பொது மாநாடு
இயேசுவே பதில்
அக்டோபர் 2022 பொது மாநாடு


இயேசுவே பதில்

சவால்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அல்லது குழப்பமாக இருந்தாலும், பதில் எளிமையானது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளலாம்: அது எப்போதும் இயேசுவே.

இந்த மாநாட்டு கூட்டத்தில் உங்களிடம் பேசுவது எவ்வளவு கௌரமாக இருக்கிறது. இன்று நான் உங்களிடம் நண்பர்களாக உரையாற்றுகிறேன். யோவான் சுவிசேஷத்தில், இரட்சகர் நம்மிடம் கேட்பதைச் செய்தால் நாம் அவருடைய நண்பர்கள் என்று போதித்தார்.1

இரட்சகரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அன்பும், அவருடனான நமது உடன்படிக்கைகளும் தான் நம்மை ஒன்றாக இணைக்கின்றன. தலைவர் ஐரிங் கற்பித்தது போல்: “கர்த்தர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார், உங்களை நம்புகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேலும், இன்னும் கூடுதலாக, அவர் உங்களை எவ்வளவு சார்ந்திருக்கிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.”2

தலைவர் ரசல் எம். நெல்சனால் நான் ஒரு பொது அதிகாரியாக அழைக்கப்பட்டபோது, நான் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன். அது மிகவும் அதிகமாக இருந்தது. ஜூலியும் நானும் பொது மாநாட்டின் சனிக்கிழமை பிற்பகல் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆதரிக்கப்படவிருத்தல் தாழ்மையாக்கியது. எனது முதல் நியமிப்பில் கீழே விழாமல் இருக்க, நான் நியமிக்கப்பட்ட இருக்கைக்கான படிகளை கவனமாக எண்ணினேன்.

அந்த கூட்டத்தின் முடிவில், என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று நடந்தது. குழும உறுப்பினர்கள் ஒரு வரிசையை உருவாக்கி ஒவ்வொருவராக புதிய பொது அதிகாரிகளை வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மனம் நிறைந்த அபிராஸோவுடன், “கவலைப்படாதீர்கள், நீங்கள் சொந்தமானவர்” என்றார்கள்.

இரட்சகருடனான நமது உறவில், அவர் இருதயத்தைப் பார்க்கிறார், “நபர்களை மதிப்பதில்லை.”3 அவர் தனது அப்போஸ்தலர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கவனியுங்கள். அந்தஸ்து அல்லது செல்வத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை. அவரைப் பின்தொடர அவர் நம்மை அழைக்கிறார், நாம் அவருக்கு சொந்தமானவர்கள் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

இந்த செய்தி, குறிப்பாக சபை இளைஞர்களுக்கு பொருந்தும். தலைவர் நெல்சன் உங்களில் என்ன பார்க்கிறாரோ அதை நான் உங்களில் பார்க்கிறேன். “இந்த தலைமுறை இளைஞர்களுக்கு மறுக்க முடியாத சிறப்பு ஒன்று உள்ளது என அவர் கூறினார், . இந்த நேரத்தில் உங்களை பூமிக்கு அனுப்ப உங்கள் பரலோக பிதா உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நீ மகத்துவத்திற்காகப் பிறந்தாய்!”4

இளைஞர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் பிள்ளைகள் எனக்குக் கற்பிப்பதற்காகவும், எங்கள் ஊழியக்காரர்கள் எனக்குக் கற்பிப்பதற்காகவும், என் மருமகன்கள் மருமகள்கள் எனக்குக் கற்பிப்பதற்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

வெகு காலத்திற்கு முன்பு, நான் என் மருமகன் நாஷுடன் எங்கள் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். தூய்மையான இருதயமுள்ள அவனுக்கு ஆறு வயது. நாஷ் என்ற பெயருள்ள அவன் எனக்கு மிகப் பிடித்த மருமகன், இன்று மாநாட்டில் பேசுகிறவர்களில் நான்தான் அவனுக்கு மிகவும் பிடித்த மாமா என்று நான் நம்புகிறேன்.

எங்கள் திட்டத்திற்கான தீர்வைக் கொண்டு வர அவன் எனக்கு உதவியபோது, நான் சொன்னேன், “நாஷ், அது ஒரு சிறந்த யோசனை. உனக்கு எப்படி இவ்வளவு புத்திசாலித்தனம் வந்தது?” “ரயான் மாமா, இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?” என்று கண்களில் ஒரு பாவனணையுடன் என்னைக் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தான்.

