2010–2019
உங்கள் தலைகளை உயர்த்தி களிகூருங்கள்
அக்டோபர் 2018


உங்கள் தலைகளை உயர்த்தி களிகூருங்கள்

கர்த்தரின் வழியில் கடினமானவற்றை நாம் எதிர்கொள்ளும்போது, நாம் நமது தலைகளை உயர்த்தி களிகூர்வோமாக.

1981ல் என்னுடைய தகப்பனும், இரண்டு நெருங்கிய நண்பர்களும் நானும் அலாஸ்காவில் ஒரு சாகசத்திற்காக சென்றிருந்தோம். ஒரு ஒதுக்குப்புறமான ஏரியில் நாங்கள் இறங்கி, உயரமான நிலத்திற்கு ஏறவேண்டியதிருந்தது. நாங்கள் தனியாக சுமந்த பாரத்தைக் குறைக்கும்படியாக பெட்டிகளில் எங்கள் பொருட்களை போட்டு மூடி, நுரை மெத்தையால் சுற்றி, வர்ணமடிக்கப்பட்ட நீண்ட கொடிகளைக் கட்டி, எங்கள் புஷ் விமானத்தின் ஜன்னல் வழியே நாங்கள் திட்டமிட்ட இடத்தில் அவற்றை தூக்கிப்போட்டோம்.

வந்து சேர்ந்த பின்பு நாங்கள் தேடினோம், தேடினோம், ஆனால் அந்த பெட்டிகள் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை. இறுதியாக ஒரு பெட்டியை நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் ஒரு சிறிய வாயு அடுப்பும், ஒரு கான்வாஸூம், கொஞ்சம் மிட்டாய்களும், ஹாம்பர்கர் செய்யும் சாதனமுமிருந்தது, ஆனால் ஹாம்பர்கர் எதுவுமில்லை. வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள எங்களுக்கு எந்த வழியுமில்லை, எங்களை திரும்ப அழைத்துப்போகிற நேரம் ஒரு வாரத்திற்குப் பின்னர் தானிருந்தது.

இந்த அனுபவத்திலிருந்து இரண்டு மதிப்புமிக்க பாடங்களை நான் கற்றேன். ஒன்று, உங்கள் உணவை ஜன்னலுக்கு வெளியே வீசாதிருங்கள். இரண்டாவது, சிலநேரங்களில் கடினமான காரியங்களை நாம் எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

கடினமான காரியங்களுக்கு அடிக்கடி, நமது முதல் எதிர்வினை “ஏன் எனக்கு?” ஆயினும் ஏன் என்று கேட்பது, கடினமான காரியத்தை ஒருபோதும் எடுத்துப் போடாது. சவால்களை நாம் மேற்கொள்ளவேண்டுமென கர்த்தர் விரும்புகிறார், “இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தந்து, உன்னுடைய நன்மைக்காயிருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.1

சில நேரங்களில் கடினமான காரியம் ஒன்றைச் செய்ய அவர் நம்மைக் கேட்கிறார், சில நேரங்களில் நமது சவால்கள் சுயாதீனத்தின் நமது சொந்த அல்லது மற்றவர்களின் பயன்படுத்துதலால் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு சூழ்நிலைகளையும் நேபி அனுபவித்தான். லாபானிடமிருந்து தகடுகளைப் பெற திரும்பிவர லேகி தனது குமாரர்களை அழைத்தபோது, அவன் சொன்னான், “இதோ, இப்பொழுதும் நான் அவர்களிடத்தில் கேட்பது ஒரு கடினமான காரியம் என்று சொல்லி உன் சகோதரர்கள் முமுறுக்கிறார்கள். ஆனாலும் இதோ, நான் அவர்களிடத்தில் இவற்றைக் கேட்கவில்லை, ஆனால் இது கர்த்தருடைய கட்டளையாயிருக்கிறது.”2 மற்றொரு சந்தர்ப்பத்தில், அவனுடைய சுயாதீனத்தைக் குறைக்க நேபியின் சகோதரர்கள் அவர்களுடைய சுயாதீனத்தைப் பயன்படுத்தினர். “இதோ அவர்கள் மிகவும் கோபமாயிருந்தபடியால் என் மீது கைபோட்டு என்னைக் கயிறுகளினால் கட்டினார்கள், ஏனெனில் அவர்கள் என் ஜீவனை எடுத்துப்போடும்படியாய் வகைதேடினார்கள்.”3

