பொது மாநாடு
அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்
அக்டோபர் 2020 பொது மாநாடு


அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்

ஆபிரகாம் 3:25.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிடுகிற எல்லாக் காரியங்களையும் ஆயத்தம் செய்து நிரூபிக்க வேண்டிய நேரம் இப்போது.

இந்த பொது மாநாட்டிற்கான ஆயத்தத்தின்போது என் மனதிலும் இதயத்திலும் வந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும்போது, நம் அனைவருக்கும் பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன்.

சோதனைகளின் முக்கியத்துவம்

முழுநேர சபை சேவைக்கு என் அழைப்புக்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நான் ஒரு பல்கலைக்கழக ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் பணியாற்றினேன். ஆசிரியராக எனது முதன்மை பொறுப்பு மாணவர்கள் தாங்களாகவே எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதை கற்க உதவுவதாகும். எனது பணியின் ஒரு முக்கிய அம்சம், தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன் உருவாக்குதல், தரம் பிரித்தல் மற்றும் பின்னூட்டம் வழங்குதல் ஆகும். தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதுபோல, தேர்வுகள் மாணவர்கள் அதிகம் விரும்பும் கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி இல்லை!

ஆனால் அவ்வப்போது தேர்வுகள் கற்றலுக்கு முற்றிலும் அத்தியாவசியம். ஒரு குறிப்பிட்ட பாடத்தைப்பற்றி நாம் உண்மையில் அறிந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க ஒரு பயனுள்ள தேர்வு நமக்கு உதவுகிறது; இது நாம் கற்றல் மற்றும் வளர்ச்சியை மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு தரத்தையும் வழங்குகிறது.

அதேபோல், உலக பள்ளியில் தேர்வுகள் நமது நித்திய முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், சுவாரஸ்யமாக, ஆங்கிலத்தில் தரமான புஸ்தகங்களின் வேத எழுத்துக்களில் தேர்வு என்ற சொல் ஒரு முறை கூட காணப்படவில்லை. மாறாக, நிரூபிக்கவும், பரிசோதிக்கவும், மற்றும் முயற்சிக்கவும் போன்ற சொற்கள் நம்முடைய பரலோக பிதாவின் நித்திய மகிழ்ச்சியின் திட்டத்துக்கு அர்ப்பணிப்பு மற்றும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் ஆசீர்வாதத்தை நாடும் நம்முடைய திறனைப்பற்றிய நமது ஆவிக்குரிய அறிவைப் பொருத்தமானபடி செயலில் காட்டும் பல்வேறு மாதிரிகளை விவரிக்கவும், புரிந்துகொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன. .

இரட்சிப்பின் திட்டத்தை உருவாக்கியவர் பூர்வகால மற்றும் தற்கால வேதங்களில் நிரூபிக்கவும், ஆராயவும், மற்றும் முயற்சிக்கவும் என்ற சொற்களைப் பயன்படுத்தி நமது பூலோக சோதனைக்காலத்தின் நோக்கத்தை விவரித்தார். “அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்களா என அவர்களை நாம்சோதித்துப் பார்ப்போம்.” 1

சங்கீதக்காரனாகிய தாவீதின் இந்த விண்ணப்பத்தை கருத்தில் கொள்ளவும்.

“கர்த்தாவே என்னைப் பரீட்சித்து என்னைச் சோதித்துப் பாரும், என் உள்ளிந்திரியங்களையும் புடமிட்டுப் பாரும்.

“உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது: உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்கிறேன்.” 2

கர்த்தர் 1833 ல் அறிவித்தார், “ஆகையால், உன்னுடைய சத்துருக்களுக்குப் பயப்படாதே, ஏனென்றால் நான் என் இருதயத்தில் ஆணையிட்டுள்ளேன், கர்த்தர் சொல்லுகிறார், நான் சோதிக்கிறேன் எல்லாவற்றிலும், நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் காணப்படும்படிக்கு மரணம் வரை நீங்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருப்பீர்கள். ” 3

