பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமை
அக்டோபர் 2020 பொது மாநாடு


இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமை

அவரில் விசுவாசம் வைத்து இயேசு கிறிஸ்துவண்டை நாம் வரும்போது, மனந்திரும்பி, உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கைக்கொள்ளும்போது, நமது உடைந்தவைகள், அவை எதுவாயிருந்தாலும் குணமடைய முடியும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அநேக கடினமான நிகழ்வுகளை நாம் கையாண்டு வருகிறோம். உயிர் இழப்பும், உலகளாவிய தொற்று நோயினால் வருவாயும் உலக சமுதாயத்தையும் பொருளாதாரத்தையும் மோசமாகப் பாதித்திருக்கிறது.

உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பூமியதிர்ச்சிகளும், நெருப்புகள், வெள்ளங்கள், அப்படியே பிற சீதோஷ்ணத்திற்கு சம்பந்தப்பட்ட அழிவுகளும் மக்களை உதவியற்றவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக மற்றும் உடைந்த உள்ளங்களுடனான உணர்வுடன், தங்கள் வாழ்க்கை பழையது போலாகுமா என்ற வியப்பில் மக்களை விட்டுவிட்டது.

உடைந்தவைகளைப்பற்றி ஒரு தனிப்பட்ட கதையை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

எங்களுடைய பிள்ளைகள் இளமையிருந்தபோது பியானோ கற்றுக்கொள்ள அவர்கள் தீர்மானித்தனர். என்னுடைய கணவர் ரூடியும் நானும் இந்த வாய்ப்பை எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க விரும்பினோம். ஆனால், எங்களிடம் பியானோ இல்லை. புதிய பியானோ வாங்குவதற்கு எங்களால் முடியாது, ஆகவே, ஒரு பழைய பியானோவை ரூடி தேட ஆரம்பித்தார்.

அந்த ஆண்டு கிறிஸ்துமஸில் ஒரு பியானோவுடன் அவர் எங்களை ஆச்சரியப்படுத்தினார், அந்த ஆண்டு முழுவதும் எங்களுடைய பிள்ளைகள் பியானோ கற்றுக்கொண்டார்கள்.

படம்
பழைய பியானோ

எங்கள் மகன்கள் வளர்ந்து வீட்டை விட்டுப் போனபோது, பழைய பியானோ தூசிபடிந்தது, ஆகவே நாங்கள் அதை விற்றுவிட்டோம். சில நாட்கள் கழிந்தன, நாங்கள் சிறிது பணம் சேமித்தோம். “புதிய பியானோ வாங்க இதுதான் நேரமென நான் நினைக்கிறேன்” என ஒருநாள் ரூடி சொன்னார்.

“நாம் இருவரும் வாசிக்காதபோது நாம் ஏன் ஒரு புதிய பியானோவை வாங்கவேண்டும்?” என நான் கேட்டேன்.

அவர் சொன்னார், “ஆனால், பியானோ அதுவாக வாசிக்கிற ஒன்றை நாம் வாங்கமுடியும்! துதிப்பாடல்கள், டாபர்னாக்கல் இசைக் குழுவினர் பாடல்கள், ஆரம்ப வகுப்பு பாடல்கள் அனைத்தையும், இன்னும் அதிகமானவற்றையும் சேர்த்து 4000க்கும் மேலான பாடல்களை வாசிக்க ஐபாடைப் பயன்படுத்தி பியானோவை நீங்கள் நிரல் செய்யலாம்.

குறைந்த விலையை சொல்வதில், ரூடி மிகச் சிறந்த விற்பனையாளர்.

படம்
புதிய பியானோ

நாங்கள் ஒரு அழகான புதிய பியானோவை வாங்கினோம், ஒரு சிலநாட்களுக்குப் பின்னர், இரண்டு பெரிய, பலமான மனிதர்கள் அதை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.

எங்கே வைக்கவேண்டுமென அவர்களுக்கு நான் காட்டி, பாதையை விட்டு விலகினேன்.

படம்
பியானோவை நகர்த்துதல்

இது ஒரு கனமான குழந்தையைப்போலிருந்தது மற்றும் கதவு வழியாக அதை எடுத்து வருவதற்காக, அவர்கள் அதன் கால்களை அகற்றிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த நகரக்கூடிய கை டிரக்கின் மேல் பியானோவை பக்கவாட்டில் வைக்க முடிந்தது.

எங்கள் வீடு சிறிது சாய்விலிருந்தது, துரதிர்ஷ்டவசமாக அந்த நாளின் ஆரம்பத்தில் பனி பெய்து, பொருட்கள் ஈரமாகவும் சேறும் சகதியாகவுமானது. இது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை உங்களால் பார்க்கமுடிகிறதா?

சின்ன சாய்வில் பியானோவை அந்த மனிதர்கள் உயர நகர்த்தியபோது, அது நழுவி, ஒரு பெரிய உடையும் உரத்த சத்தத்தை நான் கேட்டேன். நகரும் கை வண்டியிலிருந்து பியானோ கீழே விழுந்து மிகக் கடினமாக தரையில் மோதி எங்கள் புல்வெளியில் பள்ளத்தை ஏற்படுத்திற்று.

