வேதங்கள்
2 நேபி 9


அதிகாரம் 9

யூதர், தங்களின் சகல வாக்குத்தத்தங்களின் தேசங்களிலும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என யாக்கோபு விளக்குதல் – பாவநிவர்த்தி மனுஷரை வீழ்ச்சியிலிருந்து மீட்டல் – மரித்தோரின் சரீரங்கள் கல்லறையிலிருந்தும், அவர்களுடைய ஆவிகள் பாதாளத்திலிருந்தும், பரதீசிலிருந்தும் வெளிவரும் – அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுவார்கள் – பாவநிவர்த்தி மரணத்திலிருந்தும், பாதாளத்திலிருந்தும், பிசாசிலிருந்தும், நித்திய வேதனையிலிருந்தும் இரட்சித்தல் – நீதிமான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள் – பாவத்திற்குரிய தண்டனைகள் நிர்ணயிக்கப்படுதல் – இஸ்ரவேலின் பரிசுத்தரே வாசற்காவலாளி. ஏறக்குறைய கி.மு. 559–545.

1 இப்பொழுதும், என் பிரியமான சகோதரரே, கர்த்தர் இஸ்ரவேல் வீட்டார் யாவரோடும் உடன்படிக்கை செய்தார் எனவும்,

2 அவர்கள் மெய்யான திருச்சபையினிடத்திற்கும், தேவனுடைய மந்தையினிடத்திற்கும் திரும்பக் கொண்டுவரப்படும் காலம் வரும்வரைக்கும், அவர் ஆதி முதற்கொண்டு தலைமுறை தலைமுறை தோறும், தமது பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயினால் யூதர்களிடம் பேசினார் என்றும், அவர்கள் எப்பொழுது தாங்கள் சுதந்தரித்துக் கொண்ட தேசமாகிய வீட்டில் கூட்டிச் சேர்க்கப்பட்டு, அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசங்களனைத்திலும் ஸ்தாபிக்கப்படுவார்கள், என்ற அவருடைய உடன்படிக்கைகளை நீங்கள் அறியும்படிக்கு இவைகளை வாசித்தேன்.

3 இதோ, என் பிரியமான சகோதரரே, நீங்கள் களிகூரும்படிக்கும், உங்கள் பிள்ளைகள் மேல் தேவனாகிய கர்த்தர் வருஷிக்கப்பண்ணும் ஆசீர்வாதங்களின் நிமித்தம், நீங்கள் என்றென்றைக்குமாய் உங்கள் தலைகளை உயர்த்தும்படிக்கும் நான் இவைகளை உங்களிடம் பேசுகிறேன்.

4 ஏனெனில், வரவிருப்பவைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்று, உங்களில் அநேகர், வாஞ்சித்துத் தேடினீர்கள் என்பதை நான் அறிவேன்; ஆகையால் நம்முடைய மாம்சம் அழிந்து, மரித்துப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள், என்பதையும் நான் அறிவேன்; இருப்பினும் நம்முடைய சரீரங்களில் இருந்துகொண்டு தேவனைக் காண்போம்.

5 ஆம், நாம் விட்டுவந்த இடமாகிய எருசலேமில் உள்ளவர்களுக்கு, அவர் சரீரத்தில் தம்மைக் காண்பிப்பார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், என்பதை நான் அறிவேன்; ஏனெனில், இது அவர்கள் மத்தியில் சம்பவிக்கவேண்டியதாயிருக்கிறது. அந்த மகா சிருஷ்டிகர், தனக்கு மனுஷர் யாவரும் கீழ்ப்படிந்திருக்கும் பொருட்டு, மாம்சத்திலே மனுஷனுக்குக் கீழ்ப்பட்டிருந்து, பாடனுபவித்து சகல மனுஷருக்காகவும் மரிக்க வேண்டியதாயிருக்கிறது.

