பொது மாநாடு
ஒவ்வொரு சிந்தனையிலும் கிறிஸ்துவை தேடுங்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


ஒவ்வொரு சிந்தனையிலும் கிறிஸ்துவை தேடுங்கள்

சோதனையை எதிர்த்துப் போரிட கருத்துடனும் விசுவாசத்துடனுமான ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது. ஆனால் கர்த்தர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.

சங்கீதக்காரன் கவிதைப் பாடலில், இவ்வாறு அறிவித்தான்:

“கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

“என் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

“நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர். என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.”1

இந்த கவிதையின் சொல்லுக்கு பொருள் இணையாக, சங்கீதக்காரன் கர்த்தரின் சர்வ ஞானத்தின் தெய்வீக பண்பைப் புகழ்கிறான், ஏனென்றால் நம்முடைய ஆத்துமாக்களின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் உண்மையிலேயே அறிவார்.2 இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவையான அனைத்தையும் அறிந்திருப்பதால், ஒவ்வொரு சிந்தனையிலும் அவரைத் தேடவும், முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றவும் இரட்சகர் நம்மை அழைக்கிறார்.3 அவருடைய வெளிச்சத்தில் நாம் நடக்க முடியும் என்பதையும், அவருடைய வழிகாட்டுதல் நம் வாழ்வில் இருளின் செல்வாக்கைத் தடுக்கிறது என்ற வாக்குத்தத்தத்தையும் இது நமக்கு அளிக்கிறது.4

ஒவ்வொரு சிந்தனையிலும் அவரைத் தேடுவதும், முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றுவதும் நம் மனதையும் வாஞ்சைகளையும் அவருடையதுடன் சீரமைக்க தேவைப்படுகிறது.5 வேதங்கள் இந்த சீரமைப்பை “கர்த்தரில் உறுதியாக நிற்றல்” என்று குறிப்பிடுகின்றன.6 கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு இசைவாக நம் வாழ்க்கையை தொடர்ந்து நடத்துகிறோம்7, நல்லவற்றில் தினமும் கவனம் செலுத்துகிறோம் என்பதை இந்த செயல்முறை குறிக்கிறது. அப்போதுதான் நாம் “எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம்,” பெற முடியும், அது “கிறிஸ்துவுக்குள்ளாக [நம்முடைய] இருதயங்களையும் மனதையும்” பாதுகாக்கும்.8 இரட்சகர் தாமே பெப்ருவரி 1831ல் சபையின் மூப்பர்களுக்கு அறிவுறுத்தினார், “இவைகளை உங்கள் இருதயங்களில் பொக்கிஷப்படுத்துங்கள், நித்தியத்தின் பரிசுத்தம் உங்கள் மனதில் இருப்பதாக.”9

கர்த்தரைத் தேடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், பொருத்தமற்ற எண்ணங்கள் நம் மனதில் ஊடுருவக்கூடும். அத்தகைய எண்ணங்கள் அனுமதிக்கப்படும்போது, தங்குவதற்கு அழைக்கப்படும்போதும், அவை நம் இருதயத்தின் வாஞ்சைகளை வடிவமைத்து, இந்த வாழ்க்கையில் நாம் என்னவாகிவிடுவோம், இறுதியில் நித்தியத்திற்காக நாம் எதைப் பெறுவோம் என்பதற்கு நம்மை நடத்திச் செல்லும்.10 மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் ஒருமுறை இந்த கொள்கையை வலியுறுத்தி சொன்னார், “ஏன் பலர் அழைக்கப்பட்டு, ஆனால் சிலர் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள்” என்பது உட்பட வாஞ்சைகள் விளைவுகளின் தரங்களைத் தீர்மானிக்கிறது.”11

நம்முடைய ஆவிக்குரிய இழுவை இழப்பைத் தவிர்க்கவும், குழப்பம், திசைதிருப்புதல் மற்றும் வாழ்க்கையில் ஏமாற்றமடைவதைத் தவிர்ப்பதற்காக சோதனையை எதிர்ப்பதற்கு நமது பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகள் தொடர்ந்து நமக்கு நினைவூட்டியுள்ளனர்.