லிபர்டி சிறைச்சாலையில் ஜோசப் ஸ்மித் ஒரு கடினமான காரியத்தை சந்தித்தார். எந்த நிவாரணத்தையும் காணாமல் அவநம்பிக்கையில் அவர் கூக்குரலிட்டார், “தேவனே நீர் எங்கே இருக்கிறீர்?”4 நம்மில் சிலர் ஜோசப் செய்ததைப்போல செய்திருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொருவரும் கடினமான காரியங்களை எதிர்கொள்கிறோம். அன்புக்குரிய ஒருவரின் மரணம், விவாகரத்து, வழிதவறிய பிள்ளை, வியாதி, விசுவாசத்தின் சோதனை, வேலை இழப்பு, அல்லது வேறு எந்த சிரமமும்கூட.

பன்னிருவர் குழுமத்தின், மூப்பர் நீல் எ. மேக்ஸ்வெல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்ததிற்கு மத்தியில் பேசிய இந்த வார்த்தைகளைக் கேட்டதில் நான் என்றென்றைக்குமாய் மாறினேன். அவர் சொன்னார், “நான் சிறிது வருத்தமான சிந்தனையிலிருந்தபோது, எனது மனதில் இந்த அறிவூட்டுகிற மறுநிச்சயப்படுத்துகிற 9 வார்த்தைகள் வந்தன. ‘நம்பகத்தன்மையுடன் என்னுடைய ஜனங்களுக்கு நீ போதிக்கும்படியாக நான் உனக்கு புற்றுநோயைக் கொடுத்திருக்கிறேன்’ ” பின்னர், எவ்வாறு இந்த அனுபவம் ஆசீர்வதித்திருக்கிறது என அவர் தொடர்ந்து தெரிவித்தார் “நித்தியத்தைப்பற்றிய மகத்தான உண்மைகளின் பார்வைகளுடன். . . அத்தகைய நித்தியத்தின் பார்வை, மிகக் கடினமான அடுத்த 100 கஜங்கள் பயணிக்க நமக்குதவும்.”5

நித்தியத்தின் இத்தகைய பார்வையுடன் பயணிக்கவும், கடினமான நேரங்களை வெற்றிகொள்ளவும் இரண்டு காரியங்களை நான் பரிந்துரைக்கிறேன். முதலில் மற்றவர்களை மன்னிப்பதால், இரண்டாவதாக, நம்மையே நாம் பரலோக பிதாவுக்குக் கொடுக்கிறதால், கடினமான காரியங்களை நாம் எதிர்கொள்ளவேண்டும்.

நமது கடினமான காரியங்களுக்குக் காரணமானவர்களை மன்னித்தலும், “நம்மை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புரவாக்குதலும்”6 மிக கடினமாயிருக்கலாம். நமது கடினமான காரியத்திற்கு ஒரு குடும்ப அங்கத்தினர், ஒரு நெருங்கிய நண்பர், அல்லது நாமே காரணமாயிருந்தால், அது அதிகமாக காயப்படுத்தும்.

என்னுடய பிணையத் தலைவர் புரூஸ் எம். குக் பின்வரும் கதையை பகிர்ந்தபோது ஒரு இளம் ஆயராக மன்னிப்பை நான் கற்றுக்கொண்டேன். அவர் விளக்கினார்:

1970ன் பின்பகுதியில், சில கூட்டாளிகளும் நானும் ஒரு வர்த்தகத்தை ஆரம்பித்தோம். நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யாவிட்டாலும்கூட, பொருளாதார சவால்கள் நிறைந்த நேரங்களுடன் சேர்ந்து, சில தவறான தீர்மானங்களால் நாங்கள் தோல்வியடைந்தோம்.