6 மரணம் எல்லா மனுஷர் மீதும் கடந்து சென்றிருக்கிறபடியால், மாபெரும் சிருஷ்டிகரின் இரக்கத்தின் திட்டத்தை நிறைவேற்ற, உயிர்த்தெழுதலின் வல்லமை தேவையாயிருக்கிறது; வீழ்ச்சியின் நிமித்தமாக மனுஷருக்கு இந்த உயிர்த்தெழுதல் வரவேண்டியது அவசியமாயிருக்கிறது; மீறுதலின் நிமித்தமாக வீழ்ச்சி வந்தது; மனுஷன் வீழ்ச்சியடைந்ததின் காரணமாக, அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போனார்கள்.

7 ஆகையால் ஒரு முடிவற்ற பாவநிவர்த்தி தேவையாயிருக்கிறது, முடிவற்ற பிராயச்சித்தமாய் இது இல்லாதிருக்குமெனில், அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்ள முடியாது; ஆகையால் மனுஷன்மேல் வந்த முதல் நியாயத்தீர்ப்பு நித்தியத்திற்கும் நிலைத்திருக்குமே; அது அப்படியாயின் இந்த மாம்சமானது இனி ஒரு போதும் எழுந்திருக்கக்கூடாதபடி, அழுகிப்போய் சிதைந்து போகும்படி, அதன் தாய் பூமியில் வைக்கப்பட வேண்டியதாயிருக்கும்.

8 தேவனுடைய ஞானம், இரக்கம், கிருபை எவ்வளவு பெரிதானது! ஏனெனில் இதோ, மாம்சம் ஒரு போதும் எழுந்திருக்காவிடில் இனி எழுந்திருக்கக்கூடாதபடிக்கு, நித்திய தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியே விழுந்த, பிசாசாக மாறின, அந்த தூதனுக்கு நம் ஆவிகள் கீழ்ப்பட்டிருக்குமே.

9 நம்முடைய ஆவிகள் அவனைப் போன்றதாகி, நாம் பிசாசுகளாய், பிசாசின் தூதர்களாயும் மாறி, நம்முடைய தேவனுடைய பிரசன்னத்தினின்று தடுக்கப்பட்டு, ஆம் நம்முடைய ஆதி பெற்றோர்களை வஞ்சித்தவனும், ஒளியின் தூதனுக்கு நிகராகத் தன்னை உருமாற்றி, கொலையும், மற்ற சகலவிதமான அந்தகார இரகசியக் கிரியைகளையும் செய்கிற, இரகசிய சங்கங்களை மனுபுத்திரர் உருவாக்கும்படி, அவர்களைத் தூண்டுகிற பொய்களின் பிதாவைப்போல, நாமும் துர்ப்பாக்கியத்திலே நிலைத்திருக்க வேண்டியதாகுமே.

10 இந்த அஞ்சத்தக்க கொடியவனின் பிடியிலிருந்து, நாம் தப்பித்துக் கொள்ளும் வழியை ஆயத்தம் செய்த தேவனுடைய நன்மை எவ்வளவு மகத்தானதாயிருக்கின்றது; ஆம், மரணமும், பாதாளமும் ஆகிய, கொடியவனை, நான் சரீர மரணம் என்றும், ஆவியின் மரணம் என்றும் அழைக்கிறேன்.

11 இஸ்ரவேலின் பரிசுத்தராகிய நம் தேவனின், விடுதலையாக்கும் வழியின் நிமித்தமாக, நான் சொன்ன இம்மைக்குரியதான, கல்லறையாயிருக்கிற, இந்த மரணம், தன்னிடத்திலுள்ள மரித்தவர்களை விடுதலையாக்கும்.

12 நான் சொன்ன ஆவிக்குரிய மரணமாயிருக்கிற இந்த மரணமும், தன் மரித்தோரை ஒப்புவிக்கும்; இந்த ஆவிக்குரிய மரணம் பாதாளமாயிருக்கிறது; ஆகையால் மரணமும், பாதாளமும் தங்கள் மரித்தோரை ஒப்படைக்க வேண்டும்; பாதாளம் தான் சிறைப்படுத்தின ஆவிகளை ஒப்புவிக்க வேண்டும்; கல்லறைகள் தாங்கள் சிறைப்படுத்தின சரீரங்களை ஒப்புவிக்க வேண்டும்; மனுஷருடைய சரீரங்களும், ஆவிகளும் ஒன்றோடொன்று திரும்பவும் இணைக்கப்படும்; அது இஸ்ரவேலின் பரிசுத்தருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் சம்பவிக்கும்.

