பொது மாநாடு
உங்கள் சாட்சியை போஷித்தலும் சொல்லுதலும்
அக்டோபர் 2022 பொது மாநாடு


உங்கள் சாட்சியை போஷித்தலும் சொல்லுதலும்

சகோதர சகோதரிகளே, உங்கள் சாட்சியை வார்த்தையிலும் செயலிலும் கூறுவதற்கான வாய்ப்புகளைத் தேட உங்களை நான் அழைக்கிறேன்.

முன்னுரை

நீங்கள் இன்னும் இளமையாக இருக்கும்போது கூட, வாழ்க்கையில் வரையறுக்கும் தருணங்கள் அடிக்கடியும் எதிர்பாராத விதமாகவும் வரும். ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன், கெவின், ஒரு மாணவர் தலைவர் நிகழ்வுக்காக மாநிலத்திற்கு வெளியே பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்பற்றிய கதையை அவனுடைய வார்த்தைகளில் கூறியதைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள்.

“வரிசையில் எனது முறை வந்தது, அதிகாரப்பூர்வமாக தோற்றமளிக்கும் பதிவு எழுத்தர் என் பெயரைக் கேட்டார். அவர் தன் பட்டியலைப் பார்த்து, ‘அப்படியானால் நீ யூட்டாவிலிருந்து வந்த இளைஞன்’ என்றார்.

“‘நான் மட்டும்தான் என்கிறீர்களா?’ என நான் கேட்டேன்.

“‘ஆம், ஒரே ஒருவன்.’ என் பெயருக்குக் கீழே “யூட்டா” என்று அச்சிடப்பட்ட என் பெயர் அட்டையை அவர் என்னிடம் கொடுத்தார். நான் அதை மாட்டிக்கொண்டபோது, ​​நான் முத்திரை குத்தப்பட்டதைப் போல உணர்ந்தேன்.

“என்னுடையது போன்ற பெயர் அட்டைகளுடன் மற்ற ஐந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஹோட்டல் லிஃப்ட்டில் நான் கூட்டமாகச் சென்றேன். ‘ஏய், நீ யூட்டாவைச் சேர்ந்தவனா. நீ ஒரு மார்மனா?’ என்று ஒரு மாணவன் கேட்டான்.

“நாடு முழுவதிலுமிருந்து வரும் இந்த மாணவர் தலைவர்கள் அனைவருக்கும் நான் பொருத்தமானவனில்லை என நினைத்தேன். ‘ஆமாம்’ என்று தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன்.

“நீங்கள் தான் தேவதூதர்களைப் பார்த்ததாகக் கூறிய ஜோசப் ஸ்மித்தை நம்புபவர்கள். நீங்கள் உண்மையில் அதை நம்பவில்லை, இல்லையா?’

“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. லிஃப்டில் இருந்த மாணவர்கள் அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் இப்போதுதான் வந்தேன், எல்லோரும் நான் வித்தியாசமாக இருப்பதாக நினைத்தார்கள். நான் கொஞ்சம் தற்காப்புக்கு ஆளானேன் ஆனால், பின்னர், ‘ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னேன்.

“அது எங்கிருந்து வந்தது? நான் ஆச்சரியப்பட்டேன். எனக்குள் அது இருப்பது எனக்குத் தெரியாது. ஆனால் வார்த்தைகள் உண்மையாக இருப்பதாகவே தோன்றின.

“ஆமாம், நீங்கள் அனைவரும் மதவாதிகள் என்று எனக்குக் கூறப்பட்டது,” என்று அவன் கூறினான்.

“அதனுடன், லிஃப்ட் கதவு திறந்தவுடன் ஒரு சங்கடமான இடைநிறுத்தம் ஏற்பட்டது. நாங்கள் எங்கள் சாமான்களை சேகரித்தபோது, ​​அவன் சிரித்துக்கொண்டே ஹாலில் நடந்தான்.

“அப்போது, எனக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது, ‘ஏய், மார்மன்களிடம் வேறு மாதிரியான வேதாகமம் இருக்கிறது இல்லையா?’