தங்களுடைய இழப்புகளை மீட்டெடுக்க சில முதலீட்டாளர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்களுடைய வழக்கறிஞர் என்னுடைய குடும்ப ஆயத்தில் ஒரு ஆலோசகராக இருந்தார். என்னை அழிக்க வகைதேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றிய மனிதனை ஆதரித்தல் என்பது மிகக் கடினமாயிருந்தது. அவர்மீது எனக்குக் கொஞ்சம் உண்மையில் விரோதம் வளர்ந்தது, நான் அவரை என் விரோதியாக கருதினேன். ஐந்து ஆண்டுகளின் சட்டப் போராட்டங்களுக்குப் பின், எங்களுடைய வீட்டையும் சேர்த்து எங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்.

2002ல் ஒரு ஆலோசகராக நான் சேவை செய்துகொண்டிருந்த பிணையத் தலைமை மறுசீரமைக்கப்படப்போவதாக என்னுடைய மனைவியும் நானும் அறிந்தோம். விடுவிப்புக்கு முன்னால் ஒரு குறுகிய விடுமுறையில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது, புதிய பிணையத் தலைவராக நான் அழைக்கப்பட்டால் என்னுடைய ஆலோசகர்களாக நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன் என அவள் என்னைக் கேட்டாள். அதைப்பற்றி பேச நான் விரும்பவில்லை, ஆனால் அவள் பிடிவாதமாயிருந்தாள். இறுதியாக, ஒரு பெயர் என் மனதில் வந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு முன் எங்களின் கஷ்டங்களுக்கு மையமாயிருந்தவராக நாங்கள் கருதிய வழக்கறிஞரின் பெயரை அவள் குறிப்பிட்டாள். அவள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்தான் மற்றொரு ஆலோசகராயிருக்கவேண்டுமென பரிசுத்த ஆவி உறுதி செய்தார். அந்த மனிதனை நான் மன்னிக்கமுடியுமா?

“பிணையத் தலைவராக சேவைசெய்ய அழைப்பை மூப்பர் டேவிட் ஈ. சோரென்சென் எனக்குக் கொடுத்தபோது, ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க அவர் எனக்கு ஒருமணிநேரம் கொடுத்தார். கண்ணீருக்கிடையில் அந்த வெளிப்படுத்தலை கர்த்தர் ஏற்கனவே கொடுத்துவிட்டார் என நான் குறிப்பிட்டேன். என்னுடைய விரோதியாக நான் கருதிய மனிதனின் பெயரை நான் உச்சரித்தபோது, நான் இடங்கொடுத்திருந்த கோபமும், விரோதமும், வெறுப்பும் மறைந்தன. அந்த நேரத்தில், பாவநிவர்த்தியின் மூலமாக மன்னிப்புடன் வருகிற சமாதானத்தை நான் அறிந்தேன்.”

வேறு வார்த்தைகளிலெனில், பழைய நேபியைப்போல, என்னுடைய பிணையத்தலைவர் அவரை “வெளிப்படையாக மன்னித்தார்.” 7 தலைவர் குக்கையும், ஒருவரையொருவர் நேசித்த இரண்டு நீதியான ஆசாரியத்துவத் தலைவர்களாக அவருடைய ஆலோசகர்களையும் நான் அறிவேன். அவர்களைப்போலாக நான் தீர்மானித்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன், அலாஸ்காவில் எங்களுடைய சாகசத்தின் தோல்வியின்போது, மங்கிய வெளிச்சத்தில் விமானி உணவுகளை வெளியில் போட்ட, எங்களுடைய சூழ்நிலைகளின் குறைகளை மற்றவர்கள் மீது போடுவது தீர்வல்ல என்பதை நான் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். ஆயினும், சரீர சோர்வையும், உணவு பற்றாக்குறையையும், நோயையும், எங்களை மூடிக்கொள்ள ஒரு கான்வாஸ் மட்டுமே இருந்ததையும், ஒரு பெரிய புயலின்போது தரையில் உறங்கியதையும் நாங்கள் அனுபவித்தபோது, “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்பதை நான் அறிந்துகொண்டேன்.8

இளைஞர்களே, உங்களின் கடினமான காரியங்கள் தேவனுக்குத் தேவையாயிருக்கிறது. 14 வயதான ஒரு இளம் பெண் கூடைப்பந்து போட்டியில் பங்கெடுத்தாள். உயர்நிலைப்பள்ளி கூடைப்பந்து விளையாட்டில் அவளுடைய மூத்த சகோதரியைப்போல விளையாட அவன் கனவுகண்டாள். கவுட்டமேளாவில் ஒரு ஊழியத்தை தலைமை தாங்க அவளுடைய பெற்றோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என பின்னர் அவள் அறிந்தாள்.