13 நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது! மாறாக, தேவனின் பரதீசு, நீதிமான்களுடைய ஆவிகளை ஒப்படைக்க வேண்டும், கல்லறை நீதிமானின் சரீரத்தை ஒப்படைக்க வேண்டும்; ஆவியும், சரீரமும் மறுபடியும் தன்னில் ஒன்றாய் இணைக்கப்படும், மனுஷர் யாவரும் சாவாமையும், அழியாமையும் உடையவர்களாய், நாம் மாம்சத்திலே சம்பூரண ஞானத்தைக் கொண்டிருந்தபடியே, நமது அறிவு பூரணப்பட்டிருக்கும்படிக்கு, அவர்களும் ஜீவிக்கிற, ஆத்துமாக்களாய் இருப்பார்கள்.

14 ஆகையால் நாம், நம்முடைய எல்லாக் குற்றங்களையும், நம்முடைய அசுத்தங்களையும், நம்முடைய நிர்வாணத்தையும் குறித்துப் பூரண அறிவுடையவர்களாயிருப்போம்; நீதிமான்கள் பரிசுத்தத்தினாலும், நீதியின் வஸ்திரத்தோடே, உடுத்தப்பட்டு தங்கள் சந்தோஷத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் பூரண அறிவுடையவர்களாயிருப்பார்கள்.

15 ஆனபடியால், எல்லா மனுஷர்களும் இந்த முதலாம் மரணத்தைக் கடந்து ஜீவனுக்குள்ளாக வருகிறபொழுது, அவர்கள் அழியாமை உள்ளவர்களாயிருக்கிற அளவில், இஸ்ரவேலின் பரிசுத்தரின் நியாயாசனத்திற்கு முன்பாக அவர்கள் தோன்றவேண்டும்; நியாயத்தீர்ப்பு அதன் பின்னர் வருகிறது. அதன் பின்னர் அவர்கள் தேவனுடைய பரிசுத்த நியாயத்தீர்ப்பின்படியே நியாயம் விசாரிக்கப்பட வேண்டும்.

16 நீதிமான்கள் இன்னும் நீதிமான்களாயும், அசுசியாய் உள்ளவர்கள் இன்னும் அசுசி உள்ளவர்களாயும் இருப்பார்கள் என்பது ஒருபோதும் ஒழிந்துபோகாத அவருடைய என்றுமுள்ள வார்த்தையாய் இருக்கிறது. நிச்சயமாகவே கர்த்தர் ஜீவிக்கிறபடியாலே, கர்த்தராகிய தேவன் அதைச் சொல்லியிருக்கிறார். ஆதலால், அசுசியாய் உள்ளவர்கள் பிசாசும் அவன் தூதர்களுமே; அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குள் அவர்கள் போவார்கள்; அவர்களின் வேதனை, நெருப்பும், கந்தகமும் எரிகிற ஏரியைப்போல இருக்கும், அதனுடைய ஜூவாலைகள் முடிவில்லாமல் என்றென்றைக்குமாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.

17 நம்முடைய தேவனின் மகத்துவமும், நியாயமும், எப்படிப்பட்டவையாயிருக்கின்றன; ஏனெனில் அவர் தம்முடைய வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்; அவைகள் அவருடைய வாயிலிருந்து புறப்பட்டன; அவருடைய நியாயப்பிரமாணங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.

18 ஆனாலும் இதோ, இஸ்ரவேலின் பரிசுத்தரின் நீதிமான்களும், பரிசுத்தவான்களும், இஸ்ரவேலின் பரிசுத்தரில் விசுவாசித்தவர்களும், உலகத்தின் சிலுவைகளைச் சகித்தவர்களும், அதன் அவமானத்தைப் பொறுத்தவர்களும், அவர்களுக்காக உலக அஸ்திபாரம் முதல் ஆயத்தம்பண்ணப்பட்ட தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள். அவர்களின் சந்தோஷம் என்றென்றும் பூரணமானதாயிருக்கும்.

