பொது மாநாடு
நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நட
அக்டோபர் 2020 பொது மாநாடு


நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நட

நியாயமாகச் செய்வதென்பது, கௌரவமாக நடந்துகொள்வதென்பதாகும். அவருடன் தாழ்மையாக நடந்து செல்வதால் தேவனுடன் நாம் கௌரவமாக நடக்கிறோம். இரக்கத்தை நேசிப்பதால் மற்றவர்களுடன் நாம் கௌரவமாக செயல்படுகிறோம்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, பிற்காலப் பரிசுத்தவான்களாக, சிறப்பாகச் செய்யவும், சிறப்பானவர்களாக இருக்கவும் நாம் முயற்சிக்கிறோம், முயற்சிக்க ஊக்குவிக்கப்படுகிறோம்.1 ஒருவேளை, என்னைப்போல “நான் போதுமானளவுக்கு செய்துகொண்டிருக்கிறேனா?” என நீங்கள் ஆச்சரியப்படலாம். “வேறு என்ன நான் செய்ய வேண்டும்?” அல்லது “’முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்யும்படி’, தோல்வியடைந்த மனுஷனாக நான் எப்படி தகுதி பெற முடியும்?”2

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மீகா இந்த வழியில் கேள்வி கேட்டான்: “என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்?”3 “ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணையாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும் கர்த்தர் பிரியமாயிருப்பாரோ, என் ஆத்துமாவின் பாவத்தைப்போக்க என் முதற்பேறானவரைக் கொடுக்கவேண்டுமோ?”4 எனச் சொல்லி பாவத்திற்கு ஈடுசெய்ய அதிகமான காணிக்கைகள் போதுமானதாயிருக்குமோ என மீகா நையாண்டியாக ஆச்சரியப்பட்டான்.

இல்லை என்பதே பதில். நல்ல செயல்கள் போதாது. இரட்சிப்பு சம்பாதிக்கப்படுவதில்லை.5 மீகாவுக்குத் தெரிந்த பரந்த பலிகளும்கூட மிகச் சிறிய பாவத்தை மீட்க சாத்தியமாகாது. தேவனின் பிரசன்னத்தில் வாழ திரும்புவதற்கான வாய்ப்பை நம்முடைய சொந்த சாதனங்களுக்கு விட்டுவிடுவது நம்பிக்கையற்றது.6

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகிற ஆசீர்வாதங்களில்லாமல், நம்மால் ஒருபோதும் போதுமானதைச் செய்யமுடியாது, போதுமானதாக இருக்கமுடியாது. ஆனாலும் நல்ல செய்தி என்னவென்றால், இயேசு கிறிஸ்து மூலமாகவே நாம் போதுமானவர்களாக ஆகமுடியும் என்பது.7 இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, தேவனின் கிருபையால் சரீர மரணத்திலிருந்து சகல மக்களும் இரட்சிக்கப்படுவார்கள். 8 தேவனிடத்தில் நம் இருதயங்களைத் திருப்பினால், “சுவிசேஷத்தின் பிரமாணங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதனால் [இயேசு]கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலமாக”9 ஆவிக்குரிய மரணத்திலிருந்து இரட்சிப்பு அனைவருக்கும் கிடைக்கிறது. தேவனுக்கு முன்பாக சுத்தமாகவும் தூய்மையாகவும் நிற்க பாவத்திலிருந்து நாம் மீட்கப்படமுடியும். மீகா விவரித்ததைப்போல, “[தேவன்]உனக்குக் காட்டினார், மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார், நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?”10

தேவனிடத்தில் நம் இருதயங்களைத் திருப்புவதில் மீகாவின் வழிகாட்டுதலிலும், இரட்சிப்புக்காக தகுதியாயிருப்பதிலும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மூன்று கூறுகளிருக்கின்றன. நியாயஞ்செய்தலுக்கு என்றால் தேவனுடனும் மற்ற மக்களுடனும் கௌரவமாக நடந்துகொள்வது என அர்த்தம். அவருடன் தாழ்மையாக நடந்து செல்வதால் தேவனுடன் நாம் கௌரவமாக நடக்கிறோம். இரக்கத்தை நேசிப்பதால் மற்றவர்களுடன் நாம் கௌரவமாக செயல்படுகிறோம். ஆகவே, நியாயஞ்செய்ய “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழுஇருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்புகூருவாயாக … உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”11 என்ற மிகப்பெரிய முதலாம் மற்றும் இரண்டாம் கட்டளைகள் செயல்முறை பிரயோகமே.

