பொது மாநாடு
நல்லது செய்வது நமது இயல்பானதாக இருப்பதாக
அக்டோபர் 2022 பொது மாநாடு


நல்லது செய்வது நமது இயல்பானதாக இருப்பதாக

நன்மை செய்வதில் நாம் உறுதியாகவும் அசையாமலும் இருந்தால், நமது பழக்கவழக்கங்கள் உடன்படிக்கையின் பாதையில் இருக்க நமக்குதவும்.

பல்வேறு நாடுகளில் வாழ என்னை அழைத்துச் சென்ற சபையில் செய்த பணிகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு பெரிய பன்முகத்தன்மையை வெவ்வேறு பழக்கவழக்கங்களை மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட அசாதாரண மனிதர்களை நாங்கள் கண்டோம்.

நம் அனைவருக்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன, அவை நம் குடும்பத்திலிருந்து வந்தவை, அல்லது நாம் வாழும் சமூகத்திலிருந்து வந்தவை, மேலும் சுவிசேஷத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் அனைத்தையும் நாம் கைக்கொள்வதாக நம்புகிறோம். பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை மேம்படுத்துவது உடன்படிக்கையின் பாதையில் தங்குவதற்கான நமது முயற்சிகளுக்கு அடிப்படையாகும், மேலும் ஒரு தடையாக இருப்பவைகளை, நாம் நிராகரிக்க வேண்டும்

ஒரு வழக்கம் என்பது ஒருவரின், கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கான நடைமுறை அல்லது தொடர்ச்சியான மற்றும் பழக்கமான சிந்திக்கும் முறை. அடிக்கடி, பழக்கமான முறையில் நாம் நினைக்கும் மற்றும் செய்யும் காரியங்களை இயல்பானதாக நாம் அடையாளங் காண்கிறோம்.

இதை விளக்குவதற்கு என்னை அனுமதியுங்கள்: என் அன்பு மனைவி பாட்ரிசியா, தேங்காய்த் தண்ணீரைக் குடித்துவிட்டு தேங்காயை உண்பதை விரும்புகிறாள். மெக்சிகோவில் உள்ள பியூப்லாவுக்கு எங்கள் முதல் பயணத்தின் போது, நாங்கள் தேங்காய் வாங்க ஒரு இடத்திற்குச் சென்றோம். தண்ணீரைக் குடித்த பின்பு, என் மனைவி தேங்காயை வெட்டி சாப்பிட தேங்காய் சதையைக் கொண்டு வரச் சொன்னாள். அது வந்ததும், அது சிகப்பாயிருந்தது. அவர்கள் அதன்மேல் மிளகாய் தூவி இருந்தார்கள்! மிளகாயுடன் இனிப்பு தேங்காய்! இது எங்களுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றியது. ஆனால் மிளகாயுடன் தேங்காய் சாப்பிடாத நானும் என் மனைவியும் விசித்திரமானவர்கள் என்று பின்னர் அறிந்தோம். இருப்பினும், மெக்சிகோவில், இது அரிதானது அல்ல; அது மிகவும் இயல்பானது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், நாங்கள் சில நண்பர்களுடன் பிரேசிலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அவர்கள் எங்களுக்கு அவகேடோ பழத்தை பரிமாறினார்கள். நாங்கள் அதன் மீது உப்பு தூவப் போனபோது, எங்கள் நண்பர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே அவகேடோ பழத்திற்கு சர்க்கரை போட்டுவிட்டோம்! சர்க்கரை கலந்த அவகேடோ! இது எங்களுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றியது. ஆனால், அவகேடா பழத்தை சர்க்கரையுடன் சாப்பிடாத நானும், எனது மனைவியும்தான் வித்தியாசமானவர்கள் என்பதை அப்போது அறிந்தோம். பிரேசிலில், அவகேடா மேல் சர்க்கரை தூவி சாப்பிடுவது இயல்பானது.

சிலருக்கு இயல்பானது, அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பொறுத்து மற்றவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.

நம் வாழ்வில் எத்தகைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் இயல்பானவை?

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்: “இன்று நாம் அடிக்கடி ‘ஒரு புதிய இயல்பைப்பற்றி கேள்விப்படுகிறோம். நீங்கள் உண்மையிலேயே ஒரு புதிய இயல்பு நிலையை தழுவ விரும்பினால், உங்கள் இருதயத்தையும் மனதையும் ஆத்துமாவையும் நம்முடைய பரலோக பிதாவிடமும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் அதிகமாக திருப்பும்படி நான் உங்களை அழைக்கிறேன். அது உங்கள் புதிய இயல்பாக இருக்கட்டும்” (“A New Normal,” Liahona, Nov. 2020, 118).

இந்த அழைப்பு அனைவருக்குமானது. நாம் ஏழையா, பணக்காரனா, படித்தவனா, படிக்காதவனா, முதியவனா, இளைஞனா, நோயுற்றவனா, ஆரோக்கியமானவனா என்பது பொருட்டல்ல. உடன்படிக்கையின் பாதையில் நம்மை வைத்திருக்க உதவும் “இயல்பான” காரியங்கள் நம் வாழ்வில் இருக்கட்டும் என்று அவர் நம்மை அழைக்கிறார்.

எந்த நாடும் எது நல்லது அல்லது போற்றத்தக்கது என்ற முழுமையையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, பவுலும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் போதித்ததைப்போல:

“ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, அவைகளை நாடுகிறோம்.” (விசுவாசப் பிரமாணங்கள் 1:13)

“புகழ் எதுவோ அவைகளை சிந்தித்துக்கொண்டிருங்கள்” (பிலிப்பியர் 4:8).