உருவகமாகச் சொன்னால், சோதனைகளுக்கு அடிபணிவது ஒரு உலோகப் பொருளுடன் ஒரு காந்தத்தை நெருக்கமாக கொண்டுபோவதைப் போன்றது. காந்தத்தின் கண்ணுக்கு தெரியாத சக்தி உலோக பொருளை ஈர்க்கிறது மற்றும் அதை இறுக்கமாக வைத்திருக்கிறது. உலோகப் பொருள் அதிலிருந்து வெகு தொலைவில் வைக்கப்படும்போதுதான் காந்தம் அதன் மீது அதன் சக்தியை இழக்கிறது. ஆகையால், தொலைதூர உலோகப் பொருளின் மீது காந்தத்தால் சக்தியைப் பயன்படுத்த முடியாமல் இருப்பது போல, நாம் சோதனையை எதிர்க்கும்போது, அவை மங்கி, நம் மனம் மற்றும் இருதயம் மீதும், இதன் விளைவாக, நமது செயல்களின் மீதும் தங்கள் சக்தியை இழக்கின்றன.

சபையின் மிகவும் விசுவாசமிக்க அங்கத்தினர் சில காலத்திற்கு முன்பு என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு அனுபவத்தை இந்த ஒப்புமை எனக்கு நினைவூட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட காலையில் அவள் எழுந்தபோது, எதிர்பாராத விதமாக அவளது மனதில் நுழைந்த, முன்பு அவள் ஒருபோதும் அனுபவிக்காத ஒரு பொருத்தமற்ற எண்ணம் பெற்றதாக அவள் என்னிடம் கூறினாள். அது ஆச்சரியத்தால் அவளை முழுவதுமாகப் பிடித்திருந்தாலும், நிலைமைக்கு எதிராக ஒரு நொடியில் அவள் எதிர்வினையாற்றினாள், தனக்கும் அந்த எண்ணத்திற்கும், “இல்லை!” என சொல்லி, விரும்பத்தகாத சிந்தனையிலிருந்து அவள் மனதைத் திசைதிருப்ப நல்ல எண்ணத்தால் மாற்றினாள். அவள் ஒழுக்க சுயாதீனத்தை நீதியுடன் பயன்படுத்தும்போது, அந்த எதிர்மறை, விருப்பமில்லாத சிந்தனை உடனடியாக மறைந்துவிட்டது என்று அவள் என்னிடம் சொன்னாள்.

கிறிஸ்துவை நம்பாதவர்களை மனந்திரும்பும்படி மரோனி அழைத்தபோது, எல்லா அசுத்தங்களிலிருந்தும் தங்களைத் தாங்களே விட்டுவிட்டு, முழு இருதயத்தோடும் இரட்சகரிடம் வரும்படி அவர்களை எச்சரித்தான். மேலும், அவர்கள் சோதனையில் சிக்காமலிருக்க, உடைக்க முடியாத உறுதியுடன் தேவனிடம் கேட்க மரோனி அவர்களுக்கு அறிவுறுத்தினான்.12 இந்த கொள்கைகளை நம் வாழ்வில் பயன்படுத்துவதற்கு நம்பிக்கையை விட அதிகமாக தேவைப்படுகிறது; இந்த தெய்வீக கொள்கைகளுக்கு நம் மனதையும் இதயத்தையும் அனுசரிப்பது அவசியம். இரட்சகரைச் சார்ந்திருத்தலுக்கு கூடுதலாக, தினசரி மற்றும் நிலையான அப்படிப்பட்ட அனுசரிப்பு தேவைப்படுகிறது ஏனெனில் நம்முடைய பூலோக சார்புகள் அதுவாகவே மறைந்துவிடாது. சோதனையை எதிர்த்துப் போராடுவதற்கு கருத்தும் விசுவாசமுமான வாழ்நாள் தேவைப்படுகிறது. ஆனால் நம்முடைய தனிப்பட்ட முயற்சிகளில் கர்த்தர் நமக்கு உதவத் தயாராக உள்ளார் என்பதையும், இறுதிவரை சகித்துக்கொண்டால் குறிப்பிடத்தக்க ஆசீர்வாதங்களையும் வாக்களிக்கிறார் என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.

