பொது மாநாடு
உங்கள் சந்ததியினருக்காக
அக்டோபர் 2023 பொது மாநாடு


உங்கள் சந்ததியினருக்காக

நீங்கள் தொடங்கிய இந்த அழகான விசுவாசத்தின் சங்கிலியில் அல்லது நீங்கள் மரபுரிமையாகப் பெற்றதில் பலவீனமான இணைப்பாக இருக்காதீர்கள். வலிமையானவராக இருங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் சேவைசெய்தபோது, பெருவிலுள்ள லிமாவில் வசிக்கும் போது பெற்ற ​​ஒரு அழகான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வாரயிறுதியில் பரபரப்பான பணி முடிந்து வீடு திரும்பும் போது இது நடந்தது. இறுதியாக விமான நிலைய குடியேற்ற செயல்முறையை முடித்த பிறகு, எங்களின் வழக்கமான வாடகைவண்டி சேவையிலிருந்து எனக்காக ஒரு நட்பான வாடகைவண்டி ஓட்டுநர் காத்திருப்பதைக் கண்டேன். அவர் என்னை தனது காருக்கு அழைத்துச் சென்றார், நான் ஓய்வெடுக்கவும் வீட்டிற்கு திரும்பும் அமைதியான பயணத்தை அனுபவிக்கவும் தயாராக பின்னால் அமர்ந்தேன். சில கட்டிடங்கள் தாண்டிய பிறகு, ஓட்டுநருக்கு அவரது மேற்பார்வையாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, நான் தவறான வண்டியில் ஏறிவிட்டதாக அவரிடம் கூறினார். வேறு ஒரு வண்டி எனக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, நான் வண்டியை மாற்ற விரும்பினால் என்னை மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி மேற்பார்வையாளர் அவரிடம் கூறினார். நான் அவரிடம் அது தேவையில்லை, நாம் தொடரலாம் என்று சொன்னேன். சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, பின்பக்கக் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து, “நீங்கள் ஒரு மார்மன், இல்லையா?” என்று கேட்டார்.

அந்த அழைப்பு விடுக்கும் கேள்விக்குப் பிறகு, என் அமைதியான தருணங்கள் முடிந்துவிட்டதை நான் அறிந்தேன். அவருடைய கேள்வி எங்கு அழைத்துச் செல்லும் என்பதை ஆராய்வதை என்னால் நிராகரிக்க முடியவில்லை.

அவர் பெயர் உமர் என்றும், அவரது மனைவி பெயர் மரியா தெரசா என்றும், அவர்களுக்கு கரோலினா, 14 வயது, மற்றும் ரோட்ரிகோ, 10 வயது ஆகிய இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிந்தேன். உமர் சிறுவயதிலிருந்தே சபையின் உறுப்பினராக இருந்துள்ளார். அவரது குடும்பம் சபையில் ஆர்வமாக இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில், அவரது பெற்றோர் சபைக்கு செல்வதை நிறுத்தினர். உமர் தனது 15வது வயதில் சபைக்கு செல்வதை முற்றிலும் நிறுத்தினார். இப்போது அவருக்கு 40 வயது.

அந்த தருணத்தில் நான் தவறான வண்டியில் ஏறவில்லை என்பதை உணர்ந்தேன். இது தற்செயல் நிகழ்வு அல்ல! நான் யார் என்று அவரிடம் கூறினேன், கர்த்தர் தன் மந்தைக்கு அவரைத் திரும்ப அழைத்ததால் நான் அவருடைய வண்டியில் இருந்தேன் என்றேன்.

அவரும் அவருடைய குடும்பத்தாரும் சபையில் ஆர்வமிக்க உறுப்பினர்களாக இருந்த காலத்தைப் பற்றிப் பேசினோம். இனிமையான குடும்ப இல்ல மாலை தருணங்கள் மற்றும் சில ஆரம்ப வகுப்பு பாடல்களின் விருப்பமான நினைவுகள் அவருக்கு இருந்தன. பின்னர் அவர் “I Am a Child of God” பாடலில் சில வார்த்தைகளை மென்மையாகப் பாடினார்.1

அவரது முகவரி, தொலைபேசி எண் மற்றும் அவற்றை அவரது ஆயருடன் பகிர்ந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்ற பிறகு, அவர் சபைக்கு திரும்பும் முதல் நாளில் சபையில் இருப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பேன் என்று அவரிடம் சொன்னேன். நாங்கள் விமான நிலையத்திலிருந்து எனது வீட்டிற்கான எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டோம், அதே போல் அவரது கடந்த காலத்திற்கான எங்கள் சிறிய பயணத்தை முடித்துவிட்டு, எங்கள் தனி வழிகளில் சென்றோம்.