அவன் வெறுமனே தோள்களைக் குலுக்கி, புன்னகைத்து, நம்பிக்கையுடன், “இயேசு” என்றான்.

இந்த எளிய, ஆனாலும் ஆழமான போதனையை நாஷ் அன்று எனக்கு நினைவூட்டினான். எளிமையான கேள்விகளுக்கும் சிக்கலான பிரச்சனைகளுக்கும் எப்போதும் ஒரே பதில்தான். இயேசு கிறிஸ்து என்பதே பதில். ஒவ்வொரு தீர்வும் அவரிடமே காணப்படுகிறது.

யோவான் சுவிசேஷத்தில், இரட்சகர் தம்முடைய சீஷர்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்யப்போவதாக கூறினார். தோமா குழப்பமடைந்து இரட்சகரிடம் கேட்டான்:

“ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்?

“அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார்.”5

அவரே வழி, சத்தியம், ஜீவன் என்று இரட்சகர் தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார். பரலோக பிதாவிடம் எப்படி வருவது என்ற கேள்விக்கு அவர்தான் பதில். நமது வாழ்வில் அவருடைய தெய்வீகப் பங்கைப்பற்றிய சாட்சியைப் பெறுவது, நான் ஒரு இளைஞனாகக் கற்றுக்கொண்ட ஒன்று.

நான் அர்ஜென்டினாவில் ஊழியக்காரனாக சேவை செய்து கொண்டிருந்தபோது, தலைவர் ஹோவர்ட் டபிள்யூ. ஹண்டர், என் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றைச் செய்யும்படி எங்களை அழைத்தார். அவர் சொன்னார்: “கிறிஸ்துவை நாம் அறிந்திருப்பதைவிட, நாம் அவரை நன்கு அறிந்திருக்க வேண்டும்; நாம் அவரை நினைவில் கொள்வதை விட, அடிக்கடி அவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; நாம் அவருக்கு சேவை செய்வதை விட, மிக வீரத்துடன் அவருக்கு நாம் சேவை செய்ய வேண்டும்.”6

அந்த நேரத்தில், ஒரு சிறந்த ஊழியக்காரனாக எப்படி இருக்க வேண்டும் என்பதில் நான் அக்கறை கொண்டிருந்தேன். கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அவரை நினைவுகூரவும், அவருக்குச் சேவை செய்யவும் இதுதான் பதிலாயிருந்தது. உலகெங்கிலும் உள்ள ஊழியக்காரர்கள் இந்த நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளனர், “கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலமும், அவருடைய பாவநிவர்த்தியின் மூலமும், சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தைப் பெறவும், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, இறுதிவரை நிலைத்திருப்பதன் மூலம், கிறிஸ்துவிடம் வரும்படி மற்றவர்களை அழைக்க அவர்களுக்கு உதவுவதால்.”7 ஊழியக்காரர்களின் பேச்சைக் கேட்கும் நமது நண்பர்களிடம், கிறிஸ்துவிடம் வரும்படியான எனது அழைப்பைச் சேர்க்கிறேன். ஒன்றாக நாம் அவரை அறியவும், அவரை நினைவுகூரவும், அவருக்கு சேவை செய்யவும் முயற்சிப்போம்.

ஊழியம் செய்தல் என் வாழ்வின் ஒரு பரிசுத்தமான நேரம். ஒரு முழுநேர ஊழியக்காரனாக அவருடனான எனது கடைசி நேர்காணலில், தலைவர் பின்காக்கும் அவரது மனைவியும், தங்கள் ஊழியத்தை முடிக்கும் தருவாயில் இருந்தபோது, ஊழியத் தலைவர்களில் வரவிருக்கும் மாற்றத்தைப்பற்றி அவர் பேசினார். நாங்கள் மிகவும் நேசித்த ஒன்றை விட்டுச் செல்வதில் நாங்கள் இருவரும் வருத்தப்பட்டோம். நான் முழுநேர ஊழியக்காரனாக இல்லையே என்ற எண்ணத்தில் நான் சிரமப்பட்டதை அவரால் பார்க்க முடிந்தது. அவர் மிகுந்த விசுவாசம் கொண்டவர், முந்தைய இரண்டு வருடங்களாக கற்பித்ததுபோல எனக்கு அன்புடன் கற்பித்தார். அவர் தனது மேசைக்கு மேலே இருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தைக் காட்டி, “மூப்பர் ஓல்சன், எல்லாம் சரியாகிவிடும், ஏனென்றால் இது அவருடைய வேலை.” நாம் ஊழியம் செய்யும் போது மட்டும் அல்ல, எப்பொழுதும், நாம் அவரை அனுமதித்தால், இரட்சகர் நமக்கு உதவுவார் என்பதை அறிந்து நான் நிம்மதியடைந்தேன்.