தற்கால சோதித்தலும் முயற்சித்தலும்

2020 ஆம் ஆண்டு ஒரு உலகளாவிய தொற்றுநோயால் அறியப்பட்டுள்ளது, இது பல வழிகளில் நம்மை சோதித்து, ஆய்வு செய்து, முயற்சித்திருக்கிறது. தனிநபர்களாகவும், குடும்பங்களாகவும் சவாலான அனுபவங்கள் மட்டுமே நமக்குக் கற்பிக்கக்கூடிய மதிப்புமிக்க பாடங்களை நாம் கற்கிறோம் என ஜெபிக்கிறேன். “தேவனின் மகத்துவத்தை” மற்றும் “அவர் [நமது] பிரயோஜனத்திற்காக [நமது] துன்பங்களை புனிதப்படுத்துவார்” என்ற உண்மையை நாம் அனைவரும் முழுமையாக ஏற்றுக்கொள்வோம் என்றும் நான் நம்புகிறேன். 4

நம் வாழ்வில் சோதிக்கும் மற்றும் முயற்சிக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அவை எதுவாக இருந்தாலும், நமக்கு வழிகாட்டவும் பலப்படுத்தவும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளால் முடியும்: (1) ஆயத்தத்தின் கொள்கை, (2) கிறிஸ்துவில் உறுதியுடன் முன்னோக்கி செல்வதன் கொள்கை.

சோதித்தலும் ஆயத்தமும்

தேவையான ஒவ்வொரு காரியத்தையும், செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம். ஒரு வீடு, ஜெப வீடு, உபவாச வீடு, விசுவாச வீடு, கற்றலின் வீடு, மகிமையின் வீடு, ஒழுங்கின் வீடு, தேவனின் வீட்டை ஸ்தாபிக்க நாம் இரட்சகரின் சீஷர்களாக கட்டளையிடப்பட்டுள்ளோம். 5

நாமும் வாக்களிக்கப்பட்டுள்ளோம், “நீங்கள் ஆயத்தமாக இருந்தால் பயப்பட வேண்டாம்.

“மேலும், நீங்கள் சத்துருவின் வல்லமையிலிருந்து தப்பித்து, நீதியுள்ள ஒரு ஜனமாக, மாசற்ற, குற்றமில்லாதவர்களாக என்னிடம் கூட்டப்படுவீர்கள்.” 6

இந்த வசனங்கள் உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரியபிரகாரமாயும் நம் வாழ்க்கையையும் வீடுகளையும் ஒழுங்கமைப்பதற்கும் ஆயத்தப்படுவதற்கும் சரியான கட்டமைப்பை வழங்குகின்றன. புத்தி கூர்மை, சரீர, ஆவிக்குரிய மற்றும் சமூக ஆயத்த நிலையில், “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும், அதிகமதிகமாய் விருத்தியடைந்த,” 7 இரட்சகரின் உதாரணத்தை நமது முயற்சிகள், ஆயத்தப்படவும், அநித்தியத்தின் நிரூபிக்கும் அனுபவங்களை பின்பற்றவும் வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிற்பகலில், சூசனும் நானும் எங்கள் உணவு சேமிப்பு மற்றும் அவசரகால பொருட்களைக் கணக்கெடுத்தோம். அந்த நேரத்தில், கோவிட்-19 வேகமாக பரவி வந்தது, தொடர்ச்சியான பூகம்பங்கள் யூட்டாவில் உள்ள எங்கள் வீட்டைத் தாக்கின. எதிர்பாராத சவால்களுக்குத் தயாராவதுபற்றிய தீர்க்கதரிசன ஆலோசனையைப் பின்பற்ற எங்கள் திருமண நாட்களிலிருந்து நாங்கள் பணியாற்றியுள்ளோம், எனவே நோய்த்தொற்று மற்றும் பூகம்பங்களுக்கிடையில் நம்முடைய தயார்நிலையை “ஆராய்வது” ஒரு நல்ல மற்றும் சரியான நேரத்தில் செய்ய வேண்டியது போல் தோன்றியது. அறிவிக்கப்படாத இந்த சோதனைகளில் எங்கள் தரங்களைக் கண்டுபிடிக்க நாங்கள் விரும்பினோம்.

நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். பல பகுதிகளில், எங்கள் ஆயத்த பணிகள் சரியாக இருந்தன. எவ்வாறாயினும், வேறு சில பகுதிகளில், முன்னேற்றம் அவசியம், ஏனென்றால் குறிப்பிட்ட தேவைகளை சரியான நேரத்தில் நாங்கள் அடையாளம் கண்டு சரிசெய்யவில்லை.