அங்கு வந்து சேர்ந்தபோது, அவளுடைய பாடங்கள் சில, இன்னமும் அவள் பேசாத ஸ்பானிஷ் மொழியிலிருந்ததை அவள் கண்டுபிடித்தாள். அவளுடைய பள்ளியில் விளையாடக்கூடிய பெண்கள் யாருமில்லை. பலத்த பாதுகாப்புடன் ஒரு கட்டிடத்தின் 14வது மாடியில் அவள் வசித்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு காரணங்களினால் அவள் எங்கேயும் தனியாகப் போகமுடியாது.

மாதக்கணக்கில் ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன்பு அவளே அழுதுகொண்டிருப்பதை அவளுடைய பெற்றோர்கள் கேட்டார்கள். இது அவர்களுடைய உள்ளங்களை உடைத்தது. இறுதியாக உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல அவளுடைய பாட்டியின் வீட்டிற்கு அனுப்ப அவர்கள் தீர்மானித்தார்கள்.

எங்களுடைய தீர்மானத்தை எங்கள் மகளிடம் சொல்ல என் மனைவி அவளுடைய அறைக்குச் சென்றபோது படுக்கையில் மார்மன் புஸ்தகம் திறந்திருக்க அவள் ஜெபத்தில் முழங்கால்படியிட்டிருந்ததை கண்டாள். பரிசுத்த ஆவி என் மனைவியிடம் மென்மையான குரலில் சொன்னது, “அவள் சரியாகிவிடுவாள்”, என்னுடைய மனைவி அமைதியாக அறையை விட்டுவந்தாள்.

தூங்குவதற்கு முன் அவள் அழுவதை மீண்டும் நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. தீர்மானத்துடனும், கர்த்தரின் உதவியுடனும் அந்த மூன்று ஆண்டுகளை அவள் வீரமுடன் எதிர்கொண்டாள்.

ஒரு முழுநேர ஊழியத்தை அவள் செய்யப்போகிறாளா என எங்கள் ஊழியத்தின் முடிவில் நான் என்னுடைய மகளைக் கேட்டேன். “இல்லை அப்பா, நான் ஏற்கனவே ஊழியம் செய்துவிட்டேன்” என்பது அவளின் பதிலாயிருந்தது.

அது எனக்கு சரியாக இருந்தது! ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர், இரவில் இந்த சிந்தனையுடன் பரிசுத்த ஆவி என்னை எழுப்பியது. “ஒரு ஊழியத்தைச் செய்ய நான் உன் மகளை அழைத்தேன்.”

“பரலோக பிதாவே, அவள் அதிகமாய் செய்திருக்கிறாள்” என்பது எனது எதிர்வினையாயிருந்தது. நான் பரிசுத்த ஆவியால் விரைவில் திருத்தப்பட்டு, அவளுடைய ஊழியச் சேவை கர்த்தருக்குத் தேவையாயிருக்கிறதென நான் புரிந்துகொண்டேன்.

சீக்கிரமாக மதிய உணவுக்கு நான் என் மகளை அழைத்துப்போனேன். சாப்பாட்டு மேஜையில் நான் சொன்னேன், “கான்ஸி, நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமா?”

“ஆம், அப்பா. நான் ஒரு ஊழியம் செய்யவேண்டுமென உங்களுக்குத் தெரியும். நான் போக விரும்பவில்லை, ஆனால் நான் போகிறேன்” என அவள் சொன்னாள்.

