பொது மாநாடு
ஆலயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
அக்டோபர் 2022 பொது மாநாடு


ஆலயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

ஆலயத்தில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் வாழ்க்கையை வேறு எதுவும் செய்ய முடியாத அளவில் ஆசீர்வதிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அன்பான சகோதர சகோதரிகளே, இந்த பொது மாநாட்டின் ஐந்து மகத்தான அமர்வுகளின்போது, பரலோகங்கள் திறந்திருப்பதை நாம் மீண்டும் ஒருமுறை அனுபவித்தோம்! உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள், அவற்றைப் பின்பற்றுவீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன். நமது பரலோக பிதாவும் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடுவதற்கான உங்கள் முயற்சிகளை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில், நானும் சகோதரி நெல்சனும் Book of Mormon Videos காணொலிகள் தொடரின் புதிய தொகுப்பு 4ஐ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.1 நாங்கள் அவற்றால் உணர்த்தப்பட்டோம்! நேபியர்களுக்கு இரட்சகர் தோன்றுவதை சித்தரிக்கும் காட்சியிலிருந்து ஒரு சுருக்கமான பகுதியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

இரட்சகர் ஆலயத்தில் ஜனங்களுக்குத் தோன்றத் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருடைய வீடு. இது அவருடைய வல்லமையால் நிரம்பியுள்ளது. இப்போது கர்த்தர் நமக்காக என்ன செய்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர் தனது ஆலயங்களை அணுகக்கூடியதாக ஆக்குகிறார். ஆலயங்கள் கட்டும் வேகத்தை அவர் முடுக்கி விடுகிறார். இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க உதவும் நமது திறனை அவர் அதிகப்படுத்துகிறார். நாம் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய ரீதியில் சுத்திகரிக்கப்படுவதை அவர் எளிதாக்குகிறார். ஆலயத்தில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் வாழ்க்கையை வேறு எதுவும் செய்ய முடியாத அளவில் ஆசீர்வதிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

நம்மிடம் தற்போது 168 ஆலயங்கள் இயக்கத்திலும் மற்றும் 53 புதிய ஆலயங்கள் கட்டுமானத்திலும் உள்ளன, மேலும் 54 முன் கட்டுமான வடிவமைப்பு கட்டத்தில் உள்ளன!2 பின்வரும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு புதிய ஆலயம் கட்டும் திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூசன், கொரியா; நாகா, பிலிப்பைன்ஸ்; சாண்டியாகோ, பிலிப்பைன்ஸ்; எகெட், நைஜீரியா; சிக்லேயோ, பெரு; பியூனஸ் அயர்ஸ் சிட்டி சென்டர், அர்ஜென்டினா; லண்டரினா, பிரேசில்; ரிபீரோ ப்ரெட்டோ, பிரேசில்; ஹூஹூடனங்கோ, குவாத்தமாலா; ஜாக்சன்வில், புளோரிடா; கிராண்ட் ரேபிட்ஸ், மிச்சிகன்; ப்ரோஸ்பர், டெக்சாஸ்; லோன் மவுண்டன், நிவாடா; மற்றும் டகோமா, வாஷிங்டன்.

ஏற்கனவே உள்ள ஆலயத்துக்கு பயண நேரம் பெரும் சவாலாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய பெருநகரங்களில் பல ஆலயங்களை கட்டவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, மெக்சிகோ நகருக்கு அருகில் நான்கு கூடுதல் இடங்களில், குர்னவாக்கா, பச்சுகா, டோலுகா மற்றும் துலா ஆகிய புதிய ஆலயங்கள் கட்டப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் இதுவரை இல்லாத வகையில் ஆலயத்தில் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நெருக்கமாக வளர நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக, நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. இந்த புதிய வீடியோக்கள் சுவிசேஷ நூலகம் மற்றும் பிற சேனல்களில் பல மொழிகளில் கிடைக்கும். மாநாட்டிற்குப் பிறகு இன்று முதல் வாரந்தோறும் பாகங்கள் வெளியிடப்படும்.

  2. அக்டோபர் 1, 2022 நிலவரப்படி, மேலும் நான்கு ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன (செயின்ட் ஜார்ஜ் யூட்டா, மண்டி யூட்டா, சால்ட் லேக் மற்றும் கொலம்பஸ் ஓஹாயோ), மேலும் மூன்று ஆலயங்கள் பிரதிஷ்டைக்காக காத்திருக்கின்றன (ஹாமில்டன் நியூசிலாந்து, குய்டோ ஈக்வடார் மற்றும் பெலெம் பிரேசில்).