19 இஸ்ரவேலின் பரிசுத்தராகிய நம் தேவனுடைய இரக்கம், எவ்வளவு மகத்துவம் பொருந்தியதாயிருக்கிறது. அவர் தம்முடைய பரிசுத்தவான்களை அஞ்சத்தக்க கொடியவனாகிய பிசாசிடமிருந்தும், மரணத்திலிருந்தும், பாதாளத்திலிருந்தும், முடிவில்லாத வேதனையாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற ஏரியிலிருந்தும் விடுவிக்கிறார்.

20 நம்முடைய தேவனின் பரிசுத்தம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது; ஏனெனில் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்; அவர் அறிந்திராத காரியம் எதுவுமில்லை.

21 மனுஷர் யாவரும் தம்முடைய சத்தத்திற்குச் செவி கொடுப்பார்களெனில், அவர்களை இரட்சிக்கும்படியாகவே அவர் உலகத்திற்கு வருகிறார்; இதோ, அவர் எல்லா மனுஷருடைய வேதனைகளையும், ஆம் ஆதாமின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஜீவராசியின் வேதனைகளையும், புருஷர்கள், ஸ்திரீகள், குழந்தைகளுமான அனைவருடைய வேதனைகளையும் தாங்கியிருக்கிறார்.

22 எல்லா மனுஷரும் உயிர்த்தெழுதலை அடையவும், பெரிதான அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே யாவரும் அவருக்கு முன்பாக நிற்கும்படியாகவும், அவர் இந்தப் பாடனுபவிக்கிறார்.

23 எல்லா மனுஷரும் மனந்திரும்பி, இஸ்ரவேலின் பரிசுத்தரின் மேல் பூரணவிசுவாசம் உடையவர்களாய், அவர் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்றும், இல்லையேல் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்பட முடியாது என்றும், அவர் கட்டளை பிறப்பிக்கிறார்.

24 அவர்கள் மனந்திரும்பாமல், அவருடைய நாமத்தை விசுவாசியாமல், அவருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாமல், முடிவு பரியந்தயம் நிலை நிற்காவிடில், அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள்; ஏனெனில் இஸ்ரவேலின் பரிசுத்தரான, கர்த்தராகிய தேவன், இதை உரைத்திருக்கிறார்.

25 ஆகையால் அவர் ஒரு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார்; எங்கே நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவில்லையோ அங்கே தண்டனையில்லை; தண்டனை எங்கில்லையோ அங்கே ஆக்கினைத் தீர்ப்பில்லை; ஆக்கினைத்தீர்ப்பு எங்கில்லையோ, அங்கே பாவநிவர்த்தியினிமித்தம், இஸ்ரவேலின் பரிசுத்தரின் இரக்கங்கள் அவர்கள் மேல் உரிமை பெறுகின்றன; ஏனெனில் அவர்கள், அவருடைய வல்லமையினால் விடுவிக்கப்படுகிறார்கள்.

26 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத யாவர்மீதும், அவருடைய நீதியின் கோரிக்கைகளை பாவநிவர்த்தி பூர்த்தியாக்கி, அவர்களை மரணமும் பாதாளமுமாகிய கொடியவனிடத்திலிருந்தும், பிசாசினிடத்திலிருந்தும், நித்திய வேதனையாகிய அக்கினியும், கந்தகக்கடலிலுமிருந்தும் தப்புவிக்கிறது. அவர்கள் தங்களுக்குப் பிராணனைக் கொடுத்த தேவனாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தரிடத்தில் திருப்பிச் சேர்க்கப்படுவார்கள்.

27 ஆனாலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு, நம்மைப்போல தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் உடையவனாய் இருந்தும், அவைகளை மீறி, தன் சோதனைக் காலத்தை வீணாக்கிப் போடுகிறவனுக்கு ஐயோ! அவனுடைய நிலைமை பயங்கரமானதாயிருக்கும்.