நாங்கள் நிறைய சிரித்தோம். உதாரணமாக, பல தசாப்தங்களாக எங்கள் உணவு சேமிப்பகத்தில் இருந்த தொலைவிலிருந்த பெட்டியில் உள்ள பொருட்களை நாங்கள் கண்டுபிடித்தோம். வெளிப்படையாக சொன்னால், மற்றொரு உலகளாவிய தொற்றுநோயை கட்டவிழ்த்துவிடுமோ என்ற பயத்தில் சில கொள்கலன்களைத் திறந்து ஆய்வு செய்ய நாங்கள் பயந்தோம்! ஆனால் அபாயகரமான பொருட்களை நாங்கள் முறையாக அப்புறப்படுத்தினோம், உலகிற்கு அந்த சுகாதார ஆபத்து நீக்கப்பட்டது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.

சில சபை அங்கத்தினர்கள் அவசரகால திட்டங்கள் மற்றும் பொருட்கள், உணவு சேமிப்பு மற்றும் 72 மணிநேர கருவிகள் இனி முக்கியமாக இருக்கக்கூடாது என்று கருதுகின்றனர், ஏனெனில் பொது மாநாட்டில் இந்த மற்றும் தொடர்புடைய தலைப்புகளைப்பற்றி சகோதரர்கள் சமீபத்தில் விரிவாக பேசவில்லை. ஆனால் ஆயத்தம் செய்வதற்கான மென்மேலும் அறிவுறுத்தல்கள், சபையின் தலைவர்களால் பல தசாப்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் தீர்க்கதரிசன ஆலோசனையின் நிலைத்தன்மை தனி நிகழ்ச்சிகள் உருவாக்கக்கூடியதை விட ஒரு தெளிவான கச்சேரியை, சத்தமான எச்சரிக்கையை உருவாக்குகிறது.

சவாலான நேரங்கள் உலகப்பிரகார ஆயத்தத்தில் உள்ள போதாமைகளை வெளிப்படுத்துவதைப் போலவே, ஆவிக்குரிய கவனமின்மை மற்றும் மனக்குழப்பங்களும் கடினமான சோதனைகளின் போது அவற்றின் மிகவும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஆயத்தத்தை தள்ளிப்போடுதல் தோல்வியுற்ற சோதித்தலுக்கு வழிவகுக்கிறது என்று பத்து கன்னிகைகளின் உவமையில் நாம் கற்றுக்கொள்கிறோம். மணவாளன் வரும் நாளில் ஐந்து முட்டாள்தனமான கன்னிப்பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வுக்கு சரியான முறையில் ஆயத்தம் செய்யத் தவறியதை நினைவில் கொள்ளவும்.

“புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூட எடுத்துக்கொண்டு போகவில்லை.

புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.

“நடுராத்திரியிலே, இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

“அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

“புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி, உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே, என்றார்கள்.

“புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக, அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள்.

“அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது, மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடுகூட கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது.

“பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்காகத் திறக்க வேண்டும் என்றார்கள்.” 8

“அதற்கு அவர் உங்களை அறியேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” 9

குறைந்தபட்சம் இந்த தேர்வில், தங்களைக் கேட்பவர்கள் மட்டுமே ஆனால் வார்த்தையின்படி செய்பவர்கள் அல்ல என்பதை ஐந்து முட்டாள்தனமான கன்னிகைகள் நிரூபித்தனர். 10

சட்டக்கல்லூரியில் கவனமிக்க மாணவராக இருந்த ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார். ஒரு செமஸ்டர் காலப்பகுதியில், சாம் ஒவ்வொரு நாளும் அவர் பதிவுசெய்த ஒவ்வொரு பாடத்திற்கும் தனது குறிப்புகளை மறுபரிசீலனை செய்யவும், சுருக்கமாக கற்றுக்கொள்ளவும் நேரத்தை ஒதுக்கினார். ஒவ்வொரு வாரத்தின் மற்றும் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் தனது வகுப்புகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியைப் பின்பற்றினார். அவரது அணுகுமுறை விவரங்களை மனப்பாடம் செய்வது மட்டுமின்றி சட்டத்தை கற்றுக்கொள்ளவும், அவருக்கு உதவியது. இறுதித் தேர்வுகள் நெருங்கியவுடன், சாம் ஆயத்தமாயிருந்தார். உண்மையில், அவர் இறுதித் தேர்வுக் காலம் தனது சட்டப் பயிற்சியின் மிகக் குறைந்த மன அழுத்தகாலமாக இருப்பதைக் கண்டார். பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் ஆயத்தம் செய்தல் வெற்றிகரமாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாக வருகிறது.