“இல்லை. மறுபடியுமா. என்னுடன் லிஃப்டில் இருந்த மற்றொரு மாணவர் கிறிஸ்டோபரைப் பார்க்க நான் திரும்பினேன்.

“‘விஷயத்தை கைவிட விரும்பி “‘இது மார்மன் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது,’ என நான் சொன்னேன். நான் என் பைகளை எடுத்துக்கொண்டு ஹாலில் நடக்க ஆரம்பித்தேன்.

“‘ஜோசப் ஸ்மித் மொழிபெயர்த்த புத்தகமா?’ என்று அவன் கேட்டான்.

“ஆமாம், அதுதான்” என்று நான் பதிலளித்தேன். சங்கடத்தைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நடந்தேன்.

“’சரி, நான் எப்படி ஒன்றைப் பெறுவது என்று உனக்குத் தெரியுமா?’

“வேத பாட வகுப்பில் நான் கற்றுக்கொண்ட ஒரு வசனம் திடீரென்று எனக்கு நினைவுக்கு வந்தது. ‘இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி நான் வெட்கப்படவில்லை’.1 இது என் மனதில் நுழைந்தவுடன், நான் மிகவும் சங்கடப்பட்டேனே என்று வெட்கப்பட்டேன்.

“எஞ்சிய வாரம் முழுவதும் அந்த வேத வசனம் என்னை விட்டு விலகாது. சபையைப்பற்றிய பல கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை பதிலளித்தேன், மேலும் பல நண்பர்களை உருவாக்கினேன்.

“நான் என் மதத்தைப்பற்றி பெருமைப்படுவதைக் கண்டுபிடித்தேன்.

“நான் கிறிஸ்டோபருக்கு மார்மன் புஸ்தகத்தைக் கொடுத்தேன். பின்னர் அவன் ஊழியக்காரர்களை தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறி அவன் எனக்கு எழுதினான்.

“எனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதில் சங்கடப்பட வேண்டாம் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.”2

அவனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதில் கெவினின் தைரியத்தால் நான் உணர்த்தப்பட்டேன். உலகெங்கிலும் உள்ள சபையின் உண்மையுள்ள உறுப்பினர்களால் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் வரும் ஒரு தைரியம். எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த நான்கு கேள்விகளைப்பற்றி சிந்திக்க உங்களை அழைக்கிறேன்:

  1. சாட்சியம் என்றால் என்ன என்பதை நான் அறிந்திருக்கிறேனா, புரிந்துகொண்டிருக்கிறேனா?

  2. என் சாட்சியை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியுமா?

  3. எனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதில் என்ன தடைகள் உள்ளன?

  4. எனது சாட்சியத்தை நான் எவ்வாறு கைக்கொள்ளுவது?

சாட்சியம் என்றால் என்ன என்பதை நான் அறிந்து புரிந்திருக்கிறேனா?

உங்கள் சாட்சியம் மிகவும் விலையுயர்ந்த உடைமையாகும், இது பெரும்பாலும் அன்பான ஆவிக்குரிய உணர்வுகளுடன் தொடர்புடையது. இந்த உணர்வுகள் பொதுவாக அமைதியாகத் தெரிவிக்கப்படுகின்றன மற்றும் ஒரு “அமர்ந்த, மெல்லிய சத்தமாக” விவரிக்கப்படுகின்றன.3 இது உங்கள் நம்பிக்கை அல்லது சத்தியத்தைப்பற்றிய அறிவு, பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் மூலம் ஆவிக்குரிய சாட்சியாக வழங்கப்படுகிறது. இந்த சாட்சியைப் பெறுவது நீங்கள் சொல்வதையும் நீங்கள் செயல்படுவதையும் மாற்றும். பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்தும் உங்கள் சாட்சியின் முக்கிய கூறுகள், பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • தேவன் உங்களுடைய பரலோக பிதா, நீங்கள் அவருடைய பிள்ளை. அவர் உங்களை நேசிக்கிறார்.

  • இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கிற தேவனின் குமாரரும், உங்களுடைய இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறார்.

  • ஜோசப் ஸ்மித், இயேசு கிறிஸ்துவின் சபையை மறுஸ்தாபிதம் செய்ய அழைக்கப்பட்ட தேவனின் தீர்க்கதரிசி.

  • பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியில் தேவனால் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை.

  • மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபை இன்று ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசியால் வழிநடத்தப்படுகிறது.

எனது சாட்சியத்தை எவ்வாறு பகிர்வது என்று எனக்குத் தெரியுமா?

ஆவிக்குரிய உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் சாட்சியை நீங்கள் பகிருகிறீர்கள். சபையின் உறுப்பினராக, உங்களின் பேசும் சாட்சியத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் சம்பிரதாயமான சபைக் கூட்டங்களில் அல்லது குடும்பம், நண்பர்கள் மற்றும் மற்றவர்களுடன் சாதாரணமான முறையில் உரையாடல்களில் வரும்.

உங்கள் சாட்சியை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு வழி நீதியான நடத்தை. இயேசு கிறிஸ்துவில் உங்கள் சாட்சியம் நீங்கள் சொல்வது மட்டும் அல்ல, அது நீங்கள் யார் என்பதுதான்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் குரல் கொடுக்கும் சாட்சியாக அல்லது உங்கள் செயல்களின் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும்போது, “கிறிஸ்துவண்டை வாருங்கள்” 4என்று மற்றவர்களை அழைக்கிறீர்கள்.

சபை உறுப்பினர்கள் எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனின் சாட்சிகளாக நிற்கிறார்கள்.5 டிஜிட்டல் பிரபஞ்சத்தில் இதைச் செய்ய நம்முடைய சொந்த உணர்த்தும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி அல்லது மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான வாய்ப்புகள் முடிவற்றவை. நாம் நேசிக்கும்போதும், பகிரும்போதும், நேரலையில் அழைக்கும்போதும் நாம் சாட்சியமளிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காட்ட நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது உங்கள் ட்வீட்கள், நேரடி செய்திகள் மற்றும் இடுகைகள் உயர்ந்த, பரிசுத்தமான நோக்கத்தைப் பெறும்.

எனது சாட்சியத்தைப் பகிர்வதில் உள்ள தடைகள் என்ன?

உங்கள் சாட்சியத்தைப் பகிர்வதில் உள்ள தடைகள் என்ன சொல்ல வேண்டும் என்பதில் நிச்சயமற்ற தன்மையை உள்ளடக்கியிருக்கலாம். ஆரம்பகால அப்போஸ்தலரான மாத்யு கோவ்லி, 17 வயதில் நியூசிலாந்திற்கு ஐந்தாண்டு ஊழியத்திற்காக புறப்பட்டபோது இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:

“நான் புறப்பட்ட நாளில் என் அப்பா செய்த ஜெபத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என் வாழ்நாளில் இதைவிட அழகான ஆசீர்வாதத்தை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பின்னர் ரயில் நிலையத்தில் அவர் என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள், ‘என் மகனே, நீ அந்த ஊழியத்தில் வெளியே செல்வாய், நீ படிப்பாய், உனது பிரசங்கத்தை ஆயத்தப்படுத்த முயற்சிப்பாய், சில சமயங்களில் உன்னை அழைக்கும்போது, நீ அற்புதமாகத் தயாராகிவிட்டாய் என்று நினைப்பாய், ஆனால் நீ எழுந்து நிற்கும்போது உன் மனம் முற்றிலும் வெறுமையாகிவிடும்.’ ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த அனுபவம் எனக்குண்டு.

“உங்கள் மனம் வெறுமையாகப் போகும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று நான் கேட்டேன்.