அவளுடைய விருப்பத்தை பரலோக பிதாவிடம் அவள் கொடுத்ததால், அவளுடைய முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அவருக்கு அவள் சேவை செய்தாள். கடினமான காரியங்களை எப்படிச் செய்வதென அவளுடைய தகப்பனுக்கு அவள் கற்றுக்கொடுத்தாள்.

தலைவர் ரசல் எம். நெல்சனின், இளைஞர்களுக்கான உலகளாவிய பிரார்த்தனையில் இளைஞர்களிடம் சில கடினமான காரியங்களை அவர் வேண்டிக்கொண்டார். தலைவர் நெல்சன் சொன்னார், “தனித்து நிற்க, உலகத்திலிருந்து வித்தியாசமாக இருக்க உங்களுக்கு எனது ஐந்தாவது அழைப்பு. நீங்கள், இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையான சீஷனைப்போலக் காணப்பட, பேச, செயல்பட, உடுத்த கர்த்தர் விரும்புகிறார்.”9 அது ஒரு கடினமான காரியமாயிருக்கலாம். இருந்தும் அதை சந்தோஷத்துடன் உங்களால் செய்யமுடியுமென எனக்குத் தெரியும்.

“சந்தோஷமாயிருக்கவே மனுஷன் பிழைத்திருக்கிறான்”10 என்பதை நினைவுகொள்ளுங்கள். லேகி எதிர்கொண்ட எல்லாவற்றுடனும் அவன் இன்னமும் சந்தோஷத்தைக் கண்டான். ஆல்மா, அம்மோனீகா ஜனத்தாரால் “துக்கத்தாலே பாரப்பட்டு அமிழ்ந்து போனான்”11 என்பதை நினைவுகொள்ளுங்கள். “ஆல்மாவே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், ஆதலால் உன் தலையை உயர்த்தி மகிழ்ச்சியாயிரு, ஏனெனில், நீ தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதில் உண்மையுள்ளவனாயிருந்தாய்” 12 என தூதன் சொன்னான். ஆல்மா ஒரு பெரிய சத்தியத்தைக் கற்றுக்கொண்டான். கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, நாம் எப்போதுமே களிகூரலாம். தலைவன் மரோனியின் காலத்தின்போது, யுத்தங்களையும், சவால்களையும் எதிர்கொண்டபோது நேபியின் ஜனங்களுக்கு மத்தியில் “மகிழ்ச்சியான நேரம் ஒருபோதும் இருந்ததில்லை.”13 கடினமான காரியங்களை நாம் எதிர்கொள்ளும்போது மகிழ்ச்சியை நாம் காணமுடியும், காணவேண்டும்.

கடினமான காரியங்களை இரட்சகர் எதிர்கொண்டார். “உலகம் அவரை ஒரு அற்பமான பொருள் என்று நியாயந்தீர்க்கும், ஆகையால் அவரை வாரினால் அடிப்பார்கள், அவர் அதன் பாடனுபவிப்பார். அவரை அடிப்பார்கள், அவர் அதன் பாடனுபவிப்பார். ஆம், அவர்கள் அவர்மேல் துப்புவார்கள், அவர் மனுபுத்திரர் மேலுள்ள அன்பான தயவின் நிமித்தம் நீடிய பொறுமையினிமித்தமும் அவர் அவைகளின் பாடனுபவிப்பார்.”14

அந்த அன்பின் இரக்கத்தால் இயேசு கிறிஸ்து பாடனுவித்தார். அதன் விளைவாக நம் ஒவ்வொருவருக்கும் அவர் சொல்லுகிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”15 கிறிஸ்துவினால் நாமும்கூட உலகத்தை ஜெயிக்கமுடியும்.

கர்த்தரின் வழியில் கடினமான காரியங்களை நாம் எதிர்கொள்ளும்போது நமது தலைகளை உயர்த்தி நாம் களிகூரலாம். உலகத்திற்கு சாட்சியளிக்க இந்த பரிசுத்த சந்தர்ப்பத்தில் நமது இரட்சகர் ஜீவிக்கிறாரென்றும் அவருடைய சபையை வழிநடத்துகிறாரென்றும் நான் பிரகடனப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.