சாமின் சட்டக் கல்விக்கான அணுகுமுறை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கர்த்தரின் முதன்மை மாதிரிகளில் ஒன்றை எடுத்துக்காட்டுகிறது. “வரி வரியாயும், கற்பனை கற்பனையாயும், இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமாக, மனுபுத்திரருக்கு நான் கொடுப்பேன். என் கற்பனைக்கு செவிகொடுப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நான் அதிகமாய்க் கொடுப்பேன், என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.” 11

“உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்,” 12 மற்றும் நாம் “விசுவாசமுள்ளவர்களாவென்று [நம்மை] [நாமே] சோதிக்க 13 நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். இந்த சமீபத்திய மாதங்களில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? ஆவிக்குரிய விதமாகவும், சரீர ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் நம் வாழ்க்கையில் எதை மேம்படுத்த வேண்டும்? நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவதை எல்லாம் ஆயத்தம் செய்து நிரூபிக்க வேண்டிய நேரம் இப்போது.

சோதித்தலும் முன்னேறுதலும்

ஒரு முறை விபத்தில் கொல்லப்பட்ட ஒரு இளம் ஊழியக்காரரின் இறுதி சடங்கில் நான் கலந்துகொண்டேன். ஊழியக்காரரின் தகப்பன் இறுதிச்சடங்கில் பேசினார் மற்றும் ஒரு அன்பான பிள்ளையின் எதிர்பாராத மரணப் பிரிவின் மன வேதனையை விவரித்தார் அத்தகைய நிகழ்விற்கான காரணங்கள் அல்லது நேரங்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் புரியவில்லை என்று அவர் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் இந்த நல்ல மனிதர் தனது பிள்ளையின் மரணத்தின் காரணங்களையும் நேரத்தையும் தேவன் அறிந்திருப்பதாகவும், அது அவருக்கு போதுமானதாக இருந்தது என்றும் அறிவித்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். அவரும் அவரது குடும்பத்தினரும் துக்கமாக இருந்தாலும் நன்றாக இருப்பார்கள் என்று அவர் கூட்டத்தினரிடம் கூறினார்; அவர்களின் சாட்சியங்கள் உறுதியாகவும் திடமாகவும் இருந்தன. இந்த அறிவிப்புடன் அவர் தனது கருத்துக்களை முடித்தார், “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பொறுத்தவரை, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் இருக்கிறோம்.”

அன்பான ஒருவரை இழந்திருப்பது இதயத்தைப் பிழிவதும் கடினமானதும் என்றாலும், இந்த வீரமிக்க குடும்பத்தினர் ஆவிக்குரியவிதமாக தாங்கள் அனுபவித்த விஷயங்களின் மூலம் நித்திய முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க ஆயத்தமாக இருந்தனர். 14

விசுவாசமுடைமை முட்டாள்தனமல்ல அல்லது வெறித்தனமல்ல. மாறாக, அது நம்முடைய இரட்சகராக இயேசு கிறிஸ்துவின் மீதும், அவருடைய நாமத்திலும், அவருடைய வாக்குறுதிகளிலும் நம்பிக்கை வைப்பதாகும். நாம் “கிறிஸ்துவில் உறுதியுடன், நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்தையும், தேவன் மீதும் எல்லா மனிதர்களிடமும் அன்பை கொண்டவர்களாக” முன்னேறும்போது, 15 நாம் ஒரு நித்திய கண்ணோட்டத்துடனும் பார்வையுடனும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் அது நமது குறைவான உலகப்பிரகார திறனுக்கு அப்பாலும் நீள்கிறது. “பரிசுத்த ஸ்தலங்களில் ஒன்றுகூடி நிற்கவும்” 16 கர்த்தர் வருகிற நாள் வரையிலும் அசைக்கப்படாமலிருக்கவும்” 17 நாம் பெலன் பெறுவோம்.