28 அதுவே அந்தத் தீயவனுடைய வஞ்சனையான திட்டம்! மனுஷனுடைய வீணான, பெலனற்ற, மதியீனம்! மனுஷர் கல்விமான்களாய் இருக்கும்போது, தங்களை ஞானமுள்ளவர்கள் என எண்ணி, தாங்களே எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என நினைத்து, தேவனுடைய ஆலோசனைக்குச் செவி கொடாமல், அதைப் புறம்பே தள்ளி வைக்கிறார்கள்; ஆகையால் அவர்கள் ஞானம் மதியீனமாயிருக்கிறது; அது அவர்களுக்குப் பிரயோஜனமாயிராது; அவர்கள் கெட்டுப் போவார்கள்.

29 ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஆலோசனைகளுக்குச் செவி கொடுப்பார்களெனில் அவர்கள் கற்றது நன்மை பயக்கும்.

30 ஆனாலும் உலகப் பிரகாரமாய்ச் செல்வமுடையவர்களாயிருக்கிற, ஐஸ்வரியவான்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்கள் ஐஸ்வரியவான்களாயிருப்பதின் நிமித்தம், தரித்திரரை அலட்சியம் பண்ணி, சாந்தகுணமுள்ளவர்களை துன்பப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயம் அவர்கள் பொக்கிஷங்களின் மேலிருக்கிறது; ஆகையால் அவர்களது பொக்கிஷம் அவர்களின் தேவனாயிருக்கிறது; இதோ, அவர்களது பொக்கிஷம் அவர்களோடேகூட அழியும்.

31 கேட்கக்கூடாத செவிடர்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்கள் அழிந்துபோவார்கள்.

32 பார்க்கக்கூடாத குருடர்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்களும் அழிவார்கள்.

33 இருதயத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்களின் அநீதியைப்பற்றிய அறிவு அவர்களை கடைசி நாளில் அடிக்கும்.

34 பொய்யனுக்கு ஐயோ! ஏனெனில் அவன் நரகத்திற்குள்ளாகத் தள்ளப்படுவான்.

35 வேண்டுமென்றே கொலை செய்கிற கொலைபாதகனுக்கு ஐயோ! அவன் மரிப்பான்.

36 வேசித்தனங்களைச் செய்கிறவர்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்கள் நரகத்தினுள்ளாகத் தள்ளப்படுவார்கள்.

37 ஆம், விக்கிரகங்களை ஆராதிப்பவர்களுக்கு ஐயோ! எல்லா பிசாசுகளின் பிசாசானவன் அவர்கள் மீது மகிழ்ச்சி கொள்கிறான்.

38 இறுதியாக, தங்கள் பாவங்களில் மரிப்பவர்கள் அனைவருக்கும் ஐயோ! ஏனெனில் அவர்கள் தேவனிடத்திற்குத் திரும்பி, அவருடைய முகத்தைக்கண்டு, தங்கள் பாவங்களில் நிலைத்திருப்பார்கள்.

39 என் பிரியமான சகோதரரே, பரிசுத்த தேவனுக்கு விரோதமாய் மீறுதலின் பயங்கரத்தையும், அந்த வஞ்சிக்கிறவனுடைய நயப்படுத்தல்களுக்கு இணங்குவதினுடைய பயங்கரத்தையும் நினைவுகூருங்கள். மாம்ச சிந்தை மரணம் என்பதையும் ஆவியின் சிந்தை நித்திய ஜீவன் என்பதையும் நினைவு கூருங்கள்.

40 என் பிரியமான சகோதரரே, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரின் மகத்துவத்தை நினைவு கூருங்கள். நான் உங்களுக்கு எதிராகக் கடினமான வார்த்தைகளைப் பேசினேன் என்று சொல்லாதிருங்கள்; அப்படிச் செய்தால் நீங்கள் சத்தியத்திற்கு எதிராக நிந்தனை செய்வீர்கள்; ஏனெனில் நான் உங்கள் சிருஷ்டிகரின் வார்த்தைகளைப் பேசினேன். சத்தியத்தின் வார்த்தைகள் அசுத்தமான அனைத்துக்கும் எதிராகக் கடினமாயிருக்கிறதென்பதை நான் அறிவேன்; ஆனால் நீதிமான்கள் அவைகளுக்குப் பயப்படுவதில்லை; ஏனெனில் அவர்கள் சத்தியத்தை நேசித்து, அசைக்கப்படாமல் இருக்கிறார்கள்.