சில வாரங்களுக்குப் பிறகு அவருடைய ஆயர் என்னை அழைத்து, உமர் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வரத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். நான் அங்கே இருப்பேன் என்று சொன்னேன். அந்த ஞாயிற்றுக்கிழமை, உமர் தன் மகனுடன் அங்கே இருந்தார். அவருடைய மனைவியும் மகளும் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவரது ஆயர் என்னை மீண்டும் அழைத்தார், இந்த முறை உமர் தனது மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று என்னிடம் கூறினார், மேலும் அவர் என்னை அங்கே வரும்படி அழைத்தார். அவர்கள் சபையின் உறுப்பினர்களாக திடப்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமையின் படம் இதோ.

படம்
ஓமரின் குடும்பத்துடன் மூப்பர் கோடோய் அவர்கள் திடப்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை.

அதே ஞாயிற்றுக்கிழமை, நான் உமர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சொன்னேன், அவர்கள் தயாராக இருந்தால், ஒரு வருடத்தில், லிமா ஆலயத்தில் அவர்கள் முத்திரிக்கப்படுவதை நிறைவேற்றுவதில் நான் பெருமைப்படுவேன். ஒரு வருடம் கழித்து எடுக்கப்பட்ட அந்த மறக்கமுடியாத தருணத்தின் படம் இதோ.

படம்
ஆலயத்தில் ஓமர் குடும்பத்துடன் மூப்பர் கோடோய்

இந்த அனுபவங்களை நான் ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்? இரண்டு நோக்கங்களுக்காகப் பகிர்கிறேன்.

முதலாவதாக, சில காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திலிருந்து விலகிச் சென்ற அந்த நல்ல உறுப்பினர்களுக்கு உரையாற்றுவது. இரண்டாவதாக, தங்கள் உடன்படிக்கைகளுக்கு, வேண்டிய அளவுக்கு விசுவாசமாக இல்லாத, இன்று பங்கேற்கும் உறுப்பினர்களுடன் உரையாற்றுவது. இரண்டு சூழ்நிலையிலும், அவர்களுக்கு அடுத்த தலைமுறைகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் அவர்களின் சந்ததியினருக்காக ஒதுக்கப்பட்ட ஆசீர்வாதங்களும் வாக்குறுதிகளும் ஆபத்தில் உள்ளன.

எனது பெரு நண்பர் உமருக்கு நடந்தது போல், உடன்படிக்கை பாதையை விட்டு வெளியேறிய நல்ல உறுப்பினர்கள் முதல் சூழலில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர் ஏன் திரும்பி வர முடிவு செய்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது, ​​இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அவரும் அவரது மனைவியும் உணர்ந்ததால் தான் என்று கூறினார். தங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் சபைக்கு செல்ல வேண்டிய நேரம் இது என்று அவர் உணர்ந்தார்.

ஒரு காலத்தில் சுவிசேஷத்தை கடைபிடித்து வந்த குடும்பங்கள், சபையில் இருந்து விலகி இருக்க பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி எடுத்த முடிவினால் அதை இழந்த சபைக்கு வராத உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர் அல்லாதவர்களை நாம் சந்திக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த முடிவு அவர்களின் சந்ததியினருக்கு என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதைவிட மனவேதனையானது, ஒரு கால கட்டத்தில் இருந்த நித்திய குடும்பத்தின் வாக்குறுதிகளை அவர்கள் இழந்துள்ளனர். ஒருவரின் முடிவு முழு சந்ததியினரையும் பாதித்துள்ளது. விசுவாசத்தின் மரபு உடைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாம் அறிந்தபடி, உடைந்த எதையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் சரிசெய்ய முடியும். இந்தக் காரணத்திற்காக, தயவு செய்து தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த அழைப்பைக் கவனியுங்கள்: “இப்போது, நீங்கள் பாதையிலிருந்து விலகியிருந்தால், தயவுசெய்து திரும்பி வர என் இருதயத்தில் உள்ள எல்லா நம்பிக்கையுடனும் நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் கவலைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் சவால்கள் எதுவாக இருந்தாலும், கர்த்தரின் சபையாகிய, இதில் உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது. உடன்படிக்கை பாதையில் திரும்புவதற்கு நீங்களும் இன்னும் பிறக்காத தலைமுறையினரும் உங்கள் செயல்களால் இப்போது ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.” 2

இப்போது, ​​இரண்டாவது சூழ்நிலையைப் பற்றி பேசுவோம், இன்றைய பங்கேற்கும் உறுப்பினர்கள் போதிய அளவுக்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கலாம். நேற்றைய முடிவுகள் இன்றைய யதார்த்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது போல், இன்றைய முடிவுகள் நமது எதிர்காலத்தையும் நமது குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்:

“இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் வருங்காலத்தைப்பற்றி சிந்திக்க நம்மை ஊக்குவிக்கிறது. … இன்று நமது செயல்களை வழிநடத்த எதிர்காலத்தைப்பற்றி பெரும் கருத்துக்களை இது போதிக்கிறது.

மாறாக, தற்காலத்தில் மட்டும் அக்கறையுள்ளவர்களை நம் அனைவருக்கும் தெரியும். இன்று செலவு செய், இன்று அனுபவி, எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்காதே.