நான் சொன்னேன்,“என் அதிர்ஷ்டமே. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?”

இரண்டு பேரும் நன்றாக இருந்ததற்கு நன்றி.

அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, அவர்களுடைய கண்கள் விரிய, பின்னர் என்னை நோக்கி, நாங்கள் மிக வருந்துகிறோம். நாங்கள் எங்கள் கடைக்கு திரும்ப எடுத்துப்போகிறோம், எங்கள் மேலாளர் உங்களிடம் பேசுவார்” என்றனர்.

விரைவிலேயே மேலாளர் ரூடியிடம் பேசி, ஒரு புதிய பியானோவுக்கு ஏற்பாடு செய்தார். ரூடி இரக்கமுள்ளவராகவும் மன்னிப்பவராகவும் இருந்ததால், சேதத்தை சரிசெய்து அதே பியானோவை திரும்பக்கொண்டு வந்தால் போதும் என்றார், ஆனால், ஒரு புதிய பியானோவை எங்களுக்குக் கொடுக்க மேலாளர் வற்புறுத்தினார்.

“அது அதிகமாக சேதமடையவில்லை, சரிசெய்து அதையே கொண்டு வாருங்கள்” எனச் சொல்லி ரூடி பதிலளித்தார்.

மேலாளர் சொன்னார், “பலகை உடைந்துவிட்டது, ஒருதடவை பலகை உடைந்துவிட்டால் அதே ஒலி மீண்டும் வராது. நீங்கள் ஒரு புதிய பியானோவை பெறுவீர்கள்.”

சகோதர சகோதரிகளே, சிறிது உடைந்து, கீறல்விழுந்து, சேதமடைந்து, நாம் மீண்டும் ஒருபோதும் அதே போன்றிருக்கமாட்டோம் என்ற உணர்வுடன் நாம் அனைவரும் இந்த பியானோவைப் போலிருக்கிறோமா? ஆயினும், அவரில் விசுவாசம் வைத்து இயேசு கிறிஸ்துவண்டை நாம் வரும்போது, மனந்திரும்பி, உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கைக்கொள்ளும்போது, நமது உடைந்தவைகள், அவை எதுவாயிருந்தாலும் குணமடைய முடியும். நமது வாழ்க்கைக்குள் இரட்சகரின் குணமாக்கும் வல்லமையை அழைக்கிற இந்த நடைமுறை, நாம் முன்பு இருந்ததை மட்டும் மீட்டெடுப்பதில்லை, ஆனால் நாம் எப்போதும் இருந்ததை விட நம்மை சிறந்ததாக்குகிறது நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் அனைவரும் சரிசெய்யப்பட, முழுமையாக்கப்பட, நமது நோக்கத்தை நிறைவாக்க முடியும், மற்றும் ஒரு அழகிய புத்தம் புதிய பியானோவைப்போல ஒலி எழுப்ப முடியுமென நான் அறிகிறேன்.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “நம்மீது கடினமான சோதனைகள் வரும்போது, தேவனில் நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும், கடினமாக உழைக்கவும் மற்றவர்களுக்கு சேவை செய்யவும் இதுதான் நேரம். பின்னர், அவர் நம் உடைந்த இருதயங்களை குணப்படுத்துகிறார். தனிப்பட்ட சமாதானத்தையும் ஆறுதலையும் நம்மீது அவர் அருளுகிறார். அந்த மகத்தான வரங்கள், மரணத்தினாலும்கூட அழிக்கப்படாது” 1

இயேசு சொன்னார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” (மத்தேயு 11:28–30).

படம்
நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து

உடைந்ததை குணமாக்க அவரண்டை வருவதால், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நமக்கு தேவையாயிருக்கிறது. “இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருத்தல் என்றால் அவரை முழுமையாக சார்ந்திருத்தல் என்றும், அவருடைய முடிவற்ற வல்லமையில் … அன்பில் நம்பியிருத்தல் என்றும் அர்த்தமாகிறது. அவருடைய போதனைகளை நம்புதல் அதில் அடங்கியிருக்கிறது. அவர் செய்கிற அனைத்துக் காரியங்களையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டாலும் அதை நம்புதல் என அர்த்தமாகிறது. நமது வேதனைகள், உபத்திரவங்கள், குறைபாடுகள் அனைத்தையும் அவர் அனுபவித்ததால், நம்முடைய அன்றாட பிரச்சினைகளுக்கு மேலே உயர்த்த எவ்வாறு நமக்குதவலாம் என அவர் அறிந்திருக்கிறார்.” 2

அவரண்டை நாம் வரும்போது, “சந்தோஷத்துடன், சமாதானத்துடன், ஆறுதலுடன் நாம் நிரப்பப்படலாம். [கடினமானதும் சவாலானதும்] வாழ்க்கையில் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்” 3 . “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36 என அவர் நமக்கு ஆலோசனையளித்தார்.