அவர் கூறினார், ‘நீ அங்கு எழுந்து நின்று, உன் ஆத்துமாவின் முழு ஆர்வத்துடன், ஜோசப் ஸ்மித் ஜீவனுள்ள தேவனின் தீர்க்கதரிசி என்று நீ சாட்சியமளிக்கிறாய், மேலும் எண்ணங்கள் உன் மனதில் மற்றும் வார்த்தைகள் உன் வாயில் … பெருக்கெடுக்கும், கேட்கிற அனைவரின் இருதயத்திலும் பெருகும். ஆகவே, எனது … ஊழியத்தின் போது என் மனம் பெரும்பாலும் வெறுமையாக இருந்தது … போதகர் சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து உலக வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்விற்கு சாட்சியம் அளிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தது. நண்பர்களே, பெண்களே எப்போதாவது இதை செய்து பாருங்கள். உங்களால் வேறு எதுவும் சொல்ல முடியாவிட்டால், ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்று சாட்சியமளியுங்கள், சபையின் முழு வரலாறும் உங்கள் மனதில் ஊற்றெடுக்கும்.”6

அதேபோல், தலைவர் டாலின் எச். ஓக்ஸ் பகிர்ந்துகொண்டார், “சில சாட்சியங்கள் முழங்கால்களில் அவர்களுக்காக ஜெபம் செய்வதை விட, அவற்றை தாங்கி நிற்கும் கால்களால் சிறப்பாக பெறப்படுகின்றன.”7 ஆவியானவர் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் சமமாக சாட்சி கொடுக்கிறார்.

கெவின் கதை வலியுறுத்தியது போல், மற்றொரு தடை பயம். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியது போல்:

“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் கொடுத்திருக்கிறார்.”

“ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக் குறித்து வெட்கப்பட வேண்டாம்.”8

பயத்தின் உணர்வுகள் கர்த்தரிடமிருந்து வருவதில்லை, மாறாக மிக அடிக்கடி எதிரியிடமிருந்து வருகிறது. கெவின் செய்ததைப் போல், விசுவாசம் வைத்திருப்பது, இந்த உணர்வுகளை சமாளிக்கவும், உங்கள் இருதயத்தில் உள்ளதை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவும் உங்களை அனுமதிக்கும்.

எனது சாட்சியத்தை நான் எவ்வாறு கைக்கொள்ளுவது?

ஒரு சாட்சி நமக்குள் இயல்பாகவே இருக்கிறது என்று நான் நம்புகிறேன், ஆனாலும், அதைக் காத்து இன்னும் முழுமையாக வளர்த்துக்கொள்ள, நாம் “நம் சாட்சியத்தை மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டும்” என்று ஆல்மா கற்பித்தான்.9 நாம் அப்படிச் செய்யும்போது, “அது வேர் பிடித்து, முளைத்து, கனியைக் கொடுக்கும்.”10 இது இல்லாமல் “அது உதிர்ந்து போகும்.”11

பிரதான தலைமையியின் ஒவ்வொரு அன்பான உறுப்பினரும் சாட்சியத்தை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளனர்.

தலைவர் ஹென்றி பி. ஐரிங் நமக்கு அன்புடன்போதித்தார், “தேவனின் வார்த்தையை ருசிப்பது, இருதயப்பூர்வமான ஜெபம் மற்றும் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவை உங்கள் சாட்சியம் வளரவும் செழிக்கவும் சமமாகவும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட வேண்டும்.”12

தலைவர் டாலின் எச். ஓக்ஸ், நமது சாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, “அவருடைய ஆவி எப்போதும் [நம்முடன்] இருக்கும் (கோ&உ 20:77) என்ற விலைமதிப்பற்ற வாக்குறுதிக்கு தகுதிபெற, ஒவ்வொரு வாரமும் நாம் திருவிருந்தில் பங்கேற்க வேண்டும் (கோ& உ 59:9 பார்க்கவும்)” என நமக்கு நினைவூட்டினார்.13

தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் அன்புடன் ஆலோசனை வழங்கினார்:

“சத்தியத்தை [உங்கள் சாட்சியம்] ஊட்டுங்கள்.…

“… பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தையில் உங்களை போஷித்துக் கொள்ளுங்கள். அவருக்கு எப்படி சிறப்பாக செவிகொடுப்பதென்று உங்களுக்குக் கற்பிக்க கர்த்தரிடம் கேளுங்கள். ஆலயத்திலும் குடும்ப வரலாற்றுப் பணியிலும் அதிக நேரம் செலவிடுங்கள்.