லிபர்ட்டி சிறையில் இருந்த ஜோசப் ஸ்மித் மற்றும் அவரது சக கைதிகளுக்கு அவர்களின் எண்ணங்களைத் தவிர வேறு எதற்கும் சுதந்திரம் இல்லாத ஒரு கடினமான காலகட்டத்தில், கர்த்தர் அவர்களுக்கு உதவிகரமான ஆலோசனையையும், நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு வாக்குறுதியையும் வழங்கினார்:

“உனது மனம் எல்லா ஆண்களுக்கும் [பெண்களுக்கும்] விசுவாசக் குடும்பத்தினருக்கும் தயாளம் நிறைந்ததாக இருப்பதாக, நற்பண்பு உன் எண்ணங்களை இடைவிடாமல் அலங்கரிப்பதாக; அப்போது தேவனின் சமூகத்தில் உன்னுடைய நம்பிக்கை வல்லமையாக இருக்கும்; …

“பரிசுத்த ஆவியானவர் உனது நிலையான தோழராகவும், உன் செங்கோல் நீதியின் மற்றும் சத்தியத்தின் மாறாத செங்கோலாகவும் இருக்கும்.”13

அவ்வாறு செய்யும்போது, பரிசுத்தமான எண்ணங்கள் தொடர்ந்து நம் மனதை அலங்கரிக்கும், சுத்தமான ஆசைகள் நம்மை நீதியான செயல்களுக்கு நடத்திச் செல்லும்.

மரோனி தனது ஜனங்களை அவர்களின் இச்சைகளால் விழுங்கப்பட்டுப் போகாதிருக்கும்படியும் நினைவுபடுத்தினான்.14 இச்சை என்ற சொல் ஏதோவொரு தீவிரமான ஏக்கத்தையும் முறையற்ற விருப்பத்தையும் குறிக்கிறது.15 நன்மை செய்து, தயவாயிருந்து, தேவ கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மற்றும் பிறவற்றைவிட, ஒருவர் சுயநல நடைமுறைகள் அல்லது உலக உடைமைகளில் கவனம் செலுத்துவதற்கு காரணமான இருண்ட எண்ணங்கள் அல்லது தீய ஆசைகளை இது உள்ளடக்கியது. இது பெரும்பாலும் ஆத்துமாவின் அதிக மாம்ச உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இவைபோன்ற சில உணர்வுகளை அடையாளப்படுத்தினான், “அசுத்தம், காமவிகாரம், … விரோதங்கள், … கோபங்கள், சண்டைகள், … பொறாமைகள் போன்றவை”.16 இச்சையின் அனைத்து தீய அம்சங்களோடு, ஏதாவது தவறு செய்ய அவன் நம்மைத் தூண்டும்போது சத்துரு அதை நமக்கு எதிரான தனது ரகசிய ஏமாற்றும் ஆயுதமாக பயன்படுத்துகிறான் என்பதை நாம் மறக்க முடியாது.

என் அன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சகராகிய இரட்சிப்பின் கன்மலையை நம்பும்போது, மரோனியின் ஆலோசனையைப் பின்பற்றும்போது, நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் திறன் கணிசமாக அதிகரிக்கும் என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன். நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சி அதிக வேகத்தில் வளர்ந்து, நம் இருதயங்களை மாற்றி, நம்மை இயேசு கிறிஸ்துவைப் போல ஆக்குகிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கூடுதலாக, பரிசுத்த ஆவியின் செல்வாக்கு நம் வாழ்க்கையில் மிகவும் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இருக்கும். சத்துருவின் சோதனைகள், கொஞ்சம் கொஞ்சமாக, நம்மீது வல்லமையை இழந்து, மகிழ்ச்சியான மற்றும் அதிக சுத்தமான அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும்.