எளிமையான ஸ்பானிஷ் சொற்றொடர்களில் இருதயத்தின் ஆழத்திலிருந்து சகோதரி பின்காக் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். “ஜெசுகிறிஸ்டோ விவ்” என்று அவர் சொன்னபோது அது உண்மை என்றும் அவர் வாழ்ந்தார் என்றும் எனக்குத் தெரிந்தது. “எல்டரஸ் ஒய் ஹெர்மனாஸ், லெஸ் அமோ” என்று அவர் சொன்னபோது, அது, அவர் நம்மை நேசிப்பதாகவும், நாம் எப்பொழுதும் இரட்சகரைப் பின்பற்ற விரும்புவதாகவும் எனக்குத் தெரிந்தது.

நானும் என் மனைவியும் சமீபத்தில் உருகுவேயில் உள்ள சிறந்த ஊழியக்காரர்களுடன் பணிபுரியும் ஊழியத் தலைவர்களாக பணியாற்ற ஆசீர்வதிக்கப்பட்டோம். இவர்கள் உலகின் சிறந்த ஊழியக்காரர்கள் என்று நான் கூறுவேன், மேலும் ஒவ்வொரு ஊழியத் தலைவரும் அப்படித்தான் உணர்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த சீஷர்கள் இரட்சகரைப் பின்பற்றுவதைப்பற்றி ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கற்பித்தார்கள்.

வழக்கமான நேர்காணல்களின் போது, எங்கள் சிறந்த சகோதரி ஊழியக்காரர் ஒருவர், அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவர் ஒரு வெற்றிகரமான ஊழியக்காரி, ஒரு சிறந்த பயிற்சியாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவி. அவள் தனது கூட்டாளிகளால் உயர்வாக மதிக்கப்பட்டாள், மக்களால் நேசிக்கப்பட்டாள். அவள் கீழ்ப்படிதலாகவும், அடக்கமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தாள். எங்கள் முந்தைய வருகைகள் அவரது பகுதி மற்றும் அவர் கற்பிக்கும் நபர்களை மையமாகக் கொண்டிருந்தன. இந்த வருகை வித்தியாசமாயிருந்தது. அவள் எப்படி இருக்கிறாள் என்று நான் அவளிடம் கேட்டபோது, ​​அவள் கவலைப்பட்டாள் என்று என்னால் சொல்ல முடிந்தது. அவள், “தலைவர் ஓல்சன், என்னால் இதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதாவது நன்றாக இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தருக்கு நான் இருக்க வேண்டிய ஊழியக்காரியாக நான் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

அவள் ஒரு விசேஷமான ஊழியக்காரி. எல்லா வகையிலும் சிறப்பானவள். ஒரு ஊழியத் தலைவரின் கனவு. ஒரு ஊழியக்காரனாக அவளுடைய திறமைகளைப்பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை.

அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். நான் அமைதியாக ஜெபித்தேன்: “பரலோக பிதாவே, இவள் ஒரு மிகச் சிறந்த ஊழியக்காரி. அவள் உம்முடையவள். அவள் எல்லாவற்றையும் சரியாக செய்கிறாள். நான் இதை குழப்ப விரும்பவில்லை. தயவு செய்து என்ன சொல்ல வேண்டும் என்று அறிய எனக்கு உதவுங்கள்.”

வார்த்தைகள் எனக்கு வந்தன. நான் சொன்னேன், “ஹெர்மனா, நீ இப்படி உணர்ந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ கற்பிக்கும் நண்பர் ஒருவர் இப்படி உணர்ந்தால், நீ என்ன சொல்வாய்?