நியாயஞ்செய்யவும் தேவனுடன் தாழ்மையாக நடக்கவும் என்பது அக்கிரமத்திலிருந்து நமது கைகளை வேண்டுமென்றே விலக்கவும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கவும், வழக்கை உண்மையாக தீர்க்கவும்12 என்பதே. ஒரு நியாயவான் பாவத்திலிருந்து திரும்பி தேவனை நோக்கி செல்கிறான், அவருடன் உடன்படிக்கை செய்கிறான், அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுகிறான். நியாயவானான ஒருவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய, குறைவுள்ளவனாகும்போது மனந்திரும்ப, தொடர்ந்து முயற்சிக்க தேர்ந்தெடுக்கிறான்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நேபியர்களை சந்தித்தபோது, மோசேயின் நியாயப்பிரமாணம் ஒரு உயர் நியாயப்பிரமாணத்தால் மாற்றியமைக்கப்பட்டதென அவர் விவரித்தார். இனிமேலும், “பலிகளையும் தகனபலிகளையும் படைக்க “வேண்டாமென்றும், ஆனால் நொறுங்குண்ட இருதயத்தையும் நருங்குண்ட ஆவியையும் செலுத்துங்கள் என அவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். “என்னிடத்தில் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் வருகிற எவருக்கும் அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுப்பேன்”13 என்றும் அவர் வாக்குத்தத்தம் கொடுத்தார். ஞானஸ்நானத்திற்குப் பின்னர், பரிசுத்த ஆவியை நாம் பெற்று பயன்படுத்தும்போது, பரிசுத்த ஆவியின் நிரந்தர தோழமையை நாம் அனுபவிப்போம் மற்றும் எவ்வாறு தேவனுடன் தாழ்மையாய் நடப்பதென்பதையும் சேர்த்து நாம் செய்யவேண்டிய அனைத்துக் காரியங்களும் போதிக்கப்படும்.14

பாவத்திற்காகவும், ஆவிக்குரிய மரணத்திலிருந்து இரட்சிப்புக்காகவும் இயேசு கிறிஸ்துவின் தியாகம் நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும் கொண்டிருக்கிற அனைவருக்கும் கிடைக்கிறது.15 நொறுங்குண்ட இருதயமும், நருங்குண்ட ஆவியும், சந்தோஷமாக நம்மை மனந்திரும்பவும், நமது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப் போலாக முயற்சி செய்யவும் உணர்த்துகிறது. நாம் அப்படிச் செய்யும்போது, இரட்சகரின் கழுவுதலையும், குணமாக்குதலையும், பலப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகிறோம். நாம் நியாயம் செய்து, தேவனுடன் தாழ்மையாய் நடப்பது மட்டுமல்லாமல், பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் செய்கிறதைப்போல நாமும் இரக்கத்தை நேசிக்க கற்றுக்கொள்வோம்.