எந்த காரணத்திற்காகவும், சோதனையில் விழுந்து, அநீதியான செயல்களில் தரித்திருப்பவர்களுக்கு, திரும்பிச் செல்ல ஒரு வழி இருக்கிறது, கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து சபையின் ஒரு அன்பான அங்கத்தினருடன் ஒரு பெரிய மீறலைச் செய்தபின் அவரது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவரை சந்தித்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரை முதன்முதலில் பார்த்தபோது, அவரது கண்களில் ஒரு சோகத்தை என்னால் காண முடிந்தது, அவருடைய முகரூபத்தில் நம்பிக்கையின் பிரகாசமும் இருந்தது. அவரது தோற்றமே ஒரு தாழ்மையான மற்றும் மாற்றப்பட்ட இருதயத்தை பிரதிபலித்தது. அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்திருக்கிறார், மேலும் கர்த்தரால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு முறையற்ற சிந்தனையை தனது மனதை ஆக்கிரமிக்க அனுமதித்திருந்தார், அது மற்றவற்றுக்கு வழிநடத்தியது. இந்த எண்ணங்களை அவர் சீராக மேலும் மேலும் அனுமதித்ததால், விரைவில் அவை அவருடைய மனதில் வேரூன்றி அவரது இருதயத்தில் ஆழமாக வளர ஆரம்பித்தன. இந்த தகுதியற்ற ஆசைகளின்படி அவர் இறுதியில் செயல்பட்டார், இது அவரது வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பற்ற எல்லாவற்றிற்கும் எதிராக முடிவுகளை எடுக்க வழிநடத்தியது. தொடக்கத்தில் அந்த முட்டாள்தனமான சிந்தனைக்கு அவர் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால், அவரது வாழ்க்கையில் கொஞ்ச நாட்களுக்காகவாவது இவ்வளவு சோகத்தை ஏற்படுத்தின, சத்துருவின் சோதனைகளுக்கு இடம் கொடுக்கிற, இலக்காக ஆகியிருக்க மாட்டேன் என்று அவர் என்னிடம் சொன்னார்.

அதிர்ஷ்டவசமாக, லூக்காவின் சுவிசேஷத்தில் காணப்படும் புகழ்பெற்ற உவமையில் உள்ள கெட்ட குமாரனைப் போலவே, “அவருக்கு புத்தி தெளிந்தபோது”, அந்தக் கெட்ட கனவில் இருந்து எழுந்தார்.17 அவர் கர்த்தர் மீதான நம்பிக்கையை புதுப்பித்து, உண்மையான நருக்குதலை உணர்ந்தார், இறுதியில் கர்த்தருடைய மந்தைக்குத் திரும்புவதற்கான விருப்பத்தையும் கொண்டிருந்தார். அந்த நாளில் நாங்கள் இருவரும் இரட்சகரின் மீட்கும் அன்பை உணர்ந்தோம். எங்கள் சிறு சந்திப்பின் முடிவில், நாங்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டோம், இன்றுவரை, அவர் என் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது அவரது முகத்தில் இருந்த பிரகாசிக்கிற மகிழ்ச்சியை நான் நினைவில் கொள்கிறேன்.

என் அன்பு நண்பர்களே, நம் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வரும் சிறிய சோதனையை நாம் எதிர்க்கும்போது, கடுமையான மீறல்களைத் தவிர்ப்பதற்கு நாம் சிறப்பாக ஆயுதந்தரிக்கிறோம். தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் கூறினார்: “பெரியவைகளுக்கான கதவைத் திறக்கிற. … குறைவானவற்றுக்கு ஒருவர் இடங்கொடாவிட்டால் ஆழ்ந்த மீறுதலுக்குள் நுழைவது அரிது. ‘ஒரு சுத்தமான வயல் திடீரென்று களைகட்டாது.’”18

பூமியில் தம்முடைய தெய்வீக ஊழியத்தை நிறைவேற்றத் தயாராகும் போது, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய நித்திய நோக்கத்தை உணரவிடாமல் தடுக்கக்கூடிய எல்லாவற்றையும் தொடர்ந்து எதிர்ப்பதன் முக்கியத்துவத்தை உதாரணப்படுத்தினார். சத்துருவின் பல தோல்வியுற்ற தாக்குதல்களுக்குப் பிறகு, அவரை தனது ஊழியத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியில், மீட்பர் அவனை திட்டவட்டமாக நிராகரித்தார்: “அப்பாலே போ,சாத்தானே. … அப்பொழுது பிசாசு அங்கிருந்து வெளியேறினான், இதோ, தூதர்கள் வந்து அவருக்கு ஊழியம் செய்தார்கள். ”19

