பொது மாநாடு
நீடித்த வல்லமை
அக்டோபர் 2020 பொது மாநாடு


நீடித்த வல்லமை

நம்முடைய உள் ஆத்துமாவை நிரப்பும் விசுவாசமும் தேவனுடைய வார்த்தையும் மட்டுமே நம்மைத் தாங்கவும், அவருடைய வல்லமையை அடையவும் அனுமதிக்க போதுமானது.

நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனின் போதனைகளை மறுபரிசீலனை செய்தபோது அவர் பல செய்திகளில் அடிக்கடி பயன்படுத்திய ஒரு வார்த்தையை நான் கண்டேன். அந்த வார்த்தை வல்லமை

அவர் ஒரு அப்போஸ்தலராக ஆதரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் பொது மாநாட்டில், தலைவர் நெல்சன் வல்லமையைப்பற்றி பேசினார்.1 அவர் பல ஆண்டுகளாக வல்லமையைப்பற்றி தொடர்ந்து போதித்து வருகிறார். தலைவர் நெல்சனை நமது தீர்க்கதரிசியாக நாம் ஆதரித்துள்ளதால், வல்லமையின் கொள்கை குறிப்பாக தேவனின் வல்லமை மற்றும் அதை எவ்வாறு அடையலாம் என்பதைப்பற்றி அவர் போதித்திருக்கிறார். நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும் போது தேவனின் வல்லமையை எவ்வாறு ஈர்க்க முடியும்,2 எவ்வாறு மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் அவருடைய பிராயச்சித்தத்தையும் நம் வாழ்வில் கொண்டு வருகிறது,3 அவருடன் உடன்படிக்கைகளை செய்திருக்கும் அனைவரையும் ஆசாரியத்துவம், தேவனின் வல்லமையையும் அதிகாரத்தையும் எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என்பதை அவர் போதித்திருக்கிறார்.4 அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும்போது ஆலயத்தில் தரிப்பிக்கப்படுகிற அனைவருக்கும் தேவனின் வல்லமை பாய்கிறது என்று தலைவர் நெல்சன் சாட்சியம் அளித்துள்ளார்5

ஏப்ரல் 2020 பொது மாநாட்டில் தலைவர் நெல்சன் கொடுத்த சவாலால் நான் குறிப்பாக அசைக்கப்பட்டேன். நீங்கள் தரிப்பிக்கப்பட்ட அல்லது நீங்கள் தரிப்பிக்கப்படப்போகிற வல்லமையையும் அறிவையும்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள, படித்து ஜெபிக்கவும் என அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.6

இந்த சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக, நான் தரிப்பிக்கப்பட்ட அல்லது நான் தரிப்பிக்கப்படப் போகிற வல்லமை மற்றும் அறிவைப்பற்றி சில நன்மை பயக்கும் விஷயங்களைக் கற்று ஜெபித்திருக்கிறேன்.

நம் வாழ்வில் தேவனின் வல்லமையை அணுக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது எளிதானது அல்ல, ஆனால் அதை நம் மனதில் படித்து பரிசுத்த ஆவியானவர் நமக்கு அறிவூட்டும்படி ஜெபிப்பதன் மூலம் அதைச் செய்ய முடியும் என்று நான் கண்டேன்7 மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் தேவனின் வல்லமை என்ன என்பதற்கு ஒரு தெளிவான வரையறையை வழங்கினார்: அது “நம்மால் செய்யக்கூடியதை விட அதிகமாக செய்யக்கூடிய வல்லமை.8