அவள் என்னைப் பார்த்து, புன்னகைத்தாள். அந்த தவறுதலில்லாத ஊழிய ஆவியுடனும் நம்பிக்கையுடனும், அவள் சொன்னாள், “தலைவரே, அது எளிதானது. இரட்சகர் அவளை முழுமையாக அறிந்திருக்கிறார் என்று நான் அவளிடம் கூறுவேன். அவர் ஜீவிக்கிறாரென நான் அவளிடம் கூறுவேன். அவர் உன்னை நேசிக்கிறார். நீ போதுமானவள், இதைப் பெற்றாய்! ”

ஒரு சிறு புன்சிரிப்புடன், அவள், “நம் நண்பர்களுக்கு இது பொருந்தும் என்றால் எனக்கும் பொருந்தும்” என்றாள்.

நமக்கு கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருக்கும்போது, ​​தீர்வுகள் மிகவும் சிக்கலானதாகவோ அல்லது பதில்களைக் கண்டுபிடிப்பது மிகவும் குழப்பமானதாகவோ இருக்கலாம். சத்துரு, எல்லாப் பொய்களின் தந்தையும், குழப்பத்தின் சிற்பி என்பதை நாம் நினைவில் கொள்வோம்.8

இரட்சகர் எளிமையின் எஜமானர்.

தலைவர் நெல்சன் சொன்னார்:

சத்துரு புத்திசாலி. ஆயிரம் வருடங்களாக அவன் நல்லதை தீமையாகவும், தீமையை நல்லதாகவும் ஆக்கிக்கொண்டிருந்திருக்கிறான். அவனது செய்திகள் சத்தமாகவும், தைரியமாகவும் பெருமைமிக்கதாகவும் இருப்பது போலிருக்கிறது.

எனினும் நமது பரலோக பிதாவிடமிருந்து வரும் செய்திகள் ஆணித்தரமாக வித்தியாசமானவை. அவர் எளிமையாகவும், அமைதியாகவும், திகைப்பூட்டும் எளிமையாகவும் பேசுகிறார், அவரை நாம் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது.”9

தேவன் தம்முடைய குமாரனை அனுப்பியதற்காக, நம்மை மிகவும் நேசித்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் அவரே பதில்.

சமீபத்தில் தலைவர் நெல்சன் சொன்னார்:

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இன்றைவிட எப்போதும் அதிகமாக தேவைப்பட்டதில்லை. …

உலகமெங்கும் போய்சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்”10 என்று கர்த்தர் தம் சீஷர்களுக்குக் கொடுத்த அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டிய அவசரத் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சேவை செய்ய விரும்புவோருக்கு, நீங்கள் ஒரு தீர்க்கதரிசியின் அழைப்பிற்கு செவிசாய்க்கும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களை என்னால் சான்றளிக்க முடியும். சேவை செய்வது உங்களைப்பற்றியது அல்ல; இது இரட்சகரைப்பற்றியது. நீங்கள் ஒரு இடத்திற்கு அழைக்கப்படுவீர்கள், ஆனால் மிக முக்கியமாக நீங்கள் ஒரு ஜனத்துக்காக அழைக்கப்படுவீர்கள். பதில் இயேசு என்பதை புதிய நண்பர்களுக்குப் புரிந்துகொள்ள உதவும் பெரும் பொறுப்பும் ஆசீர்வாதமும் உங்களுக்கு இருக்கும்.

இதுதான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, இதற்கு நாங்கள் சொந்தமானவர்கள். தலைவர் நெல்சன் நம்மை அன்புடன் ஊக்குவிக்கும் அனைத்தும் நம்மை இரட்சகரிடம் நெருங்கிச் செல்ல வழிநடத்தும்.

என் மருமகன் நாஷ் உட்பட, எங்கள் அற்புதமான இளைஞர்கள், உங்கள் வாழ்நாள் முழுவதும், சவால்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அல்லது குழப்பமாக இருந்தாலும், பதில் எளிமையானது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கலாம்; அது எப்போதும் இயேசு.

தீர்க்கதரிசிகளாக, ஞானதிருஷ்டிக்காரர்களாக மற்றும் வெளிப்படுத்துபவர்களாக நாம் ஆதரிக்கிறவர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம், எங்களுக்கு நீங்கள் தேவை என்று நானும் சொல்கிறேன். இங்குதான் நீங்கள் சொந்தமானவர்கள்.

நான் இரட்சகரை நேசிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்து என்னும் அவருடைய, நாமத்தில் சாட்சியளிக்கிறேன். “அவர் நம்முடைய விசுவாசத்தைத் துவங்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார், அவர் எளிமையின் எஜமானர்,”11 என்று நான் சாட்சியமளிக்கிறேன். இயேசுவே பதில். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.