41 இன்னும் என் பிரியமான சகோதரரே, பரிசுத்தராகிய கர்த்தரிடம் வாருங்கள்; அவருடைய பாதைகள் நீதியுள்ளவைகளாயிருக்கின்றன என்பதை நினைவு கூருங்கள்; இதோ, மனுஷருக்கான வழியோ இடுக்கமாயிருக்கிறது; ஆனால் அது அவருக்கு முன்பாக நேரான மார்க்கமாயிருக்கிறது; அதின் வாசல் காவல்காரர் இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிறார்; அவர் எந்த வேலைக்காரனையும் அங்கு வேலைக்கு வைப்பதில்லை; இந்த வாசலைத் தவிர அங்கே வேறெந்த வழியுமில்லை; அவர் ஏமாற்றப்பட முடியாது; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமமாயிருக்கிறது.

42 தட்டுகிறவன் எவனுக்கும் அவர் திறக்கிறார்; ஆம், தங்கள் கல்வியினிமித்தமும், தங்கள் ஞானத்தினிமித்தமும், தங்கள் செல்வங்களினிமித்தமும் இறுமாப்பாயிருக்கும் ஞானிகளையும், கல்விமான்களையும், செல்வந்தர்களையுமே அவர் தவிர்க்கிறார்; அவர்கள் இவைகளை எறிந்து போட்டு, தேவனுக்கு முன்பாகத் தங்களை மதியீனரென்று எண்ணி, தாழ்மையின் ஆழங்களில் வந்தாலொழிய, அவர்களுக்கு அவர் திறக்கமாட்டார்.

43 ஆனால் பரிசுத்தவான்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள மகிழ்ச்சி, ஆம், ஞானவான்கள் மற்றும் விவேகிகளுக்குரியவைகளான அவை, அவர்களிடமிருந்து என்றென்றைக்குமாய் மறைக்கப்படும்.

44 என் பிரியமான சகோதரரே, என் வார்த்தைகளை நினைவுகூருங்கள், இதோ, நான் என் வஸ்திரங்களைக் களைந்து, அவைகளை உங்களுக்கு முன்பாக உதறிப்போடுகிறேன்; அவர் தம்முடைய சகலத்தையும் ஆராய்ந்து பார்க்கும் கண்ணினால் அவர் என்னைப் பார்வையிடும்படி என் இரட்சிப்பின் தேவனை வேண்டிக்கொள்கிறேன்; ஆகையால் கடைசி நாளில், மனுஷருடைய கிரியைகளின்படி அவர்களை நியாயந்தீர்க்கும்பொழுது, உங்களுடைய அக்கிரமங்களை என்னுடைய ஆத்துமாவிலிருந்து உதறிப் போட்டேன் என்பதற்கு இஸ்ரவேலின் தேவன் சாட்சி கொடுப்பார் என்றும், உங்கள் இரத்தத்திற்கு விலகினவனாய் நான் அவர் முன்பாக பிரகாசத்தோடு நிற்பேன் என்றும் நீங்கள் அறிவீர்கள்.

45 என் பிரியமான சகோதரரே, உங்கள் பாவங்களிலிருந்து திரும்புங்கள்; உங்களை இறுக்கமாய்க் கட்டிப்போடுகிறவனுடைய சங்கிலிகளை உதறித் தள்ளுங்கள்; உங்கள் இரட்சிப்பின் கன்மலையாயிருக்கிற தேவனிடத்திற்கு வாருங்கள்.