என் சகோதர சகோதரிகளே, இரட்சகரிடமிருந்து பலத்தையும் தைரியத்தையும் பெற்று, “இல்லை”, “அப்பாலே போ” என்று சொல்ல முடிந்தால், தகுதியற்ற எண்ணங்கள் எப்போதாவது நம் மனதில் வந்தால் என்ன நடக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நம் இருதயங்களின் ஆசைகள் மீது என்ன பாதிப்பு இருக்கும்? இதன் விளைவாக நாம் செய்யும் நடவடிக்கைகள் நம்மை இரட்சகருடன் நெருக்கமாக வைத்திருப்பதுடன், பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான செல்வாக்கை நம் வாழ்வில் அனுமதிப்பது எப்படி? அவ்வாறு செய்யும்போது, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள், எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் சாய்தல்கள், அநீதிகள் மற்றும் துஷ்பிரயோகங்களைச் செய்வது, தீய பழக்கங்களால் அடிமைப்படுத்தப்படுவது மற்றும் கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிரான வேறு எதையும் ஏற்படுத்தக்கூடிய பல சோகங்கள் மற்றும் பாவமான நடத்தைகளை நாம் தவிர்ப்போம் என்பதை நான் அறிவேன்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொடுகின்ற செய்தியில், தலைவர் நெல்சன் “அவருக்குச் செவிகொடுக்க” ஆயத்தமாயிருப்பவர்களுக்கும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தயாராக உள்ள அனைவருக்கும் “சோதனையையும் போராட்டங்களையும் பலவீனத்தையும் சமாளிக்க கூடுதல் அதிகாரம் கிடைக்கும்” என்றும் அது தற்போதைய கொந்தளிப்பின் போது கூட மகிழ்ச்சியை உணரும் திறன் அதிகரிக்கும் எனவும் வாக்களித்தார்.20

நமது அன்பான தீர்க்கதரிசியால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், இரட்சகரே அளித்த வாக்குறுதிகள் என்று நான் உங்களுக்கு சாட்சியமளிக்கிறேன். ஒவ்வொரு சிந்தனையிலும் “அவருக்குச் செவிகொடுக்க” நான் உங்களை அழைக்கிறேன், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவைகளைக் கொண்டுவரக்கூடிய எல்லா விஷயங்களிலும் “இல்லை” மற்றும் “அப்பாலே போ” என்று சொல்லும் வலிமையையும் தைரியத்தையும் பெறுவதற்காக முழு இருதயத்துடன் அவரைப் பின்பற்றுங்கள், என நான் நாமனைவரையும் அழைக்கிறேன். நாம் அவ்வாறு செய்தால், நம்மை பலப்படுத்துவதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும் கர்த்தர் தம்முடைய கூடுதலான அளவில் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார், மேலும் கர்த்தருடைய சொந்த இருதயமுள்ளவர்களாக நாம் மாறலாம், என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன், 21

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், அவர் மூலம் சத்துருவின் தீய தாக்கங்களை நாம் வென்று, கர்த்தருடன் நித்தியமாய் வாழவும், பரலோகத்தில் நம்முடைய அன்புக்குரிய பிதாவின் பிரசன்னத்தில் வாழவும் தகுதிபெறலாம் என நான் சாட்சியமளிக்கிறேன். இந்த சத்தியங்களை நான் உங்களிடத்திலும் நமது அழகான இரட்சகரிடமும் உள்ள என் அன்போடு சாட்சியமளிக்கிறேன், அவருடைய நாமத்துக்கு நான் என்றென்றும் மகிமை, கனம் மற்றும் ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் இந்தக் காரியங்களை, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சொல்கிறேன், ஆமென்.