“… நாம் தற்போதைய முடிவுகளை செய்யும்போது, நாம் எப்போதும் கேட்கவேண்டியது, ‘இது எங்கு வழிநடத்தும்?’”3 நமது தற்போதைய முடிவுகள் இப்போதும் நித்தியத்திலும் நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லுமா அல்லது அவை நம்மை துக்கத்திற்கும் கண்ணீருக்கும் இட்டுச் செல்லுமா?

“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் சபைக்குச் செல்ல வேண்டியதில்லை” அல்லது “சூழ்நிலை சரியாகும் போது நாங்கள் தசமபாகம் கொடுப்போம்” அல்லது “இந்த காரியத்தில் சபைத் தலைவர்களை நான் ஆதரிக்க மாட்டேன்” என்று சிலர் நினைக்கலாம்.

“ஆனால்”, அவர்கள் சொல்கிறார்கள், “சபை உண்மை என்பதை நாங்கள் அறிவோம், நாங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம்.”

இது போன்ற எண்ணங்களைக் கொண்ட, இந்த “மந்தமான” வகையான உறுப்பினர் தங்கள் வாழ்க்கையிலும், அவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணரவில்லை. பெற்றோர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் இந்த வாழ்க்கையிலும் நித்தியத்திலும் தங்கள் குழந்தைகளை இழக்கும் ஆபத்து அதிகம்.

சிலஸ்டியல் மகிமையைத் தங்கள் குடும்பங்களுடன் சுதந்தரிக்காதவர்களைக் குறித்து, கர்த்தர் கூறுகிறார், “இவர்களே இயேசுவைக் குறித்த சாட்சியில் பராக்கிரமம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்; ஆகவே, நம்முடைய தேவனின் ராஜ்யத்தின் கிரீடத்தை அவர்கள் பெறுவதில்லை.”4 நமக்கும் அல்லது நம் குழந்தைகளுக்கும் இதுதான் வேண்டுமா? நம் சொந்த நலனுக்காகவும், நம் சந்ததியினருக்காகவும் நாம் அதிக பராக்கிரமம் மிக்கவர்களாகவும், குறைவான மந்தமானவர்களாகவும் இருக்க வேண்டாமா?

தலைவர் எம். ரசல் பல்லார்டும் இதேபோன்ற அக்கறைகுறித்து பேசினார்:

“சிலருக்கு, விசுவாசிப்பதற்கும் நிலைத்திருப்பதற்குமான கிறிஸ்துவின் அழைப்பு கடினமாக உள்ளது. … சில சீடர்கள் ஒரு குறிப்பிட்ட சபைக் கொள்கை அல்லது போதனையைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் நமது வரலாற்றில் அல்லது சில உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் குறைபாடுகளில் கவலையடைகிறார்கள்.

“… சபை உறுப்பினர்கள் மற்றும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் ‘இனி பயணிக்க வேண்டாம்’ என்ற முடிவு. நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும், அதை இப்போதைக்கு காண முடியாது.”5

கடந்து செல்வது ஒரு சோகமான மரபு—என்ன காரணத்திற்காக? அது எதுவாக இருந்தாலும், அது எதிர்கால தலைமுறைகளுக்கு உருவாக்கும் எதிர்மறையான ஆவிக்குரிய தாக்கத்தை புறக்கணிப்பது சரியானதல்ல.

என் அன்பான சகோதர சகோதரிகளே, நான் எனது செய்தியில் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு சூழ்நிலைகளில் ஒன்றை நீங்கள் கடந்து செல்கிறீர்கள் என்றால், தயவுசெய்து உங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள். இந்த வாழ்க்கையில் நமக்காக ஒரு திட்டம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். குடும்பங்கள் நித்தியமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை ஏன் ஆபத்தில் வைக்க வேண்டும்? நீங்கள் தொடங்கிய இந்த அழகான விசுவாசத்தின் சங்கிலியில் அல்லது நீங்கள் மரபுரிமையாகப் பெற்றதில் பலவீனமான இணைப்பாக இருக்காதீர்கள். வலிமையானவராக இருங்கள். இதைச் செய்வது உங்கள் முறை, கர்த்தர் உங்களுக்கு உதவுவார்.

இதைப் பற்றி சிந்திக்கவும், முன்னோக்கிப் பார்க்கவும், “இது எங்கு செல்லும்” என்பதை மதிப்பிடவும், தேவைப்பட்டால், உங்கள் சந்ததியினருக்காக உங்கள் பாதையை மாற்றியமைக்கும் அளவுக்கு தைரியமாக இருக்கவும் என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து, சிந்திக்குமாறு உங்களை அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “I Am a Child of God,” Hymns, no. 301.

  2. Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  3. Dallin H. Oaks, “Where Will This Lead,” Liahona, May 2019, 60; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:79; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  5. M. Russell Ballard, “To Whom Shall We Go?,” Liahona, Nov. 2016, 90–91; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.