மார்மன் புஸ்தகத்தில் ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் அவர்கள்மீது வைக்கப்பட்ட பாரங்களால் அநேகமாக நசுக்கப்படவிருந்தபோது நிவாரணத்திற்காக அவர்கள் கெஞ்சினார்கள். கர்த்தர் அவர்களுடைய பாரங்களை எடுத்துப்போடவில்லை, பதிலாக அவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் கொடுத்தார்:

“நீங்கள் அடிமைத்தனத்தில் இருக்கும்போதே, உங்களின் தோள்களிலே சுமத்தப்படுகிற சுமைகளை நீங்கள் உணராமலிருக்குமளவிற்கு அவைகளை லகுவாக்குவேன். இந்நாள் முதற்கொண்டு நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருக்கும்பொருட்டும், தன் ஜனத்தை அவர்களுடைய உபத்திரவங்களிலே சந்திக்கிற கர்த்தராகிய தேவன் நானே என்று அதினிமித்தம் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்களென்றும், இவைகளைச் செய்வேன்.

“இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மாவின் மீதும், அவனுடைய சகோதரர்களின் மீதும் சுமத்தப்பட்ட சுமைகள் லகுவாக்கப்பட்டன; ஆம், அவர்கள் நிர்விசாரமாய் தங்களுடைய பாரங்களைச் சுமக்க கர்த்தர் பெலப்படுத்தினார், அவர்களும் கர்த்தருடைய சித்தத்திற்கு மகிழ்ச்சியோடும் பொறுமையாயும் கீழ்ப்படிந்தார்கள்” (மோசியா 24:14–15).

குணமாக்கவும் பாரங்களை இலகுவாக்கவும் இரட்சகரின் திறனைப்பற்றி மூப்பர் டாட் ஆர். காலிஸ்டர் போதித்தார்:

“பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களில் ஒன்று, இரட்சகரின் ஆதரிக்கும் வல்லமைகளை நாம் பெறமுடிகிறதாகும். கர்த்தரின் குணமாக்குதலையும் அமைதியான செல்வாக்கையும் ஏசாயா திரும்பத் திரும்ப பேசினான். இரட்சகர் ‘நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருந்தார்’ (ஏசாயா 25:4) என அவன் சாட்சியளித்தான். துயரப்பட்ட அனைவருக்கும் ‘ஆறுதல் செய்ய’ (ஏசாயா 61:2), ‘எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைக்க’ (ஏசாயா 25:8; வெளிப்படுத்தின விசேஷம் 7:17 ஐயும் பார்க்கவும்); ‘பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்க’ (ஏசாயா 57:15); இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்ட’ (ஏசாயா 61:1; லூக்கா 4:18; சங்கீதம் 147:3 ஐயும் பார்க்கவும்) இரட்சகர் வல்லமையைக் கொண்டிருந்தார் என துக்கப்படுகிறவர்களுக்கு ஏசாயா அறிவித்தான். ஆகவே, ‘சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும்’ அவரால் மாற்றிக்கொடுக்க முடியுமானதால், அவருடைய ஆதரிக்கும் வல்லமை விரிவானது(ஏசாயா 61:3).

ஓ, அந்த வாக்குத்தத்தத்தில் எவ்வளவு நம்பிக்கை உயருகிறது! … அவருடைய ஆவி குணப்படுத்துகிறது, அது சுத்திகரிக்கிறது, ஆறுதல்படுத்துகிறது, நம்பிக்கை அற்றவர்களின் இருதயங்களுக்குள் புதிய ஜீவனை அது சுவாசிக்கிறது. வாழ்க்கையில் அசிங்கமானதும், தீமையானதும், தகுதியற்றதுமான அனைத்தையும் உயர்ந்த மகத்துவமான மகிமையான ஒன்றிற்கு மாற்றக்கூடிய ஆற்றல் அதற்குண்டு. அநித்தியத்தின் சாம்பலை நித்தியத்தின் அழகிற்கு மாற்ற அவருக்கு வல்லமையிருக்கிறது.” 4

இயேசு கிறிஸ்து நமது அன்பான இரட்சகர், நமது மீட்பர், முதன்மையான குணமாக்குபவர், உண்மையுள்ள நண்பர் என நான் சாட்சியளிக்கிறேன். அவரிடத்தில் நாம் திரும்பினால், அவர் நம்மைக் குணமாக்கி மீண்டும் நம்மை குணமாக்குவார். இது அவருடைய சபை என்றும், இந்த பூமியின் மேல் வல்லமையுடனும் மகிமையுடனும் ஆளுகை செய்ய மீண்டும் ஒருமுறை வர அவர் ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாரென்றும் நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Jesus Christ—the Master Healer,” Liahona, Nov. 2005, 87.

  2. Faith in Jesus Christ,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org.

  3. Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2018), 52, ChurchofJesusChrist.org.

  4. Tad R. Callister, The Infinite Atonement (2000), 206–7.