இது ஒரு உபதேசம், வெறும் வர்ணனை அல்ல என்பதை கவனிக்கவும்.

நாம் அனைவரும் நமது பழக்கவழக்கங்கள் மற்றும் அவை நம் குடும்பத்தில் செல்வாக்கு செலுத்தும் விதத்தைப்பற்றி தியானிக்க சிறிது நேரம் ஒதுக்க விரும்புகிறேன்.

சபையின் உறுப்பினர்களுக்கு இயல்பானதாக இருக்க வேண்டிய அற்புதமான பழக்கவழக்கங்களில் இவை நான்கு:

  1. வேதங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் மனம்மாறுவதற்கு, ஒவ்வொரு நபரும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கு பொறுப்பானவர்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தைக் கற்பிக்கும் பொறுப்புள்ளவர்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25; 93:40 பார்க்கவும்).

  2. தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபம். எப்பொழுதும் ஜெபிக்கும்படி இரட்சகர் நமக்கு கட்டளையிடுகிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:38 பார்க்கவும்). நம்முடைய பரலோக பிதாவுடன் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள ஜெபம் நம்மை அனுமதிக்கிறது.

  3. வாரந்தோறும் திருவிருந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் (3 நேபி 18:1–12; மரோனி 6:5–6 பார்க்கவும்). நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது இயேசு கிறிஸ்துவை நினைவுகூரவே அவ்வாறு செய்கிறோம். இந்த நியமத்தில், சபையின் அங்கத்தினர்கள் இரட்சகரின் பெயரைத் தங்கள் மேல் தரித்துக்கொள்வது, அவரை எப்போதும் நினைவுகூருவது மற்றும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது போன்ற தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்).

  4. ஆலயத்திலும் குடும்பவரலாற்றுப் பணியிலும் அடிக்கடி பங்கேற்றல். இந்த பணி குடும்பங்களை நித்தியத்திற்கும் ஒருங்கிணைத்து முத்திரிக்கும் வழிமுறையாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:15 பார்க்கவும்).

இந்த நான்கு காரியங்களைக் கேட்கும்போது நாம் எப்படி உணர்கிறோம்? அவை நம் இயல்பான வாழ்க்கையின் ஒரு பகுதியா?

நாம் ஏற்றுக்கொண்ட இயல்புநிலையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய பல மரபுகள் உள்ளன, இதனால் தேவன் நம் வாழ்வில் ஜெயங்கொள்வாராக.

நம் வாழ்க்கையிலும் நம் குடும்பத்திலும் இயல்பான காரியங்கள் என்னவாக இருக்கும் என்பதை எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வேதங்களில், ஒரு சிறந்த மாதிரியைக் காண்கிறோம்; மோசியா 5:15 ல், அது கூறுகிறது: “நீங்கள் நற்கிரியைகளை மிகுதியாய் செய்து, உறுதியுள்ளவர்களாயும், அசைக்கமுடியாதவர்களாயும், இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.”

நான் இந்த வார்த்தைகளை விரும்புகிறேன், ஏனென்றால் நாம் மீண்டும் மீண்டும் செய்கிற காரியங்கள் நம் வாழ்வில் இயல்பானதாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம். நன்மை செய்வதில் நாம் உறுதியாகவும் அசையாமலும் இருந்தால், நமது பழக்கவழக்கங்கள் சுவிசேஷத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும், மேலும் அவை உடன்படிக்கையின் பாதையில் இருக்க நமக்குதவும்.

தலைவர் நெல்சன் மேலும் அறிவுரை கூறினார்: “தினமும் மனந்திரும்புவதன் மூலம் உங்கள் புதிய இயல்பைத் தழுவுங்கள். எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் அதிகளவில் தூய்மையாக இருக்க முயலுங்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள். ஒரு நித்திய கண்ணோட்டத்தை வைத்திருங்கள். உங்கள் அழைப்புகளை சிறப்பாக்குங்கள். உங்கள் சவால்கள் எதுவாக இருந்தாலும், என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் சிருஷ்டிகரை சந்திக்க நீங்கள் மிகவும் ஆயத்தமாக இருக்கும்படியாக ஒவ்வொரு நாளும் வாழுங்கள்,” (“A New Normal,” 118).

இப்போது என் மனைவி பாட்ரிசியா அல்லது எனக்கு மிளகாயுடன் தேங்காயையும் அவகேடவுடன் சர்க்கரையையும் சாப்பிடுவது ஒன்றும் விந்தையல்ல, உண்மையில், நாங்கள் அதை விரும்புகிறோம். இருப்பினும், மேன்மையடைதல் என்பது சுவை உணர்வைக் காட்டிலும் அப்பாற்பட்ட ஒன்று; இது நித்தியம் தொடர்பான தலைப்பு.

தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு (மோசியா 2:41) வாக்குறுதியளிக்கப்பட்ட “எப்போதும் முடிவில்லா மகிழ்ச்சியை” அனுபவிக்க நமது இயல்பான தன்மை அனுமதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அவ்வாறு செய்யும்போது, ​​நாம் சொல்ல முடியும், “ஆனபடியால் நாங்கள் மகிழ்ச்சியின் பிரகாரமாய் வாழ்ந்து வந்தோம்” (2 நேபி 5:27).

நமக்கன்பான தலைவர் ரசல் எம். நெல்சன் உட்பட, தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் என நாம் ஆதரிக்கும் 15 பேரைப்பற்றி நான் சாட்சியமளிக்கிறேன். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உண்மையானதென நான் சாட்சியமளிக்கிறேன். குறிப்பாக நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.