இந்த சவாலான காலங்களில் நமக்கு உதவ தேவனுடைய வல்லமையைப் பெறுவதற்கு நம் இருதயத்தையும் நம்முடைய ஆத்துமாவையும் தேவனுடைய வார்த்தையினாலும் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அஸ்திபாரத்தினாலும் நிரப்புவது மிக முக்கியம். தேவனுடைய வார்த்தையையும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதையும் நம் இருதயங்களில் ஆழமாகப் பெறாமல், நம்முடைய சாட்சியங்களும் விசுவாசமும் தோல்வியடையக்கூடும், மேலும் தேவன் நமக்குக் கொடுக்க விரும்பும் வல்லமையை அடைவதை நாம் இழக்க நேரிடலாம். மேலோட்டமான நம்பிக்கை போதுமானதாக இல்லை. நம்முடைய உள் ஆத்துமாவை நிரப்பும் விசுவாசமும் தேவனுடைய வார்த்தையும் மட்டுமே நம்மைத் தாங்கவும், அவருடைய வல்லமையை அடையவும் அனுமதிக்க போதுமானது.

சகோதரி ஜான்சனும் நானும் எங்கள் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு இசைக் கருவியைக் கற்றுக் கொள்ள ஊக்குவித்தோம். ஆனால் ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகள் தங்கள் பங்கைச் செய்து, அவர்களின் கருவியைப் பயிற்சி செய்தால் மட்டுமே இசைப் பாடங்களை கற்க அனுமதிப்போம். ஒரு சனிக்கிழமை, எங்கள் மகள் ஜாலின் நண்பர்களுடன் விளையாடுவதற்கு உற்சாகமாக இருந்தாள், ஆனால் அவள் இன்னும் பியானோ பயிற்சி செய்யவில்லை. அவள் 30 நிமிடங்கள் பயிற்சி செய்ய உறுதிபூண்டிருப்பதை அறிந்து, ஒரு நேரத்தை அமைக்க எண்ணினாள், ஏனென்றால் தேவைப்பட்டதை விட ஒரு நிமிடம் கூட அவள் பயிற்சி செய்ய விரும்பவில்லை.

பியானோவுக்கு செல்லும் வழியில் மைக்ரோவேவ் அடுப்பருகே நடந்து செல்லும்போது, அவள் நின்று சில பொத்தான்களை அழுத்தினாள். ஆனால் மணியை கணக்கிடுவதற்குப் பதிலாக, மைக்ரோவேவை 30 நிமிடங்கள் சமைக்க அமைத்து, தொடங்கினாள். சுமார் 20 நிமிட பயிற்சிக்குப் பிறகு, எவ்வளவு நேரம் மீதமுள்ளது என்பதைச் சரிபார்க்க அவள் மீண்டும் சமையலறைக்குச் சென்றாள், மைக்ரோவேவ் அடுப்பில் தீப்பிடித்ததைக் கண்டாள்.

நான் வேலை செய்துகொண்டிருந்த வீட்டின் பின்புறத்துக்கு அவள் ஓடி வந்தாள், வீடு தீப்பிடித்தது என்று கத்தினாள். நான் விரைவாக வீட்டிற்குள் ஓடினேன், உண்மையில், மைக்ரோவேவ் அடுப்பை தீப்பிழம்புகளில் கண்டேன்.

எங்கள் வீட்டை எரியவிடாமல் காப்பாற்றும் முயற்சியில், நான் மைக்ரோவேவின் பின்னால் வந்து, அதை துண்டித்துவிட்டு, மின்சார ஒயரைப் பயன்படுத்தி எரியும் மைக்ரோவேவை கவுண்டரில் இருந்து தூக்கினேன். ஹீரோவாக இருப்பதையும், அந்த நாளையும் எங்கள் வீட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில், என் உடலில் இருந்து விலகி இருக்க எரியும் மைக்ரோவேவை மின்சார ஒயரால் வட்டமாக ஆட்டினேன், கொல்லைப்புறத்திற்கு வந்தேன், மற்றொரு சுற்று சுற்றி மைக்ரோவேவை வெளியே புல்வெளியில் விசினேன். அங்கு, எரியும் தீப்பிழம்புகளை ஒரு தண்ணீர்குழாய் மூலம் எங்களால் அணைக்க முடிந்தது.