நான் ப்ரிகாம் யங் பல்கலைக் கழகம், ஐடஹோவின் தலைவராக பணியாற்றும் போது, மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் எங்கள் வாராந்திர ஆராதனைகள் ஒன்றில் பேச டிசம்பர் 1998 ல் எங்கள் வளாகத்திற்கு வந்தார். மூப்பர் ஹாலண்ட் தனது செய்தியை வழங்குவதற்கு முன்பு சூசனும் நானும் ஒரு குழு மாணவர்களை சந்திக்க அழைத்தோம். நாங்கள் ஒன்றாக இருந்த நேரம் முடியவிருப்பதால், நான் மூப்பர் ஹாலன்டைக் கேட்டேன், “இந்த மாணவர்களுக்கு ஒரு விஷயத்தை நீங்கள் கற்பிக்க முடிந்தால், அது என்னவாக இருக்கும்?”

அவர் பதிலளித்தார்:

“பிரிவினையை நோக்கி எப்போதையும்விட பெரிய இயக்கத்தை நாம் காண்கிறோம். பிற்காலப் பரிசுத்தவான்களாக நடுநிலை விருப்பங்கள் நம்மிடமிருந்து அகற்றப்படும். சாலையின் நடுப்பகுதி திரும்பப் பெறப்படும்.

“நீங்கள் ஒரு நதியின் நீரோட்டத்தில் தண்ணீரில் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் எங்காவது செல்வீர்கள். நீரோட்டம் உங்களை அழைத்துச் செல்லும் இடமெல்லாம் நீங்கள் செல்வீர்கள். ஓடையுடன் செல்வது, அலைகளைத் தொடர்வது, நீரோட்டத்தில் நகர்வது போதாது.

“தேர்வுகள் செய்யப்பட வேண்டும். தேர்ந்தெடுக்காதது செய்யாதது ஒரு தேர்ந்தெடுப்பு. இப்போது தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ”

என் கேள்விக்கு அவர் பதிலளித்ததிலிருந்து 22 ஆண்டுகளின் சமூக போக்குகள் மற்றும் நிகழ்வுகளால் பிரிவினை அதிகரிப்பதைப் பற்றிய மூப்பர் ஹாலண்டின் அறிக்கை தீர்க்கதரிசனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்த்தரின் வழிகளுக்கும், உலகின் வழிகளுக்கும், இடையில் பிரிவு விரிவடைந்து வருவதை முன்னறிவித்த மூப்பர் ஹாலண்ட், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் ஒரு கால், மற்றும் உலகில் ஒரு கால், என வசதியாக இருக்கும் நாட்கள் விரைவாக மறைந்து கொண்டிருப்பதாக எச்சரித்தார். .கர்த்தருடைய இந்த ஊழியக்காரர் இளைஞர்களை இரட்சகரின் சீஷர்களாக தேர்வு செய்யவும், ஆயத்தப்படவும், அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஊக்குவித்தார். அவர்களின் வாழ்க்கையின் அனுபவங்களை நிரூபித்தல், ஆராய்தல் மற்றும் முயற்சிப்பதன் மூலம் அவர்களை ஆயத்தப்படவும் முன்னோக்கிச் செல்லவும் அவர் அவர்களுக்கு உதவினார்.

வாக்களிப்பும் சாட்சியும்

நம்மை நிரூபிக்கும் செயல்முறை பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் சிறந்த திட்டத்தின் அடிப்படை பகுதியாகும். இரட்சகரின் மீதான நம்பிக்கையுடன் நாம் இருவரும் ஆயத்தம் செய்து முன்னோக்கிச் செல்லும்போது, அநித்தியத்தின் இறுதி தேர்வில் நாம் அனைவரும் ஒரே தரத்தைப் பெற முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன்:“நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி .” 18

நித்திய பிதாவாகிய தேவன் நம்முடைய பிதா என்று நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்து அவருடைய ஒரே பேறான மற்றும் ஜீவிக்கும் குமாரன், நம்முடைய இரட்சகரும் மீட்பருமானவர். இந்த சத்தியங்களைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் மகிழ்ச்சியுடன் சாட்சியளிக்கிறேன், ஆமென்.