இரக்கத்தில் தேவன் மகிழ்ச்சியடைகிறார், அதன் பயனில் பொறாமை கொள்ளுவதில்லை. யேகோவாவுக்கு மீகாவின் வார்த்தைகளில், யேகோவா “மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார், …அவர் நம்மேல் இரங்குவார், பாவங்களையெல்லாம், சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்”.16 தேவன் செய்கிறதைப்போல, இரக்கத்தை நேசிக்க என்பது, மற்றவர்களுடன் நியாயமாக நடந்துகொண்டு, அவர்களை மோசமாக நடத்தாதிருப்பதற்கு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவுக்கு முன் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத அறிஞரான ஹில்லெல் என்ற மூப்பரைப்பற்றிய ஒரு குறிப்பில், மற்றவர்களை மோசமாக நடத்தாதிருப்பதின் முக்கியத்துவம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹில்லெலின் மாணவர்களில் ஒருவர், அவர்களுடைய 613 கட்டளைகளுடன் மோசேயின் ஐந்து புத்தகங்கள் மற்றும் ராபானிக்கின் எழுத்துக்களுடன் இணைக்கப்பட்ட டோராவின் சிக்கலால் கோபமடைந்தார். ஹில்லெல் தனது ஒரே காலில் நிற்க முடிகிற நேரத்தை மட்டும் பயன்படுத்தி டோராவை விவரிக்க அவரை மாணவர்கள் சவால் விடுத்தனர். ஹில்லெலுக்கு மிகப்பெரிய அளவில் சமநிலைப்படுத்துதல் இல்லாவிட்டாலும் சவாலை ஏற்றுக்கொண்டார். லேவியராகமத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் சொன்னார், “பழிக்குப் பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக”17 பின்னர் ஹில்லெல் விரைவில் முடித்தார்: “உனக்கு வெறுப்பானவைகளை பிறனுக்கு நீ செய்யாதிருப்பாயாக. இதுதான் டோராவின் முழுமை, எஞ்சியவை வியாக்கியானங்கள். புறப்பட்டுப்போய் படியுங்கள்.”18

மற்றவர்களுடன் எப்போதும் கௌரவமாக நடந்துகொள்ளுதல் அன்பான இரக்கத்தின் பகுதியாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேரிலான்டின் பல்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் அவசர பிரிவில் பல ஆண்டுகளுக்கு முன் நான் கேட்ட ஒரு உரையாடலை கருத்தில் கொள்ளவும். மரியாதையும் இனிமையுமான மனிதனான, மருத்துவமனை பணியாளர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக திரு. ஜாக்சன் என்ற நோயாளி இருந்தார். மது அருந்துவதற்கு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சைக்காக இதற்கு முன் பலமுறை அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த சமயத்தில் மது அருந்துவதால் தூண்டப்பட்ட கணையத்தின் அழற்சி என கண்டறியப்படும் அறிகுறிகளுக்காக திரு.ஜாக்சன் மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருந்தார்.

தனது வேலை நேரத்தின் முடிவுக்கு வந்திருந்த, கடின உழைப்பாளியும், போற்றப்படுகிற மருத்துவருமான டாக்டர். கோஹன் திரு. ஜாக்சனை பரிசோதித்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பது அவசியமென தீர்மானித்தார். திரு. ஜாக்சனை சேர்க்கவும், அவரது சிகிச்சையை மேற்பார்வையிடவும் டாக்டர் கோஹன், சுழற்சியில் அடுத்த மருத்துவரான டாக்டர் ஜோன்ஸை நியமித்தார்.

டாக்டர் ஜோன்ஸ் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் பயின்று, தற்போது அவளுடைய முதுகலைப் படிப்பை ஆரம்பித்திருந்தாள் இந்த கடுமையான பயிற்சி பெரும்பாலும் தூக்கமின்மையுடன் தொடர்புடையது, இது டாக்டர் ஜோன்ஸின் எதிர்மறையான பதிலுக்கு பங்களித்திருக்கலாம். அந்த இரவின் ஐந்தாவது நோயாளி சேர்க்கையை எதிர்கொண்ட டாக்டர் ஜோன்ஸ், டாக்டர் கோஹனிடம் சத்தமாக புகார் செய்தாள். திரு. ஜாக்சனின் அவலநிலை அவராலேயே ஏற்பட்டிருந்தாலும், அவரைப் பராமரிப்பதற்கு அவள் பல மணிநேரம் செலவழிக்க வேண்டியதிருந்தது நியாயமற்றது என்று அவள் உணர்ந்தாள்.

டாக்டர் கோஹனின் உறுதியான பதில் கிட்டத்தட்ட ஒரு மென்குரலில் பேசப்பட்டது. அவர் சொன்னார், “டாக்டர். ஜோன்ஸ், நீங்கள் மக்களைப் பராமரிப்பதற்கும் அவர்களை குணப்படுத்துவதற்கும் ஒரு மருத்துவரானீர்கள். அவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் மருத்துவராகவில்லை. வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற உங்களுக்கு எந்த உரிமையுமில்லை. இதைத் தொடர்ந்து, திரு. ஜாக்சன் மருத்துமனையிலிருந்தபோது டாக்டர். ஜோன்ஸ் அவரை சிரத்தையுடன் கவனித்துக்கொண்டாள்.