என்ன தவறு நடந்தது? ஒரு மைக்ரோவேவ் அடுப்புக்கு அதன் ஆற்றலை உறிஞ்சுவதற்கு ஏதேனும் தேவைப்படுகிறது, மேலும் ஆற்றலை உறிஞ்சுவதற்கு எதுவும் உள்ளே இல்லாதபோது, அடுப்பு தானே சக்தியை உறிஞ்சி, சூடாகி, தீப்பிடித்து, தீப்பிழம்புகள் மற்றும் சாம்பல் குவியலில் தன்னை அழித்துக் கொள்ளுகிறது. 9 உள்ளே எதுவுமில்லாததால் எங்கள் முழு மைக்ரோவேவ் தீப்பிடித்து எரிந்தது.

அதேபோல், விசுவாசமும் தேவனுடைய வார்த்தையும் இருதயத்தில் ஆழமாக இருப்பவர்கள், நம்மை அழிக்க சத்துரு நிச்சயமாக அனுப்பும் மூர்க்கமான ஈட்டிகளை உள்வாங்கி வெல்ல முடியும்.10 இல்லையெனில், நமது விசுவாசம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு நீடிக்காமல் போகலாம், வெற்று மைக்ரோவேவ் அடுப்பைப் போலவே, நாம் ஒரு விபத்தாகலாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதான விசுவாசம் மற்றும் அவருடைய பாவநிவர்த்தி ஆகியவற்றுடன் தேவனுடைய வார்த்தையை என் ஆத்துமாவில் ஆழமாகக் கொண்டிருப்பது, சத்துருவையும் அவன் என்னை நோக்கி எறியக்கூடிய எதையும் வெல்ல தேவ வல்லமையை ஈர்க்க அனுமதிக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது, பவுல் கற்பித்த கர்த்தருடைய வாக்குறுதியை நாம் சார்ந்திருக்கலாம்: “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் தெளிவும் அன்பும் கலந்த ஆவியைக் கொடுத்திருக்கிறார்.“11

ஒரு குழந்தையாக இரட்சகர் “வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தார். தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.”12 அவர் வளர்ந்தபோது, “இயேசுவானவர் ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”13 அவருடைய ஊழியம் தொடங்கிய நேரத்தில், அவரைக் கேட்டவர்கள் “அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால், அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.”14

ஆயத்தத்தின் மூலம், மீட்பர் வல்லமையில் வளர்ந்தார், மேலும் சாத்தானின் எல்லா சோதனையையும் எதிர்க்க முடிந்தது.15 நாம் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவனுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமாகவும், நம்முடைய விசுவாசத்தை ஆழப்படுத்துவதன் மூலமாகவும் ஆயத்தமாகும்போது, சோதனையை எதிர்ப்பதற்கு தேவனின் வல்லமையை நாம் பெறலாம்.

வழக்கமான ஆலய வருகையை சாத்தியமில்லாதாக்கும் தடைசெய்யப்பட்ட இந்த நேரத்தில், ஆலய உடன்படிக்கைகளை நாம் செய்து காத்துக்கொள்ளுவதால் வரும் தேவனின் வல்லமையைப்பற்றி தொடர்ந்து படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நான் முடிவு செய்துள்ளேன். கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டை ஜெபத்தில் வாக்களித்தபடி, தேவ வல்லமையுடன் ஆலயத்தை விட்டு வெளியேறுகிறோம்.16 ஆலய உடன்படிக்கைகளை செய்பவர்களுக்கு தேவன் அளிக்கும் வல்லமையுடன் எந்த காலாவதி தேதியும் இல்லை, அல்லது ஒரு தொற்றுநோயின் போது அந்த வல்லமையை அணுகுவதில் தடை இல்லை. நம்முடைய உடன்படிக்கைகளை கடைப்பிடிக்கத் தவறிவிட்டால், அவருடைய வல்லமையைப் பெற தொடர்ந்து தகுதி பெற அனுமதிக்கும் வகையில் வாழாவிட்டால் மட்டுமே அவருடைய வல்லமை நம் வாழ்வில் குறைகிறது.

தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மரில் என் அன்பான மனைவியுடன் ஊழியத் தலைவர்களாக பணியாற்றும் போது, ஆலய பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து காத்துக்கொள்பவர்களுக்கு வரும் தேவ வல்லமையை நேரில் கண்டோம். ஆலய புரவலர் உதவி நிதியம் இந்த மூன்று நாடுகளில் உள்ள பல பரிசுத்தவான்கள் தனிப்பட்ட தியாகம் மற்றும் ஆயத்தம் மூலம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தபின் ஆலயம் செல்ல சாத்தியப்படுத்தியது. லாவோஸில் இருந்து 20 விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள் குழுவை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொரு விமான நிலையத்துக்கு மாறி விமானத்தைப் பிடிக்க அவர்களுக்கு உதவியதை நான் நினைவு கூர்கிறேன். இந்த அங்கத்தினர்கள் இறுதியாக கர்த்தரின் வீட்டிற்கு பயணிக்க வேண்டும் என்று உற்சாகத்துடன் நிறைந்திருந்தார்கள்.

படம்
லாவோஸில் அங்கத்தினர்கள்

இந்த நல்ல பரிசுத்தவான்களை அவர்கள் திரும்பி வந்தபோது நாங்கள் சந்தித்தபோது, அவர்களது ஆலய தரிப்பித்தலிலிருந்தும், தேவனோடு உடன்படிக்கையில் பிரவேசித்ததிலிருந்தும் வரும் கூடுதலான சுவிசேஷ முதிர்ச்சி மற்றும் அதனுடனிணைந்த வல்லமை தெரிந்தது. இந்த பரிசுத்தவான்கள் “[அவருடைய] வல்லமையுடன் ஆயுதம் தரித்தவர்களாக” தெளிவாக போனார்கள்.17 அவர்களால் செய்ய முடிந்ததை விட அதிகமாகச் செய்வதற்கான இந்த வல்லமை, தங்கள் சொந்த நாட்டில் சபை அங்கத்தினர்களின் சவால்களைச் சகித்துக்கொள்வதற்கும், “உண்மையிலேயே மிகப் பெரிய மற்றும் மகிமையான செய்திகளை” தாங்கிக்கொள்வதற்கும் லாவோஸில் கர்த்தரின் இராஜ்யத்தை அவர்கள் தொடர்ந்து கட்டும்போது, அவர்களுக்குப் பலத்தை அளித்தது.18

நம்மால் ஆலயம் செல்ல முடியாத நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் தெளிவான மாறாத வழியை அமைக்க ஆலயத்தில் செய்த உடன்படிக்கைகளை சார்ந்திருக்கிறோமா? இந்த உடன்படிக்கைகள், காத்துக்கொள்ளப்பட்டால், நம்முடைய விசுவாசத்தின் மூலம் கர்த்தர் வாக்குறுதியளித்த அனைத்தையும் பெற தகுதி பெறுவதற்கான எதிர்காலத்தைப்பற்றிய பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளையும், தெளிவான உறுதியையும் தருகிறது.

தேவன் உங்களுக்குக் கொடுக்க விரும்பும் வல்லமையைத் தேட நான் உங்களை அழைக்கிறேன். இந்த வல்லமையை நாம் நாடுகையில், நம்முடைய பரலோக பிதா நம்மீது வைத்திருக்கும் அன்பைப்பற்றி அதிக புரிதலுடன் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.

பரலோக பிதா உங்களையும் என்னையும் நேசிப்பதால், அவர் தம்முடைய அன்புக்குரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராகவும் மீட்பராகவும் அனுப்பினார் என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன். எல்லா வல்லலமையுமுடைய19 இயேசு கிறிஸ்துபற்றி நான் சாட்சியமளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அப்படிச் செய்கிறேன், ஆமென்.