“… உங்கள் சாட்சியத்தை உங்கள் உயர்ந்த முன்னுரிமையாக ஆக்குங்கள்.”14

முடிவுரை

என் அன்புச் சகோதர சகோதரிகளே, சாட்சியம் என்றால் என்ன என்பதை நீங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொண்டு, அதைப் பகிர்ந்துகொள்ளும்போது, நிச்சயமற்ற தன்மை மற்றும் பயத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விலைமதிப்பற்ற உடைமையாகிய உங்கள் சாட்சியை வளர்த்துக்கொள்ளவும் வைத்திருக்கவும் உங்களுக்கு சாத்தியமாகும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

பண்டைய, தற்கால தீர்க்கதரிசிகள் தங்கள் சாட்சியங்களை தைரியமாக ஏற்றுக்கொண்ட எண்ணற்ற உதாரணங்களைக் கொண்டிருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்துவின் மரணத்தைத் தொடர்ந்து, பேதுரு நின்று சாட்சியமளித்தான்:

“உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற, உங்களுக்கு முன்பாக இங்கு நிற்கிறவருமான நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். …

“… நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.”15

விசுவாசத்தைப்பற்றிய ஆல்மாவின் பிரசங்கத்தைத் தொடர்ந்து அமுலேக் வலிமையாகக் கூறினான்: “இவைகள் உண்மை என்று உங்களுக்குச் சாட்சி கொடுக்கிறேன். இதோ, நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனாகிய கர்த்தர் பேசியிருக்கிறபடியே, உலகத்தினுடைய பாவங்களுக்காக அவர் பாவநிவர்த்தி பண்ணும்படியாக மனுபுத்திரருக்குள்ளே வருவார்.”16

ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன், உயிர்த்தெழுந்த இரட்சகரின் மகிமையான தரிசனத்தைக் கண்டு சாட்சியம் அளித்தனர்:

இப்பொழுது, அவரைப்பற்றி கொடுக்கப்பட்ட அநேக சாட்சிகளுக்குப் பின்னர், எல்லாவற்றிற்கும் கடைசியாக, அவரைப்பற்றி நாங்கள் கொடுக்கிற சாட்சி இதுவே: அவர் ஜீவிக்கிறார்!

“ஏனெனில் தேவனின் வலது பாரிசத்தில் நாங்கள் அவரைக் கண்டோம்; பிதாவின் ஒரேபேறானவர் அவரே என்று சாட்சி கொடுத்த குரலை நாங்கள் கேட்டோம்.”17

சகோதர சகோதரிகளே, உங்கள் சாட்சியை வார்த்தையிலும் செயலிலும் கூறுவதற்கான வாய்ப்புகளைத் தேட உங்களை நான் அழைக்கிறேன். தென் அமெரிக்காவில் உள்ள ஒரு தலைநகரின் மேயருடன் அவரது அறையில் அவரது அமைச்சரவை அதிகாரிகள் பலருடன் நடந்த சந்திப்பின் முடிவில், சமீபத்தில் எனக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் மிகவும் அன்பான உணர்வுகளுடன் முடித்தபோது, நான் தயக்கத்துடன் என் சாட்சியைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். தூண்டுதலைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்றும் உலக இரட்சகர் என்றும் நான் சாட்சியம் அளித்தேன். அந்தக் கணநேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. அறையில் இருந்த பரிசுத்த ஆவி மறுக்க முடியாததாக இருந்தது. அனைவரும் தொடப்பட்டதைப் போல் இருந்தது. “தேற்றரவாளன் … பிதாவையும் குமாரனையும் குறித்து சாட்சி கொடுக்கிறார்.”18 எனது சாட்சியத்தைக் கொடுக்கும் தைரியத்தை வரவழைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இப்படி ஒரு தருணம் வரும்போது, அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதைச் செய்யும் போது உங்களுக்குள் தேற்றரவாளனின் அரவணைப்பை நீங்கள் உணர்வீர்கள்.

நான் உங்களுக்கு என் சாட்சியையும் சாட்சியத்தையும் வழங்குகிறேன், தேவன் நம்முடைய பரலோக பிதா, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், மேலும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இன்று பூமியில் உள்ள தேவனின் சபையாக நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் தலைமையில் உள்ளது. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.