திரு. ஜாக்சன் பின்னர் மரித்துப்போனார். டாக்டர். ஜோன்ஸ் டாக்டர் கோஹன் இருவருக்குமே மிகச்சிறந்த மருத்துவ தொழில்களிருந்தன. ஆனால், அவளுடைய பயிற்சியின் ஒரு முக்கியமான நேரத்தில் நியாயமாயிருக்கவும், இரக்கத்தை நேசிக்கவும், தீர்ப்பளிக்காமல் திரு. ஜோன்ஸை பராமரிக்கவும் டாக்டர். ஜோன்ஸூக்கு நினைவுகூரப்படுவது அவசியமாயிருந்தது.19

பல ஆண்டுகளாக, அந்த நினைவிலிருந்து நான் பயனடைந்தேன். தேவன் நமக்கு வழங்கிய இரக்கத்தை வெறுமனே நாம் நேசிப்பதில்லை, அதே இரக்கத்தை மற்றவர்களுக்கும் தேவன் வழங்குகிறார் என்பதில் நாம் மகிழ்கிறோம் என்பதே இரக்கத்தை நேசிப்பதின் அர்த்தம். நாம் அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றுகிறோம். “அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே,”20 மற்றும் உதவப்படவும் குணமாக்கப்படவும் நம் அனைவருக்கும் ஆவிக்குரிய சிகிச்சை அவசியமாயிருக்கிறது. கர்த்தர் சொன்னார், “ஒருவனுக்கு மேலானவனாக மற்றொருவனை எண்ணாதே, ஒருவன் தன்னை மற்றொருவனைக்காட்டிலும் மேலானவனாகவும் எண்ணக்கூடாது.”21

நியாயஞ் செய்வதற்கும், இரக்கத்தை நேசிப்பதற்குமான அர்த்தத்துக்கு இயேசு கிறிஸ்து எடுத்துக்காட்டாயிருந்தார். அவர் பாவிகளை கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தி அவர்களுடன் சுதந்தரமாக உறவாடினார். தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதின் மகிழ்ச்சியைப்பற்றி அவர் போதித்து, போராடிக்கொண்டிருந்தவர்களை கண்டனம்பண்ணுவதற்குப் பதிலாக அவர்களை தூக்கிவிட நாடினார். தங்களைத் தகுதியற்றவர்கள் என்று கருதும் மக்களுக்கு ஊழியம் செய்ததற்காக தன்மீது தவறு கண்டுபிடித்தவர்களை அவர் கண்டித்தார்22. அத்தகைய சுயநீதி, அவரைப் புண்படுத்தி இன்னமும் புண்படுத்துகிறது.23

கிறிஸ்துவைப் போலிருக்க தேவனுடனும் பிற மக்களுடனும் கௌரவமாக நடந்துகொள்ளுதலால் ஒருவன் நியாயஞ்செய்கிறான். ஒரு நியாயமான நபர் சொற்களிலும் செயலிலும் நாகரிகமாக இருக்கிறான், மேலும் கண்ணோட்டத்தில் அல்லது உண்மையான தயவு மற்றும் நட்பைத் தடுக்காத நம்பிக்கையில் உள்ள வேறுபாடுகளை அடையாளம் காண்கிறான். நியாயஞ் செய்கிற தனிப்பட்டவர்கள் “ஒருவருக்கொருவர் காயப்படுத்திக்கொள்ள மனதில்லாதவர்களாய், ஒருவருக்கொருவர் சமாதானமாய் ஜீவிக்கிறார்கள்”.24

கிறிஸ்துவைப் போலிருக்க ஒரு நபர் இரக்கத்தை நேசிக்கிறார். இரக்கத்தை நேசிக்கிற மக்கள் நியாயந்தீர்ப்பதில்லை, அவர்கள் மற்றவர்களிடம் கருணையைக் காட்டுகிறார்கள், குறிப்பாக அதிர்ஷ்டமில்லாதவர்களுக்கு; அவர்கள் கருணையுள்ளவர்கள், கனிவானவர்கள், கௌரவமானவர்கள். இனம், பாலினம், மத இணைப்பு, பாலியல் நோக்குநிலை, சமூக பொருளாதார நிலை மற்றும் கோத்திரம், குலம் அல்லது தேசிய வேறுபாடுகள் போன்ற பண்புகளைப் பொருட்படுத்தாமல் இந்த தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் அன்புடனும் புரிந்துகொள்ளுதலுடனும் நடத்துகிறார்கள். கிறிஸ்துவைப் போன்ற அன்பால் இவை முறியடிக்கப்படுகின்றன.