46 நீதிமான்களுக்கு நியாயம் வழங்கப்படும் அந்த மகிமையான நாளாகிய, நியாய விசாரிப்பின் நாளிலே, கடும் பயத்தினாலே நீங்கள் பின்வாங்காதபடிக்கும், உங்களுடைய குற்றங்களை பூரணமாய் நினைவு கூராமலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, உம்முடைய நியாயத் தீர்ப்புகள் பரிசுத்தமானவைகள், பரிசுத்தமானவைகள்; நான் என் குற்றத்தை அறிவேன்; உம்முடைய நியாயப் பிரமாணத்தை நான் மீறினேன்; மீறுதல்கள் என்னுடையவைகளே; பிசாசு, அவனுடைய பயங்கரமான துர்ப்பாக்கியத்திற்கு நான் இரையாகும்படி என்னைப் பிடித்துக்கொண்டான், என்று ஓலமிட்டு நெருக்கப்படாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களை ஆயத்தமாக்குங்கள்.

47 ஆனாலும் இதோ, என் சகோதரரே, இவைகளின் பயங்கரமான நிஜ நிலைக்கு உங்களை நான் விழித்தெழும்பச் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறதா? உங்கள் மனங்கள் பரிசுத்தமாயிருந்தால் நான் உங்கள் ஆத்துமாக்களை துன்பப்படுத்துவேனோ? நீங்கள் பாவத்தினின்று விடுவிக்கப்பட்டிருந்தால், சத்தியத்தின் தெளிவின்படியே நான் உங்களிடம் தெளிவாய் இருப்பேனோ?

48 இதோ, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாயிருந்தால் நான் உங்களிடம் பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்; ஆனால் நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாயில்லாமல் என்னை ஒரு ஆசிரியனாகப் பார்க்கிறபடியால், பாவத்தின் விளைவுகளைக் குறித்தும் உங்களுக்கு நான் போதிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.

49 இதோ, என் ஆத்துமா பாவத்தை வெறுக்கிறது, என் இருதயம் நீதியில் களிகூருகிறது; என் தேவனின் பரிசுத்த நாமத்தைத் துதிப்பேன்.

50 என் சகோதரரே, தாகமாயிருக்கிற யாவரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவனே, நீ வந்து வாங்கிச் சாப்பிடு; ஆம், நீ வந்து பணமுமின்றி, விலையுமின்றித் திராட்சைரசமும், பாலும் வாங்கிக்கொள்.

51 ஆகையால் நீங்கள் மதிப்பற்றதிற்காக உங்கள் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும், செலவழிக்க வேண்டாம்; நீங்கள் எனக்குக் கருத்தாய்ச் செவி கொடுத்து, நான் சொன்ன வார்த்தைகளை நினைவு கூருங்கள்; நீங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரிடம் வந்து, கெட்டுப் போகாததும் அழிக்கமுடியாததுமானதை ருசித்துப் பாருங்கள்; உங்கள் ஆத்துமா கொழுப்பானதில் களிகூர்வதாக.

52 இதோ, என் பிரியமான சகோதரரே, உங்கள் தேவனின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்; பகலிலே அவரிடத்தில் இடைவிடாமல் ஜெபியுங்கள்; இரவிலே அவருடைய பரிசுத்த நாமத்திற்கு நன்றி செலுத்துங்கள்; உங்கள் உள்ளங்கள் களிகூர்வதாக.

53 இதோ, கர்த்தருடைய உடன்படிக்கைகள் எவ்வளவு மகத்துவமானது; மனுபுத்திரரிடம் அவருடைய இரக்கங்கள் - எவ்வளவு மகத்துவமானது; அவருடைய மகத்துவம், கிருபை மற்றும் இரக்கங்களின் நிமித்தம், நம்முடைய சந்ததி, மாம்சத்தின்பிரகாரமாய் முழுவதுமாக அழிக்கப்படாது என்றும், அவர்களைக் காப்பாற்றுவார் என்றும், வரும் தலைமுறைகளில் அவர்கள் இஸ்ரவேல் வீட்டாருக்கு ஒரு நீதியுள்ள கிளையாவார்கள் என்றும், வாக்குத்தத்தம் செய்துள்ளார்.

54 இப்பொழுதும் என் சகோதரரே, நான் உங்களிடம் மேலும் அதிகம் பேசுவேன்; ஆனால் நாளைய தினத்திலே என்னுடைய வார்த்தைகளில் மீதியானவற்றை அறிவிப்பேன். ஆமென்.