பொது மாநாடு
எது உண்மை?
அக்டோபர் 2022 பொது மாநாடு


எது உண்மை?

தேவன் எல்லா சத்தியத்துக்கும் ஆதாரம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை தேவன் தம் குழந்தைகளுக்கு தெரிவிக்கும் அனைத்து சத்தியங்களையும் ஏற்றுக்கொள்கிறது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, இந்த உணர்த்துதலான அமர்வுக்காக அனைவருக்கும் நன்றி! கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நமது மாநாட்டில் இருந்து, இருதயத்தை நொறுக்குவது முதல் உன்னதமானது வரை பல உலக நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்.

உலகம் முழுவதும் பெரிய அளவில் இளைஞர் மாநாடுகள் நடத்தப்படும் செய்திகளைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.1 இந்த மாநாடுகளில், நமது உன்னத இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அவர்களின் மிகப்பெரிய வலிமை கர்த்தரிடமிருந்து வருகிறது என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.2

உலகம் முழுவதும் அதிகமான ஆலயங்கள் கட்டப்படுவற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு புதிய ஆலயத்தின் பிரதிஷ்டையுடன், நம்மைப் பலப்படுத்தவும், சத்துருவின் தீவிரமான முயற்சிகளை முறியடிக்கவும் கூடுதலான தெய்வீக வல்லமை உலகில் வருகிறது.

துஷ்பிரயோகம் சத்துருவின் செல்வாக்கை உருவாக்குகிறது. அது ஒரு கொடிய பாவம்.3 சபையின் தலைவராக, இந்த பிரச்சினையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நான் உறுதிப்படுத்துகிறேன். நான் முற்றிலும் தெளிவாகச் சொல்கிறேன்: பெண்கள், குழந்தைகள் அல்லது யாரையாவது எந்தவிதமான துஷ்பிரயோகமும் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது. யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர் வருத்தப்படுகிறார், நானும் வருந்துகிறேன். எந்தவொரு துஷ்பிரயோகத்திற்கும் பலியாகிய ஒவ்வொரு நபருக்காகவும் அவர் துக்கப்படுகிறார், நாம் அனைவரும் துக்கப்படுகிறோம். இந்த அருவருப்பான செயல்களைச் செய்பவர்கள் மனிதனின் சட்டங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மட்டுமல்ல, தேவனின் கோபத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.

இப்போது பல தசாப்தங்களாக, சபை துஷ்பிரயோகத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சபை இணையதளத்தில் பல உதவிகள் உள்ளன. அவற்றைப் படிக்க உங்களை அழைக்கிறேன்.4 இந்த வழிகாட்டுதல்கள் அப்பாவிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளன. துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் எச்சரிக்கையாக இருக்கவும், அவர்களைப் பாதுகாக்க உடனடியாக செயல்படவும் நான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இரட்சகர் துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார், அவருடைய சீஷர்களாகிய நாமும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சத்துருவிடம் வேறு தொல்லை கொடுக்கும் தந்திரங்கள் உள்ளன. அவற்றுள் எது உண்மை, எது உண்மையில்லாதது என்ற கோட்டை மங்கலாக்கும் அவனது முயற்சிகளும் அடங்கும். நம் விரல் நுனியில் கிடைக்கும் தகவல்களின் திரள், முரண்பாடாக, எது உண்மை என்பதைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருக்கும் ஒரு நாட்டில் ஒரு உயரதிகாரியை சந்தித்தபோது சகோதரி நெல்சனும் நானும் சந்தித்த அனுபவத்தை இந்த சவால் எனக்கு நினைவூட்டுகிறது. இந்த அன்பான வயதான நண்பர் சமீபத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் படுக்கையில் இருந்த பல நாட்களில், அவர் அடிக்கடி கூரையைப் பார்த்து, “எது உண்மை?” என்று கேட்டதாக எங்களிடம் கூறினார்.

உண்மையை எங்கு கண்டுபிடிப்பது என்று தெரியாததால் பலர் சத்தியத்திலிருந்து தடுக்கப்படுகிறார்கள்5 உண்மை எது என்பதை ஒவ்வொருவரும் தானாகவே தீர்மானிக்க வேண்டும் என சிலர் உண்மையை உரிமைப்பட்டது என்று நம்ப வைப்பார்கள். தேவனுக்குக் கணக்குக் கொடுக்க மாட்டோம் என்று தவறாக எண்ணுபவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை ஆசையான எண்ணமாக இருக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே, தேவன் எல்லா உண்மைக்கும் ஆதாரம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, அறிவியல் ஆய்வகத்தில் கற்றுக்கொண்டாலோ அல்லது அவரிடமிருந்து நேரடியாக வெளிப்படுத்தப்பட்டதாலோ, தேவன் தம் குழந்தைகளுக்கு தெரிவிக்கும் அனைத்து உண்மைகளையும் ஏற்றுக்கொள்கிறது.

இந்த பீடத்திலிருந்து இன்றும் நாளையும் நீங்கள் சத்தியத்தை தொடர்ந்து கேட்பீர்கள். உங்கள் கவனத்தை ஈர்க்கும், உங்கள் மனதில் தோன்றும், உங்கள் இருதயத்தில் நிலைத்திருக்கும் எண்ணங்களை தயவுசெய்து குறிப்பெடுங்கள். நீங்கள் கேட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்த கர்த்தரிடம் ஜெபத்துடன் கேளுங்கள்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே நான் உங்களை நேசிக்கிறேன். இந்த மாநாடு நீங்கள் தேடும் ஆவிக்குரிய விருந்து அளிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.