொடுப்பேன். எனினும் அவன் அதிகமாய்ப் பேசாதபடிக்கும் அவன் பேச்சிலே சிறந்தவனாய் விளங்காதபடிக்கும், அவன் நாவைக் கட்டவிழ்க்கமாட்டேன். ஆனால் என் சொந்தக் கையின் விரலினாலே, என்னுடைய நியாயப்பிரமாணத்தை அவனுக்கு எழுதுவேன். அவனுக்கு பிரதிவாசகன் ஒருவனை ஏற்படுத்துவேன் என்று சொன்னார்.

18 கர்த்தர் மேலும் என்னை நோக்கி, உன் சந்ததியாருக்குள்ளே எழும்பப்பண்ணி, அவனுக்கு பிரதிவாசகன் ஒருவனை ஏற்படுத்துவேன். இதோ, அவன் உன் சந்ததியாருக்கு, உன் சந்ததியாரின் எழுத்துக்களை எழுதும்பொருட்டு, அவனுக்குக் கொடுப்பேன். உன் பிரதிவாசகன் அவைகளை அறிவிப்பான்.

19 அவன் எழுதப்போகும் வார்த்தைகள், உன் சந்ததிக்குள்ளே செல்லவேண்டுமென்பது, என் ஞானத்தின்படி அவசியமாய் இருக்கிறது. அது உன் சந்ததி புழுதியிலிருந்து அவர்களை நோக்கி கூக்குரலிட்டது போலிருக்கும்; ஏனெனில் நான் அவர்களின் விசுவாசத்தை அறிந்திருக்கிறேன்.

20 அநேக தலைமுறைகள் கடந்து சென்றபோதிலும், அவர்கள் தங்கள் சகோதரர்களிடம், மனந்திரும்பும்படி புழுதியிலிருந்து கூக்குரலிடுவார்கள். மேலும், அவர்களது கூக்குரல், அவர்களின் வார்த்தைகளுடைய எளிமைக்குத்தக்கதாய்ப் போகும்.

21 அவர்களுடைய விசுவாசத்தினிமித்தம், அவர்களின் வார்த்தைகள் என் வாயிலிருந்து புறப்பட்டு உனது சந்ததியினராகிய அவர்களின் சகோதரருக்குப் போகும். நான் உனது பிதாக்களுக்குச் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்படிக்கு, அவர்களின் விசுவாசத்திலே திடனற்ற அவர்களின் வார்த்தைகளைத் திடனாக்குவேன்.

22 இப்பொழுது, இதோ, என் குமாரனாகிய யோசேப்பே, பூர்வகாலத்தாராகிய என் தகப்பன் இவ்விதமாய்த் தீர்க்கதரிசனமுரைத்தார்.

23 ஆகையால், இந்த உடன்படிக்கையினிமித்தம் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளுக்கு, அவர்கள் செவிகொடுக்கப்போவதினால், உன் சந்ததி அழிக்கப்படமாட்டாது.

24 வார்த்தையிலும், செயலிலும் அநேக நற்கிரியைகள் புரிகிற வல்லமையானவன் தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக இருந்து, மிகுந்த விசுவாசத்தைக், கொண்டவனாய், பராக்கிரமமான அற்புதங்களைச் செய்ய, தேவனின் பார்வையில் மகத்தானவைகளை நடப்பிக்க, இஸ்ரவேல் வீட்டாருக்கும், உனது சகோதரரின் சந்ததிக்கும், அநேகத்தை சீர்ப்படுத்த. அவர்களுக்குள்ளிருந்து ஒருவன் எழும்புவான்.

25 இப்பொழுது, யோசேப்பே நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். இதோ, நீ சிறியவனாய் இருக்கிறபடியாலே உன் சகோதரனாகிய நேபியின் வார்த்தைகளுக்குச் செவி கொடு. நான் பேசின வார்த்தைகளுக்குத் தக்கதாய் உனக்குச் செய்யப்படும். மரித்துக்கொண்டிருக்கிற உன் தகப்பனின் வார்த்தைகளை நினைவில் கொள். ஆமென்.