கிறிஸ்துவைப் போலிருக்க ஒருவன் தேவனைத் தேர்ந்தெடுக்கிறான்,25 அவருடன் தாழ்மையுடன் நடக்கிறான், அவரை மகிழ்ச்சியடைய நாடுகிறான், அவருடன் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிறான். தேவனுடன் தாழ்மையுடன் நடக்கிற தனிப்பட்டவர்கள் அவர்களுக்காக பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் செய்தவற்றை நினைவுகூருகிறார்கள்.

நான் போதுமானளவுக்கு செய்கிறேனா? நான் வேறு என்ன செய்துகொண்டிருக்கவேண்டும்? இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் நாம் எடுக்கிற நடவடிக்கை இந்த வாழ்க்கையிலும் நித்தியங்களிலும் நமது சந்தோஷத்திற்கு மையமாயிருக்கிறது. இரட்சிப்பை மிகச் சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்வதை இரட்சகர் விரும்பவில்லை. பரிசுத்த உடன்படிக்கைகளை நாம் செய்தபிறகும்கூட நாம் “கிருபையிலிருந்து விழுந்து ஜீவிக்கிற தேவனிடமிருந்து விலகிப்போக” ஒரு சாத்தியமிருக்கிறது. ஆகவே, “சோதனையில் விழாதபடிக்கு,” “செவிகொடுத்து நாம் எப்போதும் ஜெபிக்க வேண்டும்”26

ஆனால், அதே நேரத்தில், நமது அநித்திய பயணத்தின்போது, இரட்சிக்கப்படவும் மேன்மையடையவும் போதுமானளவுக்கு செய்கிறோமா என வியந்து அந்த தொடர்ந்த நிச்சயமின்மையால், நாம் திசை திருப்பப்பட நமது பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் விரும்புவதில்லை. நாம் மனந்திரும்பிய தவறுகளால் நாம் வேதனைப்படுவதை, அவற்றை ஒருபோதும் குணப்படுத்தாத காயங்களாக நினைத்துக்கொள்வதை, அல்லது நாம் மீண்டும் தடுமாறக்கூடும் என்று அதிகமாக பயப்படுகிறதை அவர்கள் நிச்சயமாக விரும்புவதில்லை.27

நம்முடைய சொந்த முன்னேற்றத்தை நாம் மதிப்பீடு செய்யலாம். நாம் நியாயஞ் செய்து, இரக்கத்தை நேசித்து, தேவனுடன் தாழ்மையாய் நடக்கும்போது, நாம் ”தொடருகிற வாழ்க்கைப் போக்கு தேவனின் சித்தப்படியே” என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்28. பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் பண்புகளை நம் குணத்தோடு இணைத்துக்கொண்டு, நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்.

இந்தக் காரியங்களை நீங்கள் செய்யும்போது, உடன்படிக்கை பாதையை நீங்கள் பின்பற்றுவீர்கள், “முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்ய” தகுதியடைவீர்கள்.29 தேவனின் மகிமையுடனும் நித்திய ஜீவனின் ஒளியுடனும் உங்கள் ஆத்துமாக்கள் உட்செலுத்தப்படும்.30 விவரிக்கமுடியாத சந்தோஷத்துடன் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள்.31 தேவன் ஜீவிக்கிறாரென்றும், இயேசுவே கிறிஸ்து என்றும், அவர் நமது இரட்சகர் மற்றும் மீட்பரென்றும், அவருடைய இரக்கத்தை அனைவருக்கும் அவர் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வழங்குகிறார் எனவும் நான் சாட்சியளிக்கிறேன். இதை நீங்கள் நேசிக்